வேங்கையின் மைந்தன் -புதினம்- பாகம் 1 , 10. மரக்கலத்தில் ஒரு பாலம் .

இராஜேந்திரர் ஆற்றிய வீர உரையின் எதிரொலி சோழப் பேரரசின் மூலை முடுக்குகளிலெல்லாம் முழங்கத் தொடங்கியது. ஊர்தோறும் உள்ளஅத்தாணி மண்டபத்தின் முரசுகள் அதிர்ந்தன. திரள் திரளாக மக்கள்கூட்டம் ஊர்ச்சபைத் தலைவர்களின் வாயசைவுக்குக் காத்திருந்தது.

மாமன்னரின் செய்தியைத் தலைவர்கள், கலைநயத்தோடு மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். சக்கரவர்த்தியின் முகப் பொலிவு அவரது நெடுந்தோற்றம்,ஏறுநடை, வீரப்பார்வை, செங்கோலின் பொன்னொளி இவ்வளவையும் வர்ணித்துவிட்டு, பெரும் சபையின் பேரெழில் காட்சியை மக்கள் கண்முன்னே
கொண்டு வந்தார்கள். பிறகு அங்கு மாமன்னரின்ம ணிமொழிகள் முழங்கப்பெற்றன.

“உழைப்பில்லையேல் ஊணில்லை; போரில்லையேல் வாழ்வில்லை!”-

எங்கும் இதே பேச்சு; இந்தப் பேச்சே அவர்தம் உயிர் மூச்சு.

வான்மழை கண்ட பயிரெனச் சோழ வளநாடு தன் வாழ்க்கைப்
போராட்டத்தின் மூலசக்தியை வளர்க்கத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் புத்துணர்ச்சி, எங்கு திரும்பினாலும் புதிய ஆவேசம், எங்குமே சுறுசுறுப்பின் களியாட்டம்!

இளங்கோவேள், தஞ்சை மாநகரைச் சூழ்ந்திருந்த சிற்றூர்களில் சில தினங்கள் உலவிவிட்டு அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். மாமன்னரைத் தனிமையில் கண்டு மக்களிடம் தான் கண்டுவந்த புதிய விழிப்பை விவரித்தான்.
“படையில் சேர்வதற்காக இளைஞர்களின் கூட்டம் துடிதுடிக்கிறது; உழவர்களோ, ஒரு கலம் விளைந்த மண்ணில் மூன்று கலம் நெல் விளைவிப்போம் என்று மார்தட்டுகிறார்கள்.”

“மகிழ்ச்சிக்குரிய செய்தி” என்றார் சக்கரவர்த்தி. “ஒரு பானைச்
சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நீ பார்த்து வந்த இடங்களைப்போலவே இந்த மண்டலம் முழுவதும் யுத்த ஆர்வம் மலர்ந்திருந்தால் நல்லதுதான்.” பிறகு எதையோ நினைத்துக் கொண்டவர்போல் இராஜேந்திரர்,“உன்னுடைய நண்பன் ஒருவன் என்னைப் பார்க்க விரும்புவதாய்ச்
சொன்னாயே, அவனை அழைத்து வருவதற்கு ஆளை அனுப்பு” என்று இளங்கோவிடம் பணித்தார். ஆள் சென்ற பிறகு வீரமல்லனின் தகுதியையும் திறமையையும் விசாரித்தார்.

“குறி தவறாமல் வேல் எறிவான். குதிரை மீதிருந்து வாள் சுழற்றுவதில் கை தேர்ந்தவன். அவனுடைய கண்கள் வெகு கூர்மையானவை” என்று கூறிய இளங்கோ அவனுக்கும் தனக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதன்
காரணத்தையும் விளக்கினான். ஒரு சிற்றரசின் இளவரசனுக்கும் சாதாரண நூற்றுவர் படைத் தலைவனுக்கும் நட்பு ஏற்பட்டதை மாமன்னர் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா?

“நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கருக்கிருட்டு நேரத்தில் நானும் வீரர்கள் சிலரும் குதிரைகளில் காட்டு வழி நடந்து கொண்டிருந்தோம். முதலில் சென்று கொண்டிருந்த நானோ, எனக்குப் பின்னால் வந்த வீரர்களோ, மரக்கிளையிலிருந்து தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த கருநாகத்தைக் கவனிக்கவில்லை. எனது தோளில் விழுந்து கடித்திருக்க வேண்டிய விஷப்பாம்பிடமிருந்து என்னைக் காப்பாற்றினான் அவன்.”

“ஓ! உயிர்காத்த தோழன் அவன் என்று சொல்.”

“ஆம், சக்கரவர்த்தி! நாலைந்து வீரர்களுக்குப் பின்னால் வந்து
கொண்டிருந்தவனின் கண்களில் எப்படியோ அந்தக் கருநாகம் தட்டுப்பட்டுவிட்டது. அவன் வீசிய வளைஎறியும் அதனால் அடிப்பட்டுச் செத்தபாம்பும் ஒன்றாக என் குதிரையின் பிடரியில் வந்து விழவே நான் திடுக்கிட்டேன். மரத்துக்குப் பின்புறம் மறைவில் ஒளிந்துகொண்டிருப்பவன்கூட அவனுடைய வளை எறிக்குத் தப்ப முடியாது.”

“திறமை தெரிந்தது. தகுதியைச் சொல்; நம்பக் கூடியவன்தானா?” ஒரு கணம் தயங்கினான் இளங்கோவேள். தான் இதற்குக்கூறும் மறுமொழியில் நண்பனின் வாழ்வும் வளர்ச்சியுமே அடங்கியுள்ளன என்று அவனுக்குத் தெரியும். ‘நம்பக் கூடாதவன் என்று இப்படி வீரமல்லனைச் சொல்வது? முரடன்; முன் யோசனையில்லாமல் பேசுவான்; சிறிது அவசரப்
புத்திக்காரன் இவ்வளவுதானே?’

“ஏன் தயங்குகிறாய் இளங்கோ?” என்று கேட்டுச் சிரித்தார் சக்கரவர்த்தி. “நம்பக் கூடாதவனிடம் எப்படி நட்புக் கொண்டிருக்க முடியும் என்று கேட்கவிரும்புகிறாயா? அதுவும் சரிதான்.”

“நல்லவன்தான்; அவனை நம்பலாம். ஆனால் சிறிது அவசரப்
புத்திக்காரன்” என்றான் இளங்கோ.

“இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காப்பதென்றால்
பல்லாயிரக்கணக்கான மனிதர்களை நம்பத்தான் வேண்டியிருக்கிறது. அந்த இளைஞனிடம் தகுதியை அறிய ஒரு பொறுப்பைக் கொடுத்துப் பார்ப்போம்.”

வீரமல்லனின் வரவைச் சேவகன் அறிவிக்கவே, மாமன்னரின் முன் வந்து வணக்கம் செலுத்தி நின்றான் வீரமல்லன். அவனுடைய முகத்தை உற்றுப்பார்த்துவிட்டு இராஜேந்திரர் கூறத் தொடங்கினார்:

“இளங்கோ உன்னைப்பற்றிக் கூறினான். உன் தமையன் ராஜமல்லமுத்தரையனை எனக்கு நன்றாகத் தெரியும். அவன் உயிருடன் இருந்திருந்தால் இதற்குள் குஞ்சரமல்லர் படைச் சேனாபதியாக ஆகியிருப்பான். சோழவளநாட்டு மண்ணைத் தன் உயிரென மதித்தவனின் தம்பி நீ, அவனுடைய
வீரத்தைப் போற்றுவதற்காக, நூற்றுவர் படைத்தலைவனாக இருக்கும் உன்னை இன்றிலிருந்து ஆயிரவர் படை நாயகமாக உயர்த்தியிருக்கிறேன்.”

“மகிழ்ச்சி சக்கரவர்த்திகளே.”

“பாண்டிப்படை மாதண்ட நாயகர் கிருஷ்ணன் ராமனிடம்
சொல்லியிருக்கிறேன். அவரிடம் ஓலை பெற்றுக் கொண்டு வணிகர் தலைவர் ஐயவீர நாச்சியப்பரைப் போய்ப் பார். அவர் உன்னைப் பாண்டிப்பகுதியிலுள்ள வணிகர் ஒருவரிடம் அனுப்புவார். அங்கிருந்துகொண்டு நீ நாட்டின் நடப்பறிந்து அப்போதைக்கு அப்போது மதுரைக்கு வந்து செல்ல வேண்டும். நீ அங்கு போய்ச்சேர்வதற்குள் மாதண்ட நாயகரும் மதுரைக்கு வந்து விடுவார்.”

வீரமல்லனின் முகம் இதைக் கேட்ட பிறகு வாட்டமுறத் தொடங்கியது.அவன் எதையோ சொல்வதற்கு வாய் திறந்தான், பிறகு மூடிக் கொண்டான்.

“என்ன சொல்கிறாய்? பதவி உயர்ந்தும் பொறுப்புக் கிடைக்கவில்லையே என்று தயங்குகிறாயா? இப்போது உன்னிடம் கொடுத்திருக்கும் பொறுப்பு நீ நினைப்பதைவிடப் பெரியது; அடுத்த போருக்கு நீயே முன்னின்று ஒரு படைப்பிரிவை நடத்திச் செல்லலாம். வீரனுக்குத்தானா நம் நாட்டில் வேலை இல்லை!”

“ஈழத்துப் போருக்கு...” என்று சொற்களை மென்று விழுங்கினான் வீரமல்லன்.

“நம் நாட்டு வீரர்கள் எல்லோருமே அங்கு வரத் துடிக்கிறார்கள்
வீரமல்லா! நம்முடைய எண் திசைப் படைகளையும் ஒன்றாக அங்கு அனுப்பினால், அந்தச் சிறு தீவு நம் சுமை தாங்காமல் கடலுக்குள் அமிழ்ந்தாலும் அமிழ்ந்து விடும்!” மாமன்னர் சிரித்து விட்டு, “அதனால்தான் இளவரசன்இராஜாதிராஜனைக்கூடத் தடுத்துவிட்டேன். நீயும் சற்றுப்பொறுத்துக் கொள்” என்று கூறினார்.

வீரமல்லனுக்கு மாமன்னர் விடை கொடுத்தனுப்பிய பிறகு, இளங்கோவும் வெளியில் வந்து நண்பனிடம் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டான்.“படைநாயகமாக உயர்ந்திருக்கிறாய்! இன்னும் உயரப்போகிறாய்! என்
வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்” என்றான்.

வீரமல்லனுக்கு உற்சாகம் பிறக்கவில்லை. “நீ உன் வீரத்தைக் காட்ட ஈழத்துக்குப்போகிறாய். நானோ ஒற்றனாக உளவறியச் செல்லுகிறேன், எனக்கு இது பிடிக்கவில்லை இளங்கோ.”

இளங்கோவுக்கு இப்போது அருள்மொழி கூறிய விவேகம் என்ற சொல் நினைவுக்கு வந்தது. வீரமல்லனை அணைத்துக்கொண்டே, “விவேகம் நிறைந்தவேலைக்குப் போகிறாய், நீ செல்லும் வெற்றிப் பாதைக்கு முதற்படி இது. உன் கடமையில் கண்ணும் கருத்துமாக இரு. ஈழத்திலிருந்து உயிருடன் திரும்பி வந்தால் மீண்டும் உன்னைச் சந்திக்கிறேன்” என்றான்.

நண்பர்கள் பிரிந்தனர்.

சித்ரா பௌர்ணமிக்குப் பிறகு வைகாசி முழுநிலவும் வந்தது. அதை அடுத்த ஆனி மாதத்து வளர்பிறை நன்னாளில் ஈழத்துக்குப் புறப்படுவதென்று நிச்சயம் ஆயிற்று. மளமளவென்று ஆயத்தங்கள் நடைபெற்றன. நாடு
நகரமெங்கணும் செய்தி பரவியது.

காலட்படையினர் முன்னதாகவே நாகைத் துறைமுகம் நோக்கி
நடக்கலாயினர். குதிரைப் படையும் அடுத்தாற்போல் விரைந்தது. வேழங்கள் ஈழம் செல்லவில்லை. என்றாலும், நாட்டு மக்கள் ஊக்கம் பெறுவதற்காகக் குஞ்சரமல்லர்களைத் தம்மோடு நாகை வரையிலும் யானைகள் மீதமர்ந்து வரப்
பணித்திருந்தார் சக்கரவர்த்தி. தஞ்சை அரண்மனையின் கீழ் வாயில் மதில் சுவருக்கு வெளியே அசைந்தாடும்ம லைத்தொடர் வரிசைகளெனப் பல நூறு யானைகள் காத்து நின்றன.

தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சென்று சிவபெருமானை அஞ்சலி செய்துவிட்டுத் திரும்பியிருந்தார் இராஜேந்திரர். அவரோடு இளங்கோ, வல்லவராயர், மதுராந்தகவேளார் ஆகியோரும் சென்று வந்தனர். இளங்கோவேள் அந்தப்புரத்துக்குச் சென்று பெரிய குந்தவையாரிடமும்,
மகாராணி வீரமாதேவி முதலியவர்களிடமும் ஆசி பெற்றுக்கொண்டு, தன் தாயார் ஆதித்தபிராட்டியிடம் சென்றான். தஞ்சை மாநகர்ப் பொறுப்பையும்
மதுராந்தக வேளார் ஏற்க வேண்டியிருந்ததால், அவர் குடும்பமே தஞ்சை அரண்மனைக்கு வந்துவிட்டது.

ஆதித்தபிராட்டியார் பொங்கிவரும் பாச வெள்ளத்துக்கு அணை போட முடியாத நிலையில் தமது மகனை அணைத்துக் கொண்டு அந்த அணைப்பிலிருந்து அவனை நழுவவிட மனமில்லாமல், “வெற்றி வீரனாகத் திரும்பிவா மகனே!” என்று விடைகொடுத்தாரே தவிர, அவரது பிடி தளரவில்லை. அவரது கண்களில் வழிந்த ஊற்றுப் பெருக்கை இளங்கோ துடைத்துவிட முயன்றபோது, “துடைக்காதே மகனே, இது ஆனந்தக் கண்ணீர்!” என்று சொல்லித் தடுமாறினார். ஒரே மகன், அவனுக்கு முன்னும் பின்னும் அவன் ஒருவனேதான்.

“சக்கரவர்த்திகளும் சாமந்த நாயகரும் உனக்காகக் காத்துக்
கொண்டிருக்கிறார்கள் இளங்கோ!” என்ற குரல் கேட்டு ஆதித்தபிராட்டியார் திரும்பிப் பார்த்தார். அங்கே சிலைபோல் நின்று கொண்டிருந்த தம் கணவரின் உருவத்தைக் கண்டவுடன் அவரது கரம் தானாக நழுவி இளங்கோவுக்கு விடுதலை அளித்தது.

அருள்மொழியிடம் சொல்லிக் கொள்ள வேண்டுமென்பதற்காக
இளங்கோ சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் கண்களில் அவள் தென்படவில்லை. இதற்குள் மதுராந்தக வேளார் முன்னால் விரைந்து செல்லவே அவரைப் பின்பற்றிக் கூடத்துக்குள் சென்றான். பெண்களில் கூட்டமும் கூடத்தை நோக்கிப் புறப்பட்டது.

கூடத்தின் மையத்தில் கிழக்கே திரும்பிய வண்ணம் சக்கரவர்த்தியும் வல்லவரையர் வந்தியத்தேவரும் நின்று கொண்டிருந்தார்கள். சக்கரவர்த்தியின் மெய்க்காவலரும் உடனிருந்தார். அவர்களோடு போய் ஒன்றி நிற்பதற்கு
முன்னால் தன் தந்தையார் முன் மண்டியிட்டு அவர் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டான் இளங்கோ.

“நான் கூறியது நினைவிருக்கிறதா? முடியோடுதான் நீ திரும்ப
வேண்டும்!” என்றார் பெரிய வேளார். “இறைவன்து ணையிருப்பான், சென்று வா!”

பெண்களுக்கிடையிலிருந்து ஆரத்தித் தட்டும் கையுமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த அருள்மொழி இந்தக் காட்சியைக் கண்டாள். மதுராந்தக வேளார்
தமது மகனிடம் கூறிய சொற்களைக் கேட்டாள். அளையறியாமல் அவள் கரத்திலிருந்த பொன்தட்டு நடுங்கியது. இறுகப் பற்றிக்கொண்டு முன்னே
வந்தாள்.

வரிசையாக நின்ற நால்வருக்கும் தன் வண்ணக் கரங்களின் வளை ஒலிக்க ஆரத்தி எடுத்தாள் அருள்மொழி. மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த செவ்விரத்தக் குழம்பாகக் காட்சியளித்தது ஆரத்திச் செந்நீர். அதில் பச்சை வெற்றிலைத்துண்டுகள் மிதந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவர் நெற்றியிலும் அந்தச் செந்நீரைத் திலகமாக இட்டு விட்டாள் அவள்.

இளங்கோவின் எதிரில் வந்து அருள்மொழி நின்றபோது இளங்கோவின் இமைகள் தாழ்ந்திருந்தன. அவளை ஏறிட்டுப் பார்க்கும் மெய்த்துணிவு அவனுக்கு என்றுமே இருந்ததில்லை. ஆனாலும், அவன் விரும்பாதபோதும், அவள் முகம் அவன் விழிகளுக்கு ஒளி கொடுத்தது. தங்கத் தாம்பாளத்தின்
செங்குழம்பில் சுடர்போல் பளிச்சிட்டது அருள்மொழியின் முகமா? அல்லது தேவி பராசக்தியின் திருமுகமா?

இளங்கோவின் சிந்தனை நரம்புகள் ஒன்று கூடும் புருவமத்தியில் அருள்மொழியின் மென்றளிர் விரல் பதிந்தது. அவளுடைய விரலின் ஸ்பரிசத்தையும் செந்நீரின் ஈரத்தையும் ஒருங்கே உணர்ந்தான் அவன். அனல் காற்றைப் போன்ற அவளுடைய மூச்சக்காற்று அவனது நெற்றியைச் சுட்டது.
தன் எதிரில் ஒரு பெண் வந்து நிற்பதாகவே அவனுக்குத் தோன்றவில்லை. அவள் வெற்றித் திருமகள்! ஆதிபராசக்தியின் அவதாரப் பெண்மணி!

தன்னை மறந்த ஆவேச வெறியில் “வெற்றி பெறுவோம்!” என்று அவன் வீரமுழக்கமிட்டான். அவனுடைய சுயநினைவு தவறிய நிலையில் வெளிவந்த சொற்கள் அவை. சுற்றியிருந்தவர்கள் கணப்பொழுது திடுக்கிட்டார்கள், பிறகு சுபசகுனமென்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

புறப்படுவதற்கு முன்பு இராஜேந்திரர் மீண்டும் ஒரு முறை
அரண்மனைப் பெண்டிரைப் பார்த்துப் புன்னகை பூத்தார். மதுராந்தக வேளாரிடம் ஏதோ கூறினார். வல்லவரையர் தமது கிழட்டு மனைவி குந்தவையாரிடம், தம்மைக் குமரன் என்று எண்ணிக்கொண்டு, பரிகாசம் பேசி விடைபெற்றுக்கொண்டார். சற்று முன்பு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்ட இளங்கோவேள் அங்கு நிற்பதற்கு நாணமுற்று வெளிவாயிலை நோக்கி ஓடினான். யானை மீதிருந்து வீரர்கள் எழுப்பிய போர் முரசம் அவனைத் தன்னிடம் அழைத்தது. ஆரத்தியைக் கொட்டி விட்டுத் திரும்பி வந்த அருள்மொழி ஒருகணம் அவன் வேகத்தைத் தடுப்பதுபோல் அவன் எதிரில் தயங்கி, நின்றாள் அவனும் தலை நிமிராமலே தயங்கினான்.

“வெற்றியோடு திரும்பி வாருங்கள், இளவரசே!”

இளங்கோவுக்கு மறுமொழி ஏதும் கூறத்தோன்றவில்லை. தன்
கரங்களைக் குவித்தான். அவளுடைய கரங்களும் குவிந்தன. மறுகணம் அவன் மின்னலெனப் பாய்ந்தோடியதை அருள் மொழியின் கூப்பிய கரங்களிலிருந்த பொன் தட்டு எடுத்துச் சொல்லியது. கண்ணிமைக்காமல் திரும்பிப் பார்த்தாள்.
அவள் கண்களில் நீர் வழியவில்லை; கண்ணீர் இமைகளில் தேங்கி பின்பு இரத்தத்தில் கலந்து இதயத்துக்கே சென்றவிட்டது.

யானைகளின் கூட்டம் நடந்ததால் தஞ்சை மாநகரில் எழுந்த
புழுதிப்படலம் செம்மேகத் திரளைப்போல் வானவெளியில் திட்டுத்திட்டாக மிதந்தன. முன்னும் பின்னும்நூ ற்றுக்கணக்கான யானைகள் அசைந்தாடிச்
செல்ல, மத்தியில் பட்டத்து யானையில் மாமன்னரும் மெய்க்காவலரும் வீற்றிருந்தார்கள். அடுத்த யானையில் வல்லவரையருக்கு அருகில் அமர்ந்திருந்தான் இளங்கோ.

மணியோசை, முரசொலி, மக்களின் ஆரவாரம், பல வகை
வாத்தியங்களின் முழக்கம் யாவுமாகச் சேர்ந்து ஒரே ஒரு வெள்ளமாக அலைமோதியது. மாடங்களின் மீது நின்ற மங்கையர் மங்கல வாழ்த்துப்பாடிக்கொண்டே மலர்மாரி பொழிந்தார்கள். திருவிழா நகரமாகக் காட்சியளித்தது தஞ்சை. இன்னும் தஞ்சைக்கப்பால் நாகைப்பட்டினம் செல்லும்
வழிதோறும் ஒரே ஜனத்திரள். சாலையின் இரு மருங்கிலும் மரங்களின்மீதும், தரையிலும், கூரைகளின் உச்சியிலும் ஒரே மனிதர்கள், மனிதர்கள், மனிதர்கள் தாம்!

சோழ வளநாட்டுப் போர்க்கலங்கள் நாகைத் துறைமுகத்திலிருந்து தெற்குத்தீவை நோக்கிப் புறப்பட்ட காட்சியை இங்கு எங்ஙனம் வர்ணிப்பது.கடைசிக் கப்பல் நாகைப்பட்டினத்தில் நின்றதென்றால்,முதற்கப்பலைக் காண்பதற்கு நாம் பரிமீதமர்ந்து திருமறைக்காட்டை நோக்கிப்
பறந்தல்லவோ செல்ல வேண்டும்? பட்டொளி வீசிப் பறக்கும் புலிக்கொடிகளில் மஞ்சள் வெயில் தங்கத்தைத் தூவ அந்தக் கொடிகளில் பொறிக்கப் பெற்றுள்ள புலிகள் உயிர்பெற்று உடனேயே தென்திசையில் தாவத் துடிக்கின்றவே!

காற்றால் விம்மிக் கானமிசைக்கும் பாய்மரங்களின் வீரப் பேரொலியை விளக்குவதா? முந்நூற்றுக்கு மேற்பட்ட மரக்கலங்களில் ஒரு லட்சம் போர் வீரர்கள் நின்று கொண்டு தமிழ்த் திருநாட்டை வாழ்த்திப் பாடுகிறார்களே, அந்தப் பாட்டைக் கேட்பதா? அந்தப் பாடலால் உணர்ச்சியும் உவகையும் பெற்ற பேரலைகள் கலங்களின் மீது மோதி, “வெற்றி பெறுக! வெற்றி பெறுக!” என்று வெண்முத்துக்களை உதிர்க்கின்றனவே, அந்தப் பேரெழிலைக்
காண்பதா?

காவியத் தலைவன் இராமன் முன்னொரு காலத்தில் தென்னிலங்கை செல்வதற்காகக் கடலுக்குக் குறுக்கே அணை கட்டினான். தமிழ்த்தலைவன் வேங்கையின் மைந்தனோ சங்கிலித் தொடர்போன்ற ஒரு மாபெரும் பாலத்தை
மரக் கலங்களாலேயே கட்டிவிட்டான். ஆம், திருமறைக் காட்டில் அவனது கடைசிக்கலம் மிதக்க முதற்கலமோ ஈழத்தின் வடக்குக் கரைகண்ட ஆனந்தத்தில் அலைமீது அற்புத நடனம் புரிந்து கொண்டிருந்தது.

தொடரும்Comments