வேங்கையின் மைந்தன் - பாகம் 1 -13.


கப்பகல்லகம் அரண்மனையை விட்டு வெளியில் வந்த வந்தியத்தேவர் இளங்கோவின் கடமையை நினைவூட்டி அவனை சுய நினைவுக்குக் கொண்டு வந்தார். இருவரும் தங்கள் கண்களை நன்றாகச் சுழலவிட்டு, அந்த நகரத்தின் சுற்றுச்கவர்களையும், கோட்டை மதில்களையும், வெளி வாயில்களையும் கண்காணிக்கத் தொடங்கினார். அகழிப்பாலத்தை அவர்கள் கடந்தபோது,

“அதோ பார் முதலைகளை!” என்று அவனுக்குச் சுட்டிக் காட்டினார் வல்லவரையர் வந்தியத்தேவர்.

இயற்கையின் பாதுகாப்பு நிறைந்த இடத்தில்தான் அவர்களும் தலைநகரை அமைத்துக் கொண்டிருந்தார்கள். பின்புறம் மூன்று பாகங்களிலும் அரண் போன்று குன்றுகள் எழும்பி நின்றன. கோட்டை வாயிற்களின்இருபுறங்களிலும் மதில் சுவர்கள் மீதும், ஏன்-குன்றுகளின் சிகரங்களில் கூட ஆயுதம் தாங்கிய காவல் வீரர்கள் காணப்பட்டனர்.

“இளங்கோ! நம்மைப் போலவே இவர்களும் முன்யோசனையுடன் பலகாரியங்களைச் சாதித்திருக்கிறார்கள்” என்ற சொல்லிக் கொண்டே, தம் குதிரையின் மீது தாவி ஏறினார் வல்லவரையர்.

இளங்கோவும் ஏறிக்கொண்டு, “மகிந்தரின் திறமையைத் தாங்கள் அளவுக்கு மேல் மதிக்கிறீர்கள் அவர் கோழை என்பதை நாமே எதிரில் காணவில்லையா?” என்றான்.

“அவர் கோழையாக இருந்தாலும் புத்திசாலி. திருமந்திர ஓலையை அவர் யாரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார் என்பதைப் பார்த்தாயா! உண்மையில் இப்போது ரோகணத்தை ஆள்பவர் மகிந்தரல்ல; ஓலையைப் படித்து விட்டு உன்னிடம் செருக்கோடு பேசினாரே, அவர்தாம் இந்த நாட்டையும் இதன் மன்னரையும் இப்போது ஆள்பவர்.”

“என்ன?”

“ஆமாம், கீர்த்தி என்ற சிங்கள வீரரைப் பற்றி நீ முன்பே கேள்விப்பட்டிருப்பாய், இன்று நேரிலும் பாத்து விட்டாய். மெய்யான வீரர், அஞ்சா நெஞ்சம் கொண்ட முரட்டு மனிதர். பேச்சைப் போலவே வாள்வீச்சிலும் வல்லவர்.”

முகத்தில் பெரிய மீசையுடனும் கூர்மையான கண்களுடனும் அலட்சியப் பார்வையுடனும் விளங்கிய அந்த அமைச்சரின் உருவத்தை மீண்டும் தன் கண் முன்னால் கொண்டு வந்தான் இளங்கோ. “சோழப் பேரரசின் வலிமையை உணராமல் பேசினார் என்றல்லவா நினைத்தேன்!”

“இல்லை; சொல்லுக்குப் பின்னால் செயல் திறமை இருக்கிறது. நம்முடைய நடவடிக்கைகளையெல்லாம் முன்னமேயே தெரிந்து கொண்டு, ஓரளவு விழிப்போடு இருக்கிறார்.”

வல்லவரையர் மேலும் கீர்த்தியைப் பற்றிக் கூறினார்.

“மன்னரின் பெயரைச் சொன்னால்தான் மக்களுக்கு எழுச்சியூட்ட முடியுமென்பதற்காக இவர் இப்போது மகிந்தரைத் தழுவிக்கொண்டு நிற்கிறார்- நாட்டுப் பற்றில் நம்மை விடச் சளைத்தவரல்ல. இவருடைய ஆசை என்ன தெரியுமா! முதலில் சேரபாண்டியர்களின் துணை கொண்டு நம்முடைய அரசை இந்த மண்ணிலிருந்தே களைய வேண்டும். பிறகு அவருக்கு உதவிய சேர பாண்டியர்களையும் விரட்ட வேண்டும்! தமிழகத்தின் சேயகமான ஈழத்தில் தமிழர்களுக்குள்ள நியாயமான உரிமைகளை ஒப்புக் கொள்ளாதவர் இவர்.”

இளங்கோவேள் திடுக்கிட்டான். பன்னெடுங்காலமாக இரு சாராரும் சேர்ந்து வாழும் நாடல்லவா இது?

“பாண்டிய சேரர்கள் அவருக்குப் பகைவர்கள் அல்லவே!” என்றான் இளங்கோவேள்.

“நண்பர்களைப் பகைத்துக் கொள்வதற்குக் காரணந்தானா கிடையாது?

பாண்டியர்களில் எவராவது இங்குள்ள ‘மணி முடி’க்கு உரிமை கொண்டாடினால் போதுமே. தவிரவும் மக்களிடம் மறைந்து கிடைக்கும் இனவெறி, சமயவெறி ஆதிக்க வெறி இவற்றைத் தூண்டிவிடுவதற்கு எவ்வளவு நாழியாகும்?- இந்தத் தீவு தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் சொந்தமானது என்கிறோம் நாம். கீர்த்தியைப் போன்றவர்கள் தமிழர்களின் உரிமையை ஒப்புக் கொள்வதில்லை.”

“அவரைச் சொல்லிக் குற்றமில்லை; அந்தப் பாண்டியப் பதர்கள் இருக்கின்றனவே...” என்று நறநறவெனப் பற்களைக் கடித்தான் இளங்கோ.

“பொறு இளங்கோ பொறு!” என்றார் வந்தியத்தேவர்.

மலைபோல் வீற்றிருந்த மாமன்னர் அவர்கள் கொண்டுவந்த செய்திகளை விவரமாய்க் கேட்டறிந்தார். கப்பகல்லகம் கோட்டையின் பலமான கட்டுக் காவலையும் கீர்த்தியின் முன்னேற்பாடுகளையும், அவரது செருக்குமிக்க மறுமொழிகளையும் கேட்ட பின்பும் சக்கரவர்த்தி வியப்படையவில்லை. சினங் கொள்ளவில்லை.

இளங்கோவைப் பார்த்து இளநகை செய்துவிட்டு வல்லவரையரிடம் திரும்பி, “சாமந்த நாயகரே! தொடங்குங்கள் போரை!” என்று கர்ஜனை செய்தார். “தெற்கே மாவலி வாணராயருக்கு ஆள் அனுப்பிவிட்டு இப்போதே போர்ப்பறை ஒலிக்கச் செய்யுங்கள். இதோ, நானும் கிளம்பி விட்டேன்.”

முரசுகள் அதிர்ந்தன. சங்க நாதம் பொங்கி எழுந்தது. ஊது கொம்புகள் அனைத்தும் ஒலித்திரள் உமிழ்ந்தன.

கடலைப்போல் பொங்கிப் படர்ந்த காலாட்படை எழுப்பிய புழுதிப்படலத்தால் வானமே மறைந்துவிட்டது. தரையை அதிரச் செய்து நடை பழகிய யானைக் கூட்டங்களைக் கண்டு அஞ்சி எங்கோ ஒரு மூலையில் ஓடி ஒளிந்தது. புயல் மழையில் மின்னும் மின்னல்களெனப் புரவிகள் பாய்ந்து கண்களைப் பறித்தன.

காடுகளை அழித்துக் கொண்டு, குன்றுகளைக் குலுக்கிக் கொண்டு, புதர்களை வெட்டிப் புதுச்சாலைகள் சமைத்துக் கொண்டு சோழர் பெரும்படை முன்னேறத் தொடங்கியது. காடுகளை அழிக்கும் முயற்சியில் மரங்களோடு சாய்ந்து மடிந்தவர் பலர், குன்றுகள் குலுங்கும்போது குப்புறச் சரிந்தவர் பலர்; புதர்களை வெட்டிப் புதுச் சாலை சமைத்த வேகத்தில் புதையுண்டு மாண்டவர் பலப்பலர். ஆனாலும் கடல் அலைகளைப் போன்ற படை அலைகள் ஓயவில்லை.

மேலும் மேலும் சென்று கொண்டே இருந்தன. போர்! போர்! ரோகணத்தின் சரித்திரமே அதுவரையில் கண்டிராத போர்! ரோகணம் என்ற மங்கை நல்லாள் அதுவரையில் தன் எல்லையில் யாரையுமே அடி எடுத்து வைக்க விட்டதில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கைதேவி அவளுக்குப் பயங்கரமான பாதுகாப்பு அளித்திருந்ததால், கன்னி கழியாத பெண்ணின் சீற்றத்தோடு அவள் தமிழகத்துக் கட்டிளம் காளைகளைப் பலிவாங்கத் துடித்தாள்.

மகிந்தர் எப்படிப்பட்டவரோ, ஆனால் கீர்த்தி மலைகளையே புரட்டக் கூடியவர்.

ஆம், அவருடைய வீரர்கள் மலைகளின் மீதேறி நின்று கொண்டு அம்புமழை பொழிந்தார்கள். பாறைகளைச் சோழ வீரர்கள் மீது உருட்டிவிட்டு இடி இடித்துக் கிடுகிடுக்கச் செய்தார்கள். பாண்டிய நாட்டில் செய்த வேல்களும், சேர நாட்டில் சித்தமான ஈட்டிகளுமே செந்தமிழ் நாட்டு வீரர்களின் செங்குருதியைச் சுவைத்தன. உயிருக்குப் பயந்த கூட்டமா இது? ஒப்பற்ற புகழ் தேடுவதற்காக உயிரைப் பணயம் வைப்பதற்கென்றே ஓடோடியும் வந்தவர்களல்லவா இவர்கள்? மலைகளே புரண்டு விழுந்தாலும் மலைக்கவா போகிறார்கள்?

நகரத்தைச் சுற்றிலும் ஒரு காதச் சுற்றளவுக்கு ஏற்படுத்தியிருந்த காவலைத் தகர்த்துவிட்டு, ஆறாம் நாள் மாலைப் பொழுதில் சோழப் பெரும்படை கப்பகல்லகம் நகரத்தை நெருங்கியது. ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்தபின்னும் அதன் வலிமை குன்றவில்லை. எதிரில் அகழிக்கு அப்பால் குன்றுகள் சூழநின்ற கோட்டையைக் கண்டவுடன் அவர்கள் “வெல்கவேங்கை நாடு!” என்று ஆர்ப்பரித்துக் கொண்டு முன்னேறிச் சென்றார்கள்.

“தாத்தா! இராஜசிம்ம பாண்டியன் இங்கு விட்டுச் சென்ற மணிமுடி விசுவரூபம் எடுத்து நிற்பதுபோல் இந்தக் கோட்டை தோற்றமளிக்கிறதல்லவா?” என வல்லவரையரிடம் கேட்டான் இளங்கோ.

மாலைப் பொழுது மங்கி இரவு நெருங்கியதால் மறுநாள் போர் தொடங்கலாம் என்று கட்டளையிட்டார் மாமன்னர். வீரர்கள் தொலைவில் காடுகளுக்குள் பாசறைகள் அமைப்பதில் முனைந்தார்கள். அகழிக்கு அருகே சென்று அதன் ஆழத்தையும் அகலத்தையும் கணக்கிட்டார் மாமன்னர்; கோட்டையின் உயரத்தையும் அளவெடுத்தார். “நாளைக்குக் காலையில் தொடங்கும் போர் மாலைக்குள் நம் வீரர்களிடம் நம்பிக்கையை வளர்ப்பதாக இருக்க வேண்டும்” என்று இளங்கோவிடம் கட்டளை பிறப்பித்தார்.

தீவர்த்திகள் ஆயிரக்கணக்கில் கொழுந்து விட்டெரிந்தன. யானைகள், குதிரைகள், ஆயுதங்களுடன் மனிதர்கள் மறுநாள் பகல் பொழுதை எதிர்பார்த்திருந்தார்கள். கோட்டைக்குள்ளே அப்போது பல இரகசியமான ஏற்பாடுகளும் வெளிப்படையான நடவடிக்கைகளும் நடந்த வண்ணமாக இருந்தன.

அகழிக்கு அப்பால் சென்று தாக்குவதற்காகப் பெரும் படையினரை அணிவகுத்துக் கோட்டை வாயில் கதவருகில் சித்தமாக நிறுத்திக் கொண்டிருந்தார் கீர்த்தி. வில் பயிற்சியில் சேர்ந்தவர்களைப் பொறுக்கியெடுத்து மதில் சுவர்களின் மேலே நிரப்பினார்.

மறுநாள் உதயசூரியன் செவ்வொளி பரப்பிக் கொண்டே போர்க்களத்தின் காட்சியைக் காணுவதற்காகச் சிறிது சிறிதாக மேலெழுப்பி வந்தான். இராஜேந்திர மாமன்னர் அமைத்திருந்த படை வியூக அணிகள் அவனது கதிர்க் கற்றைகளைப் போலவே ஒளி பெற்றுத் துலங்கின. படைகளைத் தரம் பிரித்துப் பல சாரிகளில் நிறுத்தியிருந்தார்.

வேல்முனை பாய்ச்சப் பெற்ற கோட்டைக் கதவுகளைத் திறந்து கொண்டு அணையுடைத்த வெள்ளமெனப் பாய்ந்து வந்தனர் மகிந்தரின் வீரர்கள். அகழிப் பாலம் யானைகளின் அடிச்சுவடுகளில் அதிர்ந்தது. அம்பு மழை பெய்து கொண்டும், வேல் மின்னல்களை வீசிக்கொண்டும் அவர்கள் ஆரவாரங்களுடன் முன்னோக்கி வந்தார்கள். சோழப்பெரும் படையோ மாமன்னரின் கட்டளைக்குக் காத்து நின்றது. எதிர்த் தரப்பினர் நெருங்கி வந்து தங்களோடு கலக்கும் வரையில் வாளாவிருந்த சக்கரவர்த்தி, அவர்களுடைய ஆரம்ப வீர சாகசங்களைக் கண்டு நகைத்துவிட்டு. “கொட்டுங்கள் முரசத்தை! தொடருங்கள் போரை!” என்று கர்ஜித்தார்.

“வெல்க வேங்கை நாடு! வெல்க இராஜேந்திர மாமன்னர்!” என்று எழுந்த வாழ்த்தொலிகளால் விண்ணகமே நடுநடுங்கியது. அவ்வளவுதான்!

யானைகளோடு யானைகள் மோதித் தங்கள் கடைவாய் மதம் பிழிந்து பிளிறின. தந்தத்துடன் தந்தம் உராய்ந்து செந்தீச் சுடர்ப்பொறிகள் உதிர்ந்தன. சூரியன் ஒளியை மறைக்கும் அளவுக்குக் கூரம்புகள் சரக்கூடம் கட்டின. செவியைத் துளைத்துச் செவிடாக்கும் பேரொலி எழுந்தது. வாயில் தள்ளும் நுரைப் பெருக்கோடு பாய்ந்து கனைக்கும் குதிரைகள், கேடயங்களும் வேலும் வாளும் பொருதும் ஒலி; ஆவேசக் கூக்குரல்கள்; வாழ்த்தொலிகள்; மரணஓலங்கள்!

கோட்டை வாயில் கூண்டின் உச்சியில் மறைவிடத்தில் இருந்தவாறே மன்னர் மகிந்தரும் அவர் குடும்பத்தாரும் களக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ரோகணத்து யானைகள் சில அகழியில் வீழ்த்தப்படும் பயங்கரமான செயலைக் கண்டபோது அவர்கள் மனம் பதறியது. பட்ட மகிஷிபயத்தால் மயங்கி விழுந்தார்.

முன்னொரு நாள் இளங்கோவின் மேல் வாளெறிந்த சிறுவனும் இளங்கோவைத் தன் விழிகளால் வதைத்த வனிதையும் அங்குதான் இருந்தார்கள். சிறுவன் பற்களைக் கடித்தான்; பெண்ணோ கண் இமைக்கவும்மூச்சு விடவும் மறந்து போய் நின்றாள்.

அன்றைக்குத் தூதுவனாக வந்த ஒருவன் களத்திடையே புயலெனப் புகுந்து போர்புரிந்த விந்தைக் காட்சி அவளை மயிர்க் கூச்செரிய வைத்தது.ஒருமுறை அகழியின் அருகே அவனுடைய குதிரை வந்தபோது, தன் அருகில் நின்ற சிறுவனுக்குச் சுட்டிக் காட்டி “பொல்லாத வீரன்!” என்றாள்.

இளங்கோவின் ஆவேசத்துக்கோர் எல்லையில்லை. மலைகளென மோதும் வேழங்களிடையில் பிடரி மயிர் சிலிர்க்கத் தாவும் புரவிகளிடையில், வேல் பாய்ச்சும் வெந்தழல்வீரர்களிடையில், இன்னும் எங்குமே நீக்கமற்று நிறைந்து காணப்பட்டான். அவனுடைய முரட்டுக் குதிரைக்குச் சிறகு முளைத்து விட்டது. அவனுடைய வாள் தாங்கிய கரத்தில் காலன் குடி கொண்டு விட்டான். பார்த்தோர் பயந்தொளியும் பலபீமன் அவன். கண்டோர் நடுங்கும் காலன் அவன். திரும்பிய திசைகளெல்லாம் ரோகணத்து வீரர்கள் சரிந்து வீழ்ந்தனர். சோழ நாட்டு வீரர்கள் புத்துயிர் பெற்றனர். “கொடும்பாளூர் இளவரசர்” என்ற சொல், ஒவ்வொரு தமிழ் வீரனுக்கும் ஒரு யானையின் பலத்தைக் கொடுக்கும் விந்தைச் சொல்லாக வளர்ந்தது.

மாலை நேரத்துக் காட்சி, செவ்வானத்தின் பிரதிபலிப்பாக விளங்கியது. கப்பகல்லகம் போர்க்களத்தில் அகழி முழுவதும் செங்குருதியால் நிரம்பி வழிந்தது. அதனுள்ளிருந்த முதலைகள் தங்களை வளர்த்தவர்களின் உடல்களையே சுவைக்கத் தொடங்கின. திரும்பிய பக்கமெல்லாம் சிதைந்த உடல்கள் சிதறிக் கிடந்தன. மாண்டுபோன மனிதர்கள், குதிரைகள்,யானைகள்...

மகிந்தரின் வீரர்களில் எஞ்சி நின்றவர்கள் சிலரே அவர்களும் போர் நிலை மாற்றத்தைக் கண்டவுடன் கோட்டைக்குள் பதுங்கிக் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டார்கள். அகழிப் பாலத்தை அகற்றி விட்டார்கள். “மூன்று மாதங்களுக்கு நம்மிடம் உணவுப் பொருள் இருக்கிறது. அவர்கள்

முற்றுகையிட்டுப் பார்க்கட்டுமே” என்று வீரம் பேசி, தம்முடைய வீரர்களின் சோர்வை அகற்றப் பார்த்தார் கீர்த்தி.

கோட்டை வாயில் கூண்டின் மேல் நின்று கொண்டிருந்த பெண்மணி, தன் அருகில் நின்ற சிறுவனின் தோளை வளைத்துக் கொண்டு, கலங்கும் கண்ணீருடன் பெருமூச்செறிந்தாள். வெகு தூரத்தில் தெரிந்த இளங்கோவின் உருவம் அவள் சீற்றத்தைக் கிளறிவிட்டது.

“தம்பி! அன்றைக்கே நீ அந்தக் கொடியவனைக் கொன்று போட்டிருக்கவேண்டும். மறுபடியும் வாள் எறியப் போகிறாயோ என்று பயந்து உன்னிடமிருந்து அதைப் பிடுங்கிக் கொண்டது மகாபாவம்! இப்போது உன்னால் அவனைக் குறி பார்த்து வாள் எறியமுடியுமா?”

“இப்போது எனக்கு உன்னைத்தான் கொல்லத் தோன்றுகிறது” என்று கண்களை உருட்டி உருட்டி விழித்தான் அந்தச் சிறுவன்.

தொடரும்


Comments