வேங்கையின் மைந்தன் - புதினம் - பாகம் 1-19.

விண்மீன்கள் சிந்திய ஒளிக்கலவையினால் அமாவாசை இரவுகூட ஒருவகையில் அழகாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அழகைக் கண்டுகளிக்கக்கூடிய மனநிலையில் அப்போது வந்தியத்தேவர் இருக்கவில்லை. இருளில் அவர் கண்ட காட்சி முதலில் அவரைத் திடுக்கிட வைத்தது; பின்னர் வியப்புறச் செய்தது. அவருடைய கண்கள் பின்னோக்கி நகர்ந்தன. சந்தடியின்றி ஒரு மறைவிடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு தம் கண்களுக்கும் செவிகளுக்கும் வேலை கொடுக்கத் தொடங்கினார். 

அங்கே நின்று கொண்டிருந்தவன் வேறு யாருமில்லை. அவருடைய அருமைப் பேரன் இளங்கோ. மூடப்பட்ட வாயிற்கதவுகள் மூடியபடி இருக்க, அவன் அங்கே எப்படி வந்திருப்பான் என்று ஒருகணம் யோசித்தார். சிறிது நேரத்துக்கு முன்பு மாடத்தின்மேல் எழுந்த சத்தம் அவர் நினைவுக்கு வந்தது; இப்போது அவருடைய தலைக்கு மேல் நூலேணி தொங்கிக் கொண்டிருந்தது. இரண்டுக்கும் முடிச்சுப்போட்டு நடந்ததைத் தெரிந்து கொண்டார் வந்தியத்தேவர். 

அந்தப் பெண்பிள்ளை பயத்தினால் எழுப்பிய கூச்சலைக் கேட்டவுடன் இளங்கோவும் முதலில் பயந்துவிட்டான். அவளது கீழுதட்டைத் தாங்கிக் கொண்டிருந்த அவனுடைய உடைவாளின் முனை நடுங்கியது. அவசரம் அவசரமாக அதை உறைக்குள் போட்டுக்கொண்டான். அவளை உற்றுப் பார்த்தான். அழகும் பயங்கரமும் அந்த இரவில் ஒன்று கூடியிருந்தது போலவே, அவள் தோற்றத்திலும் அழகும் பயங்கரமும் இரண்டறக் கலந்திருந்தன. 

வாள்முனைக்கு அஞ்சி ஒரே ஒருகணம் மேலே உயர்ந்த அவளுடைய தலை மறுகணம் கீழே கவிழ்ந்து கொண்டது. இலேசாக அவள் உடல் அச்சத்தால் நடுங்குவதைக் கண்டான் இளங்கோ. அவளிடம் தன்னால் பயத்தை எழுப்ப முடியும் என்ற நினைவு அவனுக்குத் துணிவைத் தந்தது. அவள் இப்போது சாகசக்காரியல்ல, பயந்தவள். 

“பெண்ணே! உண்மையைச் சொல்லிவிடு; யார் நீ? இந்த நேரத்தில் தன்னந்தனியே எங்கே போகிறாய்?” 

அவள் உண்மையையும் சொல்லவில்லை. பொய்யையும் சொல்லவில்லை. ஒன்றும் சொல்லவில்லை. வாய்மூடி மௌனம் சாதித்தாள். அவன் தன் குரலைக் கடுமையாக்கிக்கொண்டு அவளை நெருங்கினான். 

“சொல்கிறாயா, இல்லை, உன்னைச் சொல்ல வைக்கட்டுமா?” 

இரவும், தனிமையும், அவன் குரலின் கடுமையும் அவளை வாய் திறக்க வைத்தன-“நான் பட்டமகிஷியின் தாதி. எனக்கு இங்கே இருக்கப் படிக்கவில்லை” என்றாள். 

“பாவம், நீ என்ன செய்வாய்?” என்று அநுதாபம் கொள்வதுபோல் பரிகசிக்கத் தொடங்கினான் இளங்கோ. 

“மன்னரும் அவர் மகனும் தப்பிவிட்டார்கள். இளவரசியும் மாயமாய் மறைந்து போனாள்; பிறகு நீயும் போக வேண்டியது தானே; அதுசரி, யார் நீ? அந்த ஒன்றரைக் கண் ...” 

‘ஆமாம்’ என்னும் பாவணையில் தலையசைத்தாள் அவள். இளங்கோவின் இதழில் மின்னிய குறும்புப் புன்னகையை அவள் கவனிக்கவில்லை. 

“பயங்கரம்” என்றான் கேலிக் குரலில் இளங்கோ. “இந்த ரோகணத்தில் எத்தனையோ அழகிகள் இருக்கும்போது, உன்னைப் போய்த் தேடிப் பிடித்தார்கள் பார்! அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது. உலகத்திலுள்ள அவலட்சணத்தை யெல்லாம் ஒன்றாய்த் திரட்டிக் கொண்டு வைத்திருக்கிறாய்! பாவம் நீதானா அவர்களுக்கு அகப்பட்டாய்! இதோ பார், பாட்டி! இந்தத் தள்ளாத வயதில் நீ இப்படியெல்லாம் செய்யக் கூடாது. நல்லவேளை இருட்டாயிருப்பதால் உன் பக்கத்தில் நிற்க முடிகிறது என்னால். முகத்தைப் பார்த்துவிட்டேனோ . . . ” 

நகைக்கத் தொடங்கினான் இளங்கோ. எவ்வளவுக்கு அதிகமாக அவள் தோற்றத்தைப் பரிகசிக்க முடியுமோ அவ்வளவும் செய்தான். அவளும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். பொறுக்க முடியவில்லை. பொறுக்க முடியாதபோது மற்ற எல்லாப் பெண்களும் என்ன செய்வார்களோ அதையே அவளும் செய்துவிட்டாள். கண்ணீர் பெருக்கினாள்! 

பெருகிய கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்தது, விம்மலும் தேம்பலும் ஒன்றன் பின்னொன்றாகத் தொடர்ந்தன. தலையை மறைத்திருந்த துகிலால் தன் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டாள். அவள் துடைத்த துடைப்பில் அவளுடைய நடிப்பின் சின்னங்கள் போன இடம் தெரியவில்லை. சுருக்கங்கள், கோடுகள், ஒன்றையுமே இப்போது காணோம். 

இளங்கோ இளகிவிட்டான். கண்ணீர் அவன் மனத்தைக் கரைத்து விட்டது; அவளுடைய அழுகையை நிறுத்துவதற்கு வழி தெரியாது அவன் தவிக்கலானான். அவனுடைய தவிப்பைக் கண்டு வானத்து மீன்கள் தங்களுக்குள் கண் சிமிட்டிச் சிரித்துக் கொண்டன. 

“ரோகிணி” என்று கனிவு ததும்பும் குரலில் அழைத்தான் இளங்கோவேள். “ரோகணத்து இளவரசி.” 

‘வந்தது ஆபத்து’ என்று நினைத்துக்கொண்டு இப்போது வல்லவரையர் தவிக்கத் தொடங்கினார். மீண்டும் மீண்டும் அவன் அவள் பெயரைச் சொல்லி அழைக்கவே, அவருடைய தவிப்புப் பன்மடங்காயிற்று! 

சிறிது சிறிதாக அவள் முகத்திரை நழுவியது, சிறிது சிறிதாக அந்த அமாவாசை இரவைக் கிழித்துக்கொண்டு ஒரு நிலா உதயமாகியது. சிறிது சிறிதாக அது மேலே எழும்பி வந்தது. அவனுடைய முகத்துக்கு நேராக வந்த பிறகும்கூட அது அங்கே நிற்கவில்லை. இன்னும் மேலே உயர்ந்த அது வானத்தை அண்ணாந்து பார்த்தது. அமாவாசை இரவில் பூரண சந்திரோதயமா! அந்தச் சந்திர வட்டத்தில் இரு வைரமணித் தாரகைகளா! 

அவள் அவன் முகத்தைப் பார்க்கவே இல்லை. அவனோ அவள் முகத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. அந்த நிலவு வட்டம் அவனைத் தன்னோடு வான் வெளிக்கே தூக்கிக்கொண்டு போகப் பார்த்தது. நாகத்தின் சீற்றத்தைப்போல் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள் அவள். அவளுடைய விழிகள் வானத்தில் மின்னும் மீன்களின் கூட்டத்துடன் ஒன்றி உறவாடி லயித்துவிட்டன. அருகில் ஒருவன் நின்றுகொண்டு தன்னையே விழுங்குவதுகூட அவளுக்கு நினைவில்லை போலும். அந்த உயிர்ச் சிற்பம் ஏன் அப்படி நிற்கிறதென்று இளங்கோவுக்கும் விளங்கவில்லை. 

‘என் அழகைக் குறை கூறினாயே! என் இளமையைப் பழித்தாயே! என் 

பருவத்தைப் பரிகசித்தாயே! இப்போது என்னை உற்றுப் பார்!’ என்று கூறாமல் கூறுகிறாளா? தன் வண்ணமுகத்தை, அதன் வைரமணிக் கண்களை, கார்மேகக் கருங்கூந்தலை நன்றாக உற்றுப் பார்க்கச் சொல்கிறாளா? 

செயலிழந்து, வலுவிழந்து, சொல்லிழந்து நிற்கும் அவளுடைய தோற்றம் 

இளங்கோவைப் பாகாய் உருக்கி விட்டது. “ரோகிணி! உனக்கு நான் ஒரு தீங்கும் செய்யமாட்டேன். நீ எங்கே புறப்பட்டாய் என்பதை மட்டும் சொல்லிவிடு” என்று கனிவோடு கேட்டான். 

அவள் எள்ளி நகையாடுவதைப்போல் சிரித்தாள். மின்வெட்டும் நேரத்தில் அவளுடைய அழுகை அலட்சியச் சிரிப்பாக மாறிவிட்டது. “எதற்காக இப்படியெல்லாம் கேட்கிறீர்கள்? நான் மறுமொழி சொல்வேனென்று எதிர் பார்க்கிறீர்களா?” 

“என்னுடைய அன்பை நீ புரிந்து கொள்ளவில்லை ரோகிணி.” 

“ஓ! அரை விநாடிக்குள் அன்பு பிறந்துவிட்டதா உங்களுக்கு? வாள் முனையின் வேகத்தில் மின்னிப்பாய்கிறதே உங்களுக்கு அன்பு!” என்று மீண்டும் சிரித்தாள். 

முகத்தில் ஓங்கி அறைவதைப்போல் இருந்தது இளங்கோவுக்கு. “ரோகிணி! எனக்குக் கோபமூட்டாதே” என்றான். 

“இதோ பாருங்கள், உங்கள் அன்பின் அடையாளத்தை” கீழுதட்டில் தன் ஆள்காட்டி விரலை வைத்து வழித்து அவனிடம் விரலின் நுனியைச் சுட்டிக் காட்டினாள். அந்த விரலின் நுனியில், அன்றொரு நாள் அவனுக்கு அருள்மொழி நங்கை வெற்றித் திலகமிட்டு விட்டாளே அந்தத் திலகத்தின் துளி ஒட்டிக் கொண்டிருந்தது. ஒரு சொட்டு செவ்விரத்தம்! 

உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையில் அவனுடைய நாடி நரம்புகளிலெல்லாம் மின்னல் பாய்ந்தன. அவன் எதிரில் அப்போது ரோகிணி நின்று கொண்டிருக்கவில்லை. சோழ சாம்ராஜ்யத்தின் இளவரசி அருள்மொழி நின்று கொண்டு, தன் விரலில்பட்ட தீப் புண்ணுக்காக மருந்து போடச் சொல்கிறாள்! அவனுடைய நெற்றியில் வீரத்திலகமிட்டுவிட்டு, அந்தத் திலகத்தில் துளியைச் சுட்டிக் காட்டுகிறாள்! அவள் ரோகிணியல்ல, அருள்மொழி! 

“என்னை மன்னித்துவிடு பெண்ணே, மன்னித்துவிடு!” என்று அலறினான் இளங்கோ. அவன் கண்களில் கண்ணீர்த் துளிகள் வெடித்துப் பொலபொலவென்று உதிர்ந்தன. யாரிடம் மன்னிப்புக் கேட்டோம் என்று இளங்கோவுக்கே விளங்கவில்லை. ‘பெண்ணே!’ என்று அழைத்தது யாரை என்றும் அவனால் தீர்மானிக்க முடியவில்லை. தொலை தூரத்தில் இருந்துகொண்டு இப்போது அவன் மனக்கடலில் எழும்பி வந்த அருள்மொழியிடம் மன்னிப்புக் கோரினானா? அல்லது எதிரில் இரத்தமும் சதையுமாய், ஊனும் உயிருமாய், இளமையும் எழிலுமாய் நின்று கொண்டிருந்த இளவரசி ரோகிணியிடம் கேட்டானா? 

யாரிடம் அவன் மன்னிப்புக் கோரியிருந்தாலும் ரோகிணி அதைத் தன்னிடம் கேட்டதாகவே எடுத்துக் கொண்டாள். தான் சிந்தும் ஒரு சொட்டு ரத்தத்துக்கு இவ்வளவு ஆற்றல் இருக்கும் என்று அவள் இதற்கு முன்பு நினைத்ததே இல்லை. ‘வெற்றி கொண்டுவிட்ட வேற்று நாட்டு வீரன் ஒருவன் தன்னை அடிமையிலும் அடிமையாக நடத்தவேண்டியவன் தனக்காக எத்தனைசொட்டுக் கண்ணீர் உதிர்த்து விட்டான்! ஒவ்வொரு அணுத்துளி ரத்தத்துக்கும், முத்தைப் போன்ற ஒரு முழுத்துளிக் கண்ணீரா! என்ன மாயம் இது?’ 

அந்த மாயமோகினி தன் வலிமையை நன்றாக உணர்ந்து கொண்டுவிட்டாள். அந்த வலிமையை உணர்த்தியவனிடம் முதல் முறையாக அவள் உள்ளத்தில் நன்றி உணர்ச்சி பெருக்கெடுக்கத் தொடங்கிற்று. அதுவரையில் அவனை ஏறிட்டுப் பார்க்காமல், வேறு பக்கம் திரும்பிக் கொண்டிருந்தவள், அவனது கண்களை ஊடுருவி நோக்கினாள். அவளுடைய கண்ணிமைகள் படபடத்தன. இதழ்க் கோணத்தில் ஒரு புன்னகை அரும்பி, பிறக மொட்டாகி, போதாகி, மலராகி, மடலவிழ்ந்தது. பெருமை தாங்காமல் அவள் தன் மார்பகம் விம்மப் பெருமூச்சு விட்டாள். 

“கொடும்பாளூர் இளவரசே” என்று தன் வாய் நிறைய அழைத்து “நான் நினைத்ததைப்போல் நீங்கள் அவ்வளவு கொடியவரில்லை. அரைக் கணத்தில்கூட அன்பு பிறக்க முடியும் என்பதை நீங்கள் மெய்ப்பித்து விட்டீர்கள். பாவம்; உங்களுக்கு நான் எவ்வளவு தொல்லை கொடுத்து விட்டேன்! என்றாள். 

பாவம், இளங்கோ! ரோகிணியின் மாற்றத்தைக் கண்ட பிறகு அவனுக்கு இந்த உலகமே மறந்து போய்விட்டது. அருள்மொழியோ, அவள் இட்டுவிட்ட திலகமோ, சற்று முன்பு எழுந்த அவள் நினைவுச் சூழலோ எதுவும் இப்போது அவன் மனத்தில் இல்லை. அவனுடைய ஐம்புலன்களையும் அந்தக் கணத்தில் ரோகணத்து இளவரசி அடிமையாக்கிவிட்டாள். வென்றவன் தோற்றுப் போனான். பிறகு இளங்கோ அவளிடம் ஏதோ உளறிக்கொட்டினான். அவளும் பதிலுக்கு உளறினாள். 

இருளில் மறைந்து கொண்டிருந்த வல்லவரையருக்கு இளங்கோவின் மீது கோபம் பற்றிக்கொண்டு வந்தது. அந்த இடத்தில் அவருக்கு இருக்கவும் பிடிக்கவில்லை; அதை விட்டு அகலவும் மனமில்லை. ‘முட்டாள். முதலில் இவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய்க் காவலில் வைக்க வேண்டும்!’ என்று தமக்குள் முணுமுணுக்கலானார். 

அடுத்தாற்போல் அவருடைய இளமைப்பருவம் அவர் மனக் கண்ணில் விரிந்தது. தமது மனைவியர் இருவரையும், அவர்கள் அன்புக்குத் தாம் அடிமையாகியதையும் நினைத்துக் கொண்டார். கோபம் தணிந்து, ‘பாவம், குழந்தைகள்!’ என்று அநுதாபப்படும் நிலைமைக்கு வந்து விட்டார். 

“சரி, திரும்பிப் போகலாமா?” என்று ரோகிணி இளங்கோவிடம் 

கேட்பது வல்லவரையரின் செவிகளில் விழுந்தது. இதைக் கேட்டவுடன் அவர் மெதுவாக எழுந்தார். சந்தடி செய்யாமல் தாம் வந்த வழியே திரும்பினார். அவர் அங்கு வந்ததையோ, இருந்ததையோ, மறைந்ததையோ மற்ற இருவரும் கவனிக்கவில்லை. 

“தப்பியோட முயன்றவர்களுக்கு மாமன்னர் என்ன தண்டனை விதிப்பார், தெரியுமா?” என்று கேட்டான் இளங்கோ சிரித்துக்கொண்டே. 

“கொலை செய்யமுயன்றவர்களுக்கு என்ன தண்டனை என்று முதலில் சொல்லுங்கள்” என்றாள் ரோகிணி. 

“ஏன் கேட்கிறாய்?” 

“நீங்கள் என்னைக் கொல்ல முயன்றதாக உங்கள் மன்னரிடம் முறையிடப் போகிறேன்!” 

“அப்படியா? நீ என்னைக் கொன்று விட்டதாகவே நானும் முறையிடுவேன்” என்றான் இளங்கோ. “உண்மையில் நீ என் உயிரையே கவர்ந்துகொண்டாய், நீ கொலைக் குற்றவாளிதான்.” 

கலகலவென்று கூட்டுச் சிரிப்பொலி, மதிலுக்கு அப்பால் அந்தப்புரத்துக்குள் நின்று கொண்டிருந்த வல்லவரையரின் செவிகளுக்கு எட்டியது. 

தொடரும் 


Comments