வேங்கையின் மைந்தன் - புதினம்- பாகம் 1 , 2.

மதுரை நகருக்கு வடமேற்கே பன்னிரண்டு கல் தொலைவில் உள்ளது அழகர்மலை. அந்த மலைக்குப் பற்பலப் பெயரிட்டுஅழைத்திருக்கிறார்கள் தமிழர்கள். சோழமலை, தண்டமலை, இடபகிரி, திருமால் குன்றம், திருமாலிருஞ்சோலை-இப்படி அதற்கு எத்தனையோ பெயர்கள்.

புத்த பிக்ஷு க்களுக்கு அது புகலிடம் அளித்திருக்கிறது. சமணத் துறவிகள் அங்கே வாழ்ந்திருக்கிறார்கள். சைவர்களும் வைணவர்களும் அங்கே வந்து தத்தமக்குப் பிடித்த பெயர்களை அதற்குச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு கால மாறுதல்களையும், சமய மாறுதல்களையும் பெயர் மாறுதல்களையும், கண்ட மலை அது.

அந்த மலைச்சாரலின் அழகு கொழிக்கும் சோலையில் தான் இப்போது தென்னவன் இளங்கோவேளும் வீரமல்ல முத்தரையனும் மெல்ல நடந்து சென்றனர். வேகமாக விரைந்து செல்ல வேண்டிய வேலையும் அவர்களுக்கு இருந்தது. உடலிலும் தெம்பிருந்தது. என்றாலும் இயற்கைக் கன்னி அந்த இளைஞர்களை முற்றிலும் மயக்கிவிட்டாள்.மனிதர்களின் சந்தடியே இல்லாத பிரதேசம்போல் தென்பட்டது அது.

மலைப்பாம்புகளைப்போல் வளைந்து சுருண்டிருந்த கிளுவை மரங்களின் வனப்பைக் கண்டு வியந்தான் இளங்கோ. பறவைகள் பாட்டிசைத்துப் பறந்தன; பல்வகை வண்டினங்கள் பறவைகளின் பாட்டுக்குச் சுருதி கூட்டின. கூட்டங் கூட்டமாக வண்ணத்துப் பூச்சிகள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குக் காற்றில் மிதந்து சென்ற காட்சி பல நிற மலரிதழ்கள் ஒன்றுகூடிச் சிறகடிப்பதைப் போல் தோன்றியது. மலை உச்சியிலிருந்து வழிந்து வரும் அருவிக் கன்னியொருத்தி, எதிர்ப்படும் இளைஞர்களைக் காண வெட்கியவள்போல், நாணிக் கோணிக்கொண்டு ஒருபுறமாகக் குதித்தோடி ஒதுங்கினாள். அவளுடைய நடையின் வேகத்தில் ஒரு சாகசப் பரபரப்பு தெரிந்ததே தவிர உண்மையான வேகமில்லை அது. விரைந்து செல்வதைப்போல் ஒரு பாவனை, அவ்வளவுதான்; விரைந்தோடினால் அவர்கள் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடுமே என்ற அச்சமா அவளுக்கு?

கலகலவென்று சில இடங்களில் அவள் சிரித்தாள். சில இடங்களில் அவள் மலர்களிடம் ரகசியம் பேசினாள். இன்னும் சில இடங்களில் சதங்கையொலி குலுங்க அவள் குதித்தாள். இளைஞர்கள் இருவரும் தங்கள் வழியில் ஓரிடத்தில் அவள் குறுக்கிட்டது கண்டு, தங்கள் மனங் கொண்ட மட்டும் அவளை இரு கரங்களாலும் அள்ளி அள்ளிப் பருகிவிட்டு மேலே சென்றனர். வயிறு இடங்கொடுத்திருந்தால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட அவர்கள் அதற்குமேல் உருண்டோட விட்டிருக்க மாட்டார்கள்!

நீருண்ட மயக்கத்தில் மதுவருந்திய வண்டைப்போல் “இளங்கோ” என்று தன் நண்பனை அழைத்தான் வீரமல்லன்.

அதே மயக்கத்துடன் இளங்கோ அவனைத் திரும்பிப் பார்த்தான்.

“இந்தச் சோலைமலை அருவித் தண்ணீரைக் குடித்துவிட்டு, இப்படிச் சாலை நிழலில் நடந்து செல்லும்போது, உன் மனத்தில் என்ன ஆசை எழுகிறது இளங்கோ?”

“சொல்லட்டுமா?”

“உடனே சொல்!”

“உலகில் எங்கெங்கே இப்படி அழகான இடங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சென்று புலிக்கொடி நாட்ட வேண்டுமென்று தோன்றுகிறது. இதற்காகவே கடல் கடந்து, மலை கடந்து வீரப்படைகளைத் திரட்டிச் செல்ல வேண்டுமென்று தோன்றுகிறது.

மார்பகத்தின் மயிர்க் கால்களெங்கும் எதிரிகளின் வேல்கள் பாய்ந்தாலும், இறுதியில் வெற்றித் திருமகளைச் சோழ நாட்டுக்கே கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்று தோன்றுகிறது!”

“முட்டாள்!” விழுந்து விழுந்து சிரித்தான் வீரமல்லன். “இளங்கோ!

உனக்காக நான் அனுதாபப்படுகிறேன். உன்னிடம் வயதுக்குத் தக்க உணர்ச்சியே கிடையாது.”

“வீர உணர்ச்சியைக் கிழவர்களுடைய உணர்ச்சியென்கிறாயா?”

“போர்க்களம் புகும்போது வீரமும், பூஞ்சோலையைக் காணும்போது காதலும் தோன்ற வேண்டும் நண்பா! இதோபார். இதைப்போன்ற இடங்களுக்கு நம்மைப் போன்றவர்கள் தனியாகவே வரக்கூடாது. காதலியின் கரம்பற்றி, துவளும் அவள் இடைதாங்கி, மெல்ல அவளை அழைத்து வரவேண்டிய சோலையல்லவா இது.”

“காதல்!” பரிகாசத்துடன் சிரித்தான் இளங்கோ. “இங்கெல்லாம் என் காதலி வரமாட்டாள். அவள் போர்க்களங்களில் எனக்காகக் காத்திருக்கிறாள்!”

“அவளை நம்புவதில் பயனில்லை நண்பா! உன்னைவிட உன் எதிரி வீரம் உள்ளவனாக இருந்தால், அவன் தோளில் சாய்ந்துவிடும் மாயக்காரி அவள். இளங்கோ! உன்னைப்பற்றி எனக்கொன்றும் தெரியாதென்று நினைத்துக் கொள்ளாதே. நான் உன்னுடைய உண்மைக் காதலியை நினைவூட்டுகிறேன். நீ தஞ்சை மாநகர் திரும்பிப் போகும் நன்னாளை எதிர்பார்த்து வழிமீது விழி வைத்திருக்கிறாள் பார் அவளை...”

கூர்மையாக வீரமல்லனின் முகத்தில் தன் விழிகளைச் சொருகினான் இளங்கோ. “என்ன சொல்கிறாய்?” அவன் குரலில் கடுமை தொனித்தது.

“அரண்மனையின் அந்தப்புரத்தில் உலவும் அருள்மொழி உன் முறைப் பெண்தானே? சோழப் பேரரசர் தம் புதல்வியை உனக்குக் கொடுக்காமல் வேறு யாருக்குக் கொடுக்கப் போகி றார்! உன் சொந்த அத்தை வீரமாதேவியை மணந்த மாமன் இராஜேந்திரர். அவருடைய தாயார் வானவன்மா தேவியும் உங்கள் குலத்தில் பிறந்தவர். பரம்பரை பரம்பரையாக நடந்து கொண்டு வரும் உறவைத்தானே நானும் சொல்கிறேன். இதைக் கேட்டு மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக ஏன் ஆத்திரப் படுகிறாய்?”

“வீரமல்லா!” என்று கத்திவிட்டு, “அரண்மனை விஷயங்களைப் பற்றிப் பேசும்போது சற்று அடக்கமாகவே பேசு. அதிலும் பெண்களைப் பற்றி நீ வாயைத் திறக்காமல் இருப்பதே நல்லது” என்று கூறினான் இளங்கோ.

“நாளைக்கு எது நடக்கப் போகிறதோ அதை இன்றைக்கே சொன்னேன். நாம் நட்பு முறையில் பழகுகிறோமே தவிர, உன்னைக் கொடும்பாளூர் இளவரசன் என்று நானோ, என்னை நாடற்று வாடும் முத்தரையர் குலத்தவன் என்று நீயோ நினைக்கவில்லை. அப்படி நீ நினைக்கிறாயா சொல் உன்னுடன் பழகுவதை நிறுத்திக் கொள்கிறேன்.”

இதைக் கேட்ட இளங்கோவின் கண்கள் கலங்கின. ஐந்தாறு
ஆண்டுகளாகவே இருவரும் ஒன்றாகப் பழகியவர்கள். அதிலும் ‘நாடற்று வாடும் முத்தரையர் குலத்தவன்’ என்ற சொல்லை அவன் வாயிலிருந்து கேட்ட பிறகு இளங்கோவின் மனம் பாகாய் உருகிவிட்டது.

சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக அன்று விளங்கிய தஞ்சை மாநகர் ஒரு காலத்தில் முத்தரையர்களுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. முத்தரையர்களும் கொடும்பாளூர் வேளிரும் பல்லவர்களுடன் உறவு பூண்டு சிற்றரசர்களாகத் திகழ்ந்த காலம் அது. சோழர்களுக்கும் கொடும்பாளூர் வேளிருக்கும் எப்படித் திருமண முறையால் உறவு ஏற்பட்டிருந்ததோ, அதேபோல் வேளிரும் முத்தரையர்களும் அந்தக் காலத்தில் உறவு பூண்டொழுகினார்கள்.

இவ்வளவையும் நினைத்துப் பார்த்த இளங்கோ, தங்களுடைய
வளர்ச்சியையும், தங்களுடைய முன்னாள் உறவினர்களான முத்தரையர்களின் வீழ்ச்சியையும் ஒருகணம் ஒப்பிட்டுப் பார்த்தான்.

“வீரமல்லா! நாடற்று வாடுபவன் என்று மட்டும் இனிமேல் நீ
சொல்லக்கூடாது. மேலைச் சளுக்கப் போரில் சத்தியாசிரய மன்னன் ஏறியிருந்த யானையைக் குத்தி வீழ்த்தும் முயற்சியில் உன் தமையன் ராஜமல்ல முத்தரையர் உயிர் இழந்ததை நம்முடைய மன்னர் மறந்து விட்டாரென்று நினைக்கிறாயா? அதனால்தானே உன்னிடம் தனிப்பரிவு காட்டி உன்னைச் சேனையில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்! காலம் வரும்; பொறுத்துக்கொள் வீரமல்லா, நீயும் ஒரு நாட்டின் தலைவனாகத்தான் விளங்கப் போகிறாய்!”

வீரமல்ல முத்தரையனுக்கு அவன் நண்பனின் சொற்கள் ஆறுதலளித்தன. ஆனால் அத்துடன் அவன் அமைதி பெறவில்லை. இராஜேந்திரரின் மகள் அருள்மொழி நங்கையைப் பற்றி வேண்டுமென்றே இளங்கோ தன்னிடம் மறைத்துப் பேசுவதாக நினைத்தான். எப்படியும் தன் நண்பனின் வாயால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் வீரமல்ல முத்தரையனை உந்தித் தள்ளியது.

“இளங்கோ இந்தச் சோலையையும் காதலையும் பற்றிப் பேசத் தொடங்கிய நாம் வேறெங்கோ போய்விட்டோம். உண்மையை என்னிடம் மறைக்காமல் சொல்லிவிடு. இளவரசி அருள்மொழியின் கரம் உனக்குத்தானே?!”

“இதை மட்டும் நீ கேட்காதே; உண்மையில் நான் பெண்களைப் பற்றியே இன்னும் நினைக்கத் தொடங்கவில்லை. அதிலும் தஞ்சை அரண்மனைக்கும் எங்களுக்கும் எவ்வளவு தான் உறவிருந்தாலும் நாங்கள் அவர்களோடு பழகும் முறையில் ஓர் எல்லை வகுத்துக் கொண்டிருக்கிறோம். அவர்களின் கீழ் உள்ள எத்தனையோ சிற்றரசுகளில் கொடும்பாளூரும் ஒன்று. இதை நாங்கள் மறந்து விடவில்லை. இளவரசி அருள்மொழியோடு எப்போதாவது நான் பேச நேர்ந்தால் என்னையறியாத மதிப்பும் அச்சமும் என் முன் வந்து நிற்கின்றன. நீ என் நிலையைப் புரிந்து கொண்டாயா?”

“அரண்மனைப் பெருந்தேவிகள், உன் அத்தைகள் ஏதும்
பேசுவதில்லையா? இராஜேந்திரரின் எண்ணம் என்னவென்று யாருக்கும் தெரியாதா?”

“அவருடைய எண்ணத்தை யாராலும் அவ்வளவு எளிதாகக் கண்டு கொள்ள முடியாது. அதைக் கண்டு கொள்ளாத வரை அரண்மனைப் பெண்களும் வாய் தவறிக்கூட எதையும் பேசிவிட மாட்டார்கள். உலகத்தை ஆண்டவர்களில் பலர் அந்தப்புரங்களில் அடிமைகளாக உழன்றிருக்கிறார்கள். இராஜேந்திர மாமன்னர் இருக்கிறாரே அவரையறியாமல் அந்தப்புரத்தில் ஒரு துரும்புகூட அசைவதில்லை.”

இதைக் கேள்வியுற்றவுடன் வீரமல்லனுக்கே என்னவோ போல் இருந்தது. என்றாலும் தன்னுடைய நண்பனை விவரம் தெரியாத குழந்தை என்ற அளவுக்கு மதிக்கத் தொடங்கினான். ‘காதலுக்கு வேலி போட யாரால் முடியும்? இளங்கோவை அருள்மொழி விரும்பினால் அவளைத் தடுக்க இராஜேந்திரர் ஏன் முற்படுகிறார்? அவருக்கு இது போன்ற குடும்ப விஷயங்கைளக் கவனிக்கப் பொழுது ஏது? இளங்கோவோ உருவெளித் தோற்றத்தில் அழகன், உள்ளத்தில் வீரன், வயது வந்த கட்டிளம் காளை, நாடாளப் பிறந்த இளவரசன்- ஏன் இன்னும் தனக்குரிய பெண்ணின் மனத்தைத் தெரிந்து கொள்ளாதவனாக இருக்கின்றான்?’

நீண்ட பெருமூச்சு விட்டான் வீரமல்லன். நண்பனுடைய நிலையில் தான் இருந்தால் எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியும் என்ற விபரீதக் கற்பனை அவனிடம் எழுந்தது. அதை அடக்க முடியாமல் வாய்விட்டுக் கூறத் தொடங்கினான்.

“இளங்கோ! உன்னைப்போல் நான் இருந்தால், உனக்குள்ள உறவும் உரிமையும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்திருந்தால், நான் அந்த அருள்மொழியை...”

“நிறுத்து! வீரமல்லா” என்று குமுறினான் இளங்கோவேள். “என்னுடைய நிலையில் நீ இருந்தால், இப்படி ஒரு மனிதன் சோழநாட்டு இளவரசியைப் பற்றித் தாழ்வாகப் பேசியதற்காக, உன் உடை வாளால் அவன் நாவைத் துண்டித்திருப்பாய்!” என்றான்.

வீரமல்லனின் நாக்கு இதைக் கேட்டவுடன் அவன் தொண்டைக்குள் ஒட்டிக் கொண்டது.

மலையின் உச்சியை அடைவதற்கு முன்னால் அதன் கீழ்ச் சரிவை ஒட்டிக் குகையைப் போல் தெரிந்த ஒரு பாறையின் பிளவுக்கு எதிரில் அவர்கள் வந்தார்கள். அத்துடன் பாதை முடிந்து விட்டது போல் தோன்றியது. சந்தடி செய்யாமல் இளங்கோவும், வீரமல்லனும் அதற்குள் எட்டிப் பார்த்தார்கள். இருண்டு கிடந்த அந்தக் குகைக்குள் முதலில் எதுவுமே புலப்படவில்லை. பிறகு கண்கள் இருட்டுக்குப் பழகியவுடன் உட்கார்ந்திருக்கும் நிலையில் ஒரு சிலையைக் கண்டார்கள் அவர்கள். சிலை அசைவதைப் போல் தோன்றியதால் இருவருடைய கண்களும் கூர்மையாகின. அருகே ஒரு சிறு பாய், மயிற்பீலி, கமண்டலம் இவ்வளவும் இருந்தன.

“அருகா போற்றி! அருகா போற்றி” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது சிலை வடிவிலிருந்த அந்த மனித உருவம். வீரமல்லன் ஒன்றும் விளங்காதவன்போல் தன் நண்பனின் முகத்தைப் பயத்துடன் பார்த்தான்.

“அடிகளே போற்றி!” என்ற உரக்கக் கூறினான் இளங்கோ. தன் பயத்தைப் போக்கிக் கொள்வதற்காக அவன் அப்படிக் கூறுவதுபோல் தோன்றியது. உடனே நெருப்புத் துண்டங்களைப் போன்ற தன் விழிகள் இரண்டையும் திறந்து அந்த இருவரையும் மாறி மாறிப் பார்த்தது அந்த உருவம்.


தொடரும் 

Comments