Wednesday, November 21, 2012

வேங்கையின் மைந்தன் ( பாகம் 1 , 21. இரகசியக் கட்டளை )


பாகம் 1 , 21. இரகசியக் கட்டளை


கப்பலே கவிழ்ந்து விட்டதைப்போல் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு
கப்பல்லகம் கல்யானைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து விட்டான் இளங்கோ.
ரோகிணி கொண்டு வந்து மறைத்து வைத்து பேழையை அவள் எடுத்துக்
கொண்டு போகவில்லை, அது அவனுக்கு நன்றாகத் தெரியும். வேறு யார்
எடுத்திருப்பார்கள்? அப்போது கறுத்த போர்வை ஒன்றைப் போர்த்துக் கொண்டு ஓர்
உருவம் அவனை நெருங்கி வந்து தன் போர்வையை மெதுவாக அகற்றியது.

“தாத்தா!”

“அட! நீ அப்போதிருந்து விழித்துக்கொண்டா இருக்கிறாய்? கண்
கொட்டாமல் பலமாகக் காவல் காத்து வருகிறாய் போலிருக்கிறதே!”

“தாத்தா! நீங்கள் உறங்கிப்போய் ஏமாந்துவிட்டீர்கள், நான்
விழித்துக்கொண்டிருந்தும் ஏமாந்து விட்டேன்.”

“எதற்கெடுத்தாலும் ஏன் இப்படி ஏமாற்றமென்று சொல்கிறாய்?
இப்போது உனக்கு என்ன வந்து விட்டது? இளங்கோ! அந்தப் பெண்ணைப்
பார்த்ததிலிருந்து உன்னுடைய மனமே ஒரு நிலையில் இல்லை. இப்படி ஏங்கிப்
போய் உட்காரலாமா?”

அவர் பேச்சை அவன் காதில்போட்டுக் கொள்ளாமல், “கைக்கு எட்டிய
பொருளை கை நழுவ விட்டு விட்டேன் தாத்தா!” என்றான் பரிதாபமாக.

“பாவம்! யாரை நழுவ விட்டாய்? ரோகணத்து இளவரசியையா?”

வல்லவரையரின் கண்கள் அவன் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை
அளந்தன. குற்றம் புரிந்து விட்டவனைப் போல் சில விநாடிகள் மௌனமாக
இருந்துவிட்டுப் பிறகு அதை ஒப்புக் கொள்பவனைப் போல் நடந்தவற்றைக்
கூறலானான். மறைக்கவேண்டிய பகுதிகளை மழுப்பி மறைத்து விட்டு அவர்
தெரிந்துகொள்ள வேண்டியவற்றை மட்டும் தெரிவித்தான்.

கிழவர் தமக்குள் நகைத்துக் கொண்டாரே தவிர தாம் அங்கு
வந்திருந்ததைச் சொல்லவில்லை. “இருக்கட்டும்! வா, நான்தான் அந்தப்
பேழையை எடுத்து வைத்திருக்கிறேன்.”

“தாத்தா!”

“நீ மதிலுக்கு வெளியே நிற்பதைக் கண்டவுடன் நான் பேழையை
எடுத்துக் கொண்டு திரும்பி விட்டேன். நல்ல வேளை! நீ பத்திரமாக
அவளைக் கொண்டுவந்து சேர்த்து விட்டாய்!” பேழை இருக்கும் செய்தியைக் கேள்வியுற்றவுடன் துள்ளிக்கொண்டு எழுந்தான் இளங்கோ. வல்லவரையரின் இரு கரங்களையும் இறுகப்
பற்றிக்கொண்டு, “போன உயிர் திரும்பிவிட்டது தாத்தா” என்று குதித்தான்.

வல்லவரையர் படுத்திருந்த இடத்துக்கு அருகில் தூணின் பக்கத்தில்
அந்தப் பேழை இருந்தது. அதைத் தூக்கிக்கொண்டு தூரத்தில் இருந்த
தீவர்த்தியின் ஒளியை நோக்கி ஓடினான். பரபரக்கும் நெஞ்சத்தோடு
திறந்தான். அதற்குள்ளே பளபளவென்று கண்ணைப் பறிக்கும் ஒளியோடு
ஒரு முடி, உடைவாள், ஒரு முத்தாரம் இவ்வளவும் இருந்தன.

அவ்வளவுதான்! இளங்கோ ஆனந்தம் தாங்காமல் கூத்தாடவே
தொடங்கி விட்டான். “தாத்தா! இப்போதே இதையெல்லாம் சக்கரவர்த்தியிடம்
கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும், தாத்தா! பொழுது விடியும் வரையில்
சக்கரவர்த்திகளிடம் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை மறைத்து
வைக்கக்கூடாது. அந்தப்புரத்துக்கு அருகில் ஒரே ஓட்டத்தில் சென்று
மாமன்னரிடம் சேர்ப்பித்து விட்டு வருகிறேன்.”

“பொறு, இளங்கோ!”

கிழவர் தமது விழிகளை இடுக்கிக்கொண்டு ஒவ்வொரு பொருளாக
எடுத்து உற்று நோக்கினார். அவரது முகத்தில் நிலவிய ஏமாற்றத்தைக் கண்டு
இளங்கோ திடுக்கிட்டான். வல்லவரையர் உதட்டைப் பிதுக்கிக் கொண்டே,
‘நாம் தேடி வந்தவை இவையல்ல!’ என்பதைப் போல் தலையசைத்தார்.

மணிமுடியில் பாண்டியருக்குரிய மகர மீன்கள் பொறிக்கப்படவில்லை.
உடைவாளில் மகிந்தருடைய சிங்க உருவம் காணப்பட்டது. பாண்டியருக்குரியது
இரத்தின ஆரம், பேழைக்குள் இருந்ததோ முத்தாரம்!

“மாமன்னர் மகிந்தருடைய அரசுரிமைப் பொருள்கள் இவை” என்றார்
வல்லவரையர் வந்தியத்தேவர்.

அதைக் கேட்டதும் இளங்கோ திகைத்துப் போய் பேச்சுமூச்சற்று
அங்கேயே உட்கார்ந்து விட்டான். அந்தச்செய்தி அவ்வளவு தூரம் அவனைத் தூக்கிவாரிப் போடச் செய்தது. வெளியில் நிரம்பியிருந்த அமாவாசை இருள் அந்தத் தீவர்த்தி உமிழ்ந்த வெளிச்சத்தையும் உண்டுவிட்டதுபோல் தோன்றியது அவனுக்கு.

“நாம் தேடி வந்த பொருள் அவ்வளவு எளிதாகக் கிடைத்து
விடாதென்று முன்பே நினைத்தேன். அது சரியாகிவிட்டது” என்றார்
வந்தியத்தேவர். “இன்னும் நாம் போராட வேண்டும். ரோகணம் மிகவும்
பொல்லாத நாடு. தொடர்ந்து போராட வேண்டும். தான் மறைத்து
வைத்திருக்கும் பொருளை அது காட்டிக் கொடுப்பது வழக்கமே இல்லை.”

பெருமூச்சு விட்டுக்கொண்டே, “அவளைச் சொல்லவும் குற்றமில்லை”
என்றான் இளங்கோ.

“நீ என்ன சொல்கிறாய்?”

“பேழைக்குள் நம் நாட்டு முடியிருக்கும் என்று நினைத்து அவள்
கையாலேயே அதை எடுத்துக் கொடுத்துவிடச் சொன்னேன். அவர்களுக்குச்
சொந்தமானதை அவள் எப்படித் தன் கரங்களாலேயே எடுத்துக் கொடுக்கச்
சம்மதிப்பாள்?”

“இதற்குள் அவளிடம் அநுதாபம் பிறந்துவிட்டதா உனக்கு?”

“இல்லை, தாத்தா!”

பேழையை எடுத்துக் கொண்டு இருவரும் திரும்பி வந்தார்கள்.
சாளரத்தின் வழியே நோக்கி அதற்குள் மூன்று பெண்களும் இருக்கிறார்களா
என்பதை உறுதி செய்து கொண்டான் இளங்கோ. பிறகு, கூடத்தின் கதவுக்கு
நேரே வல்லவரையர் கொடுத்த போர்வையை விரித்துப் போட்டுப் படுத்தான்.
வல்லவரையர் உண்மையாகவே உறங்கலானார். இளங்கோவுக்கு உறக்கம்
வரவில்லை.

மணிமுடி என்று நினைத்து ஏமாற்றமடைந்ததால் அவன் மனம் ஓரளவு
அதிச்சியுற்றிருந்தது. அதிலிருந்து மீள்வதற்காக அவன் மங்கையின் பின்னே
மனதைச் செல்லவிடலானான்.

மாலைப் பொழுதிலிருந்து அவன் பெற்ற அனுபவங்கள் அடுக்கடுக்காக
அவனிடம் அலைமோதத் தொடங்கின, ‘ஒரு பெண் எவ்வளவு துணிவோடு, முன்பின் தெரியாத பகைநாட்டு வீரனிடம் தன் சாகசங்களைப் புரிந்திருக்கிறாள்!’

ரோகிணியின் நிலையில் தன்னை நிறுத்திக்கொண்டு இளங்கோ
யோசனை செய்து பார்த்தான். ‘அவளுடைய செயல்கள் நியாயமானவை;
துணிகரமானவை; பாராட்டுக்குரியவை. தனது நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும்
அவள் போராடுவது தவறா? ரோகணம் அவளுடைய நாடு. காசிபன்
அவளுடைய தம்பி; மன்னர் அவளுடைய தந்தை!

பொழுது விடிந்தது. கன்னியின் நினைவால் இரவில் கசிந்துருகியவன்,
பகலில் கடமை மறவாத கடும் வீரனாக மாறிவிட்டான். அவனைக் காவலுக்கு
நிறுத்திவிட்டு வல்லவரையர் பெரிய மாளிகைக்குச் சென்றார்.

பெரிய மாளிகையில் சக்கரவர்த்திக்கு முன்னால் ஓர் ஆசனத்தில்
அந்தப் பேழை இருந்தது. வல்லவரையர் இரவிலே நடந்த செய்திகளை
மாமன்னரிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார். மாமன்னர் அந்தப்
பேழைக்குள்ளிருந்த பொருள்களை ஒருமுறை பார்த்துவிட்டு, அதற்குள்ளேயே
திரும்பவும் வைத்தார்.

“வழக்கம் போலவே எல்லாம் நடந்திருக்கின்றன” என்று உற்சாகமற்ற
குரலில் கூறினார் சக்கரவர்த்தி. “இனிமேல் மன்னரையும் அவர் மகனையும்
வைத்துக் கொண்டு ரகசியமாகப் படை திரட்ட முயல்வார் கீர்த்தி.
பட்டமகிஷிக்கும் அவர் மகளுக்கும் நாம் தீங்கிழைப்பதாக மக்களிடையே
செய்திகள் பரவத் தொடங்கும். பிறகு ஓயாத ஒழியாத தொல்லைதான்.”

“இளவரசி இங்கே இருப்பதால் நமக்கு மணிமுடி இருக்கும் இடத்தைப்
பற்றிய தகவல்கள் ஒருவேளை கிடைக்கக்கூடும்” என்றார் வல்லவரையர்.

“அந்தப் பெண்ணைப் பற்றித் தாங்கள் கூறியதைப் பார்த்தால்,
நம்முடைய ரகசியங்களல்லவோ வெளியில் போய்விடும் போலிருக்கிறது?”

“முதலில் அப்படித்தான் நினைத்தேன். பெண் எவ்வளவு
சாமர்த்தியசாலியாக இருந்தாலும் பெண்தான். இன்றைக்கில்லா விட்டாலும் விரைவில் ஒருநாள் அவள் இளங்கோவிடம் பல
உண்மைகளைச் சொல்லிவிடுவாள்.”

மாமன்னர் சிறுபொழுது ஆழ்ந்த யோசனையில் இருந்தார். பிறகு,
“இளங்கோ அவளிடம் விழிப்புடன் நடந்து கொள்வானா?” என்று கேட்டார்.

“அதைப் பற்றிக் கவலை வேண்டாம், நான் பார்த்துக் கொள்ளுகிறேன்.”

“ஆமாம்; கவனமாக இருங்கள்; நினைப்பதற்கு நேர்மாறாக நடந்துவிடப்
போகிறது.”

பிறகு, தாம் அரச குடும்பத்தாரை நேரில் பார்த்துப் பேச
விரும்புவதாகத் தெரிவித்தார் மாமன்னர். அந்தப்புரத்துக்கு இதைச் சொல்லி
அனுப்பிவிட்டு, இருவரும் புறப்பட்டார்கள். ஓர் ஏவலாளை அழைத்து அந்தப்
பேழையைத் தம்மோடு எடுத்துக் கொண்டு வருமாறு பணித்தார் இராஜேந்திரர்.

“பேழை எதற்கு? நம்மிடம் இருக்க வேண்டிய பொருள்தானே அது?”

“நம்முடைய பொருள் நமக்குத் திரும்பக் கிடைத்தால் போதும்;
வாருங்கள், போவோம்.”

அந்தப்புரத்தின் கூடத்தில் மாமன்னருக்கு ஏற்ற ஆசனங்கள்
போடப்பட்டன. மன்னருடன் புறப்படுவதற்கு ஆயத்தமான வீரர்களை,
பெரியமாளிகையிலேயே நிறுத்தி விட்டு, வந்தியத்தேவருடனும் ஒரே ஒரு
ஏவலாளுடனும் புறப்பட்டார் மாமன்னர். அந்தப்புரத்தின் முன்னால் நின்று
கொண்டிருந்தான் இளங்கோ. அவனைப் பார்த்துப் புன்னகை செய்துவிட்டு
உள்ளே நுழைந்தார் சக்கரவர்த்தி.

“வணக்கம், தாயே!” சிரம் தாழ்த்திக் கரம் கூப்பிப் பட்டமகிஷிக்குத்
தமது வணக்கத்தைத் தெரிவித்தார் மன்னர்.

பரபரப்புடன் நடுநடுங்கிக்கொண்டே எழுந்து தமது பதில் வணக்கத்தைச்
செலுத்தினார் பட்டமகிஷி. குனிந்த தலை நிமிரவில்லை. நெடுநேரம்
அழுததால் அவர் முகம் சிவந்து கன்றியிருந்தது. “தாயே, வேண்டுமென்றே தங்களை மகிந்தரிடமிருந்து பிரித்து
வைக்கவில்லை. பெண்களைத் தெய்வங்களெனக் கொண்டாடும் தமிழ்நாட்டைச்
சேர்ந்தவர்கள் நாங்கள். தங்களுக்கு ஒரு குறையும் நேராமல் பார்த்துக்
கொள்ளுகிறோம். கவலையை மறந்திருங்கள்.” கனிவோடு கூறினார்
சக்கரவர்த்தி.

அடுத்தாற்போல் அவருடைய கண்கள் இளவரசி ரோகிணியின் பக்கம்
திரும்பின. சுட்டெரித்து விடுவது போல் சினம் தெறிக்க அவள் அவரை
நோக்கிக்கொண்டிருந்தாள். ஒரு கணம் அவளுடைய முகத்தையும் அதில்
குடிகொண்டிருந்த உணர்ச்சியையும் கவனித்தார் சக்கரவர்த்தி.

புன்னகையோடு, “மகளே. உன் அழகான முகம் ஏன் கோபத்தால்
சிவந்திருக்கிறது?” என்று கேட்டார். “நேற்றிரவு உன்னை வெளியே
போகவிடாமல் தடுத்துவிட்டார்களே என்ற கோபமா? தாராளமாக நீ எங்கு
போகவிரும்புகிறாயோ அங்கு போகலாம். எப்போது வேண்டுமானாலும்
போகலாம். நள்ளிரவில் தனி வழியே சென்றால் உனக்குத் தானே ஆபத்து?”

ரோகிணியின் முகம் கீழே கவிழ்ந்தது.

“இந்தா” என்று ஏவலாளியிடமிருந்து பேழையை வாங்கி அவளிடம்
தமது இரு கரங்களாலும் நீட்டினார் சக்கரவர்த்தி. சுற்றிலுமிருந்த அனைவரும்,
ரோகிணி உட்பட இதைக் கண்டு ஒரு கணம் திகைத்தனர். இளங்கோ
திடுக்கிட்டு வல்லவரையரைத் திரும்பிப் பார்த்தான். அவர் அவனை
அமைதியாயிருக்கும்படி சமிக்ஞை செய்தார்.

மாமன்னர் கூறினார்:

“உங்களுடைய நாட்டைக் கவர்ந்து கொண்டுபோக நாங்கள் வரவில்லை.
எங்களுடைய பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்காக
வந்திருக்கிறோம். நீ பத்திரப்படுத்தி வைத்த பொருளை நீயே பெற்றுக்கொள்.
இதைக் காப்பாற்றி வைக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு.

உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் மல்க, “நன்றி சக்கரவர்த்தியவர்களே!”
என்று நாத் தழுதழுக்கக் கூறினாள் இளவரசி ரோகிணி.

“இப்படி நாங்களும் நன்றி சொல்ல வேண்டிய ஒரு நாளைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது விரைவில் வந்தால்
நல்லது” என்றார் சக்கரவர்த்தி.

பின்னர் வல்லவரையரிடம் திரும்பி, சோழப்பேரரசின் புலி உருவம்
பொறிக்கப் பெற்ற இலச்சினை ஒன்றைத் தருமாறு கேட்டார். அதை வாங்கி
ரோகிணியிடம் நீட்டியவாறே, “இது உன்னிடமிருந்தால் நீ நேர்வழியாகவே
அரண்மனையை விட்டு வெளியில் போய்வர முடியும்; பெற்றுக்கொள்”
என்றார். ரோகிணி இலச்சினையை வாங்கிக்கொள்வதற்குத் தயங்கினாள்.
அவளுடைய கண்கள் சந்தேகத்துடன் மாமன்னரை நோக்கி விழித்தன.

அதை அவர் தெரிந்துகொள்ளாதவர்போல், “ஏன் தயங்குகிறாய்?
வைத்துக்கொள். இந்த உடையில் நகருக்குள் சென்றால் மக்களின் கண்களில்
பட்டுவிடக்கூடும் என்று அஞ்சுகிறாயா! உனக்குத்தான் மாறுவேடங்களைப்
புனைந்து கொள்வதில் பழக்கம் இருக்கிறதாமே!” என்று கூறிச் சிரித்தார்.

மறுக்க மனமில்லாதவளைப் போல் அதைப் பெற்றுக் கொண்டாள்
ரோகிணி.

“ஒரு விஷயம் நினைவில் வைத்துக்கொள். உன்னைத் தவிர வேறு
யாராவது இதைப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்தால், அவர்கள்
கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.”

இளங்கோவுக்கு மாமன்னரின் தாராளச்சிந்தை சிறிது கூடப்
பிடிக்கவில்லை. மென்று விழுங்கிக்கொண்டே, “நான் குறுக்கிடுவதற்குச்
சக்கரவர்த்திகள் மன்னிக்க வேண்டும்; இதைக் கொண்டு இவள் திரும்பி
வராமல் தப்பிச் சென்று விட்டால்...?”

“தாராளமாக எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். யாரும்
இளவரசியை இங்கே சிறை வைக்கவில்லை.”

ரோகிணியும் இளங்கோவும் ஒருவரையொருவர் பகைவர்களைப் போல்
பார்த்துக்கொண்டார்கள். அவனுடைய குறுக்கீடு அவளுக்குப் பிடிக்கவில்லை.
அவளிடம் தங்களுடைய இலச்சினை இருந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை.

மாமன்னர் திரும்பிச் சென்றபோது, இளங்கோவையும் தம்முடன் பெரிய
மாளிகைக்கு அழைத்துச் சென்றார். “கவலையுறாதே! நமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதையும் அவளால் இப்போதைக்குச் செய்ய முடியாது” என்று கூறிவிட்டு அவனிடம் சிற்சில ரகசியக் கட்டளைகள் பிறப்பித்தார். அவற்றைக் கேட்டவுடன் அவனுடைய முகம் மலர்ந்தது. அதில் மகிழ்ச்சி குடிகொண்டது.

தொடரும்

No comments:

Post a Comment