Wednesday, November 21, 2012

வேங்கையின் மைந்தன் ( பாகம் 1 ,22. மதுரைச் செய்திகள் )


பாகம் 1 ,22. மதுரைச் செய்திகள் 

கண்ணகி என்ற கற்புக்கரசியின் கணவனைக் கள்வனென்று கூறித்
தண்டனை விதித்த காரணத்தால், உண்மை உணர்ந்தபின், “யானோ அரசன்?
யானே கள்வன்!” என்று அரற்றி, மறுகணமே மாண்டு மடிந்த நீதிமுறை
வழுவாக நெடுஞ்செழியன் ஆண்ட மதுரைமாநகரத்தில் இராஜேந்திரரின்
கட்டளைப்படி மாபெரும் புதுமாளிகை ஒன்று உருவாகத் தொடங்கியது.
பாண்டிப் பகுதி மாதண்ட நாயகர் சேனாபதி கிருஷ்ணன் ராமன் தாமே
முன்னின்று மாளிகை வேலைகளைக் கவனித்தார். இந்தச் செய்தியைத்
தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மூன்று பாண்டியர்களும்
மக்கள் மனத்தில் வெறுப்பைக் கிளறிவிட முற்பட்டனர். ‘வட தேசத்துச்
சோழமன்னர் தென்பாண்டி மக்களை அடிமைப் படுத்துவதற்காகப் புது
மாளிகை எழுப்பி வருகிறார். பாண்டியர்களிடமிருந்து அதிகாரத்தைப்
பறிப்பதற்காக அவர் செய்யும் சூழ்ச்சியின் முதல்படி இது!”

தஞ்சைத் தலைநகரிலிருந்து அந்தப்பகுதியின் மாதண்ட நாயகர்
ஈராயிரம் பல்லவரையரை மதுரைக்கு அழைத்திருந்தார் சேனாபதி கிருஷ்ணன்
ராமன். இருவரும் கலந்து மக்களிடையே பரவி வரும் வெறுப்பு
உணர்ச்சியைத் தடுப்பதற்காக ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். சோழப்
பேரரசின் பழைய மாளிகையில் மந்திராலோசனை நடைபெற்றது.

“பல்லவரையர் அவர்களே! ஈழநாட்டுக்கு நம்முடைய பெரும்படை
சென்றிருக்கும் இச்சமயத்தில், நாட்டில் ஆங்காங்கே கலவரங்களைத்
தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள். சிற்சில இடங்களில் கொலை,
கொள்ளை, வழிப்பறி இவை நடந்திருக்கின்றன. சுந்தர பாண்டியனுக்குத்தெரியாமல் இவை நடந்திருக்கின்றன என்று நான் நம்பவில்லை.”

“தங்களுடைய மக்களிடம் தாங்களே பீதியைக் கிளப்புவதால்
அவர்களுக்கு என்ன பலன்?” என்று கேட்டார் ஈராயிரம் பல்லவரையர்.

“சோழப் பேரரசு பலம் குன்றி வருகிறது என்ற தவறான எண்ணத்தைப்
பரப்புவதற்கு இந்தச் செயல்கள் துணை செய்கின்றன. பாண்டியர்களிடம் முழு
அதிகாரமும் இருந்தால் இப்படி நடக்காதென்று கூறிக் கொள்ளலாமல்லவா!”

“தஞ்சைக்குச் செய்தி அனுப்பி மேலும் பத்தாயிரம் வீரர்களை
வரவழைப்போம். நெடுஞ்சாலைகள் தோறும் கடுமையான காவலுக்கு ஏற்பாடு
செய்யுங்கள். திறமையற்றவர்கள் நாமல்ல, அவர்கள்தாம் என்பதை நம்முடைய
செயலால் மக்களுக்கு அறிவிப்போம்.”

வாயிற்காவலன் வந்து சேனாபதி கிருஷ்ணன் ராமனுக்கு முன்னால்
வணங்கி நின்றான். “மதுரையம்பதியின் அரசர் சுந்தரபாண்டியர் தங்கள்
திருமுகம் காண வந்திருக்கிறார்கள்.”

ஈராயிரம் பல்லவரையரும் சேனாபதி கிருஷ்ணன் ராமனும்
ஒருவரையொருவர் பொருள் நிறைந்த பார்வையில் பார்த்துக் கொண்டார்கள்.
“வாயிலுக்குச் சென்று அவரை வரவேற்போம்” என்றார் கிருஷ்ணன் ராமன்.

இரட்டைப் புரவிகள் பூட்டிய ரதத்திலிருந்து இறங்கி வந்தார்
சுந்தரபாண்டியர். நடுத்தர உயரமும் நீண்ட முகமும் கொண்டிருந்த அவரது
கண்கள் சிவந்திருந்தன. அந்தக் கண்களில் செருக்கும் அதிகாரப் பற்றும்
கலந்திருந்தன.

அவருக்கு அடுத்தாற்போல் பரட்டைத்தலையும் எலும்புக் கூடுமாக
மற்றொரு மனிதர் இறங்கினார். அவரது மேலங்கிகள் தொளதொளவெனத்
தொங்கின. கண்கள் பெரிய பெரிய கோழிமுட்டைக் கண்கள். சோலைமலைச்
சாலையில் வெகு நாட்களுக்கு முன்பு நாம் சந்தித்த உருவம் அது. மேலாடை
யின்றி மிக எளிய தோற்றத்தில் வயலில் உழும் குடியானவனைப்போல்
தோன்றிய அதே உருவம்தானா? வீரமல்லனின்  வளைஎறியின் வேகம் தாங்காது வீறிட்டு அலறிய அந்த மனிதர்தானா இவர்!

“வாருங்கள், சுந்தர பாண்டியரே! வரவேண்டும் பெரும்பிடுகு
முத்தரையரே” என்று முகமன் கூறி, வருகை தந்த இருவரையும் அங்கிருந்த
இருவரும் ஒரே குரலில் வரவேற்றனர்.

சேனாபதி கிருஷ்ணன் ராமனுக்கு அருகில் நின்ற ஈராயிரம்
பல்லவரையரைக் கண்டவுடன் வந்தவர்கள் இருவரும் ஒருகணம் வாயடைத்து
விட்டனர். பல்லவரையரின் தோற்றமே பயங்கரமான தோற்றம். அதிலும்
அவர் தம் உணர்ச்சியை மறைக்கத் தெரியாதவர். அவருடைய முகத்திலிருந்து
எழுந்த வெறுப்பு, வந்தவர்களை நெருப்பெனச் சுட்டுவிட்டது போலும்.

உள்ளே வந்து ஆசனத்தில் அமர்ந்துகொண்டே, “இன்றைக்கு எனக்கு
எதிர்பாராத பாக்கியம் கிடைத்திருக்கிறது. இருவரையும் ஒன்றாகச்
சந்திக்கிறேன்” என்றார் சுந்தர பாண்டியர். “தாங்கள் எப்போது வந்தீர்கள்,
பல்லவரையரே?”

“இன்றுதான் வந்தேன்; நானும் இந்தச் சந்திப்பால் மகிழ்கிறேன்”
என்றார் ஈராயிரம் பல்லவரையர்.

“வீட்டில் எல்லோரும் நலந்தானா மாமா?” என்று கேட்டு, அவரிடம்
உறவு கொண்டாட முயன்றார் பெரும் பிடுகு முத்தரையர்.
“பல்லவரையருக்கும் எங்களுக்கும் பழங்காலத்து உறவு” என்று என்றைக்கோ
விட்டுப்போன உறவை இன்று தொட்டுக் காட்டினார் முத்தரையர்.

“பழங்காலத்தில் உறவென்றால், இக்காலத்தில் பகையா?” என்று
கேட்டுச் சிரித்தார் பல்லவரையர். அவர் முத்தரையரை நோக்கிய நோக்கில்,
‘உதட்டில் உறவும் உள்ளத்தில் கள்ளமும் வேண்டாம்’ என்ற மறைமுகமான
எச்சரிக்கை இருந்தது.

தாங்கள் வந்த காரணத்தை வெளியிட்டார் சுந்தர பாண்டியர்:

“பெரிய மாளிகை ஒன்று எழுப்பிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
தங்களுக்கு இந்த மாளிகை போதவில்லையென்றால், என்னுடைய
மாளிகைகளில் ஒன்றை விட்டுக் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன்.
சோழப்பேரரசு விரும்பினால் என் அரண்மனையையே கட்டளையிட்டுப்
பெற்றுக் கொள்ளலாம்.” “அதனாலென்ன? தாங்கள் மனமுவந்து இவ்வளவு தூரம் கூறியதே பெரியது” என்றார் சேனாபதி. “சக்கரவர்த்திகள் கட்டளை இட்டார்கள்;
நாங்கள் கட்டிக்கொண்டிருக்கிறோம்.”

“காரணத்தை நான் அறியலாமா?”

“மாமன்னரின் மனத்தில் இருப்பதை நாங்களே அறியோம்” என்றார்
பல்லவரையர். “அவர்கள் இட்ட பணியைச் செய்யக் காத்துக் கிடப்பவர்கள்
நாங்கள். ஈழத்திலிருந்து அவர்கள் திரும்பியவுடன் காரணம் தெரியலாம்.”

இதைக் கேட்ட பெரும்பிடுகு முத்தரையரின் முகத்தில் ஏளனச்
சிரிப்பொன்று தோன்றி இருந்தவிடம் தெரியாமல் ஒளிந்து கொண்டது.
‘சோழர்கள் இட்ட பணியைச் செய்யப் பல்லவரையர்கள் காத்துக் கிடப்பதாம்!
அவமானம்!’

“அடுத்தாற்போல் ஒரு முக்கியமான விஷயம்” என்று தொடங்கினார்
சுந்தரபாண்டியர்: “நாட்டில் திடீரென்று அங்கங்கே கலவரங்கள் அதிகரித்து
வருகின்றன. கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கொலைகளும்,
கொள்ளைகளும் பெருகி வருகின்றன.”

“அதற்காக?” என்று குறுக்கிட்டார் பல்லவரையர்.

“பதினையாயிரம் காவல் வீரர்கள் இருந்தால் நிலைமையை ஒருவாறு
கட்டுப்படுத்தலாம். எங்கள் மூவருக்கும் ஐயாயிரம் வீரர்கள் வீதம்
தேவைப்படுகிறார்கள். பேரரசின் அநுமதி பெற்றுப் பாண்டிய நாட்டு
இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்கலாமா என்று ஆலோசிக்கவே இங்கு
வந்தேன்.”

“பதினையாயிரம் வீரர்கள்தானே? புதிதாகச் சேர்த்துப் பயிற்சியளிக்கும்
சிரமம் தங்களுக்கு எதற்கு? பத்து நாட்களுக்குள் வீரர்கள் இங்கு வந்து
சேருவார்கள். நாங்களே பிரித்து உடனடியாக அனுப்பி வைக்கிறோம்.”

சுந்தரபாண்டியர் இதைக் கேட்டவுடன் அடைந்த அதிர்ச்சியிலிருந்து
மீளுவதற்குச் சில விநாடிகள் சென்றன. இடியோசை கேட்ட நாகமென
நடுங்கினார் முத்தரையர். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர்
பார்த்துக்கொண்ட போது, நான்கு விழிகளும் வெளியே பிதுங்கிச் சுழன்றன.
அவர்கள் விடைபெற்றுக் கொண்டு எழுந்தார்கள். குதிரைகளின் குளம்பொலியும் ரதத்தின் சக்கரங்களின் ஓசையும் மறைந்த பிறகு “பார்த்தீர்களா, சேனாபதி! கலவரங்கள் நடப்பதற்கு மேலும் சில காரணங்கள் உண்டென்பதைத் தெரிந்து கொண்டீர்களா?” என்றார் பல்லவரையர். “நம்மை எதிர்த்துப் போராடுவதற்குப் படைபலம் தேவையாக இருக்கிறது. நம்மிடம் அனுமதி கேட்டுப் பார்க்கிறார்கள். ரகசியமாக ஒருபுறம் படை திரட்டிக் கொண்டே, பகிரங்கமாக மறுபுறம் பத்து மடங்கு சேர்ப்பதற்காக இப்படி ஒரு கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார்கள்.
துணிவைப் பார்த்தீர்களா?”

பல்லவரையர் சிரித்த பயங்கரச்சிரிப்பு, அந்தப் பழைய மாளிகையைக்
கிடுகிடுக்க வைத்தது.

சுந்தர பாண்டியருடன் சேனாபதி கிருஷ்ணன் ராமனைக் கண்டு
திரும்பிய பெரும்பிடுகு முத்தரையர் அன்று பிற்பகல் தமது சிறிய
மாளிகையின் வெளிவாசலுக்குள் நுழைந்தபோது, அங்கே தமது மகள்
திலகவதியும் தமக்கையாரும் ஒரு வணிகனிடம் பட்டாடைகள் வாங்கிக்
கொண்டிருப்பதைக் கண்டார். நாடுதோறும் மூட்டைகள் சுமந்து பட்டாடை
களையும் பஞ்சுத் துணிகளையும் விற்பனை செய்யும் நாடோடி வணிகன்
ஒருவன் அவர்களிடம் தன் ஆடைகளின் பெருமையை விளக்கிக்
கொண்டிருந்தான்.

“அம்மணி! காஞ்சி, கலிங்கம், உறையூர் இவற்றில் எது வேண்டும்?”

“ஏனப்பா, பாண்டி நாட்டுத் துணிகள் ஏதும் உன்னிடம் இல்லையா?”
என்று கேட்டுக்கொண்டே, எதேச்சையாக அவனைத் திரும்பிப் பார்த்தார்
பெரும்பிடுகு முத்தரையர். வணிகனின் கண்களும், அவர் கண்களும், சந்தித்துக்
கொண்டன. அப்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் வணிகனின் கரத்திலிருந்த
கலிங்கம் அவனையறியாதபோது கீழே நழுவி விழுந்தது.

“பாண்டிய நாட்டுக் கச்சைகளும், வெண் பட்டாடைகளும் இருக்கின்றன.
தாங்களும் வந்து பார்க்கிறீர்களா?”

“பார்க்கிறேன், பார்க்கிறேன், பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!”
என்று ஏளனமாகக் கூறினார் முத்தரையர். தனது தந்தையின் குரலில்
தொனித்த பரிகாசத்தைக் கண்டு மருண்டுஒதுங்கினாள் திலகவதி. முத்தரையரின் உடைவாள் மின்னலெனப் பாய்ந்து
வந்து வணிகனின் புறமுதுகில் குத்திட்டு நின்றது.

“அப்பா! என்ன இது?”

குனிந்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருந்த இளம் வணிகன் இதைச்
சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை. “என்ன ஐயா இது அக்கிரமம்! நிராயுதபாணியாக வந்திருக்கும் வணிகனைக் கொல்லப் பார்க்கிறீர்கள்! பாண்டிய நாடு இவ்வளவு பொல்லாத நாடென்று தெரியாமல் போய்விட்டதையா?” என்று அலறினான் அவன்.

“யார் நீ உண்மையைச் சொல்?”

“அம்மணி! நீங்கள் சொல்லுங்கள் அம்மணி! யார் இவர்?”

வணிகனின் முதுகை முள்ளெனக் குத்தியது வாள் முனை.

“ஐயா! என்னைப் பார்த்தால் தெரியவில்லையா? நான் வணிகனய்யா?
அப்படி என்னைக் கொல்வதென்றால் மார்பில் குத்திக் கொன்று விடுங்களையா!
புறமுதுகில் வாள் பாய்ச்சுவது உங்களுக்கே அழகாயிருக்கிறதா? ஐயா ஐயா!
அம்மணி! நீங்களாவது தடுத்து நிறுத்தக்கூடாதா?”

“திலகவதி உள்ளே சென்று ஒரு வாளை எடுத்துக் கொண்டு ஓடிவா!”

கால் சதங்கைகள் ஒலிக்க, அவள் ஓடும் அழகைக் கண்ட வணிகனுக்கு,
ஒரு கணம் தன் உயிரை உறிஞ்ச வந்த ஆபத்துக்கூட மறந்துவிட்டது.

தொடரும்


No comments:

Post a Comment