வேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1- 25.இளைஞன் வேடத்திலிருந்த ரோகிணியையும் அவளுடைய
பணிப்பெண்ணின் தகப்பன் கந்துலனையும் சுமந்து கொண்டு, கிழக்கேகாட்டுக்குள் குறுகலான பாதையில் இறங்கியது ஒரு குதிரை. காட்டுக்குள்செல்லச் செல்ல பாதை விசாலமாகிக் கொண்டு வந்தது. நகரத்தைக் கடக்கும்வரையிலும் குதிரை மேலிருந்தவர்கள் இருவரும் மௌனமாகவே சென்றனர்.
அச்சமும் தவிப்பும் குடிகொண்டிருந்தன அவர்கள் மனத்தில்.

அடர்ந்த மரங்களுக்குப் பின்னால், ரோகணத்தின் தலைநகரம் மறைந்தபிறகே அவர்களால் தாராளமாக மூச்சுவிட முடிந்தது.
ஒரு திருப்பு முனையில் குதிரையை நிறுத்திவிட்டுக் கீழே குதித்தான்கந்துலன். ரோகிணியும் இறங்கினாள். கந்துலன் தனியாக வலதுகைப்புறமிருந்த புதருக்குள் நுழைந்தான். சற்று நேரத்துக்கெல்லாம் மிடுக்கானதோற்றமுடைய மற்றொரு இளங்குதிரையுடன் வெளியே வந்தான்.

“இளவரசி! கிழவனுக்கு அந்தக் கிழட்டுக் குதிரையைக் கொடுத்துவிட்டுநீங்கள் இதில் ஏறிக்கொள்ளுங்கள்; நகரத்துக்குள் இந்தக் குதிரையைக்கொண்டு வந்திருந்தால், இது நம்முடைய அரண்மனைக் குதிரை என்றுபகைவர்கள் சந்தேகப்பட்டிருப்பார்கள். நாமோ நெடுவழி போக வேண்டும்.
ஒரு குதிரை நமக்குப் போதாது.”

வெயிலும் நிழலும் கலந்து உறவாடிய அந்த இடத்தில் சற்று நேரம்நிற்கவேண்டும் போல் தோன்றியது, ரோகிணிக்கு. இலைகளின் வழியேவானத்தைப் பார்த்தவாறே, “உச்சிவேளை பார்த்துப் புறப்படச் சொன்னாயே,வேறு நேரம் கிடக்க வில்லையா, உனக்கு!” என்று கேட்டாள்.

“இளவரசி! இந்தச் சோழநாட்டுக்காரர்களின் போக்கே புதுவிதமாகஇருக்கிறது. பட்டப் பகலில் அவர்கள்மேல் போய் முட்டிக்கொண்டால்கூடஏனென்று கேட்கமாட்டார்கள். இரவிலோ நாம் மூச்சுவிட்டால் கூடக் கத்தியை
உருவிக் கொண்டு வந்துவிடுவார்கள். பகலில் விழித்துக் கொண்டேதூங்குகிறார்கள்; இரவில் தூங்கியபடியே விழித்திருக்கிறார்கள், ஆந்தையாய்ப் பிறக்க வேண்டியவர்கள்!”

“நன்றாய்ச் சொன்னாய், கந்துலா!” என்று நகைத்தாள் ரோகிணி.அவளுடைய நினைவு வேறு எங்கோ போய்விட்டது. “கந்துலா! இப்படித்தான்ஒருநாள் இரவு நான் தப்பி வரப் பார்த்து ஒரு முரட்டு வீரனிடம் அகப்பட்டுக்கொண்டேன். என்னைப் பிடித்தவன் சாமான்ய வீரனல்ல. கொடும்பாளூர்
இளவரசன் என்ற கொடியவனைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாயே! யார் செய்த புண்ணியமோ கொல்லாமல் விட்டுவிட்டான்.”

பற்களை நறநறவென்று கடித்தான் கந்துலன். வெறுப்பும் கசப்பும்படர்ந்தன அவன் முகத்தில்.

“என்ன கந்துலா?”

“அவனுடைய தலையைக் கொய்து கொண்டுபோய் மந்திரியாரின் காலடியில் வைக்க வேண்டுமென்று நம்முடைய வீரர்கள் பலர் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றிலிருந்து நானும் அவர்களில் ஒருவனாகிவிட்டேன். அவன் முகத்தை நான் அருகிலிருந்து பார்த்ததில்லை.உங்களுக்குத் தெரிந்தால் அடையாளம் சொல்லுங்கள் இளவரசி!”

இதைக் கேட்டவுடன் ரோகிணியின் முகம் சட்டென்று வெளுத்தது. முகமாற்றத்தைக் கந்துலன் தெரிந்துகொள்ளக் கூடாதென்பதற்காக வேறுபுறம்அதைத் திருப்பிக் கொண்டாள். தன்னுடைய ஒரு துளி ரத்தத்துக்காக இளங்கோ பல துளி கண்ணீர் உதிர்த்த காட்சியை அவளால் அச்சமயம்
நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பிறகு அவள் குதிரைமீது ஏறிக்கொள்ளாமல், கந்துலன் கொண்டுவந்த இளம் புரவியின் முகத்தைத் தடவிக் கொடுத்தபடியே நின்றாள். அதன் வலிவு,வனப்பு, மிடுக்கு, கம்பீரம் எல்லாமே இவளுக்கு இளங்கோவைக் கண்முன்னே
கொண்டு வந்தன. ‘திரும்பவும் அரண்மனைக்குப் போக முடியுமோ முடியாதோ?’ ‘அவனைச் சந்திக்க முடியுமோ முடியாதோ?’-ரோகிணி நீண்ட பெருமூச்சுவிட்டாள். “யோசிக்காமல் கிளம்புங்கள், இளவரசி!” என்று தன் குதிரையின் மீது ஏறி அமர்ந்தான் கந்துலன். “இருட்டிய பின்னரும் நீங்கள் அரண்மனைக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் சும்மாயிருக்க மாட்டார்கள். அவர்கள் தேடத்
தொடங்குவதற்குள் நாம் நாற்சந்திச் சாவடியைக் கடந்து விட வேண்டும்.”

“இப்போது யாரும் கிளம்பியிருக்க மாட்டார்களே!” என்று பயந்து கொண்டே கேட்டாள் ரோகிணி.

“பகலில் கண் தெரியாத தூங்குமூஞ்சிகள்! அந்தக் கவலையே
உங்களுக்கு வேண்டாம், புறப்படுங்கள்!”

இரு குதிரைகளும் அவ்விடத்தை விட்டுப் புதிய சுறுசுறுப்புடன்
குளம்புகள் ஒலிக்க வேகமாகப் புறப்பட்டன.

அதுவரையில் நடுநிசி ஆந்தையைப் போல் கண்களை அகலத் திறந்துகொண்டு அவர்களைத் தொலைவிலிருந்து கவனித்து வந்த இளங்கோ, அதன் பிறகு மெல்லக் கண்ணிமைத்தான். கூப்பிடு தூரத்தில் குன்றின் இடைவெளியில் நின்ற இளங்கோவுக்கு அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது விளங்கவில்லை. ஒரு குதிரை இரண்டு குதிரைகளாக
மாறியது அவனுக்கு விந்தையாகத் தோன்றியது. குன்றின் மறுபுறம் விட்டு வந்த தன் குதிரையை எட்டிப் பார்த்துக் கொண்டான்.

விரைந்து சென்ற அவர்களை வளைத்துக் கொள்வதென்றால் அரை நாழிகை நேரம்கூட ஆகாது. அவர்களைப் பிடிப்பதற்காக அவன் அங்குவரவில்லை. அவர்கள் எங்கு போகிறார்கள் என்பது அவனுக்குத் தெரியவேண்டும். யாரைச் சந்திக்கிறார்கள் என்பதை அவன் காண வேண்டும்.

கிளைவழிகள் இல்லாத நேர் பாதை அது. நாற்சந்திச் சாவடியைமையமாக வைத்துத்தான் பிற பாதைகள் பிரிந்து செல்லுகின்றன. சாவடிக்குப்போய்ச்சேருவதற்குள் நன்றாக இருட்டிவிடும்.

அந்த வழியில் அவர்களைப் பின்பற்றிச் சென்றால் அவர்கள்
சந்தேகத்திலிருந்து தப்ப முடியாதென்பதற்காக ஒற்றன் குறிப்பிட்ட சுற்றுவழியை நோக்கித் தன் குதிரையுடன் திரும்பினான் இளங்கோ, காட்டு வழியைப்போல் இருமடங்கு தூரம் கடந்தாகவேண்டுமாம். . . இளங்கோவின் குதிரை சிறகு பெற்ற பறவையைப்போல்நாலுகால் பாய்ச்சலில் பறந்தது. மூன்று குதிரைகள் வெவ்வேறான இரண்டு பாதைகளில் ஒரே இடத்தை நோக்கிச் சென்றன.

கந்துலனுக்கு ஐம்பது வயதுக்கு மேலாகிறது. மகிந்தரின் உப்பைத் தின்று வளர்ந்தவன். அவரது கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொண்டவன்,ரோகிணியைக் குழந்தைப் பருவத்திலிருந்து தூக்கி வளர்த்தவன். அவனுடைய
மகளையே தனக்குப் பணிப்பெண்ணாக வைத்துக் கொண்டிருந்தாள் ரோகிணி.

போர் நடந்த நாட்களில் கந்துலனை அரண்மனைக்கு வெளியே
அனுப்பிவிட்டார் அமைச்சர் கீர்த்தி. ஆனால் ரோகிணி தன் தோழியைஅனுப்ப மறுத்துவிட்டாள். மகிந்தர் இருக்குமிடத்தை ஒருவாரம் வரையிலும் கந்துலனால்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை; கடைசியில் இடம் தெரிந்தது. ஆனால் காவலர்களை மீறி மன்னரைச் சந்திக்க முடியவில்லை,
திரும்பிவிட்டான்.

இப்போது ரோகிணியுடன் செல்வதால் மன்னரை அணுகிப் பேசமுடியுமென்று அவனுக்கு ஒரு நம்பிக்கை. ஆனால் அந்த நம்பிக்கையும் உறுதியற்றதாக இருந்தது! ரோகிணியை அவன் அழைத்துக் கொண்டு வருவதை அமைச்சர் கீர்த்தி விரும்புவாரோ, மாட்டாரோ? கீர்த்தி மன்னருடன் தங்கியிருக்கிறாரோ அல்லது வேறெங்கேனும் சென்று
விட்டாரோ!

சூரியன் மேற்கில் நழுவி வெம்மையைக் குறைக்கத் தொடங்கினான். மரநிழல்கள் கிழக்கே நீண்டன. வழி நெடுகிலும் வழிந்தோடிக் கொண்டிருந்த மஞ்சள் பொன்னொளி சிறிது சிறிதாக இருட் கவசத்துக்குள் மறைந்து சுருங்கத்தொடங்கியது.

ரோகிணியும் கந்துலனும் நிழலுருவங்களானார்கள். பின்னர்
அவர்களையும் இருள் விழுங்கிவிட்டது. பொழுது சாய்ந்து இரண்டு நாழிகையான பிறகு நாற்சந்திச் சாவடி தனது பாழடைந்த சுவர்களுடன் அவர்களை அச்சத்தோடு வரவேற்றது. வளர்பிறை நிலவு அப்போது மேலே மிதந்து கொண்டிருந்ததால்,இருள் அவ்வளவு பயங்கரமானதாக இல்லை.

சாவடிக்குச் சற்றத் தொலைவிலேயே இருவரும் குதிரையை
விட்டிறங்கினார்கள். சந்தடியில்லாமல் குதிரைகளைக் கொண்டு போய் எங்கோ ஒரு மறைவிடத்தில் கட்டிக் கொள் வைத்து விட்டு வந்தான் கந்துலன். சாவடிக்கு அப்பால் தெரிந்த மூன்று பாதைகளில் எந்த வழியாகப்போகவேண்டுமென்று அவனிடம் மெதுவாகக் கேட்டாள் ரோகிணி.

“முதலில் சாவடிக்குப் போய் மூட்டையை அவிழ்த்துப் பசியாற்றிக்கொள்வோம்” என்றான் கந்துலன். “இந்தப் பாதைகளும் சரி, நம்முடைய குதிரைகளும் சரி, இனி நமக்கு உதவப் போவதில்லை. கல்லையும் முள்ளையும் பாராமல் இனிமேல் நாம் குறுக்கு வழியில் நாலு நாழிக்கைக்குமேல் நடந்து போகவேண்டும்; நிலவு இருப்பது ஒருவகையில் நமக்கு உதவி; மற்றொருவகையில் பெரும் தொல்லை.”

அவர்களுடைய ரகசியப் பேச்சை மரத்தின் மறைவிலிருந்து ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த ஓர் உருவம் மெல்லச் சாவடியை நோக்கி நழுவியது.அவர்கள் வருவதற்கு முன்பாகவே சாவடியின் முகப்புத் திண்ணைக்கு வந்து நீட்டி நிமிர்ந்து படுத்தது. இது கரத்தை மடித்துத் தலைக்கு வைத்துக்கொண்டு
பொய்த் தூக்கம் தூங்க ஆரம்பித்தது.

நிலவொளி திண்ணையில் வீசிக் கொண்டிருந்ததால் அந்த உருவத்தின் முகம் மங்கலாகத் தெரிந்தது. கருகருவென்று வளர்ந்த சுருண்ட தாடியும் மீசையுமாக அவன்காணப்பட்டான். நெற்றியில் சந்தனப் பொட்டும் குங்குமப்பொட்டும் கலந்திருந்தன. நீண்ட மேலங்கி அணிந்து கொண்டிருந்தான்.

ரோகிணி அவன் படுத்துக் கிடப்பதைக் கண்டவுடன் பதறிப்போய் கந்துலனின் கரத்தைப் பற்றிக்கொண்டாள். கந்துலனுக்கும் ஒரு கணம் ஒன்றுமே தோன்றவில்லை. மௌனமாகத் தனக்குப் பின்னால் வரும்படி அவளுக்கு எச்சரிக்கை செய்துவிட்டு அடிமேல் அடி எடுத்து வைத்து அந்த உருவத்தின் அருகில் சென்றான். உடைவாளை உறுதியாக ஒரு கரம் பற்றிக்கொண்டது.

உறங்குபவனின் முகத்தையும் மேலங்கிக்குக் கீழே தெரிந்த
உள்ளுடையையும் உற்றுப் பார்த்தான் கந்துலன். படுத்துக் கிடந்தவனின் பரந்த மார்பை மறைத்திருந்த உள்ளங்கி மேலங்கியின் வாயிலாகத் தெரிந்தது.

பயம் நீங்கப் பெற்றவனைப் போல், மெதுவாக ரோகிணியின் பக்கம்திரும்பிப் புன்னகைபூத்தான் கந்துலன். அந்த இடத்தை விட்டுச் சற்று விலகியபின், “அஞ்ச வேண்டியதில்லை, இளவரசி! இவன் ரோகணத்து வீரன்,மகிந்தரின் மெய்க்காவல்படையைச் சேர்ந்த பாண்டிய நாட்டுத் தமிழன்”என்றான். “முட்டாள்! மேலங்கிக்கு வெளியே உடை தெரியும்படிவைத்துக்கொண்டு பொழுது போவதற்கு முன்பே உறங்கத்தொடங்கிவிட்டான்.”

அவன் அங்கு இருப்பதைப் பற்றிக்க வலையுறாதவர்களைப்போல்தண்ணீரையெடுத்து வைத்துக் கொண்டு மூட்டையை அவிழ்த்துச் சாப்பிடஉட்கார்ந்தார்கள் இருவரும். உணவின் இனிய மணம் பொய்த் தூக்கம் தூங்கியவனின் நாக்கில் நீர் சுரக்க வைத்தது.நெடுந்தொலைவு பிரயாணம்செய்து வந்தவன் அவன். பெருங்குடல் சிறுகுடலை விழுங்கக் காத்திருந்த இந்த வேளையில் நெய்ச் சோற்றின் வாசனை அவனைச் சும்மா இருக்கவிடவில்லை.

சிறிய ஓசை கேட்டதைச் சாக்காக வைத்துக்கொண்டு துள்ளியெழுந்தான்.

“யாரது அங்கே?” என்று கரககரத்த குரலில் கேட்டுக் கொண்டே
அவர்கள் மீது பாயப் போனான். “வாழ்க மகிந்தர்! வாழ்க ரோகணம்; ஒழிக,சோழ நாட்டுப் பதர்கள்.”

கந்துலன் சிரித்துக்கொண்டே, “பொறு மகனே பொறு! நாங்களும் ரோகணத்தைச் சேர்ந்தவர்கள்தான்” என்றான். “நன்றாக உறங்கி எழுந்துவிட்டாயா?” என்று பரிகசித்தான்.

“ரோகணத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் யார் நீங்கள்? இந்த நேரத்தில் உங்களுக்கு இங்கென்ன வேலை?” -இப்படிக் கேட்டுக் கொண்டே அவிழ்க்கப்பட்டிருந்த உணவு மூட்டையை உற்றுக்கவனித்தன அவன் கண்கள். இரண்டு நாட்களுக்குச் சேர்த்துக்கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள் போல் தோன்றியது.

அடுத்தாற் போல் ரோகிணியைப் பார்த்து, “இந்த இளஞைனை
இதற்குமுன் எங்கோ பார்த்த நினைவாக இருக்கிறதே!” என்று அலட்சியமாகக்குறிப்பிட்டுவிட்டு “எங்கே நீங்கள் யாரென்று சொல்லிவிட்டு, உணவில் கொஞ்சம் இப்படி எடுத்து வையுங்கள்” என்று சம்மணம் போட்டுக் கொண்டு
அமர்ந்தான்.

“பாவம்! உன்னுடைய வீரமெல்லாம் இந்தச் சோற்றுக்குத்தானா? முதலில்நன்றாகச் சாப்பிடு; பிறகு பேசுவோம்” என்று இலைச் சருகில் உணவை எடுத்து வைத்தான் கந்துலன். குவளைத் தண்ணீரை மத்தியில் நகர்த்தி
வைத்தான்.

ரோகிணி குனிந்த தலை நிமிரவே இல்லை. அவளுடைய கைகால்கள் வெடவெடவென்று நடுங்கின. வாய்க்குள் அவள் எடுத்து வைக்கப்போனசோறு பலமுறை கீழே நழுவி விழுந்தது.

அவளை ஓரக்கண்களால் கவனித்த பாண்டியத் தமிழன், “தம்பி,
உனக்குச் சாப்பிட்டே பழக்கமில்லையோ? நான்வே ண்டுமானால் ஊட்டிவிடட்டுமா?” என்று கேட்டு நகைத்தான்.

கந்துலனுக்குக் கோபம் வந்துவிட்டது. “உன் நாவை அடக்குகிறாயா,இல்லையா! எனக்குத்தான் வயதாகிறதே தவிர என் வாளுக்கு வயதாகவில்லை!உறங்கும்போதே உன்னை எமலோகத்திற்கு அனுப்பியிருந்தால் நீ இப்படி வாய்த் துடுக்காகப் பேசியிருக்க மாட்டாய்.”

“அதனால் யாருக்கு நஷ்டம்? தனி வழியே வரும் நம்மவர்களை
ஆபத்தில்லாமல் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதே அமைச்சர் கீர்த்தியின்கட்டளை; அவருடைய மைத்துனர் சுந்தரபாண்டியரின் படையில்செல்வாக்குடன் இருந்தவன் நான். இங்கே ரோகணத்துக்கு நான் வந்த வேளை மிகவும் பொல்லாத வேளை ஐயா! பகைவர்களும் தாக்குகிறார்கள்.
நண்பர்களும் பயமுறுத்துகிறார்கள்.” இதைக்கேட்ட கந்துலனின் கண்களும் ரோகியிணின் கண்களும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டன.

தொடரும்


Comments