Wednesday, November 21, 2012

வேங்கையின் மைந்தன் ( பாகம் 1 , 28. கூரம்பு பாய்ந்தது! )

பாகம் 1   , 28. கூரம்பு பாய்ந்தது! 


உண்மையில் வல்லவரையர் வந்தியத்தேவரோ அல்லது வேறெந்தச்
சோழநாட்டு ஒற்றனோ அங்கு வரவில்லை. ரோகணத்து இளவரசி தானாக ஒரு
கற்பனை ஒற்றனை உருவாக்கி அவனை அந்தப் பயங்கரமான பிரதேசத்தில்
உலவ விட்டிருந்தாள். அவளுடைய ஒற்றனுக்கு உருவமும் இல்லை, உயிரும்
இல்லை. மகிந்தரின் காவலர்கள் அவனை அந்த இரவு முழுவதும்
தேடினாலும் அவன் அவர்களின் கண்களுக்குத் தென்படவா போகிறான்?

தான் செய்த தந்திரம் பலித்துவிடும் என்ற நம்பிக்கை ரோகிணிக்கு
இல்லை. ஆனால் அது எப்படியோ பலித்து விட்டது; அதை நினைத்து
நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள் அவள். இளங்கோ ஒன்றும்
புரியாதவனாகத் தன்னுடைய நிலையை எண்ணி மகிழ்ச்சியும் துயரமும் மாறி
மாறி அடைந்து கொண்டிருந்தான்.

வல்லவரையர் வந்திருந்தால் மணிமுடியின் இருப்பிடத்தைத் தெரிந்து
கொண்டிருப்பார் என்பதை எண்ணி மகிழ்ந்தான். பொறிக்குள் அகப்பட்ட
புலிபோல் தான் ரோகிணிக்கு முன்னால் செயலற்றிருப்பதை நினைத்து
வருந்தினான். இறுக்கமாகக் கட்டப்பெற்றிருந்த கயிறு அவன் தசைகளை
மென்று கொண்டிருந்தது. அந்த வலியை அவன் தாங்கிக் கொண்டாலும்,
அவமானத்தை அவனால் தாங்க முடியவில்லை. ‘ரோகிணி என்னைப்
பார்த்துத் தான் தனக்குள் ஏளனமாகச் சிரித்துக் கொள்ளுகிறாளா?’ கொன்று
விடுவதைப் போல் அவளைக் கோபமாக விழித்து நோக்கினான்.

சுற்றிப் பார்த்துத் தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதைக் கண்ட
ரோகிணி, “உங்களைத் தவிர வேறு எந்த ஒற்றனும் இங்கே வரவில்லை!”
என்றாள் ரகசியமான குரலில்.

“என்ன?”

தன் உதட்டில் விரலை வைத்துக் காட்டி அவனை அமைதியாக
இருக்கும்படி எச்சரிக்கை செய்தாள் ரோகிணி. உண்மையைப் பிறகு
சொல்வதாகச் சாடை காட்டினாள்; ‘என்னவாக இருந்தால் என்ன!
கோழையான மன்னரின் குயுக்தியான அரச தந்திரங்களில் இதுவும் ஒன்றாக
இருக்கும்’ என்ற எண்ணம் இளங்கோவுக்கு.

ஆனால், உண்மைதான் என்ன?

இளங்கோ அவளுடைய கண்களிலிருந்து மறைந்த சிறிது
நேரத்துக்கெல்லாம், குகையின் பின்புறத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்யத்
தொடங்கினாள் ரோகிணி. பாறையின் மேலிருந்த சிறிய கல் ஒன்று
பயங்கரமான சத்தத்துடன் கீழே விழுந்து உருண்டது! “ஒற்றன்; இன்னொரு
ஒற்றன்!” என்றுஉளறியடித்துக்கொண்டு ஓடிவந்தவள், எரிந்து கொண்டிருந்த விளக்கையும்
தட்டி விட்டு, அவள் தந்தையின் மடியில் பதறி விழுந்தாள்.

“ஓடுகிறானப்பா! ஓடுகிறானப்பா! போய்ப் பாருங்கள்!” என்று
சொல்லிக்கொண்டே, அவரை எழுந்திருக்க விடாமல் சாகசம் செய்தாள்.
கடைசியில் தந்தையும் மகளும் நடுநடுங்கிக்கொண்டே எழுந்து சென்றனர்.
அதற்குள் வாசலில் அமர்ந்திருந்த கந்துலனும் அவளுடைய துணைக்கு வந்து
சேர்ந்துவிட்டான்.

“அதோ பாருங்கள்! அதோ பாருங்கள்!” என்று கூவினாள் ரோகிணி.
“புதருக்கு வெளியே அவன் தலையைப் பாருங்கள்!”

ஆம்! புதர்கள் அசைந்தன; கற்கள் உருண்டன. பயந்தவர்களின்
கண்களுக்கு ஒற்றன் மறைந்து மறைந்து ஓடுவது போலவே தோன்றியது.
“கந்துலா, பிடி, அவனை! பிடி அவனை!” என்று கூச்சலிட்டார் மகிந்தர்.
கந்துலனுக்கோ தனியாக அந்த ஒற்றனைப் பின்பற்றிச் செல்வதற்குத் தயக்கம்.
மேலும் அவனுடைய கண்களும் அவ்வளவு கூர்மையான கண்களல்ல.

“எனக்குத் தெரியவில்லை அரசே! எங்கே ஓடுகிறான் அவன்?”

“அப்பா? கந்துலன் கோழையப்பா! பயந்து சாகிறான் அவன்” என்று
அவன் மேல் எரிந்து விழுந்தாள் ரோகிணி.

“இல்லை, ரோகிணி! அவனைக் குறை சொல்லாதே. பகலிலேயே
அவனுக்குப் பார்வை குறைவு” என்று அவனுக்குப் பரிந்து பேசினார் மகிந்தர்.
கூர்ந்த பார்வையுடைய அவருக்கு ஓர் ஒற்றனல்ல, ஒன்பது ஒற்றர்கள்
தட்டுப்பட்டார்கள். தமது மகள் கூறிய வார்த்தைகளை நம்பி, அவன்
ஒருவனாகத்தான் இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

அதற்குள் ரோகிணி அந்தக் குகையே உருகிக் கசியும் படியாகக் கதறி
அழத் தொடங்கினாள். “நானாவது போய் அவனைப் பிடித்துக்கொண்டு
வருகிறேன். இல்லாவிட்டால், நாம் எல்லோருமே சர்வநாசமாகி விடுவோம்.
இவன் போய் இந்த மரண தண்டனையைப் பற்றிச் சொல்லிவிட்டால் பிறகு அம்மாவின் கதி என்ன ஆகும்?. . . அப்பா நம்முடைய நாட்டுக்கும்
ஆபத்து; குடும்பத்துக்கும் ஆபத்து. நான் போய் அவனைப் பிடிக்கட்டுமா!
இல்லை நீங்கள் பிடிக்கிறீர்களா, அப்பா?”

“கந்துலா! ரோகிணியைப் பார்த்துக்கொள். இதோ நானே போகிறேன்”
என்று சொல்லிக் கிளம்பினார் மகிந்தர்.

அவர் எங்கு போவார் என்பது ரோகிணிக்குத் தெரியும். ஒற்றனைப் பின்
தொடர்ந்து செல்ல கந்துலனே தயங்கியபோது, அவர் பாவம், வேறென்ன
செய்வார்? நேரே இளங்கோவை வீரர்கள் இழுத்துச் சென்ற திக்கில் ஓடினார்.
தன்னை ஒற்றன் பின்பற்றுகிறானா என்று நொடிக்கொரு முறை திரும்பிப்
பார்த்துக் கொண்டே பறந்தார். “தண்டனையை நிறுத்துங்கள்!” என்று அவர்
கொடுத்த குரலும், அந்தக் குரலின் எதிரொலியும் ரோகிணியின் செவிகளில்
தேன் துளிகளாகச் சிதறின. ‘அப்பாடா!’ என்று பெருமூச்சு விட்டுக்
கொண்டே, தக்க சமயத்தில் தனக்குக் கைகொடுத்த கண்ணீர்த் துளிகளைத்
துடைத்துவிட்டுக் கொண்டாள்.

மாண்டவன் மீண்ட அதிசயத்தைக் கண் இமைத்துப் பார்க்க
முடியவில்லை ரோகிணிக்கு. ‘கண் இமைத்துக் காண்பார்தம் கண் என்ன
கண்ணோ?’ என்றபடி அவனுடைய தோற்றத்தை விழுங்கிப் பேரானந்தமடைந்து
கொண்டிருந்தாள் அவள். தன்னுடைய திறமையால் உயிர்பெற்று மீண்டவன்
என்ற கர்வம் அவள் உள்ளத்தில் பொங்கி எழுந்து விம்மியது.

இல்லாத ஒற்றனைத் தேடாத இடத்திலெல்லாம் தேடிக் களைத்தார்கள்
மகிந்தரின் காவலர்கள். புதர்கள், செடிப் பத்தைகள், பாறைப் பிளவுகள்
எங்கெல்லாமோ புகுந்து பார்த்தார்கள். இருளில் இடந் தடுமாறித்
தங்களுக்குள் ஒருவரையொருவர் ஒற்றனென்று எண்ணிப் பிடித்து
ஏமாந்தார்கள். மூன்றாம் சாமம் வரையில் தேடிவிட்டுக் களைத்துப் போய்க்
குகைக்குத் திரும்பினார்கள்.

குகைக்குள்ளே ஒரு மூலையில் இளங்கோ படுத்து உறங்குவதுபோல்
குறட்டை விட்டான். இப்போது அவன் கால்களும் கட்டப் பெற்றிருந்தன.
உடல் முழுவதும் பிணைக்கப்பட்டிருந்த நிலையிலும் அவன் உறங்குவதைக் கண்டு வியப்புற்றார் மகிந்தர். ரோகிணியும் தன் தந்தையின் அருகில் முடங்கிக் கொண்டு உறங்குவதுபோல் கிடந்தாள். மன்னரோ விழிப்புக்கும் உறக்கத்துக்கும்
இடையில் அகப்பட்டு மன்றாடிக் கொண்டிருந்தார்.

“எங்கு தேடியும் ஒற்றனைக் காணவில்லை, அரசே!” என்றான் காவலர்
தலைவன் விஜயபாகு.

“கண்டு பிடிப்பது. மிகவும் கடினந்தான். இந்த வேளையில்
இதைப்போன்ற ஓர் இடத்தில் அவனை எப்படித் தேடுவது? போனது
போகட்டும். பொழுது விடியும் வரையில் வீரர்களைச் சற்று விழிப்போடு
இருக்கச் சொல்.” வீரர்களை விழிப் போடிருக்கச் சொல்லியவர் தம்முடைய
விழிப்புக்கு விடை கொடுத்தார். விஜயபாகுவும் அரசரின் ஆணையை.
அப்படியே சொல்லுக்குச் சொல் நிறைவேற்றி வைத்தான். அதாவது மன்னரின்
கட்டளையை மற்றவர்களிடம் சொல்லிவிட்டு, உட்கார்ந்தவாறே கண்களை
மூடினான். மன்னர் அவனை விழித்துக் கொண்டிருக்கச்
சொல்லவில்லையல்லவா?

மூன்றாம் சாமமாகிவிட்டது. தேடிக் களைத்த அலுப்பில் மற்றவர்களும்
தங்கள் தலைவரின் சொல்லைப் பின்பற்றாமல் செயலைப் பின்பற்றலானார்கள்.

குகைக்குள்ளே இருந்த இருவருக்குமட்டிலும் நித்திரை தேவியின் அன்பு
கிடைக்கவில்லை.

இளங்கோவின் கட்டப் பெற்றிருந்த கரங்களை நாடி மற்றொரு
இளம்கரம் நகர்ந்தது. வாழைக்குருத்தைப் போல் மிருதுவாகவும்
குளுமையாகவும் இருந்த அந்தக் கரத்தில் ஒரு சிறு கத்தி இருந்தது. மெல்ல
அந்த கரம் தன் கத்தியால் சத்தம் செய்யாமல் இளங்கோவின் கைக்கட்டை
அறுத்துவிட்டது. பிறகு கத்தியை அவனிடம் கொடுத்தது.

தன் தளைகளிலிருந்து விடுபெற்ற இளங்கோ இருளை ஊடுருவிக்
கொண்டு வலதுபுறம் திரும்பிப் பார்த்தான். இரண்டே இரண்டு விழிகள்
மட்டிலும் சுடர் மணிகள்போல் புலப்பட்டன. மெல்ல மெல்ல அந்த விழிகள்
அவன் முகத்தை நெருங்கி வந்தன. அவன் தன் காதருகில் புத்தம் புது மாந்தளிர்களென இரு இதழ்கள் துடிதுடிப்பதை உணர்ந்தான். என்ன சொல்கின்றன அவை?

“இளவரசே! உங்கள் தண்டனைக்கு நானே காரணம் என்ற பழியை
இனிமேல் என்மீது சுமத்தமாட்டீர்களல்லவா? இங்கிருந்து விரைந்து
சென்றுவிடுங்கள்.”

மாந்தளிர்களின் துடிதுடிப்பு நின்றது; நன்றிப் பெருக்கால் இளங்கோவின்
விழிகளில் நீர்த் துளிகள் கொப்பளித்தன. அன்றொரு நாள் அரண்மனையில்
ரோகிணியின் கரங்களைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக்கொள்ள
வேண்டுமென்று அவன் துடித்தானல்லவா? அன்று அது நிறைவேறவில்லை.

இன்று இளங்கோவுக்குத் தன்னைக் காப்பாற்றிய காரணத்தால் மட்டும்
அவளிடம் நன்றி ஏற்படவில்லை. உயிரைத் திருப்பிக் கொடுக்கிறாள் என்பதும்
உண்மைதான். ஆனாலும் அந்த உயிரின் மதிப்பைத் தெரிந்து கொண்டே
திருப்பிக் கொடுக்கிறாள். மணிமுடியைத் திருப்பிக் கொடுத்தாலும் அதன்
இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டவனின் உயிரைத் திருப்பிக் கொடுத்தாலும்
ஒன்றுதானே?

வெறி கொண்டவனைப்போல் அவள் கரங்கள் இரண்டையும் பற்றி
இழுத்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் இளங்கோ. அவனுடைய வெம்மை
நிறைந்த கண்ணீர்த் துளிகள் ரோகிணியின் விரல்களில் பட்டு அவளை
மெய்சிலிர்க்க வைத்தன. அந்தச் சின்னஞ்சிறு அதிர்ச்சியிலிருந்து அவள்
மீள்வதற்குள் அவன் எங்கோ மாயமாக மறைந்து போய் விட்டான்.

அவன் போன பிறகு, ரோகிணியின் கண்கள் ஊற்றுப் பெருக்கெடுத்துப்
படுக்கை முழுவதையும் நனைத்தன. அவன் தன்னை விட்டுப் போனதற்காக
அவள் அழவில்லை. அவனை அப்படிப் போக வைத்ததற்காக அழுதாள்.

‘ரோகணத்துக்குத் துரோகம் செய்து விட்டேன்! தாய்த் திருநாடு
காலங்காலமாகப் போற்றி வைத்திருந்த ரகசியத்தைக் காட்டிக்கொடுத்து
விட்டேன்! எந்த மலை உச்சியிலிருந்து இளங்கோவைத் தள்ளப் பார்த்தார்களோ, அதே மலை உச்சியிலிருந்து கீழே
விழுந்து இறந்தால்கூட என் துரோகத்துக்குப் பிராயச்சித்தமாகாது’ என்று
அவள் மனம் துடிதுடித்து அலறியது.

பின்னர் தன்னைத்தானே அவள் ஒருவிதமாகத் தேற்றிக் கொண்டாள்.
‘அவர்களுக்குரிய பொருளை அவர்கள் எடுத்துக் கொள்வதில் தவறில்லை.
மாமன்னர் இராஜேந்திரர் தந்தையாரின் முடியை என்னிடமே
கொடுத்துவிடவில்லையா? இந்தக் காட்டில் இப்படி வாழ்வதைவிட
அவர்களுடன் உறவு கொண்டு நாட்டைப் பெறுவதே மேல். இதை
அப்பாவிடம் சொல்லவேண்டும். பொழுது புலர்ந்தவுடன் அப்பாவுக்கு
எடுத்துச் சொல்லி அவர் மனத்தை மாற்ற வேண்டும்.’

பொழுது புலர்ந்து சிறிது நேரம் சென்றபின், இளங்கோவைக்
காணாததால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட பரபரப்பு குறைந்தவுடன்
ஏதுமறியாதவள் போல் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள் ரோகிணி.
விஜயபாகு, கந்துலன் இன்னும் மற்ற வீரர்கள் தாம் இளங்கோவைக்
காணவில்லை என்பதற்காக மிகவும் துடித்துக் கொண்டிருந்தார்களே தவிர
மன்னர் மகிந்தர் அமைதியாகவே காணப்பட்டார்.

“அவன் போனதற்காக கலக்கமுறாதீர்கள். நானே அவனைப் பொழுது
விடிந்தவுடன் அனுப்பிவைக்க நினைத்தேன். அதற்குள் அவன் அவசரப்பட்டு
விட்டான்” என்றார் மகிந்தர்.

“அவனை அனுப்பி வைப்பதா” விஜயபாகுவின் வியப்பொலியில்
மற்றவர்கள் பங்கு கொண்டார்கள்.

“ஆமாம், சிறிது நேரத்தில் நாமெல்லோருமே கப்பகல்லகத்துக்குப்
புறப்படுகிறோம். குதிரைகளைச் சித்தப்படுத்திப் புறப்படுவதற்கான
ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்றார் மகிந்தர். பிறகு கந்துலனைப் பார்த்து
“நீ முதலில் சென்று நம்முடைய வரவைச் சோழநாட்டுச் சக்கரவர்த்தியிடம்
அறிவித்துவிடு. நீ போய்ச் சேர்ந்த ஒரு நாழிகைக்குள் நாங்கள் வந்து
விமன்னரின் திடீர் மாறுதலுக்குக் காரணம் வீரர்களும் புலனாகவில்லை.
ரோகிணிக்கும் புலப்படவில்லை.

‘கந்துலா! சக்கரவர்த்தியிடம் நீ நேரில் சென்று செய்தியைச்
சொல்லவேண்டும். அவர்கள் அனுப்பிவைத்த தூதனை யாரென்று தெரிந்து
கொள்ளாமல் முதலில் துன்பம் கொடுத்து விட்டதாகவும், பிறகு தெரிந்து
கொண்டு அவனிடம் செய்தி சொல்லி அனுப்புவதற்குள் அவனே கிளம்பி
வந்து விட்டதாகவும் சொல். தெரியாமல் நடந்த தவறென்றால் அவர்கள்
ஒப்புக்கொள்வார்கள். நாமே நட்பை நாடி விரைந்து வருகிறோம் என்பதை
அவர்கள் உணரவேண்டும். தெரிந்ததா? நான் ஓலை தருகிறேன்.”

“மன்னிக்க வேண்டும் அரசே! இப்படித் திடீரென்று முடிவுக்கு வந்தால். .
.” என்று இழுத்தான் விஜயபாகு.

“நம்முடைய இருப்பிடம், நம் ரகசியம் எல்லாமே அவர்களுக்குத்
தெரிந்து விட்டன. ஆனால் நமக்கோ இன்னும் அமைச்சரின் இருப்பிடமும்
அவர் நடவடிக்கைகளும் ரகசியங்களாக இருக்கின்றன. அவர்களாக நம்மை
வளைத்துக் கொள்வதற்கு முன்னால் நாமாகச் சென்றுவிடுவது நல்லது. மேலும்,
நேற்றிரவு வந்த இரண்டாவது ஒற்றன் கொடும்பாளூர் இளவரசனை நாம்
கொன்று விட்டோம் என்று நினைத்துக் கொள்வதற்கும் இடம் இருக்கிறது.
அப்படிப் போய்ச் சொல்லியிருந்தால் பட்டமகிஷிக்கு அவர்கள் துன்பம்
கொடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?”

பட்டமகிஷிக்கு அபாயம் நேரலாம் என்ற எண்ணம் எழுந்தவுடன்,
“தங்கள் சித்தம் அரசே” என்றான் விஜயபாகு.

ரோகிணிக்குத் தன் தந்தையாரின் மனமாற்றத்துக்கு என்ன காரணம்
என்பது விளங்கிவிட்டது. அவருடைய முடிவை அவள் வரவேற்றாள்
என்றாலும், தன் தாயாருக்கு ஏதும் நேர்ந்துவிடாது என்று சொல்லத்
துடித்தாள்.

“அப்பா. . .” என்று அவள் பேசத் தொடங்கியவுடன் “ரோகிணி! இந்த
விஷயத்தில் நீ தலையிடாமல் இருப்பது நல்லது” என்று அடக்கினார் மகிந்தர். டுவோமென்று சொல்.”

மன்னரின் திடீர் மாறுதலுக்குக் காரணம் வீரர்களும் புலனாகவில்லை.
ரோகிணிக்கும் புலப்படவில்லை.

‘கந்துலா! சக்கரவர்த்தியிடம் நீ நேரில் சென்று செய்தியைச்
சொல்லவேண்டும். அவர்கள் அனுப்பிவைத்த தூதனை யாரென்று தெரிந்து
கொள்ளாமல் முதலில் துன்பம் கொடுத்து விட்டதாகவும், பிறகு தெரிந்து
கொண்டு அவனிடம் செய்தி சொல்லி அனுப்புவதற்குள் அவனே கிளம்பி
வந்து விட்டதாகவும் சொல். தெரியாமல் நடந்த தவறென்றால் அவர்கள்
ஒப்புக்கொள்வார்கள். நாமே நட்பை நாடி விரைந்து வருகிறோம் என்பதை
அவர்கள் உணரவேண்டும். தெரிந்ததா? நான் ஓலை தருகிறேன்.”

“மன்னிக்க வேண்டும் அரசே! இப்படித் திடீரென்று முடிவுக்கு வந்தால். .
.” என்று இழுத்தான் விஜயபாகு.

“நம்முடைய இருப்பிடம், நம் ரகசியம் எல்லாமே அவர்களுக்குத்
தெரிந்து விட்டன. ஆனால் நமக்கோ இன்னும் அமைச்சரின் இருப்பிடமும்
அவர் நடவடிக்கைகளும் ரகசியங்களாக இருக்கின்றன. அவர்களாக நம்மை
வளைத்துக் கொள்வதற்கு முன்னால் நாமாகச் சென்றுவிடுவது நல்லது. மேலும்,
நேற்றிரவு வந்த இரண்டாவது ஒற்றன் கொடும்பாளூர் இளவரசனை நாம்
கொன்று விட்டோம் என்று நினைத்துக் கொள்வதற்கும் இடம் இருக்கிறது.
அப்படிப் போய்ச் சொல்லியிருந்தால் பட்டமகிஷிக்கு அவர்கள் துன்பம்
கொடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?”

பட்டமகிஷிக்கு அபாயம் நேரலாம் என்ற எண்ணம் எழுந்தவுடன்,
“தங்கள் சித்தம் அரசே” என்றான் விஜயபாகு.

ரோகிணிக்குத் தன் தந்தையாரின் மனமாற்றத்துக்கு என்ன காரணம்
என்பது விளங்கிவிட்டது. அவருடைய முடிவை அவள் வரவேற்றாள்
என்றாலும், தன் தாயாருக்கு ஏதும் நேர்ந்துவிடாது என்று சொல்லத்
துடித்தாள்.

“அப்பா. . .” என்று அவள் பேசத் தொடங்கியவுடன் “ரோகிணி! இந்த
விஷயத்தில் நீ தலையிடாமல் இருப்பது நல்லது” என்று அடக்கினார் மகிந்தர்.

கந்துலன் புறப்பட்ட ஒரு நாழிகைக்கெல்லாம், மன்னர் தமது
வீரர்களுடன் குகையை விட்டுப் புறப்பட்டு மலைச்சாரலில் நடந்தார்.
ரோகிணியும் மௌனமாக அவரைப் பின்பற்றினாள். சமவெளிக்கு வந்தவுடன்
குதிரைகள் காத்து நின்றன.

இடையில் நாற்சந்திச் சாவடியில் உணவையும் ஓய்வையும்
முடித்துக்கொண்டு அவர்கள் மீண்டும் கிளம்பினார்கள்.

மாலைமயங்கும் நேரத்தில் கப்பகல்லகம் கோட்டை வாயிலில்
திரள்திரளாகச் சோழ நாட்டு வீரர்கள் ரோகணத்து மன்னரை
வரவேற்பதற்காகக் காத்திருந்தனர். வல்லவரையர் மிகவும் உயர்ந்த முறையில்
ஏற்பாடுகளைச் செய்திருந்தார். மகிழ்ச்சி ஆரவாரத்துடன் மக்களும் கூடி
நின்றனர்.

இராஜேந்திரரே நேரில் கோட்டை வாசலுக்கு வந்து மன்னர் மகிந்தரை
வரவேற்பதற்காக இருந்தார்.

கப்பகல்லகம் நகரத்தின் எல்லைக்குள் மகிந்தர் நுழைந்து சென்ற
தருணத்தில், எங்கிருந்தோ ஒரு கூரம்பு வந்து அவர் ஆரோகணித்திருந்த
குதிரையின் பிடரியில் பாய்ந்தது. அச்சத்தினால் அலறிக்கொண்டு ரோகிணி
தன் புரவியின் கடிவாளத்தைப் பற்றி நிறுத்தினாள். மற்ற குதிரைகளும்
நின்றன.

குதிரையின்மீது பாய்ந்த அம்பின் பின்புறத்தில் ஒரு நறுக்கோலை
கட்டியிருந்தது. அதைப் படித்துப் பார்த்த மகிந்தரின் முகத்தில் படர்ந்த
பிரேதக் களையை ரோகிணி கண்ணுற்றாள்; மகிந்தருக்கு முன்னால் போகவும்
மனமில்லை; பின்னால் திரும்பவும் மனமில்லை.

“என்ன அப்பா, அது?”

“நாம் திரும்பி விடுவோமா?” என்று நடுங்கும் குரலில் தம்மோடு
வந்தவர்களிடம் கேட்டார் மகிந்தர்.

இதற்குள் வரவேற்பு வாழ்த்தொலிகளுடன் அவரைச் சோழநாட்டு
வீரர்கள் வந்து சூழ்ந்து கொண்டனர்.

“வாழ்க ரோகணம்! வாழ்க, சோழ வளநாடு!”

“வாழ்க மன்னர் மகிந்தர்! வாழ்க மாமன்னர் இராஜேந்திரர்!”

மகிந்தரின் குதிரை அவரது விருப்பத்துக்கும் மாறாக அரண்மனையை
நோக்கிச் சென்றது.

தொடரும்

No comments:

Post a Comment