வேங்கையின் மைந்தன் -புதினம் - பாகம் 1 -29.


மதுரை மாநகரத்தில் வைகைக் கரைக்கடுத்து நின்ற பெரும்பிடுகு முத்தரையரின் சிறிய மாளிகையும் அதைச் சூழ்ந்தருந்த பூங்காவும் காலைக் கதிரொளியில் தனியானதொரு புத்தெழில் பெற்று விளங்கின.

மேல் மாடத்தில் நின்று சோம்பல் முறித்தபடியே பூங்காவின்

மேற்பரப்பைக் கண்ணோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள் திலகவதி. அதிகாலையில் எழுந்து குளித்து முழுகி மாற்றுடை தரித்து தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்ட பின்னரும் அவளுடைய சோம்பல் தீரவில்லை.நாடோடி வணிகனை அவள் சந்தித்த பிறகு இரண்டு மூன்று தினங்களே ஆகியிருந்தன. என்றாலும் ஒவ்வொரு தினமும் ஒரு யுகமெனக் கழிந்தது

அவளுக்கு. முதல் நாள் இரவில் சரியான உறக்கமில்லை.

ஒருவேளை, அந்த மனிதன் வணிகனாக மட்டும்இ ருந்திருந்தால் அவள் அவனை மறந்திருப்பாளோ என்னவோ? அவன் தனது வாள் வீச்சால் திலகவதியின் உள்ளத்தையே கொள்ளை கொண்டு போய் விட்டான். புத்தம் புதிய கச்சைகளைக் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றவன் இன்னும் வரக்காணோமே!

பெரும்பிடுகு முத்தரையரின் குதிரை உள்வாயில் முகப்பில் சேணம் கட்டி நின்றது. குதிரையின் மீது ஏறிக்கொண்ட முத்தரையர் மாடத்தில் நிற்கும் தமது மகளைத் திரும்பிப் பார்த்து, “திலகவதி! உன் அத்தையாரும் வீட்டில் இல்லை. கவனமாகப் பார்த்துக் கொள்” என்று சொல்லிவிட்டு, அதைத் தட்டிவிட்டார். தோட்டத்தைக் கடந்து வெளி வாயில் வழியாகத் தெருவின் திருப்பத்தில் மறைந்தது குதிரை.

தன் தந்தையின் சொற்களைக் காதில் போட்டுக் கொள்ளாமல், முன்போலவே தோட்டத்து மலர்களின் அழகில் மயங்கி நின்றாள் திலகவதி.அவளுடைய பார்வை திடீரென்று கூர்மையாகியது. செடிப் புதர்கள் நெருக்கமாக இருந்த ஓரிடம் அசைந்து நடுங்குவதையும், அதற்குள்ளிருந்து ஓர் ஆண் மகன் வெளிப்படுவதையும் கண்ணுற்றாள். கூச்சலிடவேண்டும்

என்று தோன்றியது அவளுக்கு. ஆனால் அவனை இன்னாரென்று இனம் கண்டு கொண்டவுடன், அவள் மனம் துள்ளிக் குதித்து அவளுக்கு முன்னால் கீழே இறங்கியது. பாதச் சதங்கைகள் கலகலக்க, அவள் படிகளில் சுழன்றோடி

வீட்டின் உள் முகப்புக்கு வந்தாள்.

புதர்களை விலக்கிக்கொண்டு வெளியில் தலை நீட்டிய வீரமல்லன் அடிமேல் அடிவைத்துத் திருடனைப்போல் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். நொடிக்கொரு முறை அவன் முகம், பின்னால் திரும்பி வெளியே பார்த்தது. பயத்தினால் இலேசாக நடுங்கிக் கொண்டிருந்த அவன் வலது கரத்தில் ஒரு சிறு மூட்டை இருந்தது.

“ஐயா, திருட்டு ஒற்றரே? இதெல்லாம் என்ன வேலை?”

தூக்கி வாரிப்போட்டது வீரமல்லனுக்கு, ‘ஒற்றன் என்பதை இவள் தெரிந்து கொண்டு விட்டாளா, என்ன?’ திலகவதி மாடத்தின் மேலிருந்து பார்த்ததை வீரமல்லன் கவனிக்கவில்லை. அவன் கவனமெல்லாம் அப்போது வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த முத்தரையரின் மேலிருந்தது.

அருகில் நெருங்கியவன் அவளுடைய புன்முறுவலைக் கண்டவுடன் சிறிது துணிவு பெற்றான் “அம்மணி வந்து..... உங்கள் தந்தையார்.....” என்று அவன் உளறத் தொடங்கவே அதைக் கேட்ட திலகவதி கலீரென்று சிரித்தாள்.

“களவு வழிதேடிக் கள்ளத்தனமாக வந்தீர்களாக்கும்.”

“இல்லை அம்மணி! நான் உள்ளே நுழைந்தபோது உங்கள் தந்தையார் எங்கோ அவசரமாகப் புறப்பட்டுக்கொ ண்டிருந்தார்கள். பிறகு வரச்சொல்லி என்னைத் திருப்பி அனுப்பி விட்டால் என்ன செய்வது? இவ்வளவு தூரம் வந்தவன் உங்கள் அழகான முகத்தை ஒருமுறை பார்க்காமல் திரும்புவது என்றால். . .”

கருக்கிருட்டு நேரத்திலிருந்து அவன் அங்கே மறைந்து கொண்டிருந்த விஷயம் திலகவதிக்குத் தெரியாது. தனது அழகான முகத்தை அவனது வர்ணனையால் கேட்டவுடன் அவளுக்கு இந்த உலகமே மறந்துவிட்டது. “வாள் வீச்சைப் போலவே வாய் வீச்சிலும் வல்லவராக இருக்கிறீர்களே? உள்ளே வாருங்கள். புதிய கச்சைகள் ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?” உள்ளே நுழைந்துகொண்டே “உங்கள் அத்தையார்?” என்று தயங்கித்தடுமாறினான் வீரமல்லன்.

“எனக்குத்தான் கச்சைகள் கேட்டேன், அத்தையாருக்கல்ல!” என்று சொல்லி நகைத்துவிட்டு, “அவர் இப்போது ஊரில் இல்லை” என்றாள்திலகவதி. அப்பாடா!” என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே மேல் துண்டை உதறித் தரையில் போட்டு உட்கார்ந்தான் அவன். திலகவதி அவன் தரையில் உட்காருவதைத் தடுத்து ஆசனத்தில் அமரச் செய்தாள். சின்னஞ்சிறு குழந்தையின் மழலை போன்றிருந்தது அவள் பேச்சு. ஒவ்வொரு நாளும்

அவன் வரவை எதிர்பார்த்திருந்ததாகக் கூறினாள்.

“உங்களை நேரில் பார்த்தபிறகு, உங்களுக்குத் தகுந்த ஆடைகள் இந்த உலகத்திலேயே நெய்யவில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன். மெய்யப்பரின் அங்காடியை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் பார்த்துச் சில துணிகளை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். அவரிடம் இல்லாத ஆடைகள் இந்தப் பாண்டி நாட்டிலேயே கிடைக்காதென்பது உங்களுக்குத் தெரியும்.இருந்தாலும் எனக்கென்னவோ திருப்தி இல்லை.”

துணி மூட்டையை அவிழ்த்தவுடன் கண்ணைக்கவரும் வண்ண நிறக் கச்சைகள் திலகவதியின் கண்மலர்களை வியப்பால் விரியச் செய்தன.பொன்னிழைத்த பட்டுத் துண்டுகள் மினுமினுப்பும் வழவழப்பும் கொண்டகாஞ்சிநகர்க் கைவண்ணங்கள்; நுணுக்கமான சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த உறையூர்க் கலைச் செல்வங்கள்-ஒன்றைப் பார்க்கிலும் ஒன்று உயர்வாகத் தோன்றவே திலகவதி அவனுடைய ஆர்வத்தைக் கண்டு அயர்ந்து விட்டாள்.

“தாமதித்து வந்தாலும் தகுதியுடைய பொருள்களுடன் வந்திருக்கிறீர்கள், வீரரே?” என்றாள் திலகவதி. வீரனென்ற வீண்பழி எனக்கு வேண்டாம் அம்மணி! வணிகனென்று

அழைத்தால் போதும்.”

“மற்றவர்களுக்கு நீங்கள் வணிகராகயிருந்தாலும் எனக்கு நீங்கள் வீரர்தாம்! என் தந்தையார் உங்களுடைய திறமையை எவ்வளவு புகழ்ந்தார் தெரியுமா? நீங்கள் அவரைச்ச ந்திப்பதற்கு அஞ்சியிருக்க வேண்டியதில்லை. நேற்றுக்கூட நீங்கள் வராததைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.”

இதைக்கேட்ட வீரமல்லனின் இருதயம் ஒருகணம் தன் துடிப்பை நிறுத்தி மீண்டும் படபடவென்று அடித்துக் கொண்டது. “பாண்டி நாட்டுக்காரர்களிடம் பழகுவதே என்னுடைய பாக்கியம்தான். நீங்கள் என் கலைச் சுவையைப்
புகழ்கிறீர்கள், உங்கள் தந்தையார் என் வீரத்தைப் பாராட்டுகிறார்-அம்மணி!உங்களைப் பார்த்ததிலிருந்து-”

“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?” என்று பொய்க் கோபத்துடன்
குறுக்கிட்டாள் திலகவதி.

உச்சிமுதல் உள்ளங்கால்வரை அவளை ஏறிட்டுப்பார்த்தான் வீரமல்லன். பச்சிளம் குழந்தையின் பால் வடியும் முகம்; செங்கீரைத் தண்டுபோன்று செழிப்பும் தளதளப்புமான உடற்கட்டு! பருவத்தின் தலைவாசலில் பூத்த செம்பரத்தம் பூவைப்போல் அவள் சிரித்துக் குலுங்கிக் கொண்டு நின்றாள்.

“அம்மணி! என்னைப் பொய்புகலச் சொல்லாதீர்கள். நான் கொண்டு வந்திருக்கும் துணிகளில் ஒன்றுகூட உங்களுக்கு ஏற்றதில்லை. நான் இந்த மாளிகையில் ஒரு பணியாளனாக இருந்தால் தினந்தோறும் தோட்டத்தில் மலர்கொய்து அவற்றாலேயே உங்களுக்கு விதம் விதமான ஆடைகள் செய்து
கொடுப்பேன். பிரமன் தன் சிருஷ்டி ரகசியத்தின் எல்லையை உங்கள் உருவத்தில் கண்டுவிட்டான், அடடா!”

மயக்கமே வந்துவிட்டது திலகவதிக்கு. ‘மாளிகையின் பணியாளனாகஎதற்கு! இதற்கு உரியவராகவே வந்து விடுங்களேன்!’ என்று சொல்லத் துடித்தாள் அவள். ஆனாலும் அப்படிச் சொல்லாமல், “அம்மணி! என்று இனி என்னை நீங்கள் அழைக்கவேண்டாம்; என் பெயர் ஒன்றும் உங்களுக்குப் பிடிக்காத பெயர் இல்லையே!” என்று குழைந்தாள். “ஆஹா! அதுவும் என் பாக்கியம்! திலகவதி என்ற பெயரை ஒருமுறை

உச்சரித்தால் தேன் குடித்த வண்டாகி விடுவேன் நான்”புகழ் மொழிக்கு ஆண்டவனே அடிமை என்று சொல்லும்போது,

பேதைப்பெண் திலகவதி மட்டும் எம்மாத்திரம்? வீரமல்லன் தன்னுடைய திறமையால் அவளை இந்த உலகத்திலிருந்து மேலே மேலே தூக்கிக்கொண்டு சென்றான். ஒரு பாதி உண்மையைச் சொல்லி, மறுபாதியால் அதை மிகைப்படுத்த வேண்டுமென்பது அவன் கற்றுக் கொண்டிருந்த ஒற்றர் தந்திரம்.இதுவரையில் அந்தத் தந்திரம் அவனைக் கைவிடவில்லை.

திலகவதியின் மேனியழகு அவனைக் கவர்ந்ததென்னவோ மெய்தான். ஆனால் அவளே சுந்தரபாண்டியரின் மகளாக, பாண்டிய நாட்டின் இளவரசியாக இருந்திருந்தால் அவனை மிகமிகக் கவர்ந்திருப்பாள்.அடிமைப்பட்டிருந்த பாண்டிய நாட்டுச் சேனாபதியின் மகள்தானே அவள்?

அவனுடைய நிலையைவிட உயர்ந்த நிலையில் அவள் இருந்தாளென்றாலும், அவனுடைய ஆசைகளின் அளவுக்கு அவள் உயரவில்லை. ஒரு நாட்டின் தலைவனாக வேண்டுமென்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தவனுக்கு, மற்றொரு நாட்டுச் சிற்றரசன் மகளின் உறவாவது வந்த வாய்க்க வேண்டாமா?

என்றாலும் நேரில் காணும்போது நினைவிழக்கக் கூடிய ஏதோ ஒரு மோகன சக்தி திலகவதியின் உருவ அழகில் இருக்கத்தான் செய்தது.சென்றவிடமெல்லாம் அது அவனை விரட்டிக்கொண்டு செல்லாவிட்டாலும்,சந்திக்கும் சமயங்களில் அதன் சலனத்திடமிருந்து அவனால் தப்பமுடியவில்லை.

மெய்யும் பொய்யும் கலந்த அவனுடைய மிகைப்பட்ட கூற்றுக்குத் திலகவதி செவிசாய்க்கலானாள். அவன் விரும்பி வந்த தகவல்களைப் பெறுவதற்கு அவனும் அவள் வாயை மெல்லக் கிளற முற்பட்டான்.

“திலகவதி! உன் தந்தையார் இப்போது இங்கிருந்தால் என்னால்
இவ்வளவு தூரம் மனம் விட்டு உன்னோடு பேச முடியுமா? உன் சிரிப்பொலியைக் கேட்கவும் உன் முத்துப்பல் வரிசையைப்
பார்க்கவும் தான் முடியுமா? அவர் திரும்பி வருகின்ற நேரமென்றால்,முன்னாலேயே சொல்லிவிடு. போய்விட்டுப் பின்னால் வருகிறேன். அவர் எதிரிலேயே மறுபடியும் உன்னைக் காணும் வாய்ப்பை நான் இழக்கவிரும்பவில்லை.”

“நாடு இருக்கிற நிலையில் தந்தையாருக்கு வீட்டு நினைவு எங்கே இருக்கப்போகிறது?” என்று அலட்சியமாய்க் கூறினாள் திலகவதி. “சில நாட்களில் பணிப்பெண்ணையும் வேலையாட்களையும் துணைக்கு வைத்துவிட்டுச் சுந்தர பாண்டியருடனேயே தங்கிவிடுவதும் உண்டு.”

“பாவம்! தனிமையில் நீ வாடித் தவித்துப்போவாய்... ஆமாம் நாட்டு நிலைக்கு இப்போது என்ன வந்துவிட்டது? எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது?”

“கையில் வாளெடுப்பதை மறந்த பிறகு உங்களுக்கு நாட்டுக் கவலை ஏன் வருகிறது? அது சரி, என்னைப்போல் பல பெண்களிடம் நீங்கள் ஆடை விற்கச் செல்வதுண்டல்லவா?”

“அவர்களைச் சந்தித்த போதெல்லாம் இந்தத் தொழிலையே ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த தொழிலென்று வெறுத்தேன். கடைசியில் அதிர்ஷ்டம் உன் உருவத்தில் வந்தவுடன் என்னால் இதைப் போற்றாமல் இருக்கமுடியவில்லை.”

திலகவதி சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு “நாளைக்கு நீங்கள்திரும்பவும் வீரராகத்தான் போகிறீர்கள். எல்லா விஷயங்களும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியதுதான்; ஆனால் தந்தையாரிடம் மட்டும் முன்பே தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்” என்று கூறினாள்.

“திரும்பவும் நான் வீரனாவதா?”

“ஆமாம் உங்களை அலட்சியம் செய்து அவமானப்படுத்திய சோழர்களுக்கு எதிராக வாள் பிடிப்பதென்றால் நீங்கள் மறுக்கவா செய்வீர்கள்?”

வீரமல்லன் வெலவெலத்துப் போனான். “கலங்காதீர்கள், காலம் வரும்போது நானே தந்தையாரிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறிவிட்டு, நாட்டு நடப்பை மளமளவென்று சொல்லிக் கொண்டு போனாள்.

“நாடாசை பிடித்த சோழர்கள் இப்போது ஈழநாடு முழுவதையும் தங்கள் ஆட்சிக்குள் கொண்டுவந்து விட்டார்களாம். எத்தனையோ தலைமுறைகளாக யாருக்கும் பணியாத ரோகணம் இப்போது அவர்களுக்குப் பணிந்து விட்டதாம். ரோகணத்து அமைச்சர் கீர்த்தி உதவிக்குப் படை கேட்டு, சுந்தரபாண்டியருக்கு ஆள் அனுப்பியிருந்தார். உதவிப்படையை உரிய காலத்தில் அனுப்ப முடியாததால் அவர்கள் தோற்றுப் போனார்கள். உங்கள் சோழநாட்டுக்கார்களின் கண்களில் மண் தூவி விட்டு உதவிப் படையை அனுப்புவதென்றால் எளிதில் முடிகிறதா?”

கண்களைத் துடைத்துக்கொண்டு, “திலகவதி! ‘உங்கள் சோழநாடு’ என்றால் இனி எனக்குப் பொல்லாத கோபம்தான் வந்துவிடும்!” என்றான் வீரமல்லன். “நம்முடையது இனிமேல் பாண்டிய நாடுதான்!”

“கேளுங்கள்! அதற்காக அமைச்சர் கீர்த்தி சும்மா இருந்துவிடவில்லை.சோழர்கள் ஈழ நாட்டில் வெற்றி கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தச்சமயத்தில், திடீரென்று நம்முடைய படைகளை அவர்கள் மீது ஏவி விடச்சொல்லியிருக்கிறார். இதற்காகத் தஞ்சை மாநகரைக் கைப்பற்ற வேண்டுமென்பதில்லையாம். மதுரையிலேயே அவர்களுடைய தெரிந்த படை வீரர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்திருக்கிறார்கள். அவர்களைத் தாக்கி

அழித்தால் போதும். சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடுமாம்!”

“போருக்குக் காரணம் வேண்டாமா?”

“நம்முடைய தலைநகரத்தில் நம்மையே கேட்காமல் அவர்கள் ஒரு பெரிய மாளிகை கட்டுகிறார்களே, அந்த ஒரு காரணம் போதாதா? பெரியமாளிகை என்ற பெயரில் அவர்கள் ஒரு அரண்மனையையே கட்டிக்கொண்டிருக்கிறார்கள். சோழ நாட்டுச் சக்கரவர்த்தி பேராசை பிடித்துப் போய் பெரிய பெரிய கனவுகளையெல்லாம் கண்டு கொண்டிருக்கிறார். அந்த அரண்மனையை எதற்காகக் கட்டுகிறார்கள், தெரியுமா?”

“எனக்கென்ன தெரியும்? நான் என்ன பாண்டிய நாட்டுச் சேனாபதியின் அருமை மகளா இதையெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்வதற்கு? அவருடைய அருமை மகள் மட்டுமல்ல நீ அறிவாற்றலும் படைத்த மகள்.”

திலகவதி வீரமல்லன் அருகில் மிகவும் நெருங்கி வந்து அவன் காதோடு கூறினாள். “பாண்டியர்களுடைய மணிமுடி ரோகணத்தில் இருக்கிறதல்லவா? அதை எடுத்துக் கொண்டுவந்து, தமது புதல்வர்களில் ஒருவனைப் பாண்டிய

நாட்டின் அரசனாக்கி, அவனுக்கு அதைச் சூட்டிவிடப் பார்க்கிறார். சக்கரவர்த்தியால் முடியை ரோகணத்திலிருந்து கொண்டுவரவும் முடியாது. அப்படியே கொண்டு வந்தாலும், அது இவர்கள் எழுப்பும் புது மாளிகைக்குள் போய்ச் சேரவும் சேராது.”

“ஏன் சேராது? மாளிகையின் நுழைவாயிலுக்குள் போக முடியாத அத்தனை பெரிய மணிமுடியா அது?”

“தலையிலே சூட்டிக்கொள்கிற முடி எங்கேயாவது அத்தனை பெரியதாக இருக்கமுடியுமா? ஏன் உங்கள் பரம்பரையில் யாருமே முடிசூடி நாடாண்டதில்லையோ?”

“நம்முடைய பரம்பரை என்று சொல். நானும் முத்தரையன்” என்றான் கொதிப்புடன் வீரமல்லன். “சோழர்களுடைய வாழ்வு நம்முடைய வாழ்விலிருந்துதானே தொடங்கியது. சந்திரலேகையிலும், தஞ்சையிலும்,இன்னும் எத்தனையோ இடங்களிலும் நாம் நாடாண்டவர்கள் தாமே!”

வீரமல்லனின் முகத்தில் திடீரென்று கோபச் சிவப் பேறியதைக் கண்டு துணுக்குற்றாள் திலகவதி.

“பொறுத்துக் கொள்ளுங்கள்! பெரிய மாளிகையைத் தரைமட்டமாக்கி அதை மண்மேடாக்கப் போகிறார்கள் நம்மவர்கள். மணிமுடியும் நமக்குத்தான் கிடைக்கப் போகிறது. அந்தப் போரில் நீங்களும் கலந்து கொள்ளலாம்.”

வீரமல்லன் யோசனையில் ஆழ்ந்தான். நேரம் சென்றது.

“சரி. நான் மற்றொரு நாள் இதே கச்சைகளுடன் வருகிறேன். உன் தந்தையாரிடம் நான் வந்ததைத் தெரிவிக்க வேண்டாம். இப்போதைக்கு உனக்குப் பிடித்த ஒரு துணியைப் பொறுக்கி எடுத்துக்கொள். என்னுடைய அன்புக் காணிக்கையாக அது இருக்கட்டும்.”

மறுக்க மனமில்லாமல் ஒன்றை எடுத்துக்கொண்டாள் திலகவதி. “மற்றொரு நாள் என்ன! நாளைக்கே வந்து சேருங்கள்; தந்தையார் உங்களைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்.”

மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளியில் வந்த வீரமல்லன் குதிரையின் குளம்பொலி கேட்டு அப்படியே திகைத்து நின்றான். “திலகவதி! நீ எடுத்துக்கொண்ட துணியை விரைந்து சென்று மறைத்து வை. உன் தந்தையார் வந்துவிட்டார்.”

பெரும்பிடுகு முத்தரையரின் குதிரை நாலுகால் பாய்ச்சலில் வீரமல்லனை நோக்கித் தாவி வந்தது. கையிலிருந்த மூட்டை நழுவி விழவே, அதைக் குனிந்து எடுக்கப் போனான் வீரமல்லன்.

தொடரும்

Comments