Tuesday, November 20, 2012

வேங்கையின் மைந்தன் ( பாகம் 1 , 8. மந்திராலோசனை . )

  பாகம் 1 , 8. மந்திராலோசனை


சோழ மண்டலத்தின் நானா திசைகளிலிருந்தும் கூற்றத் தலைவர்களும்
வளநாட்டுத் தலைவர்களும், ஊர்ச்சபைத் தலைவர்களும் தஞ்சை
அரண்மனையில் வந்து குழுமிய வண்ணமாக இருந்தனர். அவர்களுக்கு
முன்பே மாதண்ட நாயகர்களும், பெருந்தனத்து அதிகாரிகளும் அங்கு வந்து
கூடித் தமக்குள் ஆலோசனைகள் நடத்த முற்பட்டனர். மாமன்னர்
இராஜேந்திரர் சக்கரவர்த்திகளாக முடி சூட்டிக் கொண்ட பிறகு, இவ்வளவு
பெரிய கூட்டத்தைக் கூட்டியிருந்தது இதுவே முதன்முறை.

எண்ணிக்கையில் பெருத்த பொது மக்களின் கூட்டமல்ல இது. மக்களை
வழிநடத்திச் செல்லும் வல்லவர்களின் கூட்டம். பொறுக்கி எடுக்கப்பெற்ற
மனித மணிகள் தஞ்சைத் தலைநகரில் ஒரு நோக்கத்துக்காக ஒன்று
திரண்டிருந்தன. நிரம்பிவழிந்த விருந்தினர் மாளிகைகள் போதாமல்,
அரண்மனைக் கோட்டைக்குள்ளிருந்த உடன் கூட்டத்தினரின் மாளிகை
களிலும் வசதிகள் செய்து கொடுத்திருந்தார்கள்.

பெரிய உடையார் இராஜேந்திரரும், மதுராந்தகவேளார் முதலியவர்களும்
கொடும்பாளூரிலிருந்து இளங்கோ திரும்பிய மறுநாளே தஞ்சைக்குத் திரும்பி
விட்டனர். விருந்தினர்களைஉபசரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஏவலாட்களை வைத்துக்கொண்டு பம்பரமாய்ச் சுழன்று வந்தான் இளங்கோ.

இராஜேந்திரர் சோழப் பேரரசின் சக்கரவர்த்திகளாகப் பொறுப்பேற்று
மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. இந்த மூன்று ஆண்டுகளிலும் ஏற்பட்ட நாட்டின்
வளப்பெருக்கையும், கலைப் பெருக்கையும் பொதுவான செழிப்பையுமே பொது
மக்கள் கண்டு இன்புற்றார்கள். ஆனால் இன்னும் பல பேரதிசயங்கள் அங்கே
நடைபெற்று வந்தன. மக்களால் காணமுடிந்த அதிசயங்கள் சில;
காணமுடியாதவை பலப் பல.

ஆயிரக்கணக்கில் ஏன் அரபுநாட்டுக் குதிரைகள் சோழ நாட்டுத்
துறைமுகங்களில் வந்து இறங்கிய வண்ணமாக இருந்தன? ஒவ்வொரு ஊரிலும்
ஏன் ஒவ்வொரு படைப் பயிற்சித் திடல் ஏற்படுத்தப்பட்டது?
கூற்றங்களெங்கும் படைப் பற்றுக் கடகங்களாகவும், வளநாடுகளெங்கும்
வீரர்களை வளர்க்கும் நன்செய்க் கழனிகளாகவும் ஏன் மாறின? கொல்லர்
பட்டறைகளின் உலை நெருப்பு ஏன் இரவு பகல் பாராது கொழுந்து
விட்டெரிந்து கொண்டேயிருந்தது? - உழவர்கள் ஒருபுறம் செந்நெற்கதிர்களைக்
குவிக்க, அவர்களுடன் போட்டியிட்டுக் கொண்டு, மறுபுறம் கொல்லர்கள் வில்,
வேல், வாள், கூரம்புகளாய்க் குவித்து வந்தார்களே, ஏன்?

வீரத்தின் விளைநிலத்தைச் சற்றே கண்ணோட்டம் விட்டு வருவோமா?

நாகப்பட்டினத்தில் புத்த சமயத்தாருக்காக எழுப்பப்பெற்ற இராஜராஜப்
பெரும் பள்ளிக்கு, பள்ளிச் சந்தமாக விடப்பட்ட ஆனைமங்கலம் என்ற
ஊர்ப்புறத்தை முதலில் காணுங்கள்; அதன் மேற்கு எல்லையில் மந்தை
மந்தையாக நூற்றுக்கணக்கான கருங்குன்றுகள் ஒன்றோடொன்று முட்டி
மோதிப் பிளிறுகின்றனவே, குன்றுகளா அவை? தென்சோழ மண்டலமான
சேரபாண்டிய நாடுகளின் காடுகளில் திரிந்த யானைக் கூட்டமல்லவா அது!-
யானைகளைத் தங்களது குழந்தைகளாகவும், எதிரிகளின் கூற்றுவர்களாகவும்
பழக்கி வைத்தார்கள் சோழ நாட்டின் குஞ்சரமல்லர்கள்.

ஈழத்துக்கு இவ்வளவு யானைகளையும் கொண்டு செல்ல முடியுமா?
தேவையில்லை. ஏற்கனவே ஈழநாட்டின் வடபகுதி சோழர்களின் ஆளுகையில் உள்ளது. அதன் தலைநகரமான ஜனநாயகமங்கலத்தில், ஈழத்து யானைகளையே செம்மையாகப் பழக்கி வைத்திருக்கிறார்கள் இராஜேந்திரரின் ஆனையாட்கள். இங்கே பயிற்சி பெறும்
மல்லர்களுக்கு அங்கே களிறுகள் காத்திருக்கின்றன.

அடுத்தாற் போல், வாள் பெற்ற கைக்கோளர்களான குதிரைப்
படையினரின் சாகசம் காண, அங்கங்கே பரவியுள்ள படைப் பற்றுகளை நாடிச்
செல்வோம்; ஆயிரக்கணக்கான அரபுநாட்டுக் குதிரைகளுக்கு,
மின்னல்வேகத்தில் பாய்ந்து தாக்கும் பயிற்சி அளிக்கிறார்களா, என்ன!
வாட்களோடு வாட்கள் மோதும்போது மின்னல் மின்னி இடிஇடிக்கின்றன.
பயிற்சிக் களங்களாக இருப்பதால் இப்போது செம்மழை பொழியவில்லை -
இவையே பெய்து பெருக்கெடுத்தோடும் போர்க்களங்களானால்!

சோழவள நாட்டின் குதிரைச் சேவகர்கள், தங்கள் குதிரைகளுக்கு
அவற்றின் தலைவர்களை இழந்த நிலையில் கூட எதிரிப்படைகளை அதம்
செய்யும் வித்தைகளைக் கற்றுக் கொடுத்திருந்தார்கள்.

இன்னும் தரைப்படையினரான காலாள் வீரர்களைக் காண்போமெனில்,
அவர்கள் எண்ணிலடங்காதவர்கள். குறிதவறாது கூரம்புகள் எய்யும் வில்லர்கள்
எத்தனை பேர்! வேங்கைகளெனப் பதுங்கிப் பாய்ந்து வேலெறியும்
திண்தோளர்கள் எத்தனை பேர்! சூளுரைத்து வாள் சுழற்றும் விற்பன்னர்கள்
எத்தனை பேர்!-அடடா!- காலாட் படை வெள்ளம் களம் புகுந்து
பெருக்கெடுத்துச் சீறும் காட்சியை ஒரு குன்றின் மீது நின்றல்லவோ காண
வேண்டும்? தலைகளாகவே தெரிகின்றன; எதிர்ச்சாரியின் தலைகளாகவே
உருளுகின்றன.

வேங்கையின் மைந்தனான மாமன்னர் வெற்றித் திருமகளுக்குத் தமது
சோழ மண்டலத்தில் முடிசூட்டுவதற்காக இந்த மூன்று ஆண்டுகளில்
செய்திருந்த விந்தைச் செயல்கள் இன்னும் எத்தனை எத்தனையோ! சரி, இனி
நாம் அரண்மனையின் அந்தரங்க ஆலோசனை மண்டபத்துக்குள் காவலர்
அறியாமல் செல்வோம்.

அரண்மனையின் அந்தரங்க மந்திராலோசனை மண்டபம்
அகிற்புகையின் நறுமணத்தால் சூழப்பெற்றிருந்தது. பத்துப் பன்னிரண்டு
பேர்கள் அங்கு நெருக்கமாக அமர்ந்து மெல்லிய குரலில் ஈழத்துக்குச் செல்ல
வேண்டியது பற்றி ஆராயத் தொடங்கினர். மண்டபம் இருந்த கூடத்தின்
கதவுகள் மூடப்பட்டிருந்தன. வெளியே காவல் வீரர்கள் கண்ணி மைக்காது
கூடத்தின் வழிகளைக் காத்து நின்றனர்.

பேரரசர் இராஜேந்திரர் மையத்தில் வீற்றிருக்க, அவருக்கு வலப்புறம்
பெரிய இளவரசன் இராஜாதிராஜனும் இடதுபுறம் சிறிய இளவரசன்
சுந்தரசோழனும் அமர்ந்திருந்தனர். இராஜாதிராஜன் அப்போது சோழப்
பேரரசின் வட பகுதியான தொண்டை மண்டலத்தின் தலைவன். அவனும்
அவனுக்கு அடுத்தாற் போலிருந்த வடபகுதி மாதண்ட நாயகரான அரையர்
இராஜராஜனும் காஞ்சிமா நகரிலிருந்து கொண்டு, பேரரசின் வடவெல்லையைக்
காத்து வந்தார்கள்.

தென்பகுதிச் சோழமண்டலத்து மாதண்ட நாயகரான சேனாபதி
கிருஷ்ணன் ராமனும் ஆலோசனை மண்டபத்தில் இருந்தார். பாண்டிய
மன்னர்கள் மூவருக்கும் சேரன் மூவர் திருவடிக்கும் ஆளும் உரிமையைப்
பேரரசு வழங்கியிருந்ததால், அவர் தஞ்சைத் தலைநகரிலிருந்தே பாண்டிய
சேரப் பகுதிகளைக் கண்காணித்து வந்தார். அதோடு சிறிய இளவரசன் சுந்தர
சோழனையும் அவ்வப்போது தெற்கில் அழைத்துச் சென்று நிலவரங்களை
விளக்கினார்.

கடல் கடந்த மும்முடிச் சோழமண்டலமான ஈழத்தின் வடபகுதியோ
மாதண்ட நாயகர் க்ஷத்திரிய சிகாமணி தாழிகுமரனின் மேற்பார்வையில்
இருந்தது. அவர் இங்கு வரவில்லை.

மேற்கூறிய மூன்று மண்டலங்கள் தவிர தஞ்சையின் சுற்றுப்புறங்களான
மத்திய சோழ மண்டலத்தின் மாதண்ட நாயகரான மாவலி வாணராயரும்
மந்திராலோசனையில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

வல்லவரையர் வந்தியத் தேவரோ சோழப் பேரரசின் சாமந்த நாயகர்.
மாதண்ட நாயகர்கள் அனைவரின் தலைவர். இராஜந்திர உடையாரின் படை அமைச்சர் என்று வல்லவரையரைக் கூறினால், நாட்டமைச்சர் என்று கொடும்பாளூர் மதுராந்தக வேளாரைக் கூறலாம். இவர்களில் பெரும்பாலோர் தங்கள் தங்கள் நாடுகளுக்கு அரசர்களாகவும், சோழப் பேரரசின் சிற்றரசர்களாகவும் விளங்கினார்கள்.

இத்தகைய அதிகாரிகளும், இவர்களைப் போன்ற இன்னும் சிலரும்
கூடியிருக்க, இராஜேந்திர மாமன்னர் நீண்ட நேரம் அவர்களோடு
ஆலோசனை நடத்தினார். அவர்கள் கூறிய கருத்துக்களைச் சிந்தித்துப்
பார்த்தார்.

பிறகு அவரே தமது எண்ணத்தை வெளியிடலானார்.

“ஈழநாட்டிலிருந்து க்ஷத்திரிய சிகாமணி தாழிகுமரன் நான்கு
மாதங்களுக்கு முன்பு அனுப்பிய செய்திகள் மெய்தான் என்பது தெரிந்து
விட்டது. ரோகணத்தில் மறைந்து வாழ்ந்த ஐந்தாம் மகிந்தர் இப்போது நம்மீது
போர் தொடுப்பதற்குச் சித்தமாகி வருகிறார். பாண்டிய சேரர்களின்
மறைமுகமான உதவி அவருக்கு இதற்கான ஊக்கம் கொடுத்திருக்கிறது.
ஏற்கனவே நாம் மணிமுடியைத் திருப்பிக் கொண்டுவருவதற்கான
ஏற்பாடுகளைச் செய்து கொண்டு வருகிறோம். இனியும் காலம் தாழ்த்தக்
கூடாது.”

பெரியவர்கள் அனைவரும் மாமன்னரின் அடுத்த சொல்லுக்காகக்
காத்திருந்தார்கள். இளவரசன் இராஜாதிராஜனுக்கும் பொறுக்கவில்லை.
துடிதுடித்துக் கொண்டு எழுந்து நின்றான். “இந்தப் பாண்டியரும் சேரரும்
உடன் பிறந்தே வளரும் நோய் போன்றவர்கள், முதலில் நம்முடைய
சேனைகளை அவர்களுக்கு எதிரே திருப்ப வேண்டும்” என்று கூறினான்.

“பொறுமை வேண்டும் இராஜாதி இராஜா” என்று புன்னகை பூத்தார்
சக்கரவர்த்தி. “அவர்கள் நம்மை மீறி எதையும் தீவிரமாகச் செய்துவிட
மாட்டார்கள். நம்முடைய முதல் நோக்கம் முணிமுடி! அதற்காக நாம்
தொடங்கும் முயற்சியில் மற்றொரு பலனும் கிடைக்கும். பாண்டியரும் சேரரும்
தங்களுக்குத் துணையாக யாரை நம்பிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த
மகிந்தர் பலமற்றவர் என்பதையும் நாம் மெய்ப்பித்து விடலாம்.”

“அது போதாது.”

“அதற்குப் பிறகும் அவர்கள் நாட்டின் அமைதியைக்
குலைப்பார்களானால், அவர்களை அடக்கும் பொறுப்பை உன்னிடமே
தருகிறேன். சரிதானா?”

இராஜாதிராஜன் அடங்கிவிட்டான்.

“மாவலிவாணராயரே!” என்று கடற்சேனை மாதண்ட நாயகர் பக்கம்
திரும்பினார் மாமன்னர்.

“புத்தம் புதிய போர்க்கலங்களும், புதுப்பிக்கப்பெற்ற போர்க்கலங்களும்
தங்கள் ஆணைக்குக் காத்திருக்கின்றன. போர்க்கல வீரர்களாகத்
தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் முற்றிய பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.
கடற்கரைப்பட்டினங்கள் தோறும் சிதறி நின்ற கலங்களை நாகைத்
துறைமுகத்துக்குக் கொண்டு வரச் செய்திருக்கிறேன்.”

“எல்லோருமே சித்தமாகி விட்டீர்கள். மகிழ்ச்சி” என்று கூறினார்
சக்கரவர்த்தி. “ஆனால் மீண்டும் ஒருமுறை நட்பு முறையில் ரோகணத்து
மன்னர் மகிந்தரை அணுகிப் பார்க்கலாமென்று நினைக்கிறேன்.”

கூடியிருந்தவர்களின் முகக்குறி இந்த ஆலோசனைக்கு வரவேற்பு
அளிப்பதாக இல்லை.

“மணிமுடியை மகிந்தர் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; பாண்டிய
சேரருடன் சேர்ந்து நமக்கெதிரே அவர் வாள்முனையை உயர்த்தக்கூடாது.
இந்த இரண்டு நிபந்தனைகளுடன் நாம் அவருக்கு இப்போதே தூது அனுப்பிப்
பார்ப்போம்!- வீணான உயிர்க் கொலைகளைத் தடுக்க முடிந்தால் தடுத்துவிட
வேண்டும். அவர் ஏற்றுக் கொண்டாரானால் அதனால் இருசாராருக்கும்
நன்மை... மேலும், பலமுறைகள் நாம் தூது அனுப்பிப் பயினில்லை
யென்பதற்காக இம்முறையும் அனுப்பாதிருக்கக்கூடாது. போர் முறை மரபை
நாம் நழுவ விடலாமா!”

இதைக் கேள்வியுற்ற பிறகு யாருமே வாய் திறந்து பதிலளிக்க முன்
வரவில்லை. நீண்ட நேரம் அங்கு மௌனம் நிலவியது.

கடைசியில் இராஜாதிராஜன் மௌனத்தைக் கலைத்தான்; “பெரியவர்கள்
வாய்திறந்து பேசாததிலிருந்து அவர்களும் என் கருத்தையே
கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மணிமுடிக்காக நம்முடைய முன்னோர்கள் இரண்டு முறை போர் தொடுத்து விட்டார்கள். சக்கரவர்த்திகளும் இதே மகிந்தருடன் அதற்காகவே முன்பொருமுறை போர் தொடுத்திருக்கிறார்கள். நாம் தொடுக்கப்போவது
நான்காவது போர்! தூது அனுப்புவதால் கால விரயமும் கசப்பும் மிகுதியாகு
மென்றே நினைக்கிறேன்.”

பெரியவர்களுடைய முகங்கள் மலர்ந்தன. இதிலிருந்து தூது
அனுப்புவதை அங்கு யாரும் விரும்பவில்லை என்பதைக் கண்டுகொண்டார்
சக்கரவர்த்தி. என்றாலும் எதையும் முறையோடு செய்வதில் அவர்
பிடிவாதமுள்ளவர்.

“மதுராந்தக வேளாரே! உங்கள் கருத்து?” பெரிய வேளாரைத் திரும்பிப்
பார்த்தார் சக்கரவர்த்தி.

பெரிய வேளாருக்கு மாமன்னரின் கருத்துக்கு முரண்படவும்
விருப்பமில்லை. அங்கு வீற்றிருந்த வீரப்பெருமக்களின் மனத்தை நோகச்
செய்யவும் விருப்பமில்லை. இரு சாராரின் போக்கிலும் நியாயம் இருப்பதாகவே
அவருக்குத் தோன்றியது. நடுநிலையில் தம்மை நிறுத்தி ஆலோசித்தார்.

பிறகு கூறலானார்:

“முறையோடு போர் தொடங்க வேண்டுமென்ற சக்கரவர்த்திகளின் கூற்று
மிகவும் உயர்ந்த நெறியுள்ளது அதேபோல், இந்த நெறியை உணரும் பண்பு
ரோகணத்தரசருக்கு இருக்காது என்பதும் மெய்தான். தூதரின் சொற்களுக்கு
அவர் செவி சாய்க்கமாட்டார் - ஒன்று செய்யலாம்; நம்முடைய படைகள்
அனைத்தையும் ஈழத்தில் இறக்கிக்கொண்டு, பிறகு அவருக்குத் தூது
அனுப்பலாம். படைபலத்துக்கு அஞ்சி மகிந்தர் ஒருவேளை நம்முடைய நட்பை
நாடினாலும் நாடுவார். இங்கிருந்தே அனுப்புவதால் பலன் ஏதும்
இருக்காதென்றுதான் நானும் . . .”

“சரி. நீங்கள் இதற்கென்ன சொல்கிறீர்கள்?” என்று மற்றவர்களைச்
சுற்றிப் பார்த்தார் சக்கரவர்த்தி.

எல்லோரும் மதுராந்தக வேளாரின் ஆலோசனையை வரவேற்றார்கள்.

“அப்படியே செய்வோம்” என்று முடிவு கூறிவிட்டு அடுத்தாற்போல்
நடக்கவேண்டிய விஷயங்களை நினைவுபடுத்தினார் சக்கரவர்த்தி. “நானும்
வல்லவரையரும் ஈழத்துக்குப் புறப்படுகிறோம். கொடும்பாளூர் இளங்கோவும்
மாவலி வாணருடன் அங்கு வருகிறான்! தொண்டை மண்டலத்தை மேலைச்
சளுக்கர் தொல்லையிலிருந்து காக்கும் பொறுப்பை அரையர் இராஜராஜனும்
இராஜாதிராஜனும் மேற்கொள்ள வேண்டும். பாண்டிய சேரர்களைச் சேனாபதி
கிருஷ்ணன் ராமனும் சுந்தரசோழனும் கண்காணித்து வருவார்கள். தஞ்சை
மாநகரையும் மத்திய சோழமண்டத்தையும் மதுராந்தக வேளாரும் ஈராயிரம்
பல்லவரையரும் பார்த்துக் கொள்வார்கள்-வல்லவரையர் ஈழத்திலிருந்து
திரும்பும் வரையில் மதுராந்தக வேளாரே சாமந்த நாயகராகவும்
இருந்துவருவார்.”

சக்கரவர்த்தி வெற்றியுடன் திரும்ப வேண்டுமென்று அனைவரும்
வாழ்த்தினார்கள். கண்களைக்காக்கும் இமைகளைப் போல் நாட்டைக் காத்து
வருவதாகவும் வாக்களித்தார்கள்.

இராஜாதிராஜன் முகம் மட்டிலும் சற்றே சுருங்கியிருந்தது.

“நீயும் ஈழத்துக்கு வரவேண்டும் என்று விரும்புகிறாயா?” என்று
அவனிடம் கேட்டுவிட்டு, “வேண்டாம்; மேலைச் சளுக்கர்களுக்கு நாம்
தெற்கே திரும்பியிருப்பது தெரிந்து விட்டால், வடக்கு வாயிலை இடிக்கத்
தொடங்கிவிடுவார்கள்” என்றார் மாமன்னர்.

அதன் பிறகு அவர் சேனாபதி கிருஷ்ணன் ராமனுக்கு ஒரு புதுமையான
கட்டளையிட்டார். தென்சோழ மண்டலத்து மாதண்ட நாயகரான அவருக்கு
மதுரையில் ஓர் புது மாளிகையை எழுப்பும் பணியைக் கொடுத்தார்.

“மதுரை மாநகரில் பெரிய மாளிகையைக் கட்டுவதற்கான வேலையை
உடனே தொடங்குங்கள். புதிய அரண்மனையைப் போல் அது இருக்க
வேண்டும். கோட்டை மதில்களோடு பாதுகாப்புகள் மாளிகையாக
அமையும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள்.”

“ஆகட்டும் சக்கரவர்த்தி” என்றார் கிருஷ்ணன் ராமன். “ஆமாம்; அதை ஒரு முகாந்தரமாக வைத்துக்கொண்டு நாங்கள்
திரும்பும் வரையில் நீங்கள் மதுரையில் தங்குவது நல்லது” என்றார்
மாமன்னர்.

சக்கரவர்த்தியின் இந்தக் கட்டளை மற்றவர்களுக்கு வியப்பைத் தந்தது.
கிருஷ்ணன் ராமனை மதுரையில் தங்கச் செய்வதற்காக மட்டிலும், இந்த
மாளிகையை அவர் எழுப்பச் சொல்லவில்லை. வேறு எதற்காகப் புது
மாளிகை? பாண்டியர் மூவரில் ஒருவரது அரண்மனை அப்போது
மதுரையில்தான் இருந்தது. வேண்டுமானால் இதையே மாமன்னர் கட்டளை
யிட்டுப் பெறமுடியும். ஈழத்தாருடன் சேர்ந்து பாண்டியர்கள் செய்யும் துரோகச்
செயலைக் கண்ட பின்னரும் இன்னும் எதற்காக அவர்களுக்கு அரசுரிமை?

“மாளிகை எதற்காக?” என்ற கேள்வி எல்லோருடைய மனத்திலும்
எழத்தான் செய்தது. யாரும் காரணம் கேட்கத் துணியவில்லை. இராஜாதிராஜன்
மட்டிலும் மெதுவாகத் தன் தந்தையாரிடம் “மதுரையில் ஒரு புது மாளிகையா?”
என்று கேட்டான்.

அதற்கு அவர் பதில் அளிப்பதற்கு முன்பே, கூடத்தின் வலதுபுறக் கதவு
திறக்கப்பட்டது. ஏதோ செய்தியுடன் வந்து நிற்பவன்போல் இளங்கோவேள்
அவர் முன்பு வந்து நின்றான்.

தொடரும்                           

No comments:

Post a Comment