Wednesday, November 21, 2012

வேங்கையின் மைந்தன் ( பாகம் 1 , 24. ஆசைக் கனவுகள்)

பாகம் 1  , 24. ஆசைக் கனவுகள்


அமாவாசைக்குப் பிறகு பத்துத் தினங்கள் சென்றன. இதற்குள்
ரோகணத்தின் பல பகுதிகளுக்கும் சோழநாட்டு வீரர்கள், மன்னரையும்
அமைச்சரையும் தேடுவதற்காக அனுப்பப்பட்டனர். ரோகணம் அவர்களுக்குப்
புதிய இடம். சரியான சாலைகளும், புரவிகள் செல்லக்கூடிய பாட்டைகளும்
அந்தப் பிரதேசத்தில் அருகியிருந்தன. தேடிச் சென்றவர்களில் பலர் சோர்ந்து
திரும்பினர்! இன்னும் பலர் திரும்பவே இல்லை. அமைச்சர் கீர்த்தியின்
முன்னேற்பாட்டால் மறைந்திருந்து தாக்கும் சிறு கூட்டத்தினர் அங்கங்கே
தொல்லைகள் விளைவித்த வண்ணம் இருந்தனர்.

காடுகள், மலைகள், மடுக்கள், குகைகள், வனவிலங்குகளின்
மறைவிடங்கள் முதலியன நிறைந்த அந்தக் காட்டில் அவர்கள் தேடிச் சென்ற
மனிதர்களும் அகப்படவில்லை; மணிமுடியும் அகப்படவில்லை.

இந்தப் பத்து நாட்களில் ஒரே ஒரு முறை ரோகிணி அரண்மனையை
விட்டு நகரத்துக்குள் சென்று வந்தாள். அவளுடைய பணிப்பெண்ணின்
தகப்பனார் வீட்டிற்குச் சென்று வந்ததாக, இளங்கோவின் மூலம்
வல்லவரையருக்குச் செய்தி கிடைத்தது. ரோகிணியின் நடவடிக்கைகளை
அவளுக்குத் தெரியாமல் கண்காணித்த இளங்கோ, அவள் சென்று வந்த
வீட்டைச் சுற்றிலும் ஒற்றர் சிலரை நிறுத்தி வைத்தான். அந்தப்புரத்தின் வடக்குவாயில் மதிலில் ரோகிணி ஏற்படுத்தியிருந்த
பாதையைப் பார்த்தபிறகு, அதைப் போன்ற மற்ற ரகசிய வழிகளும்
கண்டுபிடிக்கப்பட்டன. அரண்மனையைவிடச் சக்கரவர்த்தி தங்கியிருந்த
பெரிய மாளிகையே மிகவும் விசித்திர வழிகள் நிறைந்ததாக இருந்தது.
அமைச்சர் கீர்த்தியின் உறைவிடமாக இருந்ததாம் அது.

அந்த மாளிகையின் சுவர்களுக்குள்ளிருந்து சில பேழைகள்
அகப்பட்டன. அவற்றில் எதற்குள்ளும் மணிமுடி இருக்கவில்லை. ஆனால்
மணிமுடியைக் காட்டிலும் மிகவும் பொறுப்புள்ள பொருள்கள் கிடைத்தன.
அமைச்சர் கீர்த்தியின் எதிர்காலத் திட்டமே அங்கிருந்த சில ஓலைச்
சுவடிகளில் மறைந்திருந்தது.

ஓலைச்சுவடிகளைக் கைப்பற்றிய மாமன்னர் அவற்றைத் தமது
அறைக்கு எடுத்துச் சென்று ஆராயலானார். படிக்கப் படிக்க அவரை வியப்பும்,
திகைப்பும், பரபரப்பும் ஆட்கொள்ளத் தொடங்கின. அமைச்சர் கீர்த்தி கை
தேர்ந்த ராஜதந்திரி என்பதும், துணிச்சலும் பேரார்வமும் கொண்ட வீரர்
என்பதும் அவரது வழிகள் பயங்கரமானவை என்பதும் விளங்கலாயின.

வல்லவரையரையும் இளங்கோவையும் வரவழைத்து அவர்களுடன் அந்த
ஓலைச்சுவடிகள் தெரிவித்த செய்திகளைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.
‘மணிமுடியைக் கைப்பற்றுவதோடு போராட்டம் ஓய்ந்துவிடப்போவதில்லை.
தொடர்ந்து போராட்டம் நடைபெற வேண்டிய நாடு ரோகணம்’ என்ற
எண்ணம் மாமன்னரிடம் நன்கு பதிந்துவிட்டது.

இரவெல்லாம் தனித்திருந்து சுவடிகளைப் புரட்டியதால் இராஜேந்திரரின்
கண்கள் கோவைப் பழங்களெனச் சிவந்திருந்தன. சிந்தனை செய்ததால்
ஏற்பட்ட வெம்மை அவருடைய முகத்தில் படர்ந்திருந்தது.

வல்லவரையரைப் பார்த்து, “மாமா, நம்மில் யாருக்காவது அமைச்சர்
கீர்த்தியும், சுந்தர பாண்டியரும் நெருங்கிய உறவினர்கள் என்பது தெரியுமா?”
என்று கேட்டார்.

“என்ன!”

“ஆமாம், அவர்கள் இருவரும் மைத்துனர்கள்.”

“சுந்தரபாண்டியரின் தங்கையைக் கீர்த்தி மணந்திருக்கிறாரா?” என்று
வியப்புடன் கேட்டார் வல்லவரையர்.

“இல்லை. கீர்த்தியின் தங்கை, சுந்தர பாண்டியரின் மனைவி. இந்த
உறவு இன்று நேற்று ஏற்படவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே ரகசியமாகத்
திருமணம் நடைபெற்றிருக்கிறது.”

“தமிழர்களை அடியோடு வெறுக்கும் கீர்த்தியா தம் தங்கையை
சுந்தரபாண்டியருக்குக் கொடுத்திருப்பார்? என்னால் அதை நம்பவே
முடியவில்லையே!”

சுந்தரபாண்டியர் கீர்த்திக்கு எழுதியிருந்த ஓலைகளை வல்லவரையரிடம்
கொடுத்து, “இவற்றைப் பாருங்கள்: பகையிடத்தே உறவு கொள்வதென்பது
நம்முடைய ராஜகுலப் பழக்கந்தான். அதையொட்டியே கீர்த்தியும் இப்படிச்
செய்திருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றார் இராஜேந்திரர்.

‘பகையிடத்தே உறவு கொள்வது பழக்கந்தான்’ என்ற மாமன்னரின்
சொற்கள், தேன் துளிகளாகச் சுவை தந்தன இளங்கோவுக்கு. அப்படியென்றால்
அவனுடைய சொந்த விஷயத்துக்கும் அது பொருந்துமல்லவா?

சுவடிகளைப் பர்த்த வல்லவரையர், “நம்பத்தான் வேண்டியிருக்கிறது,
இந்த உறவை!’’ என்றார். “பாண்டியர்களின் உறவால் முதலில் நம்முடைய
வலிமையைச் சிதைத்துவிட்டு, அடுத்தாற்போல் அவர்களுக்குக் குழி பறிக்கவும்
வகை செய்திருக்கிறார் அமைச்சர் கீர்த்தி.”

“பாண்டியர்களுக்குரிய முடியை அவர்களிடம் கொடுக்கவில்லை.
பெண்ணைக் கொடுத்திருக்கிறார்கள்! எல்லாம் விந்தையாயிருக்கிறது!” என்றான்
இளங்கோ.

“விந்தையொன்றுமில்லை; இது ராஜதந்திரம்!” என்றார் இராஜேந்திரர்.
“உரிமையைக் கொடுப்பது வேறு! பெண் கொடுப்பது வேறு. பார்க்கப்
போனால் பெண் கொடுப்பது ஒரு வகையில் உரிமையைப் பறிப்பதாகும். ஏன்,
வேங்கி நாட்டுக்கு நாம் கொடுக்கவில்லையா?”

வேங்கி நாட்டுப் பேச்சை மாமன்னர் எடுத்தவுடன் இளங்கோவுக்கு
என்னவோ போலிருந்தது. அவன் முகம் சுருங்கியது. இராஜேந்திரரின் தங்கை
சிறிய குந்தவையாரின் மகன் நரேந்திரன் இப்போது வேங்கி நாட்டு
இளவரசன், அருள்மொழி நங்கைக்கு அத்தை மகன்!

‘கொடும்பாளூர் உறவு பரம்பரை பரம்பரையாக வந்த பழைய உறவு;
இவர்களுக்கென்னவோ புதிய உறவின் நினைவுதான் அடிக்கடி வருகிறது!’
என்று எண்ணிப் புழுங்கினான் இளங்கோ.

அப்போது வாயிற்கதவருகே பரபரப்போடு ஒரு வீரன் வந்து நிற்கவே
அவனை அருகில் வரச் சொல்லி சைகை செய்தார் சக்கரவர்த்தி. ரோகிணியின்
நடவடிக்கைகளைக் கவனிக்க இளங்கோவிடம் ஏவல் செய்த ஒற்றன் அவன்.

இரண்டு நாழிகைப் பொழுதுக்கு முன்னால் ரோகிணி நகரத்துக்குள்
சென்ற செய்தி அவர்கள் அனைவருக்கும் தெரியும். முன்பு
திரும்பியதைப்போல் இப்போதும் திரும்பி விடுவாள் என்றே இளங்கோ
எண்ணியிருந்தான்.

“என்ன செய்தி?” என்றான் இளங்கோ.

“பணிப்பெண்ணின் வீட்டுக்குள்ளேதான் இன்றைக்கும் நுழைந்தார்கள்.
அவர்கள் சென்ற அரை நாழிகைக்கெல்லாம் பணிப்பெண்ணின் தகப்பனாரும்
ஓர் இளைஞனும் ஒரே குதிரையின் வெளியில் கிளம்பினார்கள். குதிரைமேல்
சென்ற இளைஞனைப் பார்த்தால்-”

“இளவரசியைப்போல் தோன்றுகிறது. அவ்வளவுதானே?”

“ஆமாம்.”

நகரத்தைவிட்டுக் கிழக்கே செல்லும் ஓர் ஒற்றையடிப் பாதையில்
அவர்கள் குதிரை திரும்பியதாகவும், அந்தப் பாதையைப் பற்றி அவன்
விவரம் விசாரித்துக்கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தான்! 

“புறப்படு; இளங்கோ!” என்று கட்டளையிட்டார் சக்கரவர்த்தி.
“இளங்கோவை அனுப்பிவிட்டு வாருங்கள்” என்று வல்லவரையருக்கும்
விடைகொடுத்து அனுப்பினார்.

தொடரும்


No comments:

Post a Comment