மவுனத்தின் மொழிபெயர்ப்பு ! - கவிதை.
சிறகு விரிச்சி பறக்குதே -மனசும்
சித்தாடைக் கட்டி விரியுதே
கொத்தோட பறிச்சவன் யாரடி
கொண்டாட தேதியுந்தான் கூறடி.
சித்திரையில் முளைத்தவனோ
சினம் கொண்டே பிறந்தவனோ
கத்திரியிலும் குளிரெடுக்க
கற்கண்டாய் சொல் உதிர்ப்பவனோ?

மலர் வனமே சென்றாலும்
மணமேனோ வீசலையே-
கட்டாந்தரையில் நானும்
களையெடுக்கப் போனேனே..
கடுகுவெடிக்குமுன்னே
காதை பொத்தி நின்றேனே
களவு போனது நிஜம் தானோ
கண்ணுறக்கம் மறந்ததேனோ?

சொல்லுனக்காய்த் தேடித்தேடி
சொப்பனத்தில் ஆழ்ந்தேனோ
மவுனத்தை மொழிபெயர்க்க
மல்யுத்தம் பயில்கின்றேன.
மன்றாடித்திண்டாடி நானும்
மயங்கித்தான் கிடக்கிறேன்!
உணர்வுக்குள் உனை நிறுத்தி
உன்னில் எனை தேடுகின்றேன்.

Comments