வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 14. ரகசியத் தொடர்பு )

பாகம் 2   ,  14. ரகசியத் தொடர்பு 


தஞ்சை அரண்மனைக்குள் மகிந்தரது மாளிகைத் தோட்டத்தின் சிறிய
செய்குளம் மேல்வானத்தின் நீலத்தைப் பிரதிபலித்துக்கொண்டு, மெருகேறிய
செப்புத் தகடு போல சலனமற்றுக் காட்சியளித்தது.

அதன் விளிம்பில் நின்ற வீரமல்லன் தன் முகத்தைத் தண்ணீரில்
எட்டிப்பார்த்தபடி தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். கன்றிக் கறுத்திருந்த
முகத்தில் பதிந்திருந்த விழிகளிரண்டும் கலங்கிச் சிவப்பேறியிருந்தன.

அவனுடைய முகத்தின் தோற்றம் அவனுக்கே அருவருப்பைத் தந்தது.
விகாரமும் குரூரமும் கொண்ட மற்றொரு மனிதன் அவனைத் தண்ணீருக்குள்
தலைகீழாய் நின்றுகொண்டு பரிகாசம் செய்தான். ‘வீரமல்லா! உன்
வீரமெல்லாம் அப்போது எங்கே போய்விட்டது? ஏன் நீ உன் கைகளைக்
கட்டிக்கொண்டு பேசாதிருந்தாய்? இளங்கோவுக்குத் திருப்பிக் கொடுத்திருக்க
வேண்டுமடா!’

தன் வெறுப்பையெல்லாம் ஒன்றாய்த் திரட்டிச் சேர்த்து அந்தத்
தண்ணீரில் காரி உமிழ்ந்தான் வீரமல்லன்; காலால் அதை எட்டி உதைத்தான்.
சேறாய்க் கலக்கிக் குழப்பினான்.

“இளங்கோ! இனி நீதான் என் முதற்பகைவன்!’’ என்ற சொற்கள் அவன்
வாயிலிருந்து வெளிப்பட்டன. உடனே “நண்பா’’ என்ற குரல் அவனுக்குப்
பின்னாலிருந்து ஒலித்தது. அதைத் தொடர்ந்து கரமொன்று அவன் இடது
தோளின்மீது விழுந்தது.

வீரமல்லன் திடுக்கிட்டான். ஆனால் திரும்பிப் பார்க்கவில்லை.
“செய்ததையும் செய்துவிட்டு இளங்கோ மன்னிப்புக் கேட்க வந்துவிட்டான்
போலும்!’’ என்ற எண்ணம் அவனுக்கு. ‘பழிக்குப்பழி’-ஆத்திரத்துடன்
திரும்பினான்.

அங்கே மகிந்தர் நின்று கொண்டிருந்தார். அவருடைய இடுங்கிய
கண்கள் சிரித்தன. அவரிடம் தன் முகத்தைக் காட்ட விரும்பாத வீரமல்லன்
வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

தோளில் போட்ட கரத்தை எடுக்காமலே, “நண்பா! என்ன இது?’’ என்று
வியப்போடு கேட்டார். மாடத்திலிருந்து பார்த்த காட்சியை அவனிடம் அவன்
காட்டிக் கொள்ளவில்லை.

“மன்னர் அவர்களே! நண்பனென்று என்னை அழைக்காதீர்கள். அந்தப்
பாக்கியம் எனக்கு வேண்டாம்; நான் தங்களது பணியாள்’’ என்று கூறி
அவரது பிடியிலிருந்து விலக முயன்றான் வீரமல்லன். அவர் அவனை
விடவில்லை.

“நாடிழந்த அரசன் உன்னை நண்பனென்று அழைப்பது பிடிக்கவில்லை
போலும்!’’ என்று வருத்தத்துடன் கூறுவது போல் கூறிச் சிரித்த மகிந்தர்,
“ஆமாம்! பெரிய வீரனின் நண்பன்; கொடும்பாளூர் இளவரசனின் உயிர்த் தோழன்; நான் உன்னை அப்படி அழைக்கலாமா?’’ என்றார்.

“அவனைப் பற்றி இனி என்னிடம் ஒருபோதும் பேசாதீர்கள்; அரசே!’’

“ஏன்! என்ன விஷயம்?’’ என்று கேட்டு, அவனை அணைத்தபடியே
தமது மாளிகை மாடத்துக்கு அழைத்து வந்தார் மகிந்தர். வரும் வழியில்
நடந்துகொண்டே “ஏதோ தோட்டத்தில் சத்தம் கேட்டது. இறங்கி வந்து
ரோகிணியிடம் கேட்டேன்; அவள் ஒன்றும் கூறவில்லை’’ என்றார்.

மேல்மாடத்துக்கு அவர்கள் ஒன்றாகச் செல்வதைத் தன்
அறையிலிருந்தவாறு கவனித்தாள் ரோகிணி. தோளோடு தோள் அவர்கள்
நெருங்கி நடந்தது அவளுக்கு அருவருப்பைத் தந்தது. அவர்கள் சென்ற சிறிது
நேரத்துக்கெல்லாம் கந்துலன் மாடத்திலிருந்து இறங்கிவந்து மேலே சென்றான்.
பிறகு திரும்பி வந்தான்.

மேலே அவர்கள் தனித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். கந்துலனைத்
தன் தந்தையார் அங்கிருந்து அனுப்பியதிலிருந்து, ஏதோ அவர்கள் இரகசியம்
பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டாள் ரோகிணி. வெகு
நேரம் சென்ற பிறகும் வீரமல்லன் திரும்பி வரவில்லை.

ரோகிணி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். பிறகு தன்
அறையிலிருந்து கிளம்பி மாடத்தின் படிகளில் ஏறத் தொடங்கினாள்.

கந்துலன் வேகமாக ஓடிவந்து, “இளவரசி! மன்னர் தனிமையை
விரும்பினார்கள்’’ என்று சொல்லி அவளைத் தடுத்துப் பார்த்தான்.

“எனக்குத் தெரியும்’’ என்று மறுமொழி கூறிவிட்டு அடிமேல்
அடிவைத்துச் சென்றாள் ரோகிணி. கூடத்தின் வாயிலோரமாக அவர்கள்
பேசிக்கொண்டது முழுமையும் அவள் செவிகளுக்கு எட்டவில்லை.
அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சொற்கள் ஒலித்தன.

சுந்தரபாண்டியர், அமைச்சர் கீர்த்தி, பெரும்பிடுகு முத்தரையர்
இவர்களின் பெயர்கள் திரும்பத் திரும்ப வீரமல்லனால் உச்சரிக்கப்பட்டன.

ஒருசமயம் தன்னை மறந்து உரக்கப் பேசினான் அவன். ரோகிணி தன்
செவிகளைக் கூர்மையாக்கிக் கொண்டு உற்றுக் கேட்டாள்.

“பெரிய சாம்ராஜ்யம்! சாம்ராஜ்யம்! காஞ்சியில் இருக்கிறாரே அரையன்
இராஜராஜன், அவர் என் குலத்தைச் சேர்ந்தவர். ஈராயிரம் பல்லவரையரும்
எனக்கு ஒருவகையில் உறவினர்தாம். இவர்கள் எல்லாம் இல்லாவிட்டால்
இந்தச் சாம்ராஜ்யம் அதோ கதியாகப் போயிருக்கும். இப்போதுதான் என்ன
சீரும் சிறப்புமாய் வாழ்கிறது! நீங்கள் வெளிநாட்டவர்கள்; உங்களுக்கு ஒன்றும்
தெரியாது. நான் உள்ளே இருப்பவன்! எனக்கு எல்லாம் தெரியும்.
மேலைச்சளுக்கரும் பாண்டியரும் ஒன்றாய்ச் சேர்ந்தால் அப்போது தெரியும்,
இவர்கள் லட்சணம்!’’

மேலும் அங்கு நிற்கப் பொறுக்காமல், “அப்பா!’’ என்று
அழைத்துக்கொண்டே அறைக்குள் நுழைந்து சென்றாள் ரோகிணி.

இருவரும் திடுக்கிட்டார்கள். ரோகிணியிடம் தன் அடிப்பட்ட முகத்தைக்
காட்ட விரும்பாத வீரமல்லன் “நான் வருகிறேன், அரசே!’’ என்று கூறிவிட்டு,
அவசரம் அவசரமாக மகிந்தரிடம் விடைபெற்று வெளியில் வந்தான்.
ரோகிணியைத் திரும்பிக் கூடப் பாராமல் படிகளில் இறங்கினான்.

“பணியாளனுடன் ஒன்றாக அமர்ந்து கொண்டு என்ன பேச்சு
வேண்டியருக்கிறது, அப்பா?’’ என்றாள் ரோகிணி. “இது மற்றவர்களுக்குத்
தெரிந்தால் நம்முடைய பெருமை இங்கு நிலைத்திருக்காது’’-அவளுடைய
குரலில் கசப்பும் கடுமையும் கலந்திருந்தன.

“வீரமல்லனும் பெருமை கொண்ட பரம்பரையில் வந்தவன்தான். இங்கு
வந்து இப்படி உட்கார்’’ என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றார்
மகிந்தர். “இந்தத் தஞ்சை மாநகரம் முதலில் யாருக்குச் சொந்தமாக
இருந்ததோ அந்த முத்தரையரின் வழி வந்தவன் அவன். அரை நாழிகைப்
பொழுதுக்குள் எவ்வளவோ உண்மைகளை அவன் தனக்குத் தெரியாமலே என்னிடம் கொட்டி விட்டான். சோழர்களுடைய ராஜ தந்திர வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு நாம் தடுமாறும் வேளையில் இவன் நமக்கொரு தெப்பம் போல் கிடைத்திருக்கிறான், ரோகிணி!’’

“இதெல்லாம் எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. தெப்பம் என்று நீங்கள் நினைக்கிற பொருள், நம்மை வெள்ளத்தில் ஆழ்த்திவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று கூறிவிட்டுச் சரேலென்று திரும்பினாள் ரோகிணி.

“பாவம்! நீ சின்னஞ்சிறு குழந்தை உனக்கு என்ன தெரியும்?’’ என்று தமது தாடியை மெல்லத் தடவிவிட்டுக் கொண்டார் மகிந்தர்.

அன்றிலிருந்து மற்றவர்கள் முன்னிலையில் மாளிகையின் மேற்பார்வையாளனாகவும், தனிமையில் மகிந்தரின் உற்ற துணைவனாகவும் உலாவினான் வீரமல்லன். சக்கரவர்த்திளின் குடும்பம் இளங்கோவுடன் பழையாறைக்குப் புறப்பட்ட அன்று வீரமல்லனும் மகிந்தரும் ஒரு பிற்பகல் முழுவதும் தனித்திருந்தனர்.

முன்போல் அவன் ரோகிணியிடம் நெருங்கவில்லையாதலால் அவள் பேசாதிருந்து விட்டாள். மகிந்தரின் போக்கு அவளுக்கு அச்சத்தைத் தந்தது. ஆனால் அவளால் அவரைத் தடுக்க முடியவில்லை. தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக, அவர்களது சந்திப்பை மறைத்து வைக்க வேண்டிய அவசியமும் அவளுக்கு ஏற்பட்டு விட்டது.

“கந்துலா! தந்தையாரும் அவனும் இப்படி நெருங்கி உறவாடுவது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நீ மிகவும் கவனமாக நடந்து கொள். அரண்மனையைச் சேர்ந்த யாரிடமும் அவர்களைப் பற்றிச் சொல்லிவிடாதே. அது நம் எல்லோருக்குமே ஆபத்தாக வந்து முடியும்’’ என்று எச்சரிக்கை செய்தாள்.

தஞ்சையிலும் வெற்றிவிழாக் கொண்டாட்டம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வீரமல்லன் இளவரசன் இராஜாதிராஜன் கவனத்தைக் கவரும் முறையில் நடந்து கொண்டான். இளவரசனை அணுகி நிற்கும் வாய்ப்புக் கிடைத்தபோது தன் தமையன் இராஜமல்ல முத்தரையனின்
தியாகத்தைக் குறிப்பிட்டுத் தன்னை அறிமுகம் செய்துகொள்ள அவன்
தவறவில்லை. இளங்கோவின் நண்பனென்றும், சக்கரவர்த்திகளின்
கருணைக்குள்ளாகி ஆயிரவர் படைத் தலைவனாய் உயர்ந்தவனென்றும்
அவன் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொண்டான்.

இந்த அறிமுகம் வீண் போகவில்லை.

பாண்டி நாட்டிலிருந்து பதற்றத்துக்குரிய செய்தி வந்தவுடன்
வீரமல்லனுக்கு அழைப்பு வந்தது. அவனுடைய இடத்துக்கு வேறொருவனை
நியமித்துவிட்டு, அவனைப் படைத் தலைமையை ஏற்றுக்கொள்ளச்
செய்தார்கள். தஞ்சைப் படை வீட்டிலிருந்த படைப் பகுதி ஒன்றுக்கு அவன்
தலைவன்.

செய்தி கிடைத்தவுடன் மகிந்தரை வந்து பார்த்தான் வீரமல்லன்.
வழக்கம்போல் அந்தரங்க உரையாடல் நடைபெற்றது. அவனை
வழியனுப்புவதற்காக மகிந்தரே மேல் மாடத்திலிருந்து கீழே இறங்கி வந்தார்;
கூடத்தில் நின்று கொண்டிருந்த ரோகிணிக்கும் செய்தியைக் கூறினார்.

“நண்பா! வெற்றியோடு திரும்பி வா! கட்டாயம் நீ வெற்றி பெறுவாய்!’’

ரோகிணிக்கு இதில் ஏதும் விளங்கவில்லை. பாண்டியர்களோ மகிந்தரைச்
சார்ந்தவர்கள்; அதிலும் சுந்தர பாண்டியர் அவருக்கு அமைச்சரின் வழி
உறவினர். அப்படிப்பட்டவர்களை எதிர்க்கச் சொல்பவனை அவர் வாழ்த்துக்
கூறி அனுப்புகிறாரே!

வீரமல்லன் ரோகிணியிடம் வந்து வணங்கி நின்றான்.

“இளவரசியாரே! போர்க்களத்திற்குச் செல்பவனுக்குத் தங்கள் அன்பும்
ஆசியும் வேண்டும். மன்னர் அவர்களது அன்பைப் பெறும் பாக்கியம்
எனக்குக் கிடைத்திருக்கிறது. அதைப் போலவே தங்களது கருணையும்
கிடைத்து விட்டால் வெற்றியோடு திரும்புவேன்.’’

ஏளனமாகச் சிரித்தாள் ரோகிணி. “யாருடைய வெற்றிக்காக நீ எவரோடு
போரிடப் போகிறாய் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? நினைவிருந்தால் தந்தையாரிடமும் என்னிடமும் வந்திருக்கவே மாட்டாய். உன்னுடைய வெற்றி எங்களைச் சார்ந்தவர்களின் தோல்வி, வீரமல்லா! நீ போய் உனக்கு உப்பிட்டு வளர்ப்பவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்.’’

வீரமல்லனும் மகிந்தரும் ஓரக்கண்ணால் ஒருவரையொருவர் பார்த்துக்
கொண்டார்கள்.

“இளங்கோவின் பரிச்சயத்தால் இளவரசியார் எங்கள் மீதுள்ள
பகைமையை மறந்திருப்பார்கள் என்று நினைத்தேன். சோழ சாம்ராஜ்யத்தின்
மீது இன்னும் அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது-இருக்கட்டும்; நான்
வருகிறேன்’’ என்று சொல்லி, அவளைக் கூர்ந்து நோக்கிவிட்டு
வெளியேறினான் வீரமல்லன்.

‘வெறுப்பு உன்னிடம் தான்’ என்று சொல்வதுபோல் ரோகிணி
முகத்தைச் சுளித்துக் கொண்டான்.

“ரோகிணி’’ என்று மகிந்தர் அவளை அன்போடு அழைத்து “இவனிடம்
நீ இவ்வளவு கடுமையாக நடந்த கொண்டிருக்கக் கூடாது. நம்மைப்போலவே
இவனும் இந்த நாட்டாரிடம் அகப்பட்டுக் கொண்டு விழிக்கிறவன். நம்மிடம்
தனிப்பட்ட அநுதாபம் கொண்டிருக்கிறான்’’ என்றார்.

“தங்களுடைய அநுதாபத்தையும் என்னால் புரிந்து கொள்ள
முடியவில்லை, அப்பா?’’ என்றாள் ரோகிணி.

தொடரும்

Comments