ஒரு கோப்பை தேநீர்...-கவிதை.


மண்புழுவினும் அதிகமாக
மண்ணில் நாங்கள் உழன்றதால்
எங்கள் சதைப் பிண்டங்கள்
நீங்கள் வளர்க்கும் தேயிலைக்கு உரமானது.
செழித்து வளர்ந்ததால் சந்தோசமாயிருந்தீர்கள்...
அட்டை உறிஞ்சியது போக
மிச்சமுள்ள எங்கள் குருதியேறி
செம்மண் இன்னும் சிவப்பானது.
மண்ணின் நிறமும் அதனால் தேயிலையின் தரமும்
சேர்ந்து உயர்ந்ததையெண்ணி கர்வமடைந்தீர்கள்...
உடல்சோர்வு நீங்க
நீங்கள் பருகும் தேநீர்
எங்கள் வியர்வையில் குளித்து வளர்ந்ததால்
கொஞ்சம் உவர்ப்பாயிருந்தது.
பருகுவது எங்கள் குருதியில் வளர்ந்த
வியர்வையாதலால் புதுசுவையென
இன்னும் இன்னும் அதிகம் பருகுனீர்கள்...
அப்படியே உங்கள் பதிவேட்டில்
எங்கள் எல்லோரது பெயர்களையும்
பாண்டி (எ) பட்டி என எழுதி வைத்தீர்கள்...

Comments