Skip to main content

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 6. கீர்த்தியின் கீர்த்தி

பாகம் 3 , 6. கீர்த்தியின் கீர்த்தி 


காட்டைப்போல் அடர்ந்து கிடந்த தம்முடைய தாடியையும் மீசையையும்
தடவிவிட்டுக் கொண்டே யோசனையில் ஆழ்ந்திருந்தார் அமைச்சர் கீர்த்தி.
அவரைச் சூழ்ந்திருந்தவர்களின் கண்கள் யாவும் அமைச்சரின் முகத்தில்
பதிந்திருந்தன. அடுத்தாற்போல் அவர் என்ன கூறப்போகிறார் என்று
அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மேலைச் சளுக்க நாடு தோல்வியுற்ற செய்தியைத் தம்மைச்
சார்ந்தவர்களுக்கு அதுவரையில் அவர் விளக்கிக் கொண்டு வந்தார். பிறகு
மௌனம் சாதித்தார்.

கீர்த்தியின் மைத்துனரான சுந்தர பாண்டியரும், பாண்டிய நாட்டுச்
சேனாதிபதி பெரும்பிடுகு முத்தரையரும் அவருக்கு அருகில்
நெருங்கியிருந்தனர். வீரமல்லனும் காசிபனும் சற்றே விலகி
அமர்ந்திருந்தார்கள். இந்த நால்வரின் கண்களுமே அப்போது அமைச்சரின்
விழிகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தன.

பொதிகைமலைச் சாரலின் மாளிகையில் இந்த மந்திராலோசனை
நடைபெற்றது. அவர்களைப் பொறுத்தவரையில் இது மந்திராலோசனை; சோழ
சாம்ராஜ்யத்துக்கோ பெரும் சதி.

“நம்முடைய நண்பர்கள் என்று நாம் மதித்துக் கொண்டிருந்த மேலைச்
சளுக்கர்கள் தோல்வியுற்று விட்டார்களல்லவா, அவர்களுடைய தோல்வியைப்
பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நம்மை அது எந்த விதத்தில் பாதிக்கும்
என்று எண்ணுகிறீர்கள்? என்று மற்றவர்களைப் பார்த்துக்கேட்டார்
மதியமைச்சர். உடனே மறுமொழி கூறத் தோன்றவில்லை சுந்தரபாண்டியருக்கு.
அவரைப் பின்பற்றி முத்தரையரும் பேசாதிருந்தார். நடந்த விஷயங்களை
வைத்துக்கொண்டு நடக்க வேண்டிய செயல்களுக்குத் திட்டம் வகுக்கவே
அவர்கள் அங்கு கூடியிருந்தனர்.

பெரியோர்கள் பேசாதிருப்பதைக் கண்டு, வீரமல்லன் தனது
தொண்டையைக் கனைத்துக் கொண்டு கூறலானான்.

“முயற்சியில் ஜயசிம்மர் அடைந்த தோல்வி நம்முடைய தோல்வி.
நம்முடைய தோல்விகளையாவது நாம் பொறுத்துக்  கொண்டோம். ஆனால் இதை நம்மால்கூடப் பொறுக்க முடியாது. நமக்கிருந்த
ஒரே பெரும் நம்பிக்கை இதனால் தகர்ந்து போய்விட்டது. நம்முடைய
மீட்சிக்கு இனி வழியே இல்லை.’’

வீரமல்லனின் கூற்றைக் கேட்டுப் புன்னகை செய்து கொண்டே,
சுந்தரபாண்டியரையும் பெரும்பிடுகு முத்தரையரையும் திரும்பிப் பார்த்தார்
கீர்த்தி. சுந்தரபாண்டியரின் முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காணோம்.
முத்தரையரோ வீரமல்லன் கூறியதை அப்படியே ஆமோதிப்பது போல்
தலையசைத்தார்.

உரக்கச் சிரித்தார் அமைச்சர் கீர்த்தி. யாரையோ துச்சமாக நினைப்பது
போலவும் யாரையோ பரிகசிப்பது போலவும் ஒலித்தது அந்தச் சிரிப்பு.
“சளுக்கர்களுடைய தோல்விதான் நமது வெற்றிக்கு வழி’’ என்று கூறிவிட்டு
மேலும் சிரித்தார் அவர்.

“என்ன; நம்முடைய நண்பர்களல்லவா அவர்கள்?’’ என்று
திடுக்கிட்டவாறே கேட்டார் முத்தரையர்.

“நண்பர்களில்லை என்று யார் சொல்லிக் கொள்ளுகிறார்கள்; நாமும்
அப்படித்தான் சொல்லிக்கொள்ள வேண்டும். அவர்களைவிட நாம்தான்
அவர்களிடம் நட்புரிமை கொண்டாடினோம். காரணம், நம்மைவிட அவர்கள்
பலம் வாய்ந்தவர்கள்!”

‘வெளிப்படையாகக் கூறிவிட்டீர்களே!’ என்று கூறுவது போல்
வியப்புடன் விழித்தன பாண்டியரின் கண்கள்.

“இனியும் மறைத்து வைப்பதில் பலன் என்ன? நம்முடைய ஆபத்துச்
சமயங்களிலெல்லாம் நமக்கு உதவிசெய்வதாக ஆசை வார்த்தைகளை
அளித்தார்களே தவிர, நடைமுறையில் அவர்கள் உதவ முன்வரவில்லை.
படைகளைத் துணைக்கு அனுப்பி வைக்கும்படி பலமுறை கேட்டோம்;
அனுப்பவில்லை. அதுதான் போகட்டும். நான் பாண்டிய நாட்டில்
கிளர்ச்சியைத் தொடங்கிய அதே சமயத்தில் வடக்கு எல்லையில் போர்
துவங்கச் சொன்னோமே, அதற்காவது அவர்கள் செவி சாய்த்தார்களா?’’

கீர்த்தியின் இரக்கமற்ற சொற்களிலும் உண்மைஇருக்கத்தான் செய்தது.
குடை நிழலிலிருந்து குஞ்சரமூர்ந்து செல்வோர் நடை நலிந்து தரையில்
தள்ளாடுகிறவர்களிடம் கொண்டுள்ள அலட்சியமே, இதுவரையில் சளுக்கர்கள்
பாண்டியர்களிடம் கொண்டிருந்தார்கள். பெயரளவில் செய்திகளையும்
தூதுவர்களையும் பரிமாறிக்கொண்டார்களே தவிர, அவர்களுடைய அகந்தை
குறையவில்லை.

கீர்த்தி மேலே கூறினார்:

“நட்பு என்பது சமநிலையில் உள்ளவர்களிடம் வளரக்கூடாது. தங்களை
மிக உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மலையின்
உச்சியில் அவர்கள் நிற்பது போலவும் மடுவின் ஆழத்தில் நாம் தவிப்பது
போலவும் அல்லவா அவர்கள் நம்மை நடத்தினார்கள்.’’

“வெந்து போனவர்கள் மீது நாம் வேலெறிய வேண்டாம்; இப்போது
நொந்து போயிருக்கிறார்கள் அவர்கள்’’ என்றார் சுந்தரபாண்டியர்.

“சாம்ராஜ்ய மமதையில் இறுமாந்திருந்த சாளுக்கர்களுக்கு இது சரியான
பாடந்தான்! தரையில் நடப்பவர்கள் கீழே விழுந்தால் அடி மிகுதியாக
இருக்காது. மலை உச்சியிலிருப்பவர்கள் கீழே உருண்டாலோ எலும்பு கூடக்
கிடைக்காது. சளுக்கர்களின் நிலை பரிதாபமானதுதான். ஆனால் முன்பே
அவர்கள் நமக்கும் உதவி செய்து, நம்முடைய துணையையும்
கோரியிருந்தார்களானால் தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருப்பார்கள்.
இனியும் ஒன்றும் மோசம் போய்விடவில்லை.’’

“எல்லாமே போனபிறகு இவ்வளவு நம்பிக்கையோடு பேசுகிறீர்களே!”
என்றார் முத்தரையர்.

“ஒன்றுமே போகவில்லை; இனிமேல்தான் ஒவ்வொன்றாக நமக்குத்
திரும்பி வரப்போகிறது’’ என்று குதித்தார் கீர்த்தி. “சுந்தரபாண்டியர் இந்தத்
தமிழ்நாட்டுக்கே சக்கரவர்த்தியாகி விடுவார். காசிபன் இலங்கைத் தீவுக்கு
அரசனாக முடிசூட்டிக் கொள்வான்; கொடும்பாளூர்க்கோனாடு நம்முடைய வீரமல்லருக்குக் கிடைத்துவிடும். சளுக்கர்களும் அவர்களுடைய
பங்குக்கு நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள்.’’

“எப்படி?’’ என்றான் வீரமல்லன்.

“தோற்றப்போன சளுக்க நாட்டார் இனித்தான் நம்முடைய
உண்மையான நண்பர்களாக மாறுவார்கள். சாம்ராஜ்யத்தைக் கட்டியாண்ட
அகந்தை இப்போது அறவே அழிந்து விட்டதல்லவா? அவர்களும்
தோல்வியுற்றவர்கள்; நாமும் தோல்வியுற்றவர்கள்! நட்பின் அடிப்படை
இப்போது ஒன்றாகிவிட்டது. தங்களது தன்னலத்துக்காகவாவது அவர்கள்
நம்முடன் சேர்ந்து தீரவேண்டும். அவர்களுடைய பலம் முழுவதும் நமக்குக்
கிடைத்துவிட்டால் பிறகு சோழர்களை ஆட்டிப் படைத்துவிடலாம்.’’

“மெய்தான்! மெய்தான்!” என்று கூறினார்கள் சுற்றியிருந்தவர்கள்.

“பொறுங்கள்! நம்முடைய வெற்றிக்கு மேலும் சில வழிகள் இருக்கின்றன.
அவைகளையும் சொல்கிறேன். இப்போது சோழநாட்டுச் சக்கரவர்த்தி தமது
வெற்றிப் பெருமிதத்தால் விம்மிக் கொண்டிருப்பார். அதனால்தான் தமது படை
வீரர்களை கங்கைக்கரைக்கு அனுப்பியிருக்கிறார். அவர் பெரும்பகுதி
வீரர்களை அங்கே அனுப்பியதோடல்லாது அதிகாரிகளையும் மக்களில்
பலரையும் புதிய நகரத்தை உருவாக்குவதில் திருப்பியிருக்கிறார். அவருடைய
சக்தி இப்போது இரு வகையிலும் சிதறிவிட்டது. பாவம்! வங்காள தேசம்
அவருடைய தஞ்சை அரண்மனையின் கொல்லைப்புறத்தில் இருப்பதாக
எண்ணிக் கொண்டார் போலும்!”

“அப்படியானால் நம்முடைய ஒற்றர்கள் கூறியதெல்லாம்
உண்மைதான?’’ என்று கேட்டார் சுந்தரபாண்டியர். “சளுக்க நாட்டு
வெற்றியைச் சோழநாட்டார் கங்கைக்குப் போய் வந்த பிறகுதான்
கொண்டாடப்போகிறார்களாமே, உண்மைதானா?’’

“வெற்றியைக் கொண்டாடப் போகிறவர்கள் சோழ நாட்டாரில்லை.
முதலில் கங்கை நதி வெற்றிக்கொண்டாடப்

போகிறது. அடுத்தாற்போல் அதை நாம்தான் கொண்டாடப் போகிறோம்!”

“என்ன?’’

“ஆமாம்! ஆசைக்கும் ஓர் அளவு வேண்டும், சுந்தர பாண்டியரே,
பேராசை பிடித்தவர்கள் சிலர் தங்களுக்குப் பேராற்றல் இருப்பதாக எண்ணி
மதி மயங்குகிறார்கள். இராஜேந்திர சக்கரவர்த்தி இப்போது அகலக்கால்
வைக்கத் தொடங்கிவிட்டார். அகப்பட்டுக் கொண்டு விழிக்கப் போகிறார்.
நன்றாக விழிக்கட்டும். நமக்கு அது நன்மையாகவே முடியும்.’’

நான்கு பேரும் அமைச்சர் பேச்சைக் கேட்டு இப்போது விழிக்கலானார்கள். அவர் தொடர்ந்து கூறினார்:

“நன்றாக யோசித்துப் பாருங்கள். இராஜேந்திரரல்லவோ நேரில்
தலைமை தாங்கிப் படை நடத்திப் போகவேண்டும்! தமது முதுமையைக்
காரணம் காட்டி அவர் பின் தங்கி விட்டாரென்றால், அது எதைக்
காட்டுகிறது? தம்முடைய பேராசைக்கு அவர் தம்மைப் பலி கொடுக்க
விரும்பவில்லை. தமது வீரர்களை மட்டும் கடைசி யாத்திரைக்கு அனுப்பி
வைக்கிறார். கங்கைக்குச் செல்கிறவர்கள் தங்களது கடைசி யாத்திரைக்குத்தான்
அங்கே செல்வது வழக்கம்!” அமைச்சர் கீர்த்தி அலட்சியத்தோடு நகைத்தார்.

பாண்டியர் பகை நாட்டவராக இருந்தாலும் தமிழர். இரோஜேந்திரரின்
வீரத்தை அவர் அவ்வளவாகக் குறைத்து மதிப்பிடவில்லை.

“கீர்த்தி அவர்களே! இராஜேந்திரரின் அளவற்ற மன உறுதியையும்
நம்பிக்கையையுமே இது காட்டுகிறது. தாம் நேரடியாகப் போகாமல் தம்முடைய
வீரர்களுக்கே கங்கை கொண்ட புகழ் கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்
இப்படிச் செய்திருக்கலாம். வீரத்தைப் பொறுத்த மட்டில் அவருடைய
அந்தரங்க சுத்தியில் எனக்கு ஐயமே இல்லை’’ என்றார் சுந்தரபாண்யர்.

“பாவம்! சோழ நாட்டு வீரர்களுக்குக் கங்கைக் கரையில்
இரண்டிலொன்றுதான் கிடைக்கப் போகிறது. ஒன்று சொர்க்கம், அல்லது நரகம். ஆனால் அவர்கள் உயிருடன் திரும்பி வருவது மட்டும் நடவாத காரியம். முதலில் கோதாவரிக்கு வடக்கே சக்கரக்கோட்டம் அவர்களை மடக்கித் துரத்துவதற்குக் காத்திருக்கிறது. அதையும் மீறி  அவர்கள் போனார்களானால் கோசலநாடு, தண்டபுத்தி, தக்ணலாடம், உத்திரலாடம் - இவ்வளவு நாட்டரசர்களும் அவர்களை இன்முகம் காட்டி வரவேற்கப் போவதில்லை. அதிலும் உத்திரலாடத்து மகிபாலன் இருக்கிறாரே, அவருடைய சிற்றரசர்களே போதும், இவர்களைச் சீரழித்துச் சிதைப்பதற்கு! வங்காளத்துக் கோவிந்தசந்தனும், இன்னும் இரணசூரன், இந்திரரதன்,
தன்மபாலன் முதலியவர்களும் இவர்களை என்ன பாடுபடுத்தப்
போகிறார்களோ, தெரியவில்லை!”

அமைச்சர் கூறிய விவரங்கள் சுந்தரபாண்டியரையே திகைக்க வைத்தன.
கீர்த்தியின் அறிவாற்றலைக் கண்டு பெருவியப்பெய்தினார் அவர்.

எங்கோ, ஈழத்தின் தென்பகுதிக் காட்டுக்குள் ஒரு கையளவு
நிலப்பரப்பளவுள்ள கடல் சூழ்ந்த சிறுநாட்டின் அமைச்சரா இவ்வளவு
செய்திகளைத் தெரிந்துவைத்திருக்கிறார்! சளுக்க நாட்டுக்கு வடக்கேயிருந்து,
இமயம் வரையில் ஆண்டு கொண்டிருந்த அத்தனை அரசர்களைப் பற்றியும்
அமைச்சருக்குத் தெரியும் போலிருக்கிறதே!

“கீர்த்தி அவர்களே! உங்களுடைய பெயர் உங்களுக்கு மிகமிகப்
பொருத்தமானது!’’ என்றார் அவரது மைத்துனர். “நீங்கள் கூறுவது
மெய்யானால் சோழ சாம்ராஜ்யத்தின் பெருமையெல்லாம் இப்போது கங்கை
வெள்ளத்தில் கரையப் போகிறதென்று சொல்லுங்கள்!”

“சாம்ராஜ்யமே கரையப் போகிறது. அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இந்தச் சமயத்தில் நாம் விழிப்போடிருக்க வேண்டும். சில நாட்களில் இங்கே
மேலைச் சளுக்க நாட்டிலிருந்து ஜயசிம்மரின் சேனாபதிகள் வந்து
சேருவார்கள். தோல்வியடைந்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து,
ஒருவருக்கொருவர் தோள் கொடுத்துக் கொண்டு வெற்றி காணவேண்டும்.’’

“கட்டாயம் வெற்றி நமக்குத்தான்’’ என்று ஆர்ப்பரித்தான் வீரமல்லன்.

“தம்பீ! உங்களுடைய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் நான்
வரவேற்கிறேன். ஆனால், சோழ சாம்ராஜ்யத்திடம் எண்ணற்ற
போர்க்கலங்கள் இருக்கின்றனவே, அவர்களுடைய கடற்படையைப் பற்றி
நாம் சிந்தித்தோமா?’’

பாண்டியருக்கோ, முத்தரையருக்கோ, வீரமல்லனுக்கோ அதைப் பற்றி
இதுவரையில் நினைத்துப் பார்க்கவே தோன்றவில்லை. தரைப் படைகளால்
தகர்த்தெறியப் பட்டவர்கள் பாண்டியர்கள். ஆனால் அமைச்சர் கீர்த்தி கடல்
கடந்த தீவுக்காரராயிற்றே! மாமன்னர் கட்டிய மரக்கலப் பாலத்தை அவரால்
மறக்க முடியுமா? தீவைச் சுற்றிலும் அரண் அமைத்து நின்ற சோழநாட்டுப்
பெருங்கலங்களைத்தான் அவரது நினைவிலிருந்து அகற்றிவிட முடியுமா?

“அஞ்சாதீர்கள்! கடற்படைகளைக் கடலுக்குள் கவிழ்ப்பதற்கும் ஒருவழி
செய்து வைத்திருக்கிறேன்’’ என்றார் அவர். “சீனத்துக்குச் செல்லும்
வழியிலுள்ள ஸ்ரீவிஜயத்துக்கும் கூடாரத்துக்கும் அவர்களுடைய
கடற்படைகளை ஏவிவிட்டுச் சீரழியச் செய்கிறேன். தரைப்படை தற்கொலைப்
படையாக வடக்கே போயிருக்கிறது. கடற்படையோ கிழக்கு நோக்கிப்
பாய்மரம் விரிக்கப் போகிறது!”

ஒன்றும் புரியாதவர்கள்பேல் விழித்தார்கள் மற்றவர்கள். கீழைக்
கடற்கரை நாடுகளின் பேரரசர் சங்கிராம விஜயோத்துங்க வர்மரோ
இராஜேந்திரரின் நெருங்கிய நண்பர். சீனத்துக்குச் செல்லும் தமிழ்ப்பெரு
வணிகர்களுக்கு வழியில் வேண்டிய வசதிகள் செய்து கொடுத்து வந்தவர்
அவர். சோழநாட்டிலிருந்து நாகைப்பட்டினம் சூடாமணி விகாரத்துக்குக்கூட
அவர் நட்பின் காரணமாகப் பொன்னையும் பொருளையும் வாரி
வழங்கியிருந்தார்.

“கீழைக் கடற்கரை நாடுகள் சோழ சாம்ராஜ்யத்தோடு உறவு பூண்ட
நாடுகளாயிற்றே?’’ என்றார் சுந்தரபாண்டியர்.

“நட்பு பகையானால்?...’’

“என்ன?’’

“நட்பும் பகையும் நம்மைப் போன்றவர்களுக்கு நிலையானதல்ல.
நாடுகளுக்குள்ளும் மனிதர்களுக்குள்ளும் நட்பை வளர்ப்பதுதான் கடினம்.
நினைத்த மாத்திரத்தில் பகைமைத் தீயை மூட்டிவிடலாம். ஆழ்கடலில்
தீப்பற்றி எரியும் ஆனந்தக் காட்சியை நாம் இங்கிருந்தே காணத்தான்
போகிறோம்!”

அதன்பிறகு அமைச்சர் கீர்த்தி தமது கடைசித் திட்டத்தை
மற்றவர்களிடம் விளக்கத் தொடங்கினார். அதைக் கேட்டுவிட்டுப் பேச்சு
மூச்சற்ற சிலைகளாக மாறிவிட்டனர் அனைவரும். நினைத்துப் பார்ப்பதற்கே
நெஞ்சு நடுங்கும் திட்டம் அது.

‘கங்கையில் பாதி, கடலில் பாதி என்று காரியம் முடியவேண்டும்.
கங்கையில் அவர்கள் தாமாக விழுந்துவிடுவார்கள். கடலில் நாம் அவர்களைப்
பிடித்துத் தள்ளிவிட வேண்டும். புரிந்து கொண்டீர்களா?’’ என்று கூறி
முடித்தார் அமைச்சர் கீர்த்தி.

தொடரும்


Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 31. காதல் வெறி; கடமை வெறி!

பாகம் 3 ,  31. காதல் வெறி; கடமை வெறி! மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு  அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது.
கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில்
துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம்.

கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த  அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான்.

நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.

“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.

“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போக…

வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 11. கடமை வெறியர்!

பாகம் 3 ,  11. கடமை வெறியர்! 


ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான்
அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று
அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக்
கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள்
எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்
கொட்டிவிடுகின்றன.

“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய
வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப்
புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று
மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.

“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா
நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.

“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக்
காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து
ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார்.
தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை
செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும்
தான் இருக்கும்.’’

இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல்
தழுதழுத்…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:

· புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.

· பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்

இலக்கணச் செங்கோல்
யாப்புச் சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவை எதுவுமில்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட புதிய
மக்களாட்சி முறையே புதுக்கவிதை

எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.

புதுக்கவிதையின் தோற்றம் :

புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற…