பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா? - மெய்யியல் - பாகம் -11.


பவுத்த திருப்பதிகள்!


காவிரிப்பூம்பட்டினம்

சோழநாட்டில் பேர்பெற்ற துறைமுகப் பட்டினமும் சோழர்களின் தலைநகரங்களில் ஒன்றுமான காவிரிப்பூம்பட்டினம் பண்டைக் காலமுதல் பௌத்தர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது. காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் அவ்யாற்றின் வடகரையில் அமைந்திருந்த இந்தத் துறைமுகப்பட்டினம் புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. பாளிமொழியில் உள்ள பௌத்த நூல்களில் இப்பட்டினம் ‘கவீரபட்டினம்’ என்று கூறப்பட்டுள்ளது. மிகப்பழைமையானதென்று கருதப்படுகின்ற புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் இந்த நகரம் டமிள (தமிழ்) தேசத்தில் உள்ளதென்றும், அகத்தி, அல்லது அகித்தி என்னும் முனிவர் தமது பெருஞ் செல்வத்தைத் தானஞ் செய்துவிட்டுத் துறவு பூண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் அருகில் இருந்த ஒரு வனத்தில் தங்கித் தவம் செய்தாரென்றும், அப்பெரியாரைக் கண்டு வணங்கப் பெருந்திரளான மக்கள் அங்குச் சென்று வந்ததால், அவரது தவத்துக்கு இடையூறாயிருந்ததுபற்றி அவர் அவ்விடத்தை விட்டு யாழ்ப்பாணத்துக்கருகில் உள்ள காரைத்தீவிற்குச் சென்று தவம் புரிந்தாரென்றும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த அகத்தி, அல்லது அகித்தி என்பவர் பௌத்த முனிவர்களில் ஒருவர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியின் உறவினரான மகிந்தர், அல்லது மகேந்திரர் என்பவர் இலங்கைக்குச் சென்று அங்குப் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு முன், சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி, அங்கு ஏழு புத்த விகாரைகளைக் கட்டினாரென்றும், மணிமேகலை சிலப்பதிகார நூல்களில் கூறப்படுகின்ற இந்திர விகாரை என்பவை இவர் கட்டியவைகளே யென்றும், மகேந்திரர் கட்டிய அந்த விகாரைகளை இந்திரன் கட்டியதாக அந்த நூல்களில் கூறப்பட்டுள்ளதென்றும் சரித்திர ஆராய்ச்சியிற் சிறந்த அறிஞர்கள் கருதுகின்றார்கள். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்த விகாரைகளின் தலைவராக அறவண அடிகள் என்னும் தேரர் இருந்தார் எனத் தெரிகின்றது. இந்த ஏழு இந்திர விகாரைகளையன்றி, ‘உவவனம்’ என்னும் பூஞ்சோலையின் நடுவில், பளிங்கினால் அமைக்கப்பட்ட சிறு கோயில் ஒன்றில் புத்தரது பாதபீடிகை இருந்தது. இந்தப் பாத பீடிகையை அப்பட்டினத்தில் இருந்த பௌத்தர்கள் வணங்கிவந்தார்கள். அன்றியும், இப்பட்டினத்தின் முதுகாட்டினை அடுத்துச் ‘சுடுகாட்டுக் கோட்டம்’ என்று ஏனைய மதத்தோரால் கூறப்பட்டதும், ‘சக்கரவாளக் கோட்டம்’ என்று பௌத்தரால் போற்றப்பட்டதுமான ஒரு கோட்டம் இருந்தது. இக்கோட்டத்தினுள் ‘சம்பாபதி’ என்னும் பௌத்த தெய்வம் கோயில் கொண்டிருந்தென்பதையும், அக்கோயிலின் தூணொன்றில் கந்திற்பாவை என்னும் தெய்வ உருவம் அமைந்திருந்ததென்பதையும், ‘சக்கரவாளம்’ என்னும் பௌத்தரது அண்டகோளத்தின் உருவம் இக்கோட்டத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்ததென்பதையும் மணிமேகலை என்னும் நூலினால் அறிகின்றோம். சம்பாபதி கோயிலுக்குக் ‘குச்சரக் குடிகை’ என்றும், ‘முதியாள் கோட்டம்’ என்றும் வேறு பெயர்கள் வழங்கப்பட்டன. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டினை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் அரசன், பௌத்த மதத்தைச் சேர்ந்து துறவுபூண்ட மணிமேகலையின் வேண்டுகோளின்படி, சிறைச்சாலையை அறச்சாலையாக்கிக்கொள்ளும் படி அதனைப் பௌத்தர்களுக்குக் கொடுத்தான் என்றும், அச்சிறைச்சாலைக் கட்டிடத்தைப் பௌத்தர்கள் அறச்சாலையாகவும் பௌத்தப் பள்ளியாகவும் அமைத்துகொண்டனர் என்றும் மணிமேகலை நூலினால் அறிகின்றோம். ‘இரசவாகினி’ என்னும் பாளிமொழியில் உள்ள பௌத்த நூலில், சோழ அரசன் ஒருவன் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவபெருமானுக்குக் கோயில் ஒன்று நிறுவினான் என்றும், அக்கோயிற்பணி நடைபெறும்போது சில பௌத்தத் துறவிகள் வந்து சில அதிசயங்களைச் செய்து அரசனுக்குக் காட்டி, அச்சிவன் கோயிலைப் பௌத்தக் கோயிலாக்கினார்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. கி. பி. நாலாம் நூற்றாண்டில் அச்சுதவிக்கந்தன் என்னும் களபர அரசனால் ஆதரிக்கப்பட்டவரும், தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்களில் பேர் பெற்றவருமான புத்ததத்த தேரர் என்னும் பௌத்த ஆசாரியர் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ஒரு பௌத்தப் பள்ளியில் சிலகாலம் தங்கியிருந்ததாகத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

பௌத்தக் கோயில்களை அழித்து கட்டப்பட்ட வைணவ, கிறித்துவ கோயில்கள்: வரலாற்று சான்றுகள்

பூதமங்கலம்

இதுவும் சோழநாட்டில் இருந்த பௌத்த ஊர்களில் ஒன்று. இவ்வூரில், பிண்டிதாசர் என்றும், வேணுதாசர் என்றும் பெயருள்ள ஒருவரால் அமைக்கப்பட்ட பௌத்தப் பள்ளி ஒன்றிருந்ததென்றும், அப்பள்ளியில் சில காலம் தங்கியிருந்தபோது ஆசாரியர் புத்ததத்த தேரர் ‘வினய வினிச்சயம்’ என்னும் பாளி மொழி நூலை இயற்றினார் என்றும் தெரிகின்றது. போதிமங்கை இதுவும் சோழநாட்டில் இருந்தது. ‘சாக்கியர்தம் போதிமங்கை’ என்று இதனைப் பெரிய புராணம் கூறுகின்றது. (சாக்கியர்=பௌத்தர்.) இப்பெயரைக்கொண்டே இது பௌத்தர்களுக்குரியது என்பதை நன்கறியலாம். இவ்வூரில் புத்தநந்தி, சாரிபுத்தர் முதலான பௌத்த தேரர்கள் இருந்தனர் என்றும், இவர்களுடன் திருஞான சம்பந்தர் (கி. பி. ஏழாம் நூற்றாண்டு) வாதம் செய்தார் என்றும் பெரிய புராணம் கூறுகின்றது. இப் போதிமங்கையும் மேற்கூறிய பூதமங்கலமும் ஒரே ஊராக இருக்கக்கூடும் என்று கருதுவோரும் உண்டு. ஆனால், அவர்கள் அதற்கு ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை.

பொன்பற்றி

இதுவும் சோழ நாட்டில் உள்ளது. இது மாலைக் கூற்றத்தைச் சேர்ந்தது. தஞ்சை ஜில்லாப் புதுக் கோட்டைத் தாலூக்காவில் உள்ளது இந்த ஊர் என்றும், தஞ்சை ஜில்லா அறந்தாங்கி தாலூக்காவில் உள்ள ‘பொன் பேத்தி’ என்னும் ஊரே பொன்பற்றி என்பது என்றும் கூறுவர். இவ்வூரில் வீரசோழிய ஆசிரியரான புத்தமித்திரனார் வாழ்ந்திருந்தார்.

நாகைப்பட்டினம்

இது சோழ நாட்டைச் சேர்ந்த துறைமுகப்பட்டினம். இது தொன்றுதொட்டு பௌத்தர்களின் புண்ணிய நகரமாக இருந்துவந்தது.

‘ உற்றவர்க் குறுப்பறுத் தெரியின்க ணுய்த்தலை யன்ன தீமை செய்வோர்க்கு மொத்த மனத்ததாய், நற்றவர்க் கிடமாகின்றது நாகையே ‘ என்று பௌத்தர்கள் இந்நகரைப் புகழ்ந்து கூறுவர். கி. பி. 720 -ஆம் ஆண்டில், நரசிம்ம போத்தவர்மன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில், இந்தப் பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயில் கட்டப்பட்டது. வர்த்தகத்தின் பொருட்டுச் சீன நாட்டிலிருந்து நாகைக்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன அரசன் விருப்பப்படி அது கட்டப்பட்டது. பிற்காலத்தில் இக்கோயிலைச் ‘சீனா கோயில்’ என்று வழங்கியதாகத் தெரிகின்றது. வெனிஸ் தேசத்திலிருந்து சீனாவுக்கு யாத்திரை சென்ற மார்க்கோ-போலோ என்பவர் நாகைப்பட்டினத்தில் ‘சீனா கோயில்’ என்னும் பெயருள்ள ஒரு கோயில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். கி. பி. எட்டாம், அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கையாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த விகாரையொன்றில், முழுதும் பொன்னால் அமைக்கப்பட்டிருந்த புத்த உருவச்சிலையைக் கவர்ந்துகொண்டுபோய், அப்பொன்னைக்கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான திருத்தொண்டுகளைச் செய்தார் என்பது வைணவ நூல்களினால் தெரியவருகின்றது. கி. பி. 985 முதல் 1014 வரையில் சோழ நாட்டை அரசாண்ட புகழ்பெற்ற இராச இராச சோழன் காலத்தில் நாகையில் ‘ஸ்ரீ சைலேந்திர சூடாமணி விகாரை’ என்னும் பௌத்தப்பள்ளி கட்டப்பட்டது. சுமாத்திரா தீவில் ஸ்ரீவிஜய என்னும் இராச்சியத்தையும், பர்மா தேசத்தில் கடாரம் என்னும் இராச்சியத்தையும் அரசாண்ட ஸ்ரீமாற விஜயோத்துங்க வர்மன் என்னும் அரசன் வேண்டுகோளின்படி, இந்த விகாரையை நாகைப்பட்டினத்தில் கட்டுவதற்கு இராச இராச சோழன் உத்தரவு கொடுத்தான். இந்த விகாரை ஸ்ரீமாற விஜயோத்துங்கனது தந்தையான சூடாமணிவர்மன் என்பவன் பெயரால் கட்டப்பட்டதாகலின், இதற்குச் ‘சூடாமணி விகாரை’ என்று பெயராயிற்று. யானைமங்கலம் முதலான ஊர்களை இவ்விகாரைக்குப் பள்ளிச்சந்தமாக இராச இராசன் அளித்தான். ஆயினும், சாசனம் எழுதுவதற்கு முன்னமே அவன் இறந்துவிட., அவனுக்குப்பின் அரசாண்ட இராசேந்திர சோழன் செப்புப் பட்டயத்தில் சாசனம் எழுதித்தந்தான். இவன் எழுதிக் கொடுத்த சாசனங்கள் லீடன் நகரத்துப் பொருட்காட்சி சாலையில் இப்போது இருக்கின்றன. இப்பொழுது இச்சாசனங்களுக்கு ‘லீடன் சாசனம்’ (Leiden Grant) என்று பெயர் வழங்கப்படுகின்றது. (Arch. Sur. Of South India, Vol. IV, Epigraphica Indica, Vol. XXII.) இவை வெளியிடப்பட்டுள்ளன. பர்மா தேசத்தில் ஹம்சவதி நாட்டை (Pegu) பதினைந்தாம் நூற்றாண்டில் அரசாண்ட ராமாபதி ராஜன் என்பவன் அனுப்பிய பதினொரு பௌத்த பிக்ஷக்களும், சித்திர தூதன் என்னும் தூதனும் இலங்கை சென்று தங்கள் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் கப்பலேறிச் செல்லும் வழியில் கப்பல் புயலில் அகப்பட்டு உடைந்துபோக, நற்காலமாக உயிர் பிழைத்துக் கரையேறினார்கள் என்றும், நாகைப்பட்டினத்தை அடைந்து அங்கிருந்த ‘படரிகாராமம்’ என்னும் பௌத்தப்பள்ளியில் தங்கியிருந்தார்கள் என்றும், அப்பள்ளிக்கருகில் சீன தேசத்து அரசனால் குகை வடிவமாகக் கட்டப்பட்டிருந்த பௌத்தப் பள்ளியில் புத்ததேவரை வணங்கினார்கள் என்றும் பர்மா தேசத்துக் கலியாணி நகரத்துக் கல்வெட்டுச்சாசனம் கூறுகிறது. இது நிகழ்ந்தது கி. பி. 1477 -ஆம் ஆண்டில். கி. பி. 1725 -ஆம் ஆண்டில், ‘சீனா கோயில்’ என்னும் பெயருள்ள ஒரு கோயில் நாகைப்பட்டினத்தில் இருந்ததென்று வாலென்டின் (Valentyn) என்பவர் எழுதியிருக்கின்றார். நாகைப்பட்டினத்துக்கு வடக்கே, ஒன்று அல்லது இரண்டு கல்தொலைவில், ‘புது வெளிக் கோபுரம்’ என்றும், ‘சீனா கோயில்’ என்றும், ‘கறுப்புக் கோயில்’ என்றும் பெயருள்ள ஒரு கோபுரம் இருந்ததென்றும், இக்கோபுரம் நாகைப்பட்டினத்துக்கு வருகிற கப்பல்களுக்கு ஒரு அடையாளமாகக் கடலில் தோன்றியதென்றும், இந்தக் கோபுரம் தாம் நேரில் 1846 -ஆம் ஆண்டில் கண்டதென்றும் சர். வால்டர் எலியட் (Sir Walter Elliot) என்பவர் எழுதியிருக்கின்றார்.

1846-இல் இந்த நிலையில் இருந்தது. இந்தக் கோபுரம் இருந்த இடத்தில், ஏசுவின் சபைப் பாதிரிமார் இப்போது கட்டிடம் கட்டியிருக்கிறார்கள். 1867 -இல் இந்தக் கோபுரத்தை இடித்துவிட்டுக் கட்டிடம் கட்டிக்கொள்ள அரசாங்க உத்தரவுபெற்று இதை இடித்துப் போட்டார்கள். இவ்விடத்தில் இருந்த மிகப்பழைய இலுப்பை மரம் ஒன்றை ஏசுவின் சபைப் பாதிரிமார் 1856 -இல் வெட்டியபோது, அம்மரத்தின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறிய பௌத்த விக்கிரகங்களைக் கண்டெடுத்தனர். இவற்றில் நான்கு உலோகத்தினால் ஆனவை; ஒன்று பீங்கானால் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று புத்தர் நின்று கொண்டு உபதேசம் செய்வதுபோல் அமைக்கப்பட்டது. கவர்னராயிருந்த நேப்பியர் பிரபு (Lord Napier) நாகைக்குச் சென்றபோது, பாதிரிமார் இதை அவருக்குக் கொடுத்தார்கள்.

நாகைப்பட்டினத்தில் இப்பொழுதும் ‘புத்தன் கோட்டம்’ என்னும் பெயருள்ள அக்கிரகாரம் இருக்கிறதென்றும், பண்டைக்காலத்தில் இந்த இடத்தில் பௌத்தக் கோயில் இருந்திருக்கவேண்டுமென்றும், பௌத்தக் கோயில் அழிந்த பிறகு அந்த இடத்தில் இந்த அக்கிரகாரம் ஏற்பட்டிருக்கவேண்டுமென்றும் கூறுவர் டாக்டர் S. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள். நாகைப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட வேறு பௌத்த உருவச் சிலைகள் சென்னைப் பொருட்காட்சி சாலையில் உள்ளன.

பௌத்தர்களின் தாராதேவி கோயிலே காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயில்!

புத்தகுடி

இதுவும் சோழநாட்டில் நாகைப்பட்டினத்துக்கு அருகில் இருந்த ஒரு ஊர். இவ்வூர் ‘செயங்கொண்ட சோழவளநாட்டுக் குறும்பூர்’ நாட்டில் இருந்ததாகக் குலோத்துங்க சோழனது செப்புப் பட்டயம் (Leiden Grant) கூறுகின்றது. இவ்வூரின் பெயரே இது பௌத்தர் குடியிருந்த ஊர் என்பதைத் தெரிவிக்கின்றது.

உறையூர்

இது சோழர்களின் தலைநகரமாக இருந்தது. இந்த ஊரை வடமொழியில் ‘உரகபுரம்’ என்பர். பேர் பெற்ற பௌத்த ஆசாரியரும் பௌத்த நூல்களுக்குப் பாளிமொழியில் பல உரைகளை இயற்றியவருமான புத்த தத்ததேரர் (கி. பி. நாலாம் நூற்றாண்டு) இந்த நகரத்தில் பிறந்தார். இவ்வூரில் பௌத்தர் அதிகமாக இருந்ததாகவும் தெரிகின்றது.
இனி, தொண்டை நாட்டில் சிறப்புற்றிருந்த பௌத்த ஊர்களைப்பற்றி ஆராய்வோம்.

காஞ்சீபுரம்

இந்த ஊர் தொன்றுதொட்டு சைவ, வைணவ, ஜைன, பௌத்த மதத்தவர்களுக்கு நிலைக்களமாக இருந்துவந்தது. பௌத்தர்கள் பண்டைக்காலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில், கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பௌத்த தூபி இருந்ததாக கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீனயாத்திரிகர் எழுதியிருக்கின்றார். ஆனால், அசோகர் கட்டிய தூபியைப்பற்றி மணிமேகலையில் கூறப்படவில்லை. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டைநாட்டை அரசாண்ட காலத்தில், ‘பைம்பூம்போதிப் பகவற்கு’ ஒரு சேதியம் அமைத்தான் என்று மணிமேகலையினால் அறிகின்றோம். இந்தச் சேதியத்தைத்தான் பிற்காலத்தவராகிய யுவாங் சுவாங் என்னும் சீனர் அசோகர் கட்டியதாகக் கூறினார் போலும். இளங்கிள்ளி அரசாண்ட கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலே, காஞ்சீபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில், ‘தருமத வனம்’ என்னும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும், அதில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலையினால் அறிகின்றோம்.

காவிரிப் பூம்பட்டினத்தில் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்த அறவண அடிகள் பிற்காலத்தில் காஞ்சீபுரத்தில் வந்து தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்து வந்தார் என்பதும் மணிமேகலையினால் பெறப்படுகின்றது. இன்றைக்கும், காஞ்சீபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டென்றும், அது ‘அறவணஞ்சேரி’ என்பதன் மரூஉவென்றும், அறவண அடிகள் தங்கியிருந்த தெரு (சேரி=தெரு) ஆதலின், அத்தெரு இப்பெயர் வாய்ந்ததென்றும் கூறுவர் வித்துவான் ராவ்பகதூர் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். அன்றியும், ‘புத்தேரித் தெரு’ என்னும் பெயருடன் ஒரு தெரு காஞ்சீபுரத்தில் இருக்கின்றதென்றும், அது ‘புத்தர் தெரு’ என்பதன் மரூஉவென்றும் மேற்படி அய்யங்கார் அவர்களே கூறுவர். மாதவி மகள் மணிமேகலை பௌத்த தருமங்கேட்டுத் துறவு பூண்டபின், காஞ்சீபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது. இப்பொழுதும் காஞ்சீபுரத்துக்கருகில் ‘மணிமேகலை அம்மன்’ என்னும் பெயருடன் ஒரு அம்மன் கோயில் இருக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது. பௌத்த பிக்குணியாகிய மணிமேகலையின் கோயிலாக இது இருக்குமோ என்பது ஆராய்ச்சி செய்யற்பாலது.

காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் புத்தவர்மன் என்பவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகின்றான். இவன் பௌத்தர்களுக்காகப் பௌத்தப்பள்ளிகளைக் கட்டி அவர்களை ஆதரித்திருக்கக்கூடும். கி. பி. ஏழாம் நூற்றாண்டில், ஹிமசீதளன் என்னும் அரசன் பௌத்தர்களை ஆதரித்தான் என்றும், அகளங்கர் என்னும் ஜைனர் காஞ்சீபுரத்தில் இவ்வரசன் முன்னிலையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்று, இவ்வரசனை ஜைன மதத்தில் சேர்த்ததோடு, தோல்வியுற்ற பௌத்தர்களை இலங்கைக்கு அனுப்பி விட்டார் என்றும் தெரிகின்றது. ஏழாம் நூற்றாண்டில், அதாவது 640-இல், காஞ்சீபுரத்துக்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீனர் காஞ்சீபுரத்தில் நூறு பௌத்தப் பள்ளிகளும் ஆயிரம் பௌத்த பிக்ஷக்களும் இருந்ததாகவும், பௌத்தப் பள்ளிகள் நல்ல நிலையில் இருக்கவில்லையென்பதாகவும் எழுதியிருக்கின்றார்.

காஞ்சீபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் பண்டைக்காலத்தில் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்றும், பௌத்த மதம் அழிந்த பிறகு அக்கோயில் இந்துமதக் கோயிலாக மாற்றப்பட்டதென்றும் அரசாங்க சிலா சாசன ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். காமாட்சியம்மன் கோயிலில் ஐந்தாறு புத்தர் உருவச் சிலைகள் இன்றைக்குங் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானது பெரிதாகவும், புத்தர் நிற்கும் கோலமாகவும் அக்கோயிலின் உட்பிராகாரத்திலே இருக்கின்றது. இந்தப் புத்த உருவத்திற்கு இப்போது ‘சாத்தன்’ என்று பெயர் சொல்லப்படுகின்றது. ‘காமாட்சி லீலாப் பிரபாவம்’ என்னும் நூலில், சாஸ்தா (சாத்தன்) தேவியின் முலைப்பால் உண்டு வளர்ந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது. புத்தருக்குச் சாஸ்தா என்பதும் பெயர். காமாட்சியம்மன் கோயில் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில் என்று சொல்லுகிறவர்களின் கொள்கையை இவை ஆதரிக்கின்றன.

நன்றி : http://fourladiesforum.com

Comments