ஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள்

ஈழத்துக் கிழவனார் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் குழந்தைப் பாடல்கள் 


01 கத்தரி வெருளி


கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நின்று
காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்?

கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
காவல் புரிகின்ற சேவகா!
எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்?

வட்டமான பெரும் பூசினிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!

தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!

பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ?
வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே

கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்
கத்திக் கத்திக் கரைந்தோடுமே
நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி
நடுநடுங்கி மனம் வாடுமே

ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்
ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன னுண்மையே - போலி
ஆவதறிந்தன னுண்மையே

தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்

சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்.

( நவாலியூர் சோமசுந்தரப்புலவர் )http://paadal.blogsp.../blog-post.html

02 தாடியறுந்த வேடன்



வீமா! வீமா! ஓடி வாவா - அணில்
வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா
தேமா மரத்திற் பதுங்கி - மாங்காய்
தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி

மரத்தில் இருந்து குதித்தே - அடடா
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார்
துரத்திப் பிடிபிடி வீமா - உச்சு
சூச்சூஅணில் எம்மைத் தப்பியும் போமா?

பொந்துக்குட் புகுந்தது வீமா - உந்தப்
புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்
அந்தோஎன் தாடியை விடுவாய் - அந்த
அணில்தப்பி ஓடிய தையையோ கெடுவாய்.


ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை


ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!


Comments