வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 19. காதலின் கலக்கம்

பாகம் 2   , 19. காதலின் கலக்கம்


நறுக்கோலைச் செய்தி மாமன்னருக்கோ, மற்றவர்களுக்கோ ஒன்றும்
புதிதாக இருக்கவில்லை:-

‘ரோகணத்துக்கும் பாண்டிய நாட்டுக்கும் சொந்தமான மணிமுடி அது.
மன்னர் மகிந்தர் ரோகணத்தின் துரோகி. அவரை மக்களிடம் காட்டி ஏமாற்ற
வேண்டாம். ரோகணத்து மக்கள் உங்களைப் பழிவாங்கும் நாள்
நெருங்கிவிட்டது.’

மாமன்னருக்கு அருகில் அப்போது வல்லவரையரும் பெரிய வேளாரும்
அமர்ந்திருந்தார்கள். ஓலையை அவர்களிடம் காண்பித்துவிட்டு, அதை வாங்கி
அலட்சியமாய்க் கிழித்தெறிந்தார் சக்கரவர்த்தி.

“இதிலிருந்து ஒரு விஷயம் நமக்குப் புலப்படுகிறது. மகிந்தரை அவர்கள்
துரோகி என்று கைகழுவிவிட்டார்கள். அதனால் அவரிடம் இனி மறைமுகமாகத் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு நமக்குத்
தொல்லை தரமாட்டார்கள்’’ என்றார் பெரிய வேளார்.

“அவர்கள் அப்படி நினைத்தாலும் மகிந்தர் அவர்களை
மறக்கவில்லையே!’’ என்றார் வல்லவரையர். “இன்னும் அவர் கீர்த்தியை
நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்.’’

மாமன்னர் சிறிது நேரம் பேசாதிருந்துவிட்டு, “இந்த ஓலையை நாம்
அப்படியே நம்பிவிடவும் கூடாது; மகிந்தரை நாம் கண்காணிக்காமல் இருக்க
வேண்டுமென்பற்காக அமைச்சர் கீர்த்தி இப்படி ஒரு சூழ்ச்சியைச் செய்தாலும்
செய்திருக்கலாம்’’ என்றார்.

“ஆமாம், எதற்கும் விழிப்போடிருப்பது நல்லது’’ என்றார்
வல்லவரையர்.

அடுத்தாற்போல், கீர்த்தியையும் சுந்தரபாண்டியரையும் தேடிக் கண்டு
பிடிப்பதற்காக அனுப்பப்பட்ட ஒற்றகர்களைப் பற்றி அவர்கள்
பேசிக்கொண்டார்கள். “ஒற்றர்களின் வேலை அவ்வளவு எளிதல்ல; பாண்டிய
நாட்டின் ரகசியமான மறைவிடங்கள் நம்மைவிடச் சுந்தரபாண்டியருக்கு நன்கு
பழக்கமானவை. என்றாலும் முயன்று பார்க்கச் சொல்லியிருக்கிறேன்’’ என்றார்
சக்கரவர்த்தி.

“இவையெல்லாம் நமக்குச் சின்னஞ்சிறு விஷயங்கள். இனி நாம்
நம்முடைய வடக்கு எல்லையில் கவனம் செலுத்த வேண்டும். மேலைச்
சளுக்கர்களுக்குப் பாடம் கறிபிக்கா விட்டால், அவர்களுடைய
படையெடுப்புக்கும் நாம் நிச்சயம் ஆளாக வேண்டி வரும்’’ என்று கூறினார்
பெரிய வேளார்.

வல்லவரையரும் சக்கரவர்த்தியும் ஒருவருக்கொருவர் குறிப்பாகப்
பார்த்துக்கொண்டார்கள். வடக்கு எல்லையில் நிகழ்ந்த அட்டூழியங்களின் முழு
விவரமும் பெரிய வேளாருக்குத் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால் இது
வரையில் அவர் பொறுமையாக இருந்திருக்கவே மாட்டார்.

உள் நாட்டுப் பாண்டியர்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று
சொல்லி, முன்னரே படைகளனைத்தையும் திரட்டி வடக்கே அனுப்ப வேண்டு
மென்று துடிதுடித்திருப்பார். பாண்டியர்களை எப்போதுமே அவர் ஒரு பொருட்டாக
மதித்ததில்லை. மாமன்னரின் பெருந்தன்மையால் பிழைத்து வந்த நரிக்கூட்டம்
என்ற அலட்சியம் அவருக்கு.

“தலைநகரத்திலும் மற்ற இடங்களிலும் இருக்கும் படைகளை நாம்
இராஜாதிராஜனுடன் காஞ்சிக்கு அனுப்பி வைக்கவேண்டும். படைகளின்
நடமாட்டம் மகிந்தருக்குத் தெரியாமல் இருப்பது நல்லது. அது வரையில் சில
தினங்கள் அவர் கொடும்பாளூரில் தங்கிவிட்டு வரட்டுமே?’’ என்றார்
சக்கரவர்த்தி.

“தாராளமாக. அவர் என்னுடைய விருந்தினராக அங்கு வந்து தங்கலாம்.
ஆனால், நான் தங்களுடன் தஞ்சைக்கு வரவேண்டியிருக்கிறதே!’’ என்றார்
பெரியவேளாளர்.

“அதனால் என்ன? இளங்கோவை இப்போதைக்குக் கொடும்பாளூரில்
தங்கச் செய்யலாம்’’ என்றார் வல்லவரையர். “நம்மோடு அவன் தஞ்சைக்கு
வந்தாலும் இளவரசரோடு காஞ்சிக்குப் போகவேண்டுமென்று பிடிவாதம்
பிடிப்பான். நாமோ உடனடியாகப் போர் தொடங்கப்போவதில்லை. அதனால்
அவனும் கொடும்பாளூரில் இருப்பதுதான் உத்தமம். ஒருவாரம் பத்துநாள்
சென்று நம்முடைய வேலைகள் முடிந்த பிறகு நாம் அவர்களைத் தஞ்சைக்கு
அழைத்துக் கொள்ளலாம்.’’

இந்த ஏற்பாட்டின்படி பெரியாவேளார் தாமே நேரில் சென்று
மகிந்தரைத் தமது விருந்தினராகக் கொடும்பாளூரில் வந்து தங்கும்படி
கேட்டுக்கொண்டார். தாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அரிய வாய்ப்பு,
முயற்சியில்லாமல் தானே வருவதைக் கண்டு, மகிந்தருக்குப் பேரானந்தமாக
இருந்தது.

“தங்களுடைய அன்புக்காக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
எனக்கும் பொழுது போகவேண்டும் அல்லவா? இருக்கும் பொழுதையெல்லாம்
இனிமேல் சைவ சமயத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் கழிக்க வேண்டுமென்று
எனக்கு ஆசை வந்திருக்கிறது. சைவத்தின் உட்பிரிவுகளாகப் பலப்பல
கிளைகள் இங்கே இருக்கின்றன. அவை வேடிக்கையாகவும் விநோதமாகவும்
தோன்றுகின்றன.’’

பௌத்த சமயத்தைச் சார்ந்த ஒருவரிடமிருந்து சைவம் என்ற பெயரைக்
கேள்வியுற்ற உடனேயே பெரிய வேளாருக்குப் பெருமை தாங்கவில்லை.
சக்கரவர்த்தியைப் போன்று எல்லாச் சமயத்தாரையும் பரந்த மனப்போக்குடன்
நோக்கும் தன்மை அவரிடம் கிடையாது. அதனாலேயே அவர் மகிந்தரைப்
பற்றி தமக்குள் வியப்படையலானர்.

“உங்களுடைய ஆராய்ச்சியைத் தொடங்குகிற இடம் கொடும்பாளூராக
இருக்கட்டும்! எங்கள் முன்னோர்கள் கட்டி வைத்த மூவர் கோயிலையும் ஐவர்
கோயிலையும் நீங்கள் சென்று பார்க்க வசதி செய்கிறேன். மூவர் கோயிலுக்கு
அருகிலேயே காளமுகர்களுக்கு ஒரு பெரிய மடமும் கட்டிக்
கொடுத்திருக்கிறோம். முன்பெல்லாம் கபாலிகர்கள் சிலரும் அங்கே
இருந்திருக்கிறார்கள். அவர்கள் போக்கை மக்கள் அவ்வளவாக விரும்பாததால்,
அவர்கள் சமயம் இப்போது நசித்து வருகிறது.’’

பெரிய வேளார் பெரு மகிழ்ச்சியோடு மகிந்தரின் விடுதியிலிருந்து
சென்றார். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களும் சமயத் துறையை
அணுகுவதுண்டு, தோல்வியுற்றவர்களும் அணுகுவதுண்டு. மகிந்தரின் பேச்சை
நம்பிய பெரிய வேளார் இது அவருடைய அரச வாழ்வுத் துறவு மனப்பான்மை
என்று எடுத்துக் கொண்டார். இனி அவர் சைவத்தில் ஊறி ரோகணத்தின்
நினைவுகளை மறக்க விரும்புகிறார் போலும்!

தஞ்சைக்குப் புறப்பட்ட எல்லா ரதங்களுமே வழியில் கொடும்பாளூரில்
ஒரு பொழுது தங்கின. மகிந்தரின் குடும்பத்தாரைக் கவனிக்கும் பொறுப்பை
இளங்கோவிடமும் அவனுடைய அன்னையாரிடமும் விட்டுவிட்டு மற்றவர்கள்
தஞ்சைக்குக் கிளம்பினார்கள்.

தமக்குப் பதிலாகத் தம்முடைய குமாரன் அங்கு இருப்பான் என்று
மகிந்தரிடம் கூறிவிட்டு பெரியவேளார் விடைபெற்றுக் கொண்டார். ஆதித்த
பிராட்டியார் பெரிய உருவமும் பெரிய உள்ளமும் படைத்தவர். ரோகணத்துப்
பட்டமகிஷியின் வரவு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. பெண்
குழந்தை இல்லாத குறை அவருக்கு; அதை நிறைவு செய்ய வந்தவளாக ரோகிணியை நினைத்துக் கொண்டார்.

ரோகிணியின் மனநிலை அவள் வாழ்நாளில் இதற்கு முன்பு என்றுமே
இப்படி இருந்ததில்லை. அருள்மொழி எங்கே அங்கு தன்னுடன் தங்கிவிடப்
போகிறாளோ என்ற அச்சம் கொடும்பாளூருக்கு வரும் வரையில் அவளை
வாட்டிக் கொண்டிருந்தது. அதற்கு முன்பாக இளங்கோவுடன் ஒன்றாக
அருள்மொழி பழையாறைக்குச் சென்றபோதே ரோகிணியால் அதைப்
பொறுக்க முடியவில்லை. தன்னையும் அழைத்திருந்தால் அவள் தவறாது
சென்றிருப்பாள்.

ஆனால், அந்தப் பிரிவின்போதுதான் இளங்கோவின் அருமை
அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. ஒவ்வொரு நாளும் அவள் தன்னையே
நொந்து கொண்டாள்; பழையாறைக்குப் புறப்பட்ட சமயத்தில் அவன்
அவளிடம் கூறிய ஒவ்வொரு சொல்லும் ஒரு வாளாக மாறி அவள் மனத்தை
அறுத்துக் கொண்டிருந்தது.

“எனக்கு மிகவும் விருப்பமான இடம் பழையாறை. சக்கரவர்த்திகளும்
என்னை விரும்பி அழைக்கிறார்’’ என்று இளங்கோ ரோகிணியிடம்
கூறியபோது, விருப்பம் என்ற சொற்களை மிகவும் அழுத்தமாகவே
உச்சரித்தான்.

“விருப்பமில்லாதவளிடம் நான் ஏன் பேசிக்கொண்டு நிற்கவேண்டும்?’’
என்று அவளிடம் அவன் மறைமுகமாகக் குத்திக் காட்டியதுபோல்
தோன்றியது.

‘நான் உங்களை விரும்புகிறேன் இளவரசே!’ என்று மனதார அவள்
அப்போது சொல்லத் துடித்தாள். ஆனால் அப்படிச் சொல்லக்கூடிய சூழ்நிலை
அங்கே இல்லை. அவள் சொல்லியிருந்தால், அத்துடன் குலுங்கிக் குலுங்கி
அழுதிருப்பாள். மற்றவர்கள் முன்னிலையில் கண்ணீர் சிந்தினால் அது
அவளைக் காட்டிக் கொடுத்துவிடும்.

பழையாறைக்கு இளங்கோ சென்ற பிறகு, அதே சொல்லைத் தனக்குள்
ஆயிரம் முறை சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.

ஆனால் ஒரு முறையாவது அவனிடம் நேரில் சொல்வதற்கு அவளுக்கு
வாய்ப்புக் கிடைக்கவில்லை.

கொடும்பாளூரில் அவனுடைய சொந்தத் தலைநகரில், அவன்
மேற்பார்வையில், அவனுடைய விருந்தினனாகத் தங்கும் வாய்ப்புக்
கிடைத்தவுடன் ரோகிணியின் தலை ஆனந்தத்தால் சுழன்றது. அந்த
நகரத்தின் மண்ணையும் மாளிகைகளையும், மக்களையும், அவன் தாயாரையும்,
அவள் முழுமனதோடு நேசித்தாள்.

நிச்சயமாக அருள்மொழி அங்கு தங்கப் போவதில்லை என்று கண்ட
பிறகு அவள்மீது கூட ரோகிணிக்குப் பேரன்பு பிறந்து விட்டது.

ரதத்துக்குள் அவர்கள் ஏறிக்கொண்டவுடன், ஓடோடியும் சென்று,
“அக்கா நீங்கள் பழையாறைக்குப் போன போது என்னைத் தனியே விட்டு
விட்டுப் போய்விட்டீர்கள். இங்கேயாவது என்னோடு தங்குவீர்கள் என்று
நினைத்தேன். இங்கும் தனியே விட்டுச் செல்கிறீர்கள். என்னோடு நீங்களும்
தங்கையும் இங்கு தங்கக்கூடாதா, அக்கா?’’

“நீ வருவாய் என்று தெரிந்திருந்தால் பழையாறைக்கு உன்னை
அழைத்துச் சென்றிருப்பேன். ஆனால் கொடும்பாளூரில் இப்போதைக்கு
எங்களால் தங்க முடியாது. தந்தையாரின் கட்டளைப்படிதானே நாங்கள் நடக்க
வேண்டும். விரைவில் நீயும்தான் அங்குத் திரும்பப் போகிறாய்’’ என்றாள்
அருள்மொழி.

“கொடும்பாளூர் இளவரசருக்கு உடம்பு குணமாகி விட்டது.
இல்லாவிட்டால், அவருக்கு மருந்து அரைத்துக் கொடுப்பதற்காகத்
தமக்கையார் இங்கு தங்கியிருப்பார்கள்!’’ என்று சொல்லிச் சிரித்தாள்
அம்மங்கை தேவி.

அருள்மொழியின் முகம் அப்போது நாணத்தால் கவிழ்ந்ததால்,
ரோகிணியின் முகத்தில் திடீரென்று ஏற்பட்ட மாற்றத்தை அவள்
கவனிக்கவில்லை. அதைக் கேள்வியுற்ற ரோகிணி ஒரு கணம்கூட ரதத்தின்
அருகில் தாமதிக்காமல் திரும்பி வந்தாள். “நம்மோடு ஒன்றாய் இருக்க முடியவில்லை. என்று ரோகிணிக்கு வருத்தம்’’ என்று தம் தமக்கையிடம் கூறினாள் அம்மங்கை ரதங்கள் நகர்ந்தன.

கொடும்பாளூர் மரங்கள் அப்போது பொன்னிறமான கொழுந்து இலைகள்
விட்டுப் புத்தாடை புனைந்து கொண்டிருந்தன. வீசிய காற்றில் இளவேனிற்
காலத்தின் புது மணம் கலந்திருந்தது. அரண்மனைத் தோட்டத்தில் கிளிகள்
கொஞ்சிக்கொண்டு சிறகடித்தன. எங்கு திரும்பினாலும் புத்தம் புதுப்
பூக்கொண்டை சுமந்த செடி கொடிகள்.

வருடத்தில் ஒரே ஒரு முறை, அதுவும் ஒரே ஒரு மாதந்தான்,
கொடும்பாளூரில் இயற்கைத் தேவி இத்தனை எழிலோடு கொலு வீற்றிருப்பாள்.
ரோகிணியை அந்த நகரத்தின் அழகு அவளது முதல் பார்வையிலேயே
மயக்கி விட்டது. ‘எப்போதுமே இந்த நகரம் இப்படித்தான் விளங்கும் போலும்!’
என்று எண்ணி மனம் பூரித்தாள் அவள். ‘கொடும்பாளூர் இளவரசர் கொடுத்து
வைத்தவர் தாம்!’

இரண்டாவது நாள் மாலை மகிந்தரும் ரோகிணியும் இளங்கோவுடன்
நகரைச் சுற்றிப் பார்ப்பதற்காகக் கிளம்பினார்கள். அலங்கரிக்கப் பெற்ற
அரண்மனை ரதம் வேகமாகப் பல இடங்களுக்குச் சென்று கொண்டிருந்தது.
நகரத்தின் வடக்கு எல்லைக்கு அப்பாலிருந்த முருகன் திருத்தலமான
திருமயில் குன்றம் பச்சைப் பசேல் என்று தோற்றமளித்தது.

“அதோ அந்தக் குன்றைப் பார்த்தாயா ரோகிணி?’’ என்று
ரதத்திலிருந்துவாறே சுட்டிக்காட்டினான் இளங்கோ.

பச்சை மரங்களால் சூழப்பட்டிருந்த குன்றின் இடையிடையே
நவரத்தினக் கற்களைப் போன்ற பல நிற மலர்கள் தெரிந்தன. ஆனால் அந்த
மலர்கள் ஒரே இடத்தில் இருப்பவைபோல் தோன்றவில்லை. இங்குமங்கும்
அடிக்கடி பறந்து சென்று வெவ்வேறு இடங்களை அழகு செய்தன.

“விந்தையாயிருக்கிறதே! பறக்கும் மலர்க்கூட்டம்கூட உங்கள் நாட்டில்
இருக்கிறதா?’’

விழுந்து விழுந்து சிரித்தான் இளங்கோ. மகிந்தர் தமது விழிகளை
இடுக்கிக் கொண்டு கூர்ந்து நோக்கினார். அதற்குள் ரதமும் திருமயில்
குன்றத்தை நெருங்கி விட்டது.

“தெரிகிறது, தெரிகிறது!’’ என்று குதித்தாள் ரோகிணி. “அவ்வளவும்
தோகை மயில்கள்! இளவரசே, இத்தனை மயில்களையும் நீங்கள் எங்கிருந்து
இங்கு கொண்டு வந்தீர்கள்? எப்படிக் கொண்டு வந்து சேர்த்தீர்கள்?’’

“நாங்கள் கொண்டுவரவில்லை; அவைகளாக வந்திருக்கின்றன’’ என்றான்
இளங்கோ. “மலையின் உச்சியில் இருக்கும் குமரனின் திருத்தலத்தைப் பார்.
குமரன் இருக்குமிடம் தேடி மயில்கள் பறந்து வந்திருக்கின்றன. இதைத் தங்கள்
இருப்பிடமாகவும் கொண்டு விட்டன.’’

வண்ணத் தோகை விரித்தாடிய ஆண் மயில்களைப் போலவே
ரோகணத்துப் பெண் மயிலின் மனத்தோகையும் விரியத் தொடங்கியது.

“இளவரசே! ரதத்தை நிறுத்தச் சொல்லுங்கள். அப்பா, இன்றைய
பொழுதை இந்தக் குன்றின் கீழ் கழித்து விட்டுப் போகலாம் அப்பா!’’

ரதத்திலிருந்து இளங்கோ கீழே குதித்தான். ரோகிணியும் உற்சாகத்தோடு
இறங்கி வந்தாள். மகிந்தர் மாத்திரம் இருப்பிடத்தை விட்டு அசையவில்லை.

“நீங்கள் குன்றைச் சுற்றிப் பாருங்கள். அதற்குள் நான் கிழக்கே தெரியும்
சாலையில் சிறிது தூரம் போய் விட்டுத் திரும்பி வந்து விடுகிறேன்.’’

மகிந்தருக்கு நகரத்தின் எல்லைகளைக் கண்டுகொள்ள வேண்டியிருந்தது.
கிழக்கு எல்லையை அவர் விட்டுவிட விரும்பவில்லை. மற்றவர்களுடன்
இருந்து பார்ப்பதைவிடத் தனியாகச் சென்றால் நன்றாகவும் பார்க்கமுடியும்.
அதுதான் தக்க சமயமென்று நினைத்தார் அவர்.

சாரதியிடம் அவரைப் பத்திரமாக அழைத்துச் செல்லும்படி
உத்தரவிட்டான் இளங்கோ.

“மெதுவாகச் சென்று வாருங்கள். அப்பா!’’ என்று குதூகலமான குரலில்
கூறினாள் ரோகிணி. மறுகணம் அவள் தோகை மயிலாகவே மாறி விட்டாள்.

குன்றின் மேல் அவள் நடந்த நடை இளங்கோவுக்கு அப்படித்தான்
தோன்றியது. நொடிக்கொருமுறை அவள் அவனைத் திரும்பிப் பார்த்த
பார்வை அவனுக்குப் புள்ளிமானை நினைவூட்டியது. மயில்களும் அவர்களைக்
கண்டு மருளவில்லை. மாறாகச் சில மயில்கள் அவர்களை வேடிக்கை
பார்த்தன; சில தோகை விரித்தாடின; சில நடை பழகிக் காட்டின.

தாழ்ந்த மரக்கிளையின் மீது சாய்ந்து கொண்டு உட்கார்ந்தான்
இளங்கோ. அவனது காலடியில் கிடந்த ஒரு பாறையில் ரோகிணி அமர்ந்தாள்.
வெகுநேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 ‘தேவ  கன்னிகைகளுக்குக் கண் இமைக்கும் பழக்கமில்லையாம். ரோகிணியும் தேவ கன்னிகையாக மாறிவிட்டாள் போலும்!’

இளங்கோவுக்குச் சிரிப்பு வந்தது. “என்ன ரோகிணி! என்னிடம் நீ
இன்றைக்கு என்ன புதுமையைக் கண்டிருக்கிறாய்?’’

“உங்களையே உற்றுப்பார்க்கும் மயில்களிடம் கேளுங்கள்!’’ என்றாள்
ரோகிணி.

“அருகில் நிற்கும் மயில்களெல்லாம் ஆண் மயில்கள்; அவை எனக்காக
இங்கே நிற்கவில்லை!’’

ரோகிணி முகம் சிறிது சிறிதாகச் சிவந்து தாமரை நிறம் அடைந்தது.
பிறகு அவள் தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். இது போன்ற ஒரு
தோற்றத்தில் அவன் ரோகிணியை இதற்கு முன்பு கண்டதே இல்லை.

“ரோகிணி!’’

தலை நிமிர்ந்து புன்னகை பூத்தாள் ரோகிணி. “உங்களை இப்படியே
சித்திரத்தில் எழுதிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு. திரைச்
சீலையையும் தூரிகையையும் தஞ்சையில் வைத்துவிட்டு வந்திருக்கிறேன்.
அதற்காகத்தான் இப்படி...’’ சொற்களை அவள் முடிக்கவில்லை.

“மனதுக்குள்ளே சித்திரம் வரைந்து கொள்ளுகிறாய் போலிருக்கிறது’’
என்றான் இளங்கோ. அத்துடன் அவன் நிறுத்தவில்லை. “எவனை நீ
விரும்பவில்லையோ அவனுடைய சித்திரம் எப்படி உன் மனத்தில் பதியும்?’’

“இளவரசே!’’ என்று கூறிக்கொண்டு சரேலென எழுந்தான் ரோகிணி.
அவன் அருகில் நெருங்கிச் சென்றாள். மரக்கிளையில் அமர்ந்திருந்த
மயில்கள் இரண்டு படபடவென ஓசையெழுப்பிக் கொண்டு வேறு மரத்துக்குப்
பறந்து சென்றன. “என்னை இனியும் நீங்கள் வாட்டி வதைக்க வேண்டாம்
இளவரசே! என்னைப் புரிந்து கொள்ளாதவர் போல் நடிக்க வேண்டாம்’’
என்றாள்.

அவன் அருகில் நெருங்கியிருந்த ரோகிணியின் கண்கள் அவனுக்குச்
சரியாகத் தெரியவில்லை. கண்ணீரை மட்டுமே கண்டான் அவன்.

அந்தப் பசிய நிறக்குன்று அப்படியே பூமியிலிருந்து இடம் பெயர்ந்து
வானத்தை நோக்கப் பறந்தது. அவர்கள் இருவரையும் சுமந்துகொண்டு அது
விநாடிப் பொழுதில் ஈரேழு உலகங்களையும் சுற்றி வந்தது.

அப்போது அருகில் சலசலவென்று ஏதோ சதங்கை ஒலி கேட்கவே
ரோகிணி திடுக்கிட்டுத் திரும்பினாள். அவள் வாயிலிருந்து எந்தச் சத்தமும்
வெளிவரவில்லை. அவள் தலை சுழன்றது. அவளை மெல்லத் தாங்கிப்
பிடித்தபடியே இளங்கோ சத்தம் வந்த திசையே நோக்கினான்.

தொடரும்




Comments