தெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் - பாகம் 18- நம்பிக்கை தரும் மனிதர்கள் 04 .


பொதுவாகவே ஆட்டிசத்தின் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் குழந்தையின் பெற்றோரின் நிலைதான் மிகவும் சங்கடமானது. எப்போது தங்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டே தங்கள் உடல்நலத்தினையும் கெடுத்துக்கொள்கின்றனர்.

ஆனால், அப்படி சோர்ந்துபோய் இருந்து விடத்தேவையில்லை என்பதற்காக.. ஆட்டிசத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டாலும், உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பிய சிலரைப் பற்றி சுருக்கமாக அடுத்தடுத்து, பார்க்கப்போகிறோம்.

ஆட்டிசத்தினால் பாதிப்புக்குள்ளான இவர்களால் சாதித்திருக்க முடியும் போது, நம் குழந்தைகளாலும் ஏதாவது சாதிக்கமுடியும் என்று பெற்றோர் நம்பிக்கைகொள்ளவேண்டியது அவசியமானது.


மைக்கேல் ஃபிட்ஸ்ஜெரால்ட் (Michael Fitzgerald) எனும் மனோதத்துவ நிபுணர் பல்வேறு பிரபலங்களின் வாழ்கைப்பதிவுகளை ஆராய்ந்து 30ற்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஆட்டிசம் இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று நிறுவுகிறார். டப்ளின், டிரினிடி கல்லூரியின் பேராசிரியரான இவர் ஆட்டிசம் குறித்த பல்வேறு கட்டுரைகளும், நூல்களும் எழுதி வருகிறார். அவற்றில்டார்வின், ஹிட்லர், தாமஸ் ஜெஃபர்சன், மைக்கல் ஏஞ்சலோ, சீனிவாச ராமானுஜன், ஜார்ஜ் ஆர்வெல் போன்ற பலரது வாழ்கைப் பதிவுகளைக் கொண்டு அவர்களுக்கு ஆட்டிசமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று நிறுவுகிறார்.


சிறுவயதில் தனிமை விரும்பியாகவும், அதிகம் பேசாதவராகவுமே இருந்த ஐன்ஸ்டீன் மிகவும் தாமதமாகவே பேச ஆரம்பித்தார். ஏழு வயது வரையிலும் கூட சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது போன்ற ஆட்டிசக் குணாதிசயங்கள் இருந்திருப்பதும் தெரிகிறது.

தனது தனிமை விருப்பத்தை ஐன்ஸ்டீனே சொல்வதுமுண்டு. ஞாபகமறதிக் காரரான அவரது உரைகளும் சில சமயம் புரியும்படி இருந்ததில்லை. மிகக் குறைவான நண்பர்கள், அறிவியலின் மீதான் அதீத ஆர்வம், கட்டுப்படுத்த முடியாத கோப வெளிப்பாடுகள் என ஐன்ஸ்டீனை ஏ.எஸ்.டி வட்டாரத்தில் சேர்க்க நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஐன்ஸ்டீனே ஒரு முறை நான் வார்த்தைகளாக அல்ல காட்சிரூபமாகவே யோசிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இதுவும் ஒரு முக்கியமான ஆட்டிச குணாதிசயமாகும். எனவே Fitzgerald ஐன்ஸ்டீன் அஸ்பெர்ஜர் வகைக் குறைபாடு உடையவராக இருந்திருக்கலாம் என்று நிறுவுகிறார்.

இவரும் ஒரு தனிமை விரும்பி, மிகக் குறைவாகப் பேசக்கூடியவர். தன் வேலையில் பசி மறந்து மூழ்கிப் போவது, ஞாபக மறதி என ஆட்டிசக் குணாதிசயங்கள் நியூட்டனின் வாழ்விலும் காணக்கிடைக்கின்றன. இவரைப் பற்றி சொல்லும் இன்னொரு சம்பவம் மிகவும் முக்கியமானது, பாடம் எடுக்க என்று அறைக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் அங்கே எவருமில்லை. அறை காலியாக இருக்கிறது. ஆனாலும் விடாப்பிடியாக யாருமே பங்குபெறாத நிலையிலும் கூட தனது உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். அதுதான் ஆள் இல்லையே அப்புறம் யாருக்காக உரை நிகழ்த்தினீர்கள் என்று கேட்டபோது, நான் உரை நிகழ்த்தவேண்டும் என்ற முடிவோடு வந்துவிட்டேன். கேட்பதற்கு நபர்கள் இல்லாவிட்டாலும் கூட, என் திருப்திக்காக, உரை நிகழ்த்தினேன் என்று சொன்னாராம். தனது 50வது வயதில் நரம்புத் தளர்ச்சியாலும், அது சார்ந்த மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டார். இவற்றையெல்லாம் வைத்து நியூட்டனும் ஆட்டிச வரையரைக்கு உட்பட்டவராயிருந்திருக்க வேண்டுமென்று Fitzgerald கூறுகிறார்.

ஆனால் இது போன்ற ஆராய்ச்சிகள் – அதாவது ஒரு நபரை நேரடியாக பரிசோதிக்காமல் அவரது வாழ்கை விபரங்களைக் கொண்டு அவருக்கு ஆட்டிசம் இருந்திருக்கலாம் என்று கணிப்பது பெரிய அளவில் ஒப்புக் கொள்ளப்படவில்லை என்றாலும் Fitzgerald கூற்றை ஒரேயடியாக நிராகரித்துவிடவும் முடியாது என்கின்றனர்.

தொடர்புடைய சுட்டிகள்:-

Michael Fitzgerald எழுதிய நூலின் சில பக்கங்கள் இங்கேயும், இங்கேயும்உள்ளது.

http://en.wikipedia.org/wiki/Isaac_Newton

http://en.wikipedia.org/wiki/Historical_figures_sometimes_considered_autistic

http://en.wikipedia.org/wiki/Albert_Einstein

0000000000000000000000000

மேலும் ஆட்டிசம் தொடர்பான கட்டுரைகளுக்கு:-


உதவிய நூற்களும், இணையதளங்களும்:- 
http://en.wikipedia.org/wiki/Autism 
http://www.sharonscreativecorner.com/ 
Autism- by parvathy viswanath 
ADHD- by parvathi wiswanath 
Nobody Nowhere: the Extraordinary Autobiography of an Autistic -by Donna Williams 
thinking in pictures expanded edition my life with autism -by temple grandin 
Look Me in the Eye: My Life with Asperger’s -by John Elder Robison 
http://kurangu.blogspot.in/ 

தொடரும் 

நன்றி : http://blog.balabharathi.net/?page_id=25

Comments