வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 20. மயிலாடும் பாறையில்

 பாகம் 2   ,  20. மயிலாடும் பாறையில் 


இளங்கோவின் கைத்தாங்கலில் அவனுடைய அன்புப் பிடியில்
அகப்பட்ட பின்னரும்கூட ரோகிணியின் பயம் தெளியவில்லை. சிறு காற்றில்
குலுங்கும் பசலைக்கொடியென அவள் வெடவெடவென நடுங்கினாள். மெல்ல
அவளைப் பற்றிய வண்ணம் மரத்தின் இலைகளை ஊடுருவி நோக்கினான். சலங்கைச் சத்தம் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டிருந்தது.
திரிசூலத்தில் இணைக்கப்பெற்ற சின்னஞ்சிறு கிண்கிணி நாதம் அது. அதைத்
தாங்கிக்கொண்டு சென்ற காளமுகனின் முதுகுப்புறம் இளங்கோவுக்குத்
தெரிந்தது. வரிப்புலியின் தோல் போர்த்த அவன் வரிப்புலியே போல்
பாறைக்குப் பாறைத் தாவிச் சென்று கொண்டிருந்தான்.

முதலில் பயத்துடன் திரும்பிய இளங்கோ பிறகு பரிகாசத்துடன்
கலகலவென்று நகைத்தான். “ரோகிணி! புலி வந்துவிட்டதென்று பார்த்தாயா?
புலித்தோல் போர்த்த பசுவுக்கொப்பானவர்கள் இந்தக் கோனாட்டுக்
காளமுகர்கள். இவர்களை நீ இதற்கு முன்பு பார்த்ததேயில்லையா? மதுரைப்
புதுமாளிகையில் முடிசூட்டு விழாவுக்குக்கூடச் சிலர் வந்திருந்தார்களே!’’

ரோகிணியின் பயம் இன்னும் தீரவில்லை என்றாலும் மெதுவாக அவன்
பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அருகில் அமர்ந்தாள். மறுமொழி
கூறுவதற்கான தெம்பு இன்னும் அவளிடம் ஏற்படவில்லை.

“பாவம், நீ என்ன செய்வாய்? ரோகணத்திலிருந்து வந்தது முதல் நீ
தஞ்சை அரண்மனையைவிட்டு வெளியில் வந்ததில்லை. இந்த நாட்டு
மனிதர்கள், சமயங்கள் விசித்திரமான பழக்க வழக்கங்கள் இவைகளைப் பற்றி
உனக்கென்ன தெரியும்?’’

“வேண்டாம்! இளவரசே! எனக்கு இந்தக் காளமுகர்களைப் பற்றித்
தெரியவேண்டாம்’’ என்று கெஞ்சுவது போல் கூறினாள் ரோகிணி.

“பிறகு நீ வீணாகப் பயப்படுகிறாயே!’’

“நீங்கள் அருகில் இருக்கும்போது எனக்கென்ன பயம்? இப்போதைக்கு
அந்த விஷயத்தை விட்டு விட்டு வேறு எதையாவது பேசுங்கள்.’’

“முடியவே முடியாது! முதலில் அதைப் பேசி உன் பயத்தைப்
போக்கிவிட்டுத்தான் மறு வேலை’’ என்று சிரித்தான் இளங்கோ.
சிரித்துக்கொண்டே அவள் அருகில் மிகவும் நெருங்கி வந்து உட்கார்ந்து
கொண்டான்.

அவன் சிரித்தபோது அவனது பல் வரிசை மின்னலெனப் பளிச்சிட்டது.
கனிவுக்களை ததும்பும் அவன் முக வசீகரத்தையும், அவனது பரந்த
மார்பையும், உருண்டு திரண்ட அவன் திண்தோள்களையும் அப்போது
ரோகிணியால் நன்றாகப் பார்க்க முடிந்தது. மெல்லிய நீலத் திரை போர்த்த
செக்கர் வானம் போன்ற அவன் மேனியழகு அவளுக்குப் புதுமையாகத்
தோன்றியது.

முதன் முதலாக அப்போதுதான் அவனைப் பார்ப்பவள் போல்
பார்த்துவிட்டு, “வேண்டாம், இளவரசே! என் பயமெல்லாம் அறவே
தீர்ந்துவிட்டது. இந்த இன்பகரமான வேளையில் காளமுகர்களைப் பற்றிய
பேச்சு வேண்டவே வேண்டாம்’’ என்று அவனைத் தடுத்தாள்.

“அவர்கள் எங்களுக்கு மிகவும் வேண்டியவர்கள். அவர்களால்
உனக்கொன்றும் துன்பம் வராது. இதை நீ தெரிந்து கொண்டால் போதும்.’’

“உங்கள் அன்பிருக்கும்போது எனக்கு அச்சமே கிடையாது’’ என்று
கூறினாள் ரோகிணி.

ஆனால் அவளுடைய அச்சம் அப்போதைக்கு மறைந்து கொண்டதே
தவிர அழிந்துவிடவில்லை. யாராவது முன் பின் பார்த்தறியாத காளமுகனை
அவள் கண்டிருந்தால் இப்படி நடுங்கியிருக்க மாட்டாள். மதுரைப்
புதுமாளிகையில் கந்துலனிடம் காதோடு காதாக இரகசியம் பேசியவன் அவன்.
ஒன்று, அவனே அமைச்சர் கீர்த்தியாக இருக்க வேண்டும். அல்லது
அமைச்சரின் அந்தரங்க ஒற்றனாக இருக்கவேண்டும். இதை எப்படி
இளங்கோவிடம் கூறுவது? கூறினால் தன் தந்தைக்கே ஆபத்து வராதென்று
என்ன நிச்சயம்?’

இந்தச் சமயத்தில் தோகை மயிலொன்று எதேச்சையாகப் பறந்து
அவர்களருகில் நின்றது. தனது மேக வண்ணக்கழுத்தை நீட்டி இருவரையும்
மாறி மாறிப் பார்த்தது. பிறகு அடுத்தாற்போல் நின்று கொண்டிருந்த
பேடையிடம் தாவிச் சென்றது. அதன் செய்கையைப் பார்த்த ரோகிணி,
குறிப்புடன் அவனை நோக்கிவிட்டுத் தன் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.

“ரோகிணி!’’

நீண்ட பெருமூச்செறிந்தாள் ரோகிணி. அதைத் தொடர்ந்து,
“மெய்யாகவே உங்களுக்கு என் மீது அன்பிருக்கிறதா, இளவரசே!’’ என்று
கேட்டாள்.

ஒருகணம் என்ன மறுமொழி சொல்வதென்றே இளங்கோவுக்குத்
தோன்றவில்லை. முதன் முறையாக அவன் ரோகணத்துக்குத் தூது
சென்றபோது அவள் வேல்விழிகளைக் கண்டது முதல், அன்று வரை நடந்த
நிகழ்ச்சிகளை வரிசையாக நினைத்துப் பார்த்தான். எல்லாவற்றையுமே
மளமளவென்று கூறி அவளிடம் தன் உள்ளத்தைத் திறந்து காட்டிவிட
வேண்டுமென்ற துடிப்பு வந்து விட்டது அவனுக்கு.

“ரோகிணி, நான் தூதுவனாக வந்தபோது கப்பகல்லகம் அரண்மனை
மேன்மாடத்தில் நீ நின்று கொண்டிருந்தாயே, நினைவிருக்கிறதா? அப்போது
உன் தம்பி காசிபன் என்மீது வாளெறிந்தானே, அந்தக் குறி தவறிவிட்டது.
ஆனால் நீ எறிந்த வேல்விழிகளின் குறி தவறவில்லை. அப்போதே நான்
அதை இன்பங்கலந்த வேதனையோடு சுமந்து கொண்டு திரும்பினேன்.

“மீண்டும் போர் முடிந்த அன்றைக்கு நீ என் கரத்தைப் பற்றி,
என்னிடமிருந்து உன் தம்பியைத் தப்புவித்தாயல்லவா? அப்போது உன்
ஸ்பரிசத்தால் பெற்ற இன்பத்தை இப்போது நினைத்தாலும் என் மெய்
சிலிர்க்கிறது. அடுத்தாற்போல், நீ தப்பியோடத் துணிந்து விட்டாய்! அந்த
அமாவாசை இரவில் நீ வானத்தை நோக்கி உன் முகத்தை உயர்த்தியபேது,
உன்னுடைய விழிகள் எந்தவிதமாகச் சுடர்விட்டது, தெரியுமா? அதை நீ
என்னிடம் இப்போது கேள், அப்படியே சொல்கிறேன்.

“ரோகிணி! நீ என் உயிரை எமன் வாயிலிருந்து பறித்துக்கொண்டு
வந்தவள். என்றுமே நான் என் உயிரைத் துரும்புக்குச் சமானமாக மதிப்பேன்.
ஆனால் அன்றைக்கு மட்டும் எனக்கு என் உயிர்மீது எவ்வளவு ஆசை
தெரியுமா? எனது நாட்டின் மானம் காக்கும் மணிமுடியை எடுத்து
வருவதற்காக, நீ எனக்குத் திருப்பியளித்த உயிர் உன்னுடையது ரோகிணி!
அந்த உயிருக்கு உன்னிடம் அன்பில்லை என்கிறாயா?’’

இதைக் கேட்டு ரோகிணியின் மனம் கூவும் குயிலாக மாறியது. ஆடும்
மயிலாகத் தோகை விரித்தது. புள்ளிமானாகத் துள்ளிக் குதித்து விளையாடியது.
வீராதி வீரனென்று பெயர் பெற்றவன். போர்க்களத்தில் சூறாவளியெனச்
சுழன்று சுழன்று வாள் வீசுபவன்-மாபெரும் சோழ சாம்ராஜ்யத்து மாமன்னரது
பேரன்புக்குரியவன் - அவளிடம் குழந்தையைப் போல் உட்கார்ந்து
உரையாடிக் கொண்டிருந்தான்.

பெறுவதற்குரிய பேற்றைப் பெற்றுவிட்ட பெருமையில் சில கணங்கள்
மெய் மறந்திருந்தாள் ரோகிணி. என்றாலும் திடீரென்று வீரமல்லன் ஒருநாள்
அவள் செவியில் போட்டு விட்டுப் போன செய்தி இப்போது நினைவுக்கு
வந்து அவளைத் துன்புறுத்தியது. அந்தச் செய்தியை அவள் நம்பக் கூடிய
வகையில் காரியங்களும் நடைபெறாமல் இல்லை.

இளவரசி அருள்மொழியைப் பற்றி அவள் நேரிடையாக அவனிடம்
கேட்க நினைத்தாள். பிறகு நேரிடையாகக் கேட்காமல் சுற்றி
வளைத்துக்கொண்டு பேசத் தொடங்கினாள்.

“இளவரசே! நான் மிகவும் பாக்கியம் செய்தவள். ஆனால் இந்தப்
பாக்கியம் என்றும் நிலைத்திருக்கக் கூடியதுதானா என்ற அச்சமும்
மற்றொருபுறம் எழுகிறது’’ என்று தயங்கிக்கொண்டே கூறினாள் ரோகிணி!

“இன்னும் உனக்குச் சந்தேகமா?’’ என்று சிரித்தான் இளங்கோ.

“நீங்கள் உங்களுடைய அன்பை என்னிடம் வைத்திருப்பது போலவே
வேறெங்கும் வைத்திருக்கக் கூடுமல்லவா?’’

“ஏன் கூடாது?’’ என்று இளங்கோ திருப்பிக் கேட்கவே ரோகிணி
இடிந்துபோய் நிலைகுலைந்து விட்டாள்.

“போதும் இளவரசே, போதும்!’’ என்று எழுந்திருக்கப் போனாள்.

அவன் அவளை விடவில்லை. பற்றி இழுத்து இருத்திவிட்டுக்
கூறலானான்; “நான் ஆண்மகன். இந்தக் கோனாட்டின் மண்ணில்
முளைத்தவன். சங்கத் தமிழ் பிறந்த காலத்திலிருந்து எங்கள் வேளிர்
பரம்பரையினர் வீர்களாகவும் வள்ளல் களாகவும் விளங்கி வந்திருக்கிறார்கள். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிவள்ளலைப் பற்றியும் மயிலுக்குப் பொற்சால்வை தந்த பேகனைப் பற்றியும் நீ கேள்விப்பட்டதில்லையா ரோகிணி! அவர்களுடைய வழியில் வந்தவன் நான்.’’

தான் ஒன்றைக் கேட்க, அவன் ஒன்றைச் சொல்லிக் கொண்டு போவது
கண்டு பொறுமை இழந்தாள் ரோகிணி. அதற்குள் அவனே “ரோகிணி! நான்
இந்தக் கொடும்பாளூர் மண்ணின்மீது என் உயிரையே வைத்திருக்கிறேன்.
என்னுடைய அன்பு என்றென்றும் இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்குச்
சொந்தமானது’’ என்றான்.

இதைக்கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை ரோகிணிக்கு.
“நான் உங்களுடைய நாட்டுப் பற்றைக் கேட்கவில்லை, இளவரசே! வீட்டுப்
பற்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இளவரசி அருள்மொழி
நங்கையார் தங்களுக்கு நெருங்கிய உறவினராயிற்றே, அவரிடம் தாங்கள்
கொண்டுள்ள அன்பு...’’

“அது பவித்திரமானது, தன்னலமற்றது’’ என்று அவள் தன் பேச்சை
முடிக்கும் முன்பே குறுக்கிட்டுக் கூறினான் இளங்கோ.

“அப்படியென்றால்...

“அவர்களுக்கும் எனக்கும் உறவு முறை இருப்பதால் நீ அப்படி
நினைத்து விட்டாய் போலும்; ஆனால் ஒரு போதும் நான் உன்னை
நினைப்பதுபோல் அவர்களை நினைக்கவில்லை. அவர்கள் வெகு தொலைவில்
இருப்பவர்கள். என் பக்திக்கு உரியவர்கள். இதுவரையில் நான் அவர்களை
என்னுடையவர்களாகச் செய்துகொள்ள வேண்டுமென்று எண்ணியதே இல்லை.
உன்னைத்தான்-உன்னை மட்டும்தான், என் இன்பத்துக்குரியவளாக எண்ணி
ஏங்குகிறேன் ரோகிணி! சோழ சாம்ராஜ்யத்தில் கொடும்பாளூர்க்கோனாடு
மிகச் சிறிய நாடு. இதைவிடப் பெரிய நாடுகளும் அதற்குள்
அடங்கியிருக்கின்றன. வடக்கு எல்லையில் உள்ள வேங்கி நாட்டு இளவரசன்
நரேந்திரனும் என்னைப் போன்ற உறவுமுறைக்காரர்தான்!

“வேங்கி இளவரசர் நரேந்திரருக்கு அருள்மொழியாரைக் கொடுக்கக்
கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’’

“இராஜேந்திரரின் கருத்து அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
மிகப்பெரிய ராஜதந்திரி அவர். வடக்கு எல்லையில் மேலைச் சளுக்கர்களுக்கு
எதிராகப் பலம் திரட்ட வேண்டுமென்றால் வேங்கி நாட்டாரின் உறவை
உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா?’’

ஆனந்தமிகுதியால் ரோகிணியின் வேல்விழிக் கூர் இமைகள்
படபடவென்று அடித்துக் கொண்டன. அவள் உள்ளத்தின் கதவுகளனைத்தும்
திறந்துகொண்டு அதற்குள்ளிருந்த நறுமணத்தை வெளியே அனுப்பின. அவள்
மெய்மறந்தாள்.

“இன்றைக்கு இவ்வளவு போதும், இளவரசே! நான் என்றுமே இவ்வளவு
இன்பமாக இருந்ததில்லை. நான் உங்களை என் முழு மனத்தோடு
விரும்புகிறேன். ஆம். நான் உங்களை விரும்புகிறேன், விரும்புகிறேன்,
வி...ரு...ம்...பு...’’

கடைசிமுறை அவள் சொல்லி முடிப்பதற்குள், “ரோகிணி!’’ என்று
அன்புடன் அழைத்துக்கொண்டே அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தார் மகிந்தர்.
அவர் குரலைக் கேட்டவுடன் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு,
அவனிடமிருந்து விலகிக்கொண்டு, சரேலென்று எழுந்து நின்றாள் ரோகிணி.

மகிந்தர் இருவரையும் சில விநாடிகள் கூர்ந்து நோக்கினார். பின்னர்
இளங்கோவிடம், “இன்றைக்கு மூவர் கோயிலில் ஏதோ விழாவென்று
கூறினார்களே! நாங்களும் அதைப் பார்த்து மகிழ முடியுமா?’’ என்று
கேட்டார்.

“ஆமாம், பதியிலார் திருக்கூத்து நடக்கிறது. நீங்களும் அவசியம்
பார்த்து மகிழவேண்டிய காட்சிதான்’’ என்றான் இளங்கோ.

“பதியிலாரா?’’ ரோகிணி கேட்டாள்.

“ஆமாம், திருமணம் புரிந்துகொள்ளாமல் இறைவனின் கலைப்பணிக்கே
தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெண்களை நாங்கள் பதியிலார் என்றும்
தனியிலார் என்றும் அழைப்போம்.’’

“வாழ்நாள் முழுதும்அவர்களுக்குத் திருமணமே கிடையாதா?’’ 

“ஏன் கிடையாது? வந்து அவர்கள் அன்புக்குரியவனைப் பார்!’’

மயிலாடும் பாறையில் மாலை நேரத்தின் மயக்கும் இருள் புகுந்தது.

தொடரும்


Comments