வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 21. மாதாடும் கோயிலில் )

பாகம் 2   , 21. மாதாடும் கோயிலில்


கடைந்தெடுத்த கருங்கற் சிமிழ்களில் வேலைப்பாட்டு நுணுக்கங்களைப்
பொதித்து வைத்துப் புதுப் பொலிவை மிளிரச் செய்திருந்தனர் தமிழ்நாட்டு
அருங்கலைச் சிற்பியர். நீண்டு அதன்ற சுற்றுத் திருமதிலுக்குள்ளே பதினைந்து
பரிவாரலாயங்கள் புடைசூழக் கம்பீரமாக விண்ணை நோக்கி எழும்பியிருந்தன
மூன்று சுற்றளிகள்.

மூன்றும் சேர்ந்த ஒன்றுதான் மூவர் கோயில். மூன்றிலுமே ‘உள்ளவன்
ஒருவன் தான், தெய்வம் ஒன்று தான்!’ என்று ஆட்காட்டி விரலால் விண்ணை
நோக்கிச் சுட்டிக் காட்டுவது போல் சுட்டிக் காட்டிக்கொண்டிருந்தன சிவலிங்கச்
சின்னங்கள்.

மலர்களின் நறுமணம் அகிற்புகை மணத்தோடு நன்றாகக் குழைந்தது.
நூற்றுக்கணக்கான விளக்குகள் வானத்து மீனினத்தைப் பூவுலகுக்குக் கொண்டு
வந்தது போன்று தண்ணொளி பரப்பிக் கொண்டிருந்தன.

ஆலயத்து மணியோசை அதிர்முரசம், மேளவார்த்தியம் இவை
அனைத்தும் ஒன்று சேர்ந்து கொடும்பாளூர் மக்களைக் கோயிலுக்குள்
கொண்டுவந்து குவித்த வண்ணம் இருந்தன.

கோபுர வாயிலை அடுத்த நந்தி மண்டபத்தை ஒட்டியிருந்த மகா
மண்டபம் விசாலமானது. கொடும்பாளூர் அரச குடும்பத்தாரும் விருந்தினரும்
பெருந்தனத்தாரும் அங்கு கூடியிருந்தனர்.

கெட்டி மத்தளம், வீணை, மொரலியம், வாங்கியம், பாடவியம் முதலிய
இசைக் கருவிகளுடன் பக்க வாத்தியக்காரர்கள் ஆயத்தமாகி விட்டனர்.
தாளத்தின் இசையோடு நடன மங்கையான பதியிலாளின் காற்சிலம்பொலியும் கூடிக் கொஞ்சியது.

இரண்டு கன்னியர்கள் தங்கள் இரு குரலையும் ஒன்றென உருக்கி
வார்த்து உயிர்த் துடிப்பு மிக்க திருவாசகத்தை உருகி வழிந்தோட விட்டனர்.

நினைப்பதற்கும் அரியவனை, நீரும், நெருப்பும், விண்ணும் மண்ணும்
ஆனவனை, காற்றெனக் கண்ணுக்குப் புலப்படாதவனை அவர்கள் காதலால்
கூவி அழைத்தார்கள்.

ஒப்பும் உவமையுமில்லாத அந்தத் தனிப் பெருந்தலைவனை அவர்கள்
கண்டதும் தழுதழுக்கப் பாடிக்கொண்டே தேடினார்கள். அவனோடு
கூடிக்கலந்து ஒன்றி உறவாடும் நாள் எந்நாளோ என்று ஏங்கித் தவித்தனர்.

திருவாசகம் மலர்ந்தது; மங்கையின் மலரடிகள் துள்ளின; அவர்களது
அங்கமெல்லாம் ஆனந்த வெள்ளம் பாய்ந்தது.

“நினையப் பிறருக் கரிய நெருப்பை
நீரைக் காலை நிலனை, விசும்பைத்
தனையொப் பாரையில்லாத் தனியை
நோக்கித் தழைத்து, தழுத்த கண்டம்
கனையக் கண்ணீரருவி பாயக்
கையுங் கூப்பிக் கடிமலரால்
புனையப் பெறுவதென்று கொல்லோ. . .’’

பாடும் பாவையரின் குரலுக்கு உயிர்ச்சித்திரப் பிரதிபலிப்பெனப்
பம்பரமாய்ச் சுழன்றாடி விளக்கிக் கொண்டிருந்தாள் ஆடும் பெண்மணி. அவள்
தன்னை ஒரு தனிப் பெண்ணாகவே நினைக்கவில்லை. நினைப்பதற்கரிய
தலைவனின் ஒப்புவமையற்ற தன்மையைக் கண்டு முதலில் வியந்தாள்;
மறுகணமே பெருமையுற்றாள். அவனையே கண்ணிமைக்காது நோக்கினாள்.
கண்டம் தழுதழுக்கக் கண்ணீர் அருவி பொங்கியது அவளுக்கு.

கரங்களைக் கூப்பிய வண்ணம் தலைவனின் மலர்த்தாள் பற்றிக்
கதறுகிறவள் போல் அப்படியே அவள் தரையில் மயங்கி வீழ்ந்தாள்.

மகாமண்டபத்துத் தூணருகில் அமர்ந்திருந்த இளங்கோவின் பாதங்களை
இரண்டு பணி தோய்ந்த தாமரை மலர்கள் மெல்லப் பற்றின. பதறிக்கொண்டு
திரும்பினான் அவன்; அத்தனை பேர் இருந்த கூட்டத்தில் யாருக்குமே தெரியாமல் ரோகிணி அவன் பாதங்களைப் பற்றிக்கொண்டிருந்தாள். அவன் கண்களிலும் கண்ணீர்; அவன் பாத விரல்களிலும் கண்ணீர். ரோகிணியின் மேலாடை அப்போது முதுகுப் புறத்திலிருந்து காற்றினால் விம்மிப் பறந்து அவள் தலையைச் சுற்றிலும்
வட்டமிட்டது.

சற்று விலக்கிக்கொண்டு, “என்ன ரோகிணி!’’ என்றான் இளங்கோ.
அதுவரையில் அவனுடைய கவனம் ஆட்டத்தில் இருந்ததே தவிர அவளிடம்
இல்லை.

“பதியிலாருக்குப் பதி யார் என்று உங்களைக் கேட்டேனல்லவா!
இப்போது தெரிந்து கொண்டேன்’’ என்றாள் அவள்.

அவன் புன்னகை பூத்து முடிவதற்குள் அடுத்த பாடல் தொடங்கியது.
ஆடலும் ஆரம்பமாயிற்று.

“நெக்கு நெக்குள் உருகி
நின்றும் இருந்தும், கிடந்தும், எழுந்தும்,
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி
நானா விதத்தாற் கூத்து நவிற்றிச்
செக்கர் போலும் திருமேனி
திகழ நோக்கிச் சிலிர் சிலிர்த்துப்
புக்கு நிற்பதென்று கொல்லோ...’’

இந்தப் பாடலின் போது இளங்கோவும் ரோகிணியும் அடிக்கடி
ஒருவரையொருவர் திரும்பி நோக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய
உள்ளங்கள் நெக்கு நெக்காக உருகி ஒன்று கலந்தன. அவர்கள்
தங்களுக்குள்ளே அழுது கொண்டார்கள்; சிரித்துக் கொண்டார்கள்;
நானாவிதக் கூத்துக்களுக்குத் தங்கள் உள்ளங்களை உட்படுத்திக்
கொண்டார்கள்.

“செக்கர் போலும் திருமேனி
திகழ நோக்கிச் சிலிர் சிலித்து
திகழ நோக்கிச் சிலிர்த்து...’’

இந்த வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி, அந்த ஆடலணங்கு தோகை விரித்தாடும் மயிலென அரங்கினில் பல வகையான
பாவங்களை வெளிப்படுத்திக் கூத்து நவிற்றினாள்.

“ரோகிணி! என்னுடைய மயில் இப்போது என்னருகிலேயே இருந்து
தோகை விரித்து மெய்சிலிர்க்கிறது; காற்றில் துடிக்கும் உன் மேலாடையைப்
பார்; அதற்குக் கூட ஆனந்தம் தாங்கவில்லை போலும்’’ என்றான் இளங்கோ.

சில விநாடிகள் அவனைக் கனிந்து நோக்கிப் புன்னகை செய்துவிட்டு,
‘புக்கு நிற்பதென்று கொல்லோ?’ என்று கூறி ஏங்கும் பாவனையில்
விம்முகிறாளே, அதற்கு என்ன பொருள்?’’ என்று மெல்லக் கேட்டாள்
ரோகிணி.

“அதுவா? நீயும் நானும் நமது மனத்துக்குள்ளே இனி அடிக்கடி
எழுப்பப் போகும் கேள்விதான்!’’ என்றான் இளங்கோ இரகசியமாக.

“சொல்ல மாட்டீர்களா?’’

“இறைவா! இனி உன்னோடு ஒன்றாக உறைந்து இரண்டறக் கலந்து
வாழும் நாள் என்னாளோ!’ என்று பொருள்.’’

“இதற்கு நீங்கள் என்ன மறுமொழி கூறப்போகிறீர்கள்?’’

தூக்கிவாரிப் போட்டது இளங்கோவுக்கு. எடுத்த எடுப்பில் இவ்வளவு
தூரத்துக்கு அவள் குழைந்துவிடுவாள் என்று அவன் கனவிலும்
எதிர்பார்க்கவில்லை.

தங்களைச் சுற்றி இருப்பவர்களை அவளுக்குச் சுட்டிக் காட்டி
மௌனமாக இருக்கும்படி சமிக்ஞை செய்தான். ஆதித்த பிராட்டியார்
மகிந்தரின் மகிஷியாருக்கு ஆடலில் பொதிந்து கிடந்த பேரின்ப ரகசியங்களை
அப்போது விளக்கிக் கொண்டிருந்தார். மகிந்தரின் பார்வையும் எங்கெங்கோ
அலைந்து கொண்டிருந்தது. மற்றவர்களும் ரோகிணியையோ இளங்கோவையோ
கவனிக்கவில்லை. என்றாலும் இளங்கோ அச்சமுற்றான். ரோகணத்துக்குச்
சென்றதிலிருந்தே ரோகிணியைப் புரிந்துகொள்வது அவனுக்குப் புதிராக
இருந்தது. தன்னிடம் பற்றுதல் கொண்டவளாக அவள் அவனிடம் காட்டிக் கொள்ளவே சில சமயங்களில் ஏமாற்றுவதற்கும் முயற்சி
செய்தாள்.

‘உங்களை வெறுக்கிறேன்’ என்று ஆத்திரத்தோடு கூறிய ரோகிணிதானா
இவள்? ‘விரும்புகிறாயா?’ என்று கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டதற்கு மறுமொழி
கூறாமல் தட்டிக் கழித்துக் கொண்டு வந்த அதே பெண்மணிதானா இவள்?
திடீரென்று ரோகிணிக்கு என்ன நேர்ந்து விட்டது?

மயிலாடும் பாறையில் ஏதேனும் மந்திர சக்தி மறைந்திருக்கிறதா?
அல்லது கொடும்பாளூரில் வீசும் இளவேனிற் காலத்துக் குளிர் தென்றல்
இவளது செருக்கைக் குலைத்து விட்டதா? என்ன காரணம்?

கூத்தும் பூசனையும் முடிந்தபின்னர் அவர்கள் இருவரும் தங்களது
இதயம் மற்றொரு இதயத்தைச் சுமந்து கொண்டு கனமாக இருப்பதை
உணர்ந்தனர். ரோகிணிக்கு என்றுமில்லாதபடி அந்தக் கோயிலில் குடியிருந்த
தலைவன் மீது அன்பு பிறந்தது. ‘பெண்களை இப்படியெல்லாம்
ஆட்டிப்படைக்கும் வல்லமை பெற்றவனா அவன்!’ என்று தனக்குள் வியந்து
கொண்டாள்.

அவர்கள் எழுந்து வெளியே வந்தபோது மகிந்தர் அவர்களைப்
பின்பற்றி வரவில்லை. இளங்கோவும் ரோகிணியும் சுற்றுமுற்றும் பார்த்து
அவரைத் தேடினார்கள். சுற்றுப் பிரகாரத்தில் பரிவாலய ஆலயத்து நிழலில்
இரண்டு உருவங்கள் தனித்து நிற்பது தெரிந்தது.

இளங்கோ அவர்களை நெருங்கு முன்பே, அவனைப் போகவிடாமல்
தடுப்பவள் போல், தான் மட்டிலும் முன்னே ஓடி, “அப்பா உங்களை
இளவரசர் தேடுகிறார் அப்பா!’’ என்று கூவி அழைத்தாள் ரோகிணி.

அவருடன் பேசிக்கொண்டிருந்த மற்றொரு உருவம் கோவிலுக்குப்
பின்புறம் மறைந்ததைப் பொருட்படுத்தக் கூடிய மனோ நிலையில் அப்போது
இளங்கோ இருக்கவில்லை.

தொடரும்

Comments