வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 22. கருவில் உருவான கங்காபுரி )

பாகம் 2   , 22. கருவில் உருவான கங்காபுரி


கங்காபுரி என்றும், கங்கமாநகர் என்றும், கங்கை கொண்ட
சோழபுரமென்றும் பிற்காலத்தில் பெயர் பெற்று விளங்கவிருந்த பேரரசின்
தலைநகரம் அப்போது சோழபுரமாகச் சக்கரவர்த்திகளின் மனப்பரப்பில்
உதயமாகிவிட்டது. அடுத்தாற்போல், தமது மனத்தில் எழுந்த கற்பனைக்கு ஒரு
வடிவம் கொடுத்து அதைப் புறக் கண்களால் காண விரும்பினார் மாமன்னர்.

தஞ்சையில் இராஜராஜேச்வரத்தை உருவாக்கிய பெரிய சிற்பியார்
புகழுடம்பெய்திவிட்டதால், அவருடைய புதல்வர் திருச்சிற்றம்பலச்
சிற்பியாருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. காவலரின் கற்பனையை முதன்
முதலாகக் களிமண் படிவமாக வார்த்து முடித்துவிட்டார் சிற்பியார்.

தஞ்சை அரண்மனையின் வெளிக் கோட்டைக்குள்ளிருந்த சிற்பியாரின்
சிறு மாளிகைக்குள் இந்தப் பணி தொடங்கப் பெற்றது. நான்கு வாரங்களாகச்
சிற்பியார் ஊனை மறந்தார். உறக்கத்தைத் துறந்தார். ஓய்வின்றி உழைத்தார்.
அவருடைய உருவமே அடியோடு மாறிப் போய்விட்டது. ஆனால் நகரத்தின்
உருவத்தைக் கண் முன்னே கொண்டுவந்து விட்டார்.

நான்கு கல் சதுரப் பரப்புள்ள சோழபுரம், அவர் சித்திரக் கூடத்தின்
மேடை மீது நான்கு பாகச் சதுரத்துக்குள் அடங்கியிருந்தது.

மாமன்னரிடம் வந்து சிற்பியார் செய்தியைத் தெரிவித்தபோது, அவரால்
அதை நம்பவே முடியவில்லை. நான்கு மாதங்களாகுமென்று நினைத்த பணி
நான்கு வாரங்களில் முடிந்துவிட்டதா?

ஆனால் திருச்சிற்றம்பலத்தாரின் தோற்றத்தில் தெரிந்த மாறுதல்களைக்
கண்டவுடன் அவர் அதை நம்பத்தான் வேண்டியிருந்தது. உயரமாக, மெலிந்த
உடலோடு கூர்ந்த விழிகளின் குளிர் ஒளி பரப்பி நின்று கொண்டிருந்தார்
சிற்பியார். மார்பளவு புரண்டு தவழ்ந்த அவரது கருநிறத் தாடியில் நரையின்
சின்னங்கள் கலந்திருந்தன.

நெடிய கரங்களின் மெல்லிய விரல்களை அவர் இறுக
மூடிக்கொண்டிருந்தார். ஏதோ சபதத்தை மேற்கொண்டவர் போல் உடல் எலும்புக் கூடாகக் காட்சியளித்தாலும், கண்களில் கலைச்
சிந்தனைக்கே உரித்தான தனியான ஒளி ஒன்று சுடர்விட்டுக் கொண்டிருந்தது.

“படிவத்தை வந்து பார்வையிடலாம். சக்கரவர்த்திகளே பார்த்த பின்னர்
தங்களுக்கு ஏதாவது மாற்றங்கள் தோன்றினால் அவ்வாறே திருத்தி அமைத்து
விடுகிறேன்.’’

“அதற்குள் முடிந்துவிட்டதா?’’

“ஆம், சித்தமாகிவிட்டது’’ என்றார் திருச்சிற்றம்பலச் சிற்பியார்.

“சின்னஞ்சிறு படிவத்தை முடித்துக்கொடுப்பதற்காக நீங்கள்
மேற்கொண்டுள்ள உழைப்புச்சுமை உங்கள் உடல் நடுவில் நன்றாய்த்
தெரிகிறது. சுவரை வைத்துக் கொண்டுதான் சித்திரம் வரைய வேண்டும்.
சிற்பியாரே! இதற்கே இவ்வளவு தூரம் உங்களைப் புறக்கணித்துக் கொண்டால்,
பிறகு மலையளவு பெரும் பணிகள் காத்துக் கிடக்கின்றனவே? படிவத்தை
நகராக மாற்றுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். பல்லாயிரக்
கணக்கானவர்களை வைத்துக்கொண்டு நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும்.
அதையெல்லாம் மறந்துவிடாதீர்கள். வாருங்கள் போகலாம்.’’

பெரிய வேளாரையும் தம்முடன் அழைத்துக் கொண்டு
திருச்சிற்றம்பலத்தாருடன் கிளம்பினார் சக்கரவர்த்த.

சிற்பியார் இதற்கென்று அமைத்துக்கொண்டிருந்த கலைக்கூடம்
விசாலமானது. சுற்றுப்புறச் சுவர்களில் ஆங்காங்கே திரைச்சீலைகள் தொங்கிக்
கொண்டிருந்தன. ஒவ்வொரு சீலையிலும் நகரத்தின் தோற்றம் ஒவ்வொரு
கோணத்தில் வரையப் பெற்றிருந்தது. நகரத்தின் நான்கு எல்லைகள்,
குறுக்களவுகள், கோட்டைகள், கோயில் குளம் முதலியவை கோடுகளாகவும்
குறிப்பிடப்பட்டிருந்தன.

இவை கிடக்கட்டும். அதோ கூடத்தின் மையத்தில் மேடை மீது ஓர்
அற்புதக் கற்பனை உருவாகியிருக்கிறதே, என்ன அது! அதுதான் சோழபுரத்
திருநகரின் கருவூலமா? அதுதான் சிற்பியாரின் கைவண்ணத்தால் பிறந்த
கலைச் செல்வத்தின் பிரதிபிம்பமா?

அந்தக் களிமண் படிவத்தைக் கண்டவுடன் கண்ணிமைக்க மறந்துவிட்டார்
சக்கரவர்த்தி. சிலையாக மாறிப் போனார் பெரிய வேளார்.

“அற்புதம் சிற்பியாரே, அற்புதம்!’’ என்று தம்மை மறந்து கூறினார்
மாமன்னர்.

நகர அமைப்பின் வெளிக்கோட்டை மதில்களையோ, அகழியையோ,
அரண்களையோ, சாலைகளையோ, தெருக்களையோ, அரச மாளிகைகளையோ,
வேளத்தார் விடுதிகளையோ, படையிருப்புக் கடகங்களையோ சக்கரவர்த்தி
முதலில் கூர்ந்து நோக்கவில்லை. ஊரின் மத்தியில் உயர்ந்து நின்ற கோவிலின்
மீதே அவர் விழிகள் ஒன்றிக் கொண்டுவிட்டன. அதையே அவர் துருவித்
துருவி ஆராய்ந்து வியக்கலானார். கோயிலின் உட்பிரகாரச் சுவர்களில்
சமைக்கப் பெற வேண்டிய உயிர்ச் சிலைகளின் வண்ண விசித்திரம்
மற்றொருபுறம் அவரது கலை உள்ளத்துக்குத் தெவிட்டாத விருந்தாகத்
தோற்றமளித்துக் கொண்டிருந்தது.

“இவ்வளவு கலையழகையும் புதுப்பொலிவையும், மென் குழைவையும்
நீங்கள் அப்படியே கருங்கல்லில் கொண்டுவர முடியுமென்று நினைக்கிறீர்களா?
களிமண் பிரதிகளில் தோன்றும் இந்த உயிர்த் துடிப்பைக் கருங்கல்லுக்குள்
உங்களால் மாற்றிவிட முடியுமா?’’

“இறைவன் திருப்பணி இது. அவனுடைய பேரன்பும் பெருங்கருணையும்
துணை நின்றால் இந்த உலகில் எதைத்தான் சாதிக்க முடியாது?’’ என்றார்
சிற்றம்பலச் சிற்பியார் அடக்கத்தோடு.

“ஆம்? நிச்சயம் செய்து முடிப்பீர்கள். பெரிய உடையார் கோயிலுக்குப்
படிவம் அமைத்துத் தந்த சிற்ப மேதையின் புதல்வரல்லவா நீங்கள்!
பரம்பரைக் கலைச் செல்வம் உங்கள் குருதியில் ஒன்றிக் கலந்திருக்கிறது.
காலப்போக்கில் அது பெற்ற வளர்ச்சியை இன்று உங்களிடம் காணுகிறேன்.’’

“சக்கரவர்த்திகளே! என் மனத்திலுள்ளதைக் கூறுவதால் தாங்கள் அதை
வெற்றுப் புகழ் மொழிகளெனக் கருதிவிட வேண்டாம். தங்களது தந்தையார்
அருள்மொழித் தேவர் காலத்துக்குப் பிறகு, தாங்கள் இந்த நாட்டில் அதனினும் பன்மடங்கு சீரும் சிறப்பும் வளரப் பாடுபடுகிறீர்கள். மாமன்னருக்குள்ளது போன்ற அதே  ஆவல் இந்த ஏழைச் சிற்பியிடமும் உண்டு. தஞ்சைப் பெரிய கோயிலின்
ஆண்மையும் கம்பீர மிடுக்கும் இந்த உலகம் உள்ள அளவும் நிலைத்து
நிற்கக்கூடியவை. ஆனால், கலை நுணுக்கச் சிற்ப வேலைப்பாடுகளில்
அதனினும் சிறந்த ஓர் ஆலயம் எழுப்ப வேண்டுமென்ற ஆவலையே அது
தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறது. பல்லவர்கள் காலத்தில் தொடங்கிய கலை
மலர்ச்சியின் சிகரத்தை நம்மால் மட்டும் தொட்டுவிட முடிந்தால்-?’’
சிற்பியாரின் தொண்டை கம்மியது. நாத் தழுதழுத்தது.

“சக்கரவர்த்திகளே? நான் ஒரு பேராசைக்காரன்; அதை வெளியிட்டுக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பையும் உண்டாக்கித் தந்துவிட்டீர்கள்; என்னுடைய லட்சியப் பணிதான்
இனி என் உயிர் மூச்சு.’’

“சிற்பியாரே! நாம் இருவரும் பேராசைக்காரர்கள்!’’ என்றார்
இராஜேந்திரர். “தங்கள் கருத்து எனக்கு நன்கு புரிந்துவிட்டது. மல்லைக்
கடற்கரையில் மாமல்லர் காலத்தில் துவக்குவித்த கலைப்பணி, தன்
முழுமையை இந்தக் கோயிலில் கண்டுவிட வேண்டுமென்று நீங்கள் கனவு
காணுகிறீர்கள். தங்கள் கனவு நனவாவதற்கு வேண்டிய எல்லா வசதிகளையும்
நான் செய்து தருகிறேன். தொடங்குங்கள், உங்கள் திருப்பணியை! இன்று
வரையிலும், இதற்குப் பின்னரும் இந்த உலகத்தின் எந்தப்பகுதியிலுமே இது
போன்ற சிற்பங்கள் உருவாகவில்லை என்ற பெயர் விளங்க வேண்டும். இந்த
உறுதி உங்கள் சித்தத்தில் நிலைத்து நிற்கட்டும்!’’*






* கங்காபுரிக் கோநகரம் சீரும் சிறப்புமுற்று விளங்கியதற்கான முதற்
சின்னம் இப்பொழுது அதன் கோயில்தான். சாலையருகே பத்துப் பதினைந்து
கூரை வீடுகளையடுத்து அது இன்னும் தன் பழம் பெருமையைப் பறைசாற்றிக்
கொண்டு நிற்கிறது. அதன் பொற்கால வரலாற்றில் தவழ்ந்து விட்டு, இன்று
அந்தக் குக்கிராமத்தை நெருங்கினால் எந்தத் தமிழ் நெஞ்சமும் குமுறத்தான்
செய்யும்.

சிற்பக்கலை ரசிகர்கள் பலர் வெளிநாடுகளிலிருந்தும் உள் நாட்டிலிருந்தும் தமிழ்நாட்டுக்கு வந்து எங்கெங்கோ செல்கிறார்கள். தஞ்சைப் பெரியகோயிலைப் பார்ப்பவர்கள் அடுத்தாற்போல் “இறைவனின் திருவுள்ளம் தங்கள் வாய்மொழியாக மலர்ந்திருக்கிறது. நான் பாக்கியம் செய்தவன்!’’என்று மெய் சிலிர்க்கக் கூறினார்
திருச்சிற்றம்பலத்தார்.

பின்னர் மாமன்னரும் பெரிய வேளாரும் நகரத்தின் உட்பகுதிகளையும்
வெளி எல்லைகளையும் பார்த்துக் கொண்டு வந்தனர். கருங்கற்களால்
எழுப்பப்பட வேண்டிய இடங்களுக்கு ஒரு நிறத்தையும் செங்கற் சுதைக்
கட்டிடங்களுக்கு மற்றொரு நிறத்தையும் பூசியிருந்தார் சிற்பி. கோயிலுக்கும்
அதைச் சூழ்ந்து நின்ற மதில்களுக்கும் மட்டுமே கருங்கல் திட்டம்
இருக்குமென்று நம்பிய சக்கரவர்த்தி, அடுத்தாற்போல் மற்றொரு மூலையில்
கருங்கல் சாயம் தென்பட்டதைக் கண்டு துணுக்குற்றார்.

அரச மாளிகைக் கோட்டை மதில்களுக்கும், பிரதான மண்டபங்களுக்கும்
அந்தச் சாயம் பூசப் பெற்றிருந்தது. அரண்மனையின் சுற்றுப்புறச் சுவர்கள்
கற்சுவர்களின் நிறத்தில் விளங்கின.

“சிற்பியாரே! இதென்ன இவையனைத்தும் புதுமையாகத்
தோன்றுகின்றனவே!’’ என்று பதற்றத்தோடு வினவினார் சக்கரவர்த்தி.

“சக்கரவர்த்திகாள்! கடல் கடந்த யவனம் போன்ற மேலை நாடுகளில்
மன்னர்களுடைய அரண்மனைகள் பல, கற்களால் அமைக்கப்
பெற்றிருப்பதாகக் கேள்வியுற்றேன். மன்னர்கள் புகழுடம்பெய்திய பிறகுகூட
அவ்வுடல்களுக்காக மிகப் பெரிய மாளிகைகள் எழுப்புகிறார்களாம்.
அங்கெல்லாம்






தவறாது செல்லவேண்டிய இடம் கங்கை கொண்ட சோழபுரம்.
தஞ்சையிலே கற்றளி ஆண்மையின் கம்பீரத்தோடு விளங்குகிறது. உயரத்திலும்
உச்சி எட்ட நிற்கிறது.

ஆனால் சிற்பக்கலையின் பெண்மை எழிலை. தாய்மை நிறைவை நாம்
காங்காபுரியில்தான் காண முடியும். சிற்பச் செல்வங்களா அவை! காலனைக்
காலால் உதைக்கத் தோன்றிய கற்கனிகள்!

மாமல்லபுரத்தில் தொடங்கிய அமரக்கலை. கங்காபுரியில் தன் பூரண
எழிலைக் கண்டிருக்க வேண்டும். அதனால்தான் அவற்றை மிஞ்சும் சிற்பங்கள்
அதன் பிறகு உருவாகவில்லை போலும்! அப்படியிருக்கும் போது அரண்மனைகள் மட்டிலுமாவது கருங்கல் மதில்களுக்கிடையே எழுப்பலாமென்று நினைத்தேன்.’’

“கூடாது சிற்பியரே, கூடாது’’ என்று பரபரப்போடு கூறினார்
சக்கரவர்த்தி. “இறைவன் இட்ட காவலர்களாகக் கடமையாற்றி
வந்திருக்கிறோம். இறைவனின் உறைவிடங்கள் மாத்திரமே இந்த நாட்டில்
என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியவையாக இருக்க வேண்டும்.
மன்னர்களென்றாலும் நாங்கள் மனிதர்கள்! முடிசூடிய மன்னராயினும் முடிவில்
பிடி சாம்பலாகக் கூடிய சரீரம் தான் எங்களுக்கும் இருக்கிறது. இதை
மறந்துவிடக் கூடாது சிற்பியாரே. உறுதியான கற்றளியும் உயரமான
கோபுரங்களும் இறைவனுக்கே உரியவை. அவனுக்குச் சரி சமமாக எங்களை
ஏற்றி வைக்க ஒருபோதும் முயலாதீர்கள்.’’

இமயத்தின் வலிமையும் இரும்பொத்த நெஞ்சமும் கொண்ட
இராஜேந்திரரின் தன்னடக்கத்தைக் கண்டு இறுமாப்பெய்தினார்
திருச்சிற்றம்பலச் சிற்பியார். ‘தெய்வத் தமிழ் திருநாட்டில் மட்டுமே இது
போன்று தமக்கென வாழாப் பெருங்குடிக் காவலர்களைக் காண முடியும்!’
என்ற எண்ணத்தால் அவர் மனம் பேருவகையுற்றுக் களிநடம் புரியத்
தொடங்கியது!

சிற்பியாரின் மௌனம் கண்ட பேரரசர், “திருச்சிற்றம்பலத்தாரே!
அழியாதவன் எவனோ, அழிக்க முடியாதவன் எவனோ, அவனுக்கு மட்டிலுமே
அழியாப் பொருளான கற்களால் கோயில் எழுப்பி விடுங்கள். இதில் எந்தப்
புதுமையும் வேண்டாம்!’’

“சித்தம், சக்கரவர்த்திகளே!’’

பின்னர் பெரிய வேளாரிடம் படிவத்தைச் சுட்டிக் காட்டி அவர்
மேற்கொள்ள வேண்டிய பணிகளைக் குறிப்பிட்டார் மாமன்னர்.

“பெரிய வேளார் அவர்களே! விரைவில் நான் காஞ்சி நகருக்குச்
செல்லவேண்டியிருப்பதால் இந்தப் பொறுப்பைத் தங்களிடமும் சிற்பியாரிடமும்
விட்டுவிடுகிறேன்! முதலில் நகருக்கு மேற்கேயுள்ள பெரிய ஏரியை வெட்டி
அதற்குக் கொள்ளிடத்திலிருந்தும் வெள்ளாற்றிலிருந்தும் கால்வாய்கள்
வழியாக நீர் நிரம்பச் செய்யுங்கள். பிறகு நகருக்குள் குளங்களும் கேணிகளும்
தோண்டுங்கள். அடுத்தாற்போல், சிற்பிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் விடுதிகள் கட்டிக் கொண்டு கோயிலைத் தொடங்குங்கள். அதை அடுத்து நகர நிர்மாணத்தின் பிற வேலைகளையெல்லாம் மேற்கொள்ளலாம்.’’

சிற்பியாரை மனதாரப் பாராட்டிவிட்டு, தம்முடைய விரலில்
அணிந்திருந்த நவரத்தின மோதிரத்தைக் கழற்றித் தாமே அவருக்கு
அணிவித்த பின்னர் சக்கரவர்த்தி விடை பெற்றுக் கொண்டார்.

அரண்மனை ஆலோசனை மண்டபத்தில் வல்லவரையர் வந்தியத்தேவர்
சக்கரவர்த்தியை எதிர்பார்த்துக் குறுக்கு நடை போட்டுக் கொண்டிருந்தார்.
அவருக்குப் பின்புறம் பணிவோடு நடை பயின்ற ஈழத்துத் தூதுவரைக்
கண்டவுடன், இராஜேந்திரரின் புருவங்கள் நெரிந்தன.

“ஈழத்திலிருந்து முன்னறிவிப்பின்றி வந்திருக்கிறீர்களே!’’ மாமன்னர்
வியப்புடன் வினவினார்.

“செய்தி முக்கியமானது. அவசரமானது; தாமதப்படுத்த முடியாதது’’
என்று குறுகிட்டுக் கூறினார் வல்லவரையர் வந்தியத் தேவர்.

“அதனாலென்ன? வருவதெல்லாம் வரட்டும்’’ என்று கூறி, ஆழ்ந்த
கருத்தோடு சிரித்தார் சக்கரவர்த்தி.

அப்போது மகிந்தரின் குடும்பத்தாருடன் இளங்கோ கொடும்பாளூரிலிருந்து தஞ்சைக்குத் திரும்பி அரண்மனைக்குள் நுழைந்து கொண்டிருந்தான். சாளரத்தின் வழியே சக்கரவர்த்திக்கு அந்தக் காட்சி தெரிந்தது.

தொடரும்





Comments