வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 25. கதவடைத்தாள் கன்னி )

பாகம் 2   , 25. கதவடைத்தாள் கன்னி


இளங்கோவுடன் மகிந்தரின் மாளிகைக்குள் நுழைந்த வந்தியத்தேவர்
சிறிது நேரம் அவரோடு சிரிக்கப் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பிறகு
திடீரென்று, தமது குரலை மாற்றிக்கொண்டு, “மகிந்தர் அவர்களே!’’ என்று
எதையோ முக்கியமான விஷயத்தை ஆரம்பித்தார். அடுத்தாற்போல்
வந்தியத்தேவர் தாம் கூற வந்ததைக் கூறி முடிக்கவில்லை.

“என்ன செய்தி?’’
“உங்களுடைய மதிப்பிற்குரிய மதியமைச்சர் தமது திருவிளையாடலைத்
தொடங்கிவிட்டார். மதுரைப் புதுமாளிகையில் அவர் ஏற்படுத்திய சலசலப்பை
நீங்களும் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.’’

“தாங்கள் எந்த விஷயத்தைக் குறிப்பிடுகிறீர்கள்?’’ என்று
ஒன்றுமறியாதவர் போல் கேட்டார் மகிந்தர்.

“முடிசூட்டு விழாவைக் கலைப்பதற்காக அவர் ஏவி விட்ட அம்பு
உங்கள் கண்களிலும் பட்டிருக்குமே! எதையும் முன்னறிவிப்புக்குப் பிறகு
செய்யும் நல்ல வழக்கம் அவரிடம் இருக்கிறது. அதற்காக நாம் அவரை
மிகவும் பாராட்ட வேண்டியது தான்.’’

ரோகிணியையும் இளங்கோவையும் அங்கு வைத்துக் கொண்டு அவர்
அப்படித் திடீரென்று பேசியது மகிந்தருக்கு என்னவோ போலிருந்தது.
மகிந்தர் அந்த விவரத்தைச் சிறிதும் விரும்பவில்லை. வல்லவரையர் அவரை
விடுவதாகவும் இல்லை.

“அமைச்சர் எய்த அம்பா அது? இருக்கவே இருக்காது. பாண்டிய
நாட்டில் உங்களுக்கு எவ்வளவோ பகைவர்கள் அவர்களில் யாராவது
எய்திருக்கலாம். எது எப்படியிருந்தாலும் அதைப்பற்றித் தனித்துப் பேசுவோம்.
வாருங்கள்’’ என்று அவரை மேல் மாடத்துக்கு அழைத்தார் மகிந்தர்.

“இருங்கள் வருகிறேன்’’ என்று அவரிடம் சொல்லி விட்டு,
இளங்கோவிடம் திரும்பி, “இளங்கோ! உன்னை உடனடியாக ரோகணத்துக்குப்
புறப்படச் சொல்லிச் சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார்!’’ என்று இடிக்
குரலில் கூறினார் வல்லவரையர்.

“என்ன!’’

இளங்கோ வியப்புற்றான்; ரோகிணி திகைத்தாள்! மகிந்தர் திடுக்கிட்டார்.

“ஆமாம்; சுந்தரபாண்டியரின் வீரர்கள் இப்போது ரோகணத்தில்
குவிந்திருக்கிறார்கள். அவர்களையும் அவர்களுக்குப் புகலிடம் கொடுத்தவர்களையும் நிர்மூலமாக்கிவிட்டு வர வேண்டும்.’’

“ஆகட்டும் தாத்தா!’’

“முன்போல் யுத்தத்தில் போராடுகிற விஷயமில்லை இது. ஒளிந்திருந்து
தாக்குகிறவர்களை நீ வேட்டையாட வேண்டும். அவர்களும் உன்னை
அவ்வளவு எளிதாக விட்டுவிடமாட்டார்கள். அமைச்சர் கீர்த்தியையும்
அவரைச் சேர்ந்தவர்களையும் இனியும் விட்டு வைத்தால் நமக்குத்தான்
ஆபத்து!’’

“எப்போது புறப்படவேண்டும், தாத்தா?’’

“திரும்பவும் சக்கரவர்த்திகளைக் கலந்தாலோசித்துக் கொண்டு உனக்குத்
தெரிவிக்கிறேன். பெரும்பாலும் நாளையோ மறுநாளோ கூடப் புறப்பட
வேண்டியிருக்கும்.’’ இப்படிக் கூறிவிட்டு மகிந்தரின் விருப்பப்படி மாடத்தின்
படிகளில் விரைந்து ஏறினார் வல்லவரையர். வல்லவரையரைப் பின்பற்றி
மேலே செல்ல வேண்டியிருந்தது.

“இந்தக் கட்டளைக்காக நான் தங்களுக்கும் சக்கரவர்த்திகளுக்கும்
மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் தாத்தா’’ என்றான் இளங்கோ.

வல்லவரையர் அதைச் செவியுறாதவர்போல் மேலே நடந்து சென்று
விட்டார். ஆனால் அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ரோகிணியோ
இளங்கோவையே வெறித்துப் பார்த்த வண்ணம் நின்றாள்.

எந்த உணர்ச்சியோடு அவள் அப்படித் தன்னை வெறித்து நோக்குகிறாள் என்பதை அறியாத இளங்கோ, தானும் அவளையே கூர்ந்து  நோக்கியபடி நின்றான். ரோகிணியின் விழிகள் அபாயத்தை உணர்ந்துவிட்ட பெண் புலியின் விழிகளாக மாறின. அவை விழிகளல்ல, இரண்டு நெருப்புத் துண்டங்கள்.

“ரோகிணி! என்ன இது? இப்போது என்ன வந்து விட்டது?’’ அவன்
அருகில் நெருங்கி, கோபத்தின் காரணத்தை அறிந்துகொள்ள முயன்றான்
இளங்கோ . அவள் விலகி நின்றாள். “இளவரசே, உங்களுக்குக் கட்டளை பிறந்து
விட்டது. நீங்கள் அதற்குக் கடமைப் பட்டும் இருக்கிறீர்கள். போய்விட்டு
வாருங்கள். எங்களைச் சேர்ந்தவர்களை ஒருவர் விடாமல் வேட்டையாடி
வாருங்கள்!’’

துடித்த உதடுகளும், கலங்கிய கண்களுமாக அவள் தன்னுடைய
அறைக்குள் விரைந்தோடினாள். அவளைப் பின்பற்றிச் சென்ற இளங்கோவின்
முகத்தில் அறைவது போல அறைக்கதவு படீரென்று சாத்தப்பட்டது. உட்புறம்
தாழ் இடப்படும் சத்தத்தைக் கேட்டான் இளங்கோ.

என்றாலும் அவனால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.
அவளுடைய சினத்தின் காரணம் அவனுக்கு ஓரளவு புரிந்தது; முற்றிலும்
புரியவில்லை. அறைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே, திறவுகோல் நுழைவாயில்
வழியாக உற்றுக் கவனித்தான்.

ரோகிணி ஓடிப்போய் தான் முன்பு வரைந்து முடித்திருந்த
திரைச்சீலையின் முன்பு நின்றாள். தம்பி காசிபனின் உயிர்ச்சித்திரம் அவள்
கரங்களுக்குள் அகப்பட்டது. அதைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு
அவள் கண்ணீர் உதிர்க்கலானாள்.

“தம்பி! உன்னை வேட்டையாடிக் கொல்வதற்கு இந்தச் சோழ
சாம்ராஜ்யத்திலிருந்து ஒரு பெரும்படை புறப்படப் போகிறதடா!
கொடும்பாளூர் இளவரசர் தம்முடைய கரத்தாலேயே இந்தக் கொடுமையைச்
செய்யப் போகிறாரடா! ஆமாம்; அவர் கடமைக்குக் கட்டுப்பட்டவர். அன்பை
அரைக்கணத்தில் வெட்டிப்போடத் தயங்காதவர்...தம்பி! இனி உன்னை
உயிரோடு காண முடியுமா தம்பி...’’

காசிபனின் சித்திரம் கண்ணீர்த்துளிகளால் நனைந்தது. திடீரென்று
பிறந்த பாசத்தினால் தம்பியின் முகத்தோடு முகம் வைத்துக் குமுறினாள்
ரோகிணி.

இதற்குள் வெளிப்புறத்திலிருந்து தன் பலங்கொண்ட மட்டும் கதவை
இடித்தான் இளங்கோ. ஒருகணம் உள்ளேயிருந்து ஒரு சத்தமும்
வெளிவரவில்லை. பிறகு “இளவரசே! எனக்கு உங்கள் மீது ஒரு கோபமும்
இல்லை. என்னைச் சற்றுத் தனிமையில் இருக்கவிடுங்கள்’’ என்று கத்தினாள் ரோகிணி.

“கதவைத் திறக்க மாட்டாயா?’’

“நீங்கள் என்னைத் தனியே இருக்கவிட மாட்டீர்களா... இல்லை,
என்னையே முதலில் கொன்று விட்டுப் பிறகு ரோகணத்துக்குப் புறப்பட
வேண்டுமென்பது உங்கள் எண்ணமா?’’

சட்டென்று தன் உதட்டைக் கடித்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு
அகன்றான் இளங்கோ. தோட்டத்துச் செடி கொடிகள் அவன் காலின் கீழ்
மிதிபட்டு நசுங்கித் துவண்டன. மரங்கள் சூழ்ந்த ஒரு மூலைக்குச் சென்று
கீழே படுத்தான்.

ரோகிணியின் அறைக் கதவு சிறிது நேரத்துக்குப் பின்பு மீண்டும்
தட்டப்பட்டது. அந்த ஓசையைக் கொண்டே தட்டுவது இளங்கோ இல்லை
என்பதைக் கண்டு கொண்டாள் அவள்.

“ரோகிணி!’’ என்று மெதுவாக அழைத்தார் மகிந்தர்.

அவசர அவசரமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்
ரோகிணி. படத்தை முன்பிருந்த இடத்தில் வைத்தாள். தன் உடையைச்
சரிசெய்து கொண்டு வந்து கதவைத் திறந்துவிட்டாள்.

உள்ளே நுழைந்த மகிந்தர் அறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு “எங்கே
அவன்? இங்கிருந்து போய் விட்டானா?’’ என்று கேட்டார்.

“முன்பே போய்விட்டாரப்பா!’’

“அந்தக் கிழட்டுச் சனியனும் இப்போதுதான் தொலைந்தது’’ என்று
வல்லவரையரைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டுக் கட்டிலின் மீது சென்று
அமர்ந்தார்.

தமது புதல்வியின் முகமாறுதலும், காசிபன் படத்தின் மீது சிதறியிருந்த
கண்ணீர்த் துளிகளும் அவருக்கு ரோகிணியின் மனப்போக்கைக் காட்டிக்
கொடுத்துவிட்டன. “எவ்வளவுதான் இழைந்து பழகினாலும் பகைவர்கள் பகைவர்கள்தாம், என்பதை இப்போதாவது தெரிந்து கொண்டாயா ரோகிணி.’’

“காசிபனைப் பற்றித்தான் அப்பா எனக்குக் கவலையாயிருக்கிறது.’’

“காற்று இவர்களுடைய கண்களுக்குப் புலப்பட்டாலும் காசிபன்
புலப்படமாட்டான். ரோகிணி! கீர்த்தியை நீ யாரென்று நினைத்தாய்? அவர்
எய்த ஒரே ஒரு அம்பைக் கண்டு இவர்கள் இவ்வளவு தூரம் கதிகலங்கிப்
போயிருக்கிறார்களே; போதாதா?’’

கோழைத்தனத்தின் உருவான தன்னுடைய தந்தையாரின் வாயிலிருந்து
துணிகரமான சொற்கள் வருவதைக் கண்டு ஓரளவு ஆறுதல் அடைந்தாள்
ரோகிணி. தகுந்த காரணமின்றி அவருக்குத் துணிவு ஏற்பட்டிருக்காது. அதை
அவரே விளக்கிக் கூறினார்.

“காசிபன் இப்போது பத்திரமாக இருக்கிறான். இனி எப்போதுமே அவன்
பத்திரமாக இருப்பான். அமைச்சர் உயிரோடிருக்கும் வரையில் அவனக்கு
எந்த ஆபத்தும் நேராது. தம்முடைய உயிரைக் கொடுத்தாவது அவர்
அவனைக் காப்பாற்றி விடுவார்.

“அவருக்கே முதலில் ஏதும் நேர்ந்து விட்டால்?’’ ரோகிணி கேட்டாள்.

கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தார் மகிந்தர்.

“அந்த ரகசியங்களெல்லாம் உனக்கு இப்போது தெரிய வேண்டாம். ரோகிணி! முதலில் நீ இதை மட்டும் தெரிந்து கொள்; பறவைகளையோ, மான்களையோ
வேட்டையாடப் போகிறவர்கள் என்றால் ஒன்று வெற்றியோடு திரும்பி
வரலாம்; அல்லது வெறுங்கையோடாவது திரும்பி வரலாம். ஆனால்
வேங்கைகளையும் சிங்கங்களையும் தேடிப் போகிறவர்கள் அப்படிப் போக
முடியாது. வேட்டையாடப் போகிறவர்களே வேட்டையாடப்படுவதும் உண்டு.’’

‘திக்’கென்று ஒருகணம் நின்றுபோய் மறுபடியும் அடித்துக்கொண்டது
ரோகிணியின் நெஞ்சு. “நேருக்கு நேர் நின்று போர் புரிவதில் இவர்கள் வீராதி வீரர்களாக இருக்கலாம். ஆனால் புலியின் குகைக்குள்ளே அகப்பட்டுக் கொண்டால்
இவர்கள் மீண்டு வருவது கடினம். இதற்கு முன்பு மூன்று முறை போர்
தொடுத்துப் பார்த்தார்களே, இவர்கள் என்ன பலனைக் கண்டார்கள்?
ரோகணத்து மலைக்குகை நம்மைக் காட்டிக்கொடுத்து விடாது, மகளே!...
இந்தப் போரில்கூட நீதான் என் இருப்பிடத்தை அவர்களுக்குக் காட்டிக்
கொடுத்துவிட்டாய். மலைகள் நமக்குத் துரோகம் செய்யவில்லை.’’

“விவரமாகத்தான் சொல்லுங்களேன், அப்பா?’’

“போகிறவன் நிச்சயம் திரும்பப் போவதில்லை, ரோகிணி! எவனோ
இவனுடைய பாட்டன் ஒருவன், கொடும்பாளூர் சிறிய வேளான் என்பவன்,
இப்படித்தான் வந்து அங்கு அகப்பட்டுக் கொண்டு உயிரை விட்டான்.
அவனுடைய ஆவிக்குத் துணை வேண்டாமா?’’

மகிந்தர் இப்போது சிரித்த சிரிப்பு அவளுக்கு விகாரமாகத்தான்
தோன்றியது.

“நீ பயப்படாதே, ரோகிணி! காசிபனின் உடலிலிருந்து ஓர் உரோமம்
கூட உதிராதபடி நான் ஏற்பாடு செய்கிறேன். அதேபோல் அங்கு
செல்கிறவனுக்கு...’’

தம்முடைய பேச்சை முடிக்காமல் சுற்றுமுற்றும் நன்றாக உற்றுப்
பார்த்துகொண்டார் மகிந்தர். பிறகு ரோகிணியிடம் நெருங்கி அவளுக்கு
மட்டிலும் கேட்கும்படியாகத் தமது திட்டங்களையெல்லாம் கூறினார்.

முதலில் அவர் கூறிய செய்திகள் அவளுக்கு நம்பிக்கையையும்
மகிழ்ச்சியையும் அளித்தன. அடுத்தாற்போல் அவர் வெளியிட்டதோ நாராசம்
போன்றிருந்தது.

மகிந்தர் அவளை அன்போடு முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு, “நீ
உன்னுடைய தம்பிக்காகச் சிந்திய கண்ணீர் எனக்கு ஆறுதல் தருகிறது,
ரோகிணி! அதனால்தான் உன்னிடம் இதையெல்லாம் சொல்லியிருக்கிறேன்.
நான் சொல்லியதைக் காப்பாற்றி வைத்துக்கொள். நம்முடைய குலமும்
காப்பாற்றப்படும்’’ என்று கூறினார். மகிந்தர் சென்ற பிறகு, விளக்கேற்றி வைக்கும் பொழுது கடந்த பின்னரும்கூட, ரோகிணி சுய நினைவிழந்து காணப்பட்டாள்.

தொடரும்Comments