வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 26. இளங்கோ கேட்ட வரம் )

பாகம் 2   , 26. இளங்கோ கேட்ட வரம்


சரக்கொன்றை மரத்தடியில் இளங்கோ தன் கரங்களை மடித்துத்
தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக் கிடந்தான். அவன் மனம் அப்போது
சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது. மனநிலை மட்டும் வேறுவிதமாக இருந்திருந்தால்
ஐம்புலன்களையும் கவரக்கூடிய அழகான சூழ்நிலைதான் அது.

மகிந்தரின் மாளிகைக்குப் பின்புறம், தோட்டத்தில் தொலைதூரத்து
மூலை அது. வழக்கமாக யாரும் அங்கு அடிக்கடி நடமாடுவதில்லை.
அரண்மனைக்குள் ஆயிரம்பேர்கள் இருந்தாலும் அங்கு மாத்திரம்
ஆரண்யத்தின் அமைதியைக் காணலாம். தனிமையின் சுகத்தைப் பெறலாம்.

கொடும்பாளூரில் இருக்கும்போது அவன், ‘இனி ரோகிணியும் தானும்
தனித்துப் பேசவேண்டுமானால் அங்கே தான் போய்விடவேண்டும்’ என்ற
முடிவு கட்டியிருந்தான். ஊரிலிருந்து திரும்பியவுடன் இப்படி ஒரு நிகழ்ச்சி
ஏற்படாதிருந்தால், கட்டாயம் அவன் அவளை அங்கு அழைத்துக் கொண்டு
வந்திருப்பான்.

ஆனால் அந்தப் பாக்கியம் அவனுக்குக் கிடைக்கவில்லை. ஒரு
நாளைக்கு முன்புகூட அவனிடம் நெக்குருகிப் பாகாய்க் கரைந்தவள்
திடீரென்று இரும்பாக மாறிவிட்டாள். குழைந்து குழைந்து அவனிடம்
குழந்தையைப் போல் கெஞ்சியவள் குரோதம் கொண்டு விட்டாள்.

முகத்துக்கெதிரில் கதவை அடைத்து மூடிவிட்டாளே! தன்
மனக்கதவையும் அப்படியே மூடிக்கொண்டு விட்டாளா? காலைப் பொழுது
வரையில் ஏன்-பிற்பகல் வரையில்கூட அவளைக் காதலிப்பதில் இன்பம்
இருந்தது. இப்போது துன்பம் தொடங்கிவிட்டதே!

காதலென்பது இருளில் தோன்றும் மின்னல்தானா? கணப்பொழுது மனிதனை எங்கேயோ தூக்கிக்கொண்டு போய்விட்டு, பின்பு அங்கிருந்தவாறே உருட்டிவிடும் துரோக சக்தியா அது?

‘அழகான தோரண மாலைகளைப் போல் கொத்துக் கொத்தாகப் பூத்துச்
சொரிந்து கொண்டு நின்றது. அவன் தலைக்கு மேலிருந்த சரக்கொன்றை மரம்.
இளங்காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்த கொத்துக்களிலிருந்து பொன்னிற
மலர் இதழ்கள் உதிர்ந்த வண்ணமாக இருந்தன. பூரணச்சந்திரன்
கீழ்வானத்தில் மிதந்து கொண்டு அந்தப் பூச்சரங்கள் வழியாக இளங்கோவைப்
பார்த்தான்.

குளிர் நிலவைக் கண்டு முகம் சுளித்தான் இளங்கோ. அது அவனுக்குக்
குளிர் நிலவாகத் தோன்றவில்லை. கொதிக்கும் தீப்பந்தமாகத் தெரிந்தது. தண்மதி வெங்கதிராயிற்று.

‘சிற்சில சமயங்களில் ரோகிணியின் கண்கள்கூட இப்படித்தான் குரூரமாக
என்னைச் சுட்டெரிக்கின்றன’ என்று நினைத்தான் இளங்கோ.

மற்ற எல்லா வேளைகளிலுமே இளங்கோ ரோகிணியை விரும்பினான்,
அவள் அழகில் மயங்கினான். அவள் விழிகளில் பொங்கிய ஒளி வெள்ளத்தில்
கிறக்கமுற்றான். ஆனால் அந்தப் பெண் புலிப் பார்வை இருக்கிறதே அது
மட்டிலும் அவனுக்கு அச்சத்தைத் தந்தது. அந்தக் கணப்பொழுதுக்கு மட்டும்
அவன் அவளை வெறுத்தான் என்று கூடச் சொல்லலாம்.

“உங்களை வெறுக்கிறேன்!’’ என்று கூறியபோது, ஈழத்திலிருந்து
திரும்பிய கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டு அவள் அப்படித்தான்
சுட்டெரிப்பது போலப் பார்த்தாள்.

சற்று முன்பாக அவன் ரோகணத்துக்குப் புறப்பட வேண்டிய
செய்தியைக் கேட்ட போதும் அவள் அவ்வாறே வெந்தணலாக விழித்தாள்.

அது போன்ற ஒரு மாற்றம் கண்களில் ஏற்பட்ட பிறகு அவள்
பெண்ணல்ல, பெண் புலி-அவள் விரும்பாத ஏதோ ஒன்றைச் செய்யப்
போகிறாள் என்பதற்கான அபாய அறிவிப்பு இது.

அதை இப்போது நினைத்துப் பார்த்து நடுக்கமுற்றான் இளங்கோ.
அவளுக்காக ரோகணத்துக்குப் போகாதிருக்கத் தன்னால் முடியுமா?
கடமையை மறந்து அவள் முன்பாகக் கைகட்டிக் கொண்டு நிற்க முடியுமா?

சரக்கொன்றை சிரித்தது. இலைகள் தங்களுக்குள் ஏதோ இன்ப ரகசியம்
பேசிக் கொண்டன. நிலவிலும் இப்போது நெருப்பில்லை!

கண்களை இறுக மூடிக்கொண்டு ‘ரோகிணி! நீ பாவம். கொடுத்துவைக்காதவள்,’ என்று தனக்குள் சொல்லிவிட்டு, நீண்ட பெருமூச்சு விட்டான் இளங்கோ. கண்களை மூடிக் கொண்டே இருந்தான்.

சற்று நேரத்துக்கெல்லாம் அவன் முகத்தில் பொல பொலவென்று மலர்
இதழ்கள் உதிர்ந்தன. கண்களைத் திறந்தான். அவனால் தன்னையே நம்ப
முடியவில்லை. ஒரு பூங்கொத்தை வளைத்து அவன்மீது மலர்மாரி பொழியச்
செய்து கொண்டு நின்றாள் ரோகிணி.

“யாரது?’’ என்றான் இளங்கோ.

“உங்களைத் தேடிக்கொண்டு இங்கு வேறு யார் வருவார்கள்?’’

‘இதெல்லாம் வெறும் மனப் பிராந்தி’ என்று அவன் மனம் சொல்லியது.
இல்லை, இரத்தமும் சதையுமாய் எதிரில் நிற்கிறாள் என்று அவன் கண்கள்
கூறின.

“எங்கெல்லாமோ போய் உங்களைத் தேடி அலைந்து விட்டு இங்கே
வந்திருக்கிறேன்’’ என்று கூறி அவனுக்கு மிக அருகில் தரையில் கரங்களை
ஊன்றிச் சாய்ந்தாள் ரோகிணி.

உடனே அங்கிருந்து எழுந்து போய்விட வேண்டுமென்று ஒரு கணமும்,
அந்த இரவு முழுவதும் அங்கேயே அவள் அருகில் தங்கிவிட
வேண்டுமென்று மறு கணமும் இருவிதமாகவும் நினைத்தான் இளங்கோ.
என்றாலும் எழுந்து செல்லாமல் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு,
“எனக்குத் தனிமை வேண்டும் ரோகிணி, தனிமை வேண்டும்’’ என்றான்
இரக்கமற்ற குரலில். “எனக்கு நீங்கள் வேண்டும்’’ என்று கூறிச் சட்டென்று அவன் கரத்தைப் பற்றினாள் ரோகிணி. அந்தப் பிடியில் உறுதியிருந்தது. அவனை நழுவவிட விரும்பாதவள் போல் அவள் இறுகப் பற்றிக் கொண்டிருந்தாள்.

அவளிடம் ஏற்பட்டிருந்த மாறுதலின் காரணம் அவனுக்கு எப்படித்
தெரியும்? தம்பியின் உயிருக்கு ஆபத்து என்று நினைத்துக் கொண்டிருந்தவள்,
இப்போது அவனைப் பற்றியே பயந்தாள் என்பதை அவன் கண்டானா,
என்ன?

“ரோகிணி! என்னால் உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. உன்
பேச்சிலும் செயலிலும் எது பொய், எது மெய்யென்று தெரியாமல்
திகைக்கிறேன் நான். நீ என்னை அடிக்கடி குழப்புகிறாய். ஒரு சமயம் நடந்து
கொள்வது போல் மறுசமயம் நடந்து கொள்வதில்லை. நீ என்னை இன்னும்
நம்பவில்லை என்றே நினைக்கிறேன்.’’

“என்னை மன்னிக்க மாட்டீர்களா, இளவரசே?’’ என்றாள் ரோகிணி.

சிரிப்பு வந்தது இளங்கோவுக்கு; வருத்தம் தோய்ந்த சிரிப்பு.

“இனியும் நீ மன்னிப்புக் கேட்பதில் பொருளில்லை. ஒவ்வொரு
முறையும் என்னை அலைக்கழித்து விட்டுப் பிறகு அதற்காக வருந்துகிறாய்,
ரோகிணி. உண்மையைச் சொல்லிவிடு, கொடும்பாளூர்க் கோயிலில்,
‘உங்களோடு ஒன்றி உறைந்து வாழும் நாள் எந்நாளோ?’ என்று கேட்டாயே,
அதை நான் நம்புவதா? அல்லது, என் முகத்துக்கெதிராகவே கதவைத்
தாழிட்டு என்னைச் சிறுமைப்படுத்தினாயே, அதை நம்புவதா! இந்த இரண்டு
ரோகிணிகளில் உண்மையானவள் யார் என்பதை மட்டும் சொல்லிவிடு!’’

என்ன பதிலைச் சொல்வாள் ரோகிணி? எப்படிச் சொல்வாள்?

“இளவரசே! என்னிடம் எதையுமே கேட்காதீர்கள். உங்களைவிட நான்
அதிகமாய்க் குழம்பிப்போயிருக்கிறேன்’’ என்று பற்றியிருந்த கரத்தை இழுத்து
அதற்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் ரோகிணி. அவளுடைய
மிருதுவான இதழ்கள் அவன் கரத்தில் பதிந்தன. கண்ணீரைக் காணிக்கையாக்கிக் கொண்டே அவள், “நீங்கள் எப்படியாவது பத்திரமாகத் திரும்பி வந்தால் போதும்’’ என்றாள்.

“இப்படிச் சொல்வதைவிட உன் தம்பியைப் பத்திரமாகப் பாதுகாக்க
வேண்டுமென்று சொல்! உன் குழப்பத்துக்குக் காரணம் அதுதானே?’’

“அதுவும் ஒரு காரணம். அதைப்பற்றிக்கூட நான் இப்போது அவ்வளவு
கவலைப்படவில்லை. ஆனால்...’’

“ஆனால் என்ன?’’

“நாம் ஒன்றிப் பேசி உறவை வளர்க்க முடியும் என்று நான் கனவு
காணத் தொடங்கிய வேளையில், திடீரென்று வந்த பிரிவுச் செய்தி எனக்குப்
பேரதிர்ச்சியைத் தந்து விட்டது. அதனால் எழுந்த ஆத்திரத்தை என்னால்
எவ்வளவு முயன்றும் அடக்கவே முடியவில்லை.’’

“மெய்தானா ரோகிணி?’’ என்று கேட்டுக்கொண்டே துள்ளி எழுந்தான்
இளங்கோ. “உண்மையாகவே நீ என்னிடம் அவ்வளவு பற்றுதல்
வைத்திருக்கிறாயா?’’ என்று கேட்டான்.

ரோகிணி தன் துயரத்தை மறந்து சிரித்தாள். வானத்துக் குளிர் நிலவு
அப்போது அவள் முகத்தில் பாலாக வழிந்தது. அவளுடைய கண்களினின்றும்
அதே நிலவுக் கதிர்கள் மின்னிச் சிதறுவதைக் கண்டான் இளங்கோ.

அந்தக் கண்களையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, “ரோகிணி!
உன்னிடம் ஒரு வரம் கேட்கிறேன்! தருகிறாயா’’ என்றான்.

துணுக்குற்றாள் ரோகிணி. எதைக் கேட்கப் போகிறானோ என்ற அச்சம்.
அத்துடன் அவனது குழைவைக் கண்டு ஆனந்தமும் அடைந்தாள்-வரம் என்ற
சொல் பயபக்திக்குரிய சொல் அல்லவா?

“வரம் வேண்டாம்; ஆணையிடுங்கள்.’’

“உன் கண்களில் கனிவு ததும்பும்போது நான் பாகாய் உருகிவிடுகிறேன்.
உன் கண்கள் சிரிக்கும்போது நான் சிங்கத்தின் வலிமையைப் பெற்றுவிடுகிறேன். அவற்றில் அன்பின் உதயத்தை உணரும்போது என் மனம் முழுமதி கண்ட திரை கடலாகப் பொங்கி எழுந்து ஆர்ப்பரிக்கிறது.
ஆனால்...ஆனால்...’’ உருக்கத்துடன் பேசிக்கொண்டு வந்தவன், அடுத்தாற்போல் தன் பேச்சை நிறுத்திப் பெருமூச்சுவிட்டான்.

இன்பத்தின் சிகரத்தை நோக்கி மேலே மேலே பறந்து கொண்டிருந்த
ரோகிணி, அதனுடைய தயக்கத்தைக் கண்டு அந்தரத்தில் தவித்தாள். “ஏன்
நிறுத்தி விட்டீர்கள்? மேலே சொல்லுங்கள்.’’

“இனி நான் சொல்லப்போவது உனக்குக் கசப்பைத் தரலாம். ஆனால்
நான் அதை மறைக்க விரும்பவில்லை. உன் மனதுக்குள் எங்கோ ஒரு
மூலையில் ஒரு கொடும்புலி மறைந்து கொண்டிருக்கிறது! திடீரென்று அது
உன் கண்களின் வழியே எட்டிப் பார்த்து என் மீது பாய விரும்புகிறது.
அந்தச் சமயங்களில் நீ பார்க்கும் பார்வையும், அதைத் தொடர்ந்து நீ
செய்யும் செயல்களும் மிகமிகப் பயங்கரமானவை.’’

ரோகிணிக்கு இப்போது கசப்பாகத்தான் இருந்தது.

“ரோகிணி! எனக்குச் சோழ நாட்டுக் கொடிகள் மீது பொறிக்கப்பட்ட
புலிச் சின்னங்களை மட்டும் பிடிக்குமே தவிர, உயிர்ப் புலிகளைக் கண்டால்
நானும் வெறியனாகி விடுவேன். உன்னை ஒருநாள் கடலில் தூக்கி எறிய
நினைத்தேனல்லவா? அது என் தவறல்ல; உன் விழிகள் செய்த தவறு. நான்
கேட்கும் வரம் இதுதான்; உன்னிடமுள்ள அந்தப் புலி உணர்வைக்
கொன்றுவிடு. நிறைமதியைப் போன்ற உன் விழிகளில் வெங்கதிரின்
நெருப்பைக் கலந்துவிடாதே!’’

சில விநாடிகளுக்கு அங்கே மௌனம் நிலவியது. பிறகு அவள்,
“உங்கள் ஆணைப்படியே இனி நடக்க முயல்கிறேன்; எனக்கே ஏன் அப்படி
மாறுகிறேன் என்று தெரியவில்லை’’ என்றாள்.

“முயன்றால் போதாது; முடிவு செய்துகொள்’’ என்றான் இளங்கோ.

“அப்படியே ஆகட்டும்.’’

“நீ கொடுத்த வரத்துக்குப் பிரதியாக நானும் ஒரு உண்மையைச்
சொல்கிறேன், கேட்டுக்கொள்; உன் தம்பியை வேட்டையாடிக் கொல்லும்
அளவுக்க நான் கொடியவனல்ல. பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் இவர்களையெல்லாம் கொல்லக்கூடாது என்பது மாமன்னரின் ஆணை. ஆகவே அவன் உயிருக்கு என்னால் ஆபத்து ஒன்றும் நேராது. முடிந்தால் நான் அவனை எப்படியாவது கைப்பற்றி இங்கே உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன்.’’

‘அது உங்களால் முடியவே முடியாது!’ என்று சொல்லத் தோன்றியது
ரோகிணிக்கு. என்றாலும் தன் தம்பியிடம் அவன் காட்டிய பரிவுக்காக அவள்
தனக்குள் மகிழ்ச்சியுற்றாள்.

“ரோகணத்துக்குப் புறப்படும்போது, நானும் உங்களிடம் சில செய்திகள்
கூறுகிறேன்.’’

“ஏன் இப்போதே அவற்றைச் சொல்லக்கூடாதா?’’

“ஊஹூம்! பொறுத்திருங்கள்!’’ என்று கூறிச் சிரித்தாள் அவள்.

அந்த இடத்தைவிட்டு எழுந்திக்கவே அவர்களுக்கு மனமில்லை. எழுந்து
நடந்தார்கள்; பிரிந்தார்கள்.

தொடரும்


Comments