வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,27. பறந்தது புறா )

பாகம் 2 ,27. பறந்தது புறா 



மகிந்தர் தமது மதியமைச்சரோடும், மற்றவர்களுடனும் மந்திராலோசனை
நடத்திய காலம் ஒன்றிருந்தது. அதாவது, மந்திராலோசனை என்ற பெயரில்
அமைச்சர் கீர்த்தி தனிமையில் கூறிய செய்திகளைத் தாமே கூறுவது போல்
சபையில் கூறுவார். கூடியிருப்போருக்கும் இந்த இரகசியம் தெரியும்.
என்றாலும் எல்லோரும் மன்னருக்குத் தலையாட்டி வைப்பார்கள்.
மதியமைச்சர் நினைத்த காரியம் மன்னரின் வாயிலாக நிறைவேறி விடும்.

இதெல்லாம் பழங்கதை. இப்போது மகிந்தர் தாமாகவே
மந்திராலோசனை செய்யவேண்டிய கட்டம் வந்துவிட்டது. ஆள்வதற்கு
நாடில்லை; ஆலோசனைக்கு மண்டபமில்லை. கூறுவதற்கு மதியமைச்சரும்
மற்றவர்களும் இல்லை. எனினும், அமைச்சர் கீர்த்தியின் தொடர்பு அவருக்கு
அந்தக் காளமுகன் வாயிலாகக் கிடைத்ததிலிருந்து, அவருடைய சொந்த மதி
சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கி விட்டது. மாளிகையின் மேல் மாடக் கூடமே அவருடைய மந்திராலோசனை சபை. பணியாள் கந்துலனே அவருடைய மதியமைச்சர். குடும்பமே அவரது  குடிபடை.

குடும்பத்தில் ஒருத்தியான ரோகிணியிடம் மட்டிலும் அவருக்கு ஓர்
உறுதியான எண்ணம் ஏற்படவில்லை. சிற்சில சமயங்களில் அவர் அவளை
அளவுக்கதிகமாக நம்பினார். வேறு சில சமயங்களில் அவளைக் கண்டு
பயந்தார். அவளை நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும்
முடியவில்லை.

அதனால் ரோகிணி இளங்கோவைத் தேடிக்கொண்டு வெளியே போன
சமயத்தில் அவர் கந்துலனை அழைத்துக் கொண்டு மேல்மாடத்துக்குச்
சென்றார். அவள் இளங்கோவைத் தேடிச் சென்றாள் என்ற விஷயம்
அவருக்குத் தெரியாது, தெரிந்திருந்தால் ஒருவேளை கந்துலனை அவள்
பின்னால் அனுப்பியிருந்தாலும் அனுப்பியிருப்பார்.

மேல் மாடத்தில் கந்துலன் மகிந்தரின் காலடியில் தரையில்
உட்கார்ந்திருந்தான். அவருக்குப் புதிதாகத் தெரிந்த சில செய்திகளை
அவனிடம் சொல்லத் தொடங்கினார் மகிந்தர்.

அவருடைய குரல் அவர் காதுகளுக்கே எட்டாத அளவுக்கு அவ்வளவு
மெல்லியதாக இருந்தது. அதிலிருந்து அவர் வெளியிடப் போகும் தகவலின்
முக்கியத்தவத்தை நன்கு உணர்ந்து கொண்டான் கந்துலன்.

“கந்துலா! அமைச்சர் கீர்த்தியை நீ ஓர் அதிசய மனிதர் என்று
நம்புகிறாயா?’’

“பிரபு! அதிலென்ன சந்தேகம்? அவர் ஒரே சமயத்தில் ஒன்பது
இடங்களில் தோன்றக் கூடியவராயிற்றே? காற்றைப்போல் அவர் எங்கும்
நிறைந்து எல்லாம் செய்யக் கூடியவராயிற்றே! நீங்கள் அவரை நேரில்
சந்தித்தீர்களா, பிரவு?’’ என்று கேட்டான் கந்துலன்.

“காற்றைப்போல் கண்ணுக்குத் தெரியாமல் உலவுகிறவரை நான் எப்படி
நேரில் சந்திக்க முடியும்? அவர் எங்கே இருந்தாலும் நமக்கு நல்லதைத்தான்
செய்து கொண்டிருக்கிறார்...கந்துலா! நம்மை இவர்கள் இங்கே அழைத்துக் கொண்டு வந்த பிறகு அவர் அங்கே சும்மாயிருந்துவிடவில்லை;
நமக்குப் பின்னாலேயே சில ஆட்களுடன் சோழ நாட்டுக்கு வந்திருக்கிறார்.
சோழ நாட்டுக்கென்ன, தஞ்சைத் தலைநகருக்கே வந்திருக்கிறார்.’’

“என்ன?’’

“ஆமாம். அங்கங்கே நம்பிக்கையான ஒற்றர்களை வைத்திருக்கிறார்.
ஆனால் அப்படியிருந்தும்கூட நம்மோடு அவரால் தொடர்பு கொள்ள
முடியவில்லை.’’

“எப்படி முடியும்? இந்தச் சோழநாட்டுக் கிராதகர்கள் தான் நம்மிடம்
அன்பு செலுத்தியே நம்மைக் கொல்லுகிறார்களே. அவர்கள் கையில்
விழுந்துவிட்ட பிறகு, அதிலிருந்து தப்ப முடியாது போலிருக்கிறதே!’’

“முடியும் கந்துலா, முடியும்! அவர்களுடைய ஒற்றர்கள் இப்போது
மேலைச் சளுக்கநாட்டு ஒற்றர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்
நம்மை ஒரு பொருட்டாக இனி அவர்கள் நினைக்க மாட்டார்கள்.’’

“இப்போது அமைச்சர் எங்கேயிருக்கிறார், பிரபு?’’

“எங்கிருக்கிறாரோ தெரியாது. ஆனால் நகருக்குள் அவருடைய
ஆட்களில் ஒருவனைச் சந்திக்க முடியும்-நான் சொல்வதைக் கவனமாகக்
கேட்டுக்கொள். உன்னுடைய மகள் கிளி வளர்க்கவேண்டுமென்று
ஆசைப்படுகிறாள்! நாளைக்கு நகரச் சந்தை கூடுமல்லவா! அந்தச் சந்தைக்குப்
போய்க் காட்டுப் பறவை விற்கும் வேடனைச் சந்தித்து ஒரு கிளி வாங்கிக்
கொண்டு வருகிறாயா’’

“அரண்மனைத் தோட்டத்துக்குள் ஆயிரம் கிளிகள் பறக்கின்றனவே
பிரபு? அவைகள் போடுகிற கூச்சலைக் கேட்டால் எனக்கு ஆத்திரம்
ஆத்திரமாக வருகிறது! அவைகளில் ஒன்றைப் பிடித்துக் கொள்ளக்கூடாதா!
மேலும் எப்போது என் மகள் தங்களிடம் கிளி வேண்டுமென்று கேட்டாள்?
என்னிடம் அவள் கேட்கவில்லையே!’’

“முட்டாள்! அரண்மனைக் கிளியைப் பிடித்தால் அது அபசாரம்!’’ என்று
சொல்லிவிட்டு, இப்படி ஒரு மதிமந்திரி தமக்குக் கிடைத்ததற்காக அநுதாபப்பட்டுக் கொண்டு, அவனிடம் விஷயங்களை விளக்கினார். அவன் செவிகளுக்குள் புகுந்த செய்தி அவன் தலையைச் சுற்ற வைத்தது.

அதன்படி நடப்பதற்கு அவனுக்கு ஆசையாகவும் இருந்தது; பயமாகவும்
இருந்தது.

“யாரும் உன்னைக் கேட்க மாட்டார்கள். கேட்டால் கிளி வாங்கப்
போவதாய்ச் சொல்லி வை. உன் உயிர் பறிபோனாலும் நான் கொடுக்கிற
ஓலை மட்டிலும் வழியில் பறி போய்விடக்கூடாது; தெரிந்ததா?’’

“சித்தம் பிரபு!’’ என்று சித்தம் கலங்கியவாறே கூறினான் கந்துலன்.

மறுநாள் கந்துலன் அரண்மனைக் கோட்டையை விட்டு வெளியே
சென்றபோது அவனை யாரும் ஏனென்று கேட்கவில்லை. முன்பே பலமுறை
வெளியில் சென்று பழக்கப்பட்டவன் அவன். மேலங்கிக்குள் மறைத்து
வைத்திருந்த ஓலைதான் அவனக்குப் பயத்தைத் தந்ததே தவிர, காவலர்கள்
அவனைப் பார்த்துச் சிரித்துவிட்டு அசட்டையாக நின்றனர்.

சந்தையில் மகிந்தர் குறிப்பிட்ட மூலையில் ஒரு காட்டு வேடன்
நின்றுகொண்டு பறவைகளை விலை கூவிக்கொண்டிருந்தான். கொக்கு, காடை,
கௌதாரி, காட்டுக்கோழி, மணிப்புறா முதலிய பறவைகள் அவனுடைய
மூங்கில் கூடைக்குள் அகப்பட்டு நானாவித ஒலிகளை எழுப்பிக்
கொண்டிருந்தன; வெளியிலும் கால்களைக் கட்டிய கொக்குகளையும்,
நாரைகளையும் திட்டுத் திட்டாகப் போட்டுவைத்திருந்தான்.

அவனைச் சுற்றி இரண்டு பாகத்தூரத்துக்கு அவனுடைய உடலின்
நாற்றமும், பறவைகள் எச்சமிட்ட நாற்றமும் ஒன்றாக வீசிக்கொண்டிருந்தன.
நகரத்துக்கு வெளிப்புறத்தில் வாழும் ஏழை மக்கள் சிலர் அவனிடம் பேரம்
பேசிக் கொண்டிருந்தனர். சிலர் விலை கொடுத்து வாங்கவும் செய்தனர்.

மூக்கைப் பிடித்துக் கொண்டே அவனிடம் சென்று “உன்னிடம் கிளி
இருக்கிறதா, கிளி? என் மகளுக்குக் கிளி  வளர்க்க வேண்டுமென்று நீண்ட நாட்களாக ஆசை!’’ என்றான் கந்துலன்.

வேடன் கந்துலனைப் பார்த்துக் கொண்டே கிடையாதென்று
சொல்லுவதுபோல் உதட்டைப் பிதுக்கினான். அவன் பார்வை சந்தேகத்துக்குரியதாகத் தோன்றியது.

“வேறே எங்கேயாவது இங்கே கிடைக்குமா?’’

“உண்ணும் பறவைகளானால் நான் தருகிறேன்; வளர்க்கும்
பறவைகளானால் வேறு எங்கேயாவது போய்க் கேட்டுப்பார்?’’

சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் திரும்பப்
போனான் கந்துலன்; வேடதாரி வேடனைத் தேடி வந்து உண்மையான
வேடன் முன் நிற்பது போல் அவனுக்குப்பட்டது. இரண்டு அடிகள் எடுத்து
வைத்தவுடன், “ஐயா! ஒரே ஒரு கிளியை என் உயிரைப்போல் என்
குடிசையிலே வளர்த்து வருகிறேன். அதை வேண்டுமானால் வந்து பாருங்கள்!’’
என்றான் வேடன்.

“இப்போது வரட்டுமா?’’

சந்தையைப் போய் சுற்றிப் பார்த்து விட்டு வரும்படியாகவும் அதற்குள்
முடிந்தவரை தன் பறவைகளை விற்றுவிட்டு வருவதாகவும் கூறினான் வேடன்.

இரண்டு நாழிகைக்குப் பிறகு இருவரும் பல குறுகலான தெருக்களைக்
கடந்து நகரத்துக்கு வெளியே வந்தார்கள். காட்டுக்குள் புகுந்து ஒரு கூரைக்
குடிசையை அடைந்தார்கள். வழியில் அவர்கள் ஒருவரோடொருவர்
பேசிக்கொள்ளவில்லை.

குடிசையின் வாசலில் ஒரு கிழவி நின்றுகொண்டே வேடனைப் பார்த்து
வரவேற்பதுபோல் சிரித்தாள். பிறகு கந்துலனைக் கண்டதும், சந்தேகக்
கண்களுடன் நோக்கினாள். “நம்முடைய ஆள்தான், பெரியம்மா!
சந்தேகப்படாதீர்கள்’’ என்றான் அந்த வேடன்.

வேடனிருந்த நாற்றத்தைவிட ஒன்பது மடங்கு நாற்றம் அந்தக்
குடிசைக்குள் குடிபுகுந்து கொண்டிருந்தது. மூலைக்கு மூலை கந்தலும், உடைந்த சட்டிகளும், பறவைகளின் இறகுகளும்
காணப்பட்டன. ஒரு மூலையில் தெரிந்த புறாக் கூட்டிலிருந்து நூதனமான
சத்தம் வெளிவந்தது.

ஓலையை வாங்கிப் பார்த்த வேடன் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
பிறகு, “இந்தப் பெரியம்மா யார் தெரியுமா! இவர்கள்தான் அந்தக்
காளமுகனின் தாயார். இங்கே வந்து முழுமையாக ஒரு வாரம்கூட
ஆகவில்லை. எனக்கு ருசியாகச் சமையல் செய்து போடுகிறார்கள்.’’

கந்துலனும் கிழவியும் ஒருவரையொருவர் நம்பிக்கையோடு பார்த்துக்
கொண்டார்கள். கந்துலன் அந்தக் கிழவியைக் கையெடுத்துக் கும்பிட்டான்.

“ஆமாம்! நாளைக்கு ஒரு நாட்டுக்கே அரசராகப் போகிற வீரரைப்
பெற்றெடுத்த அம்மையார் இவர்!’’ என்று மேலும் கூறினான் வேடன்.

‘ஆமாம்; நீ யாரென்று இன்னும் சொல்லவில்லையே?’ என்று கேட்கத்
தோன்றியது கந்துலனுக்கு. ஆனால் கேட்கும் துணிவு ஏனோ அவனுக்கு
ஏற்படவில்லை.

குடிசைக்குள் நுழைந்தபின்பு அந்த வேடன் நடந்து கொண்ட விதமும்
அவனுடைய செருக்கான போக்கும் கந்துலனின் வாயை அடைக்கச்
செய்துவிட்டன. வேடனோ கந்துலனை யார் என்றும் கேட்கவில்லை; தான்
யார் என்றும் சொல்லவில்லை. ஓலையை உடனே கிழித்தெறிந்து விட்டுத்தான்
வேறொரு ஓலையை எழுதினான். மகிந்தரிடம் கொடுப்பதற்காக எழுதும்
மாற்றோலையாக இருக்கும் என்று முதலில் நினைத்தான் கந்துலன். ஆனால்
வேடன் ஓலையைக் கந்துலனிடம் கொடுக்கவில்லை. புறாக் கூண்டிலிருந்து
ஒரு புறாவை எடுத்து அதன் காலில் கட்டிவிட்டான். அதை அன்போடு
தடவிக் கொடுத்தபடியே குடிசைக்கு வெளியில் எடுத்துச் சென்றான்.

வேடனின் கைப்புறா அவனிடமிருந்து விடுதலை பெற்று விண்ணில்
பறப்பதை வியப்போடு பார்த்துக் கொண்டு நின்றான் கந்துலன்.

“நேரே இது ரோகணத்துக்குப் பறந்து போகுமா? அமைச்சருக்கு இந்த
ஓலை கிடைத்துவிடுமா?’’

வேடன் தன் பற்கள் தெரியச் சிரித்தான். அவனுடைய சிரிப்புக்கூடப்
பயங்கரமாக இருந்தது கந்துலனுக்கு.

“இது ஆனைங்கலத்துக்குப் போகும்; அங்கிருந்து மனிதர்கள்
போவார்கள்’’ என்றான் வேடன்.

“மாமன்னருக்கு ஏதும் மாற்றுச்செய்தி இருந்தால்...’’

“ஒரு செய்தியும் இல்லை. புறா பறந்துவிட்டதென்று சொல் போதும்!
போகும்போத மறவாமல் கிளியை எடுத்துக் கொண்டு போய் உன் மகளிடம்
கொடு.’’

கிளியை வாங்கி அதைத் தடவிக் கொடுத்தான் கந்துலன். கிளியின்
மார்பு அவன் நெஞ்சைப்போலவே படபடவென்று அடித்துக்கொண்டது.
புறப்படுவதற்காகத் திரும்பினான். வேடனைப் பற்றிய விவரம் தெரிந்து
கொள்ளாமல் திரும்பவும் அவனுக்கு மனமில்லை. அவன் கேட்க விரும்பிய
கேள்வி பலமுறை அவன் தொண்டை வரையில் வந்துவிட்டுப் பிறகு திரும்பிச்
சென்றது.

கடைசியில் துணியை வரவழைத்துக்கொண்டு “மன்னரவர்கள் ‘யாரிடம்
ஓலையைக் கொடுத்தாய்?’ என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது?’’
என்று தயங்கியபடியே கூறித் தரையைப் பார்த்தான்.

“கந்துலா! இன்னுமா நீ கண்டுகொள்ளவில்லை?’’ என்ற முரட்டுக் குரல்
அந்த வேடனிடமிருந்து வெளிவந்தது.

அந்தக் குரலுமா இவ்வளவு நேரம் மாறுவேடம் புனைந்து
கொண்டிருந்தது.

“பிரபு! பிரபு! மன்னிக்கவேண்டும். பிரபு!’’ என்று பதறித் தரையில்
வீழ்ந்து வேடனின் கால்களைப் பற்றிக் கொண்டான் கந்துலன்.

தொடரும்


Comments