Skip to main content

வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 29. பாவம், வெகுளி! )


பாகம் 2 , 29. பாவம், வெகுளி!


மாளிகையின் வாயிலுக்கு வந்து வழிமேல் விழிவைத்து வெகுநேரம்
இளங்கோவுக்காகக் காத்து நின்றாள் ரோகிணி.

காத்து நின்றவளின் கண்களுக்கு இளங்கோவின் உருவம்
தட்டுப்பட்டவுடன், அவள் குதூகலத்துடன் குதித்தோடிச் சென்று கட்டிலில்
விழுந்தாள். பிறகு அதில் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தாள். காண
வருகிறவன் பிரிவைச் சொல்லி விட்டுப் போக வருகிறவன்தானே?

தன்னருகில் வந்து நின்றவனை அவள் திரும்பிப் பாராமல், சின்னஞ்சிறு
குழந்தையைப்போல் தேம்பித் தேம்பி அழத்தொடங்கிவிட்டாள். இளங்கோ சிரிக்க முயன்றான். அவனுக்குச் சிரிப்பு வரவில்லை.

ஏதோ காலங்காலமாக அவர்கள் இருவரும் இணை பிரியாமல்
வாழ்ந்தவர்கள் போலவும், அப்படி ஒன்றியிருந்தவர்களைப் பிரிப்பதற்காகக்
காலம் சதி செய்துவிட்டது போலவும், ரோகிணி நடந்து கொண்டாள். அன்பு
செலுத்துவதிலும் ஒருத்தி இவ்வளவு தீவிரமாக இருக்கமுடியுமா என்று
எண்ணித் திகைத்தான் இளங்கோ.

“ரோகிணி! இந்த வேளையில் கூடவா உனக்கு என் மீது கோபம்?’’

“போய் வருகிறேன் என்று சொல்லத்தானே இங்கு வந்திருக்கிறீர்கள்?
போய் வாருங்கள்!’’ என்று அவனைத் திரும்பிப் பாராமலே அவன்மீது
எரிந்து விழுந்தாள் ரோகிணி.

“சரி உன் ஆணை! நான் போய் வருகிறேன்!’’

சட்டென்று திரும்பி அவளுடைய அறைக்கதவை நோக்கிச் சென்றான்
இளங்கோ. அதே கதவைத்தான் முதல்நாள் அவன் முகத்தில் அறைவதுபோல்
மூடினாள் ரோகிணி. அந்த நினைவு அப்போது அவனுக்கு வராமல் இல்லை.

கட்டிலில் விழுந்து கிடந்தவள் துள்ளியெழுந்தாள். ஓடிப்போய்
வெறிகொண்டவள்போல் குறுக்கே நின்று கொண்டாள்.

“வேண்டாம்! போகாதீர்கள்! நீங்கள் ரோகணத்துக்குப் போகவே கூடாது.
உங்களை அனுப்புகிறவர்கள் பகைவர்களைக் கொல்வதற்காக உங்களை
அனுப்பவில்லை. உங்களைக் கொல்வதற்காக அனுப்புகிறார்கள். நீங்கள் அங்கு
போனால் திரும்பி வரமாட்டீர்கள்.’’

“வராவிட்டால் போகிறேன், வழிவிடு’’ என்று அவளை ஒதுக்கித்
தள்ளிவிட்டு வெளியேறப் பார்த்தான் இளங்கோ. அவள் அவனை விடுவதாக
இல்லை.

‘நான் ஒரு முட்டாள்; உன்னிடம் வந்து அகப்பட்டுக் கொண்டு
விழிக்கிறேன், பார்!’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டு பரிதாபமாக அவளைப் பார்த்தான் இளங்கோ. நிலைகுலைந்து அவள் அவன் காலடியில் விழுந்து கால்களை இறுகப் பற்றிக் கொண்டாள். பொன்விலங்குகளால் பூட்டப் பெற்றவன் போல் தவித்துக் கொண்டு நின்றான் அவன்.

“ரோகிணி! மரணம் எனக்கு அச்சத்தைத் தரவில்லை. உன்னுடைய
தீவிரமான அன்பைக் கண்டுதான் நான் அஞ்சி நடுங்குகின்றேன். நாடாளப்
பிறந்த ஓர் இளவரசனோடு நீ பழகுகிறாய் என்பதை மறந்துவிடாதே. வீரனைக்
கோழையாக மாற்றத் துடிக்கும் எந்த அன்பையும் நான் விரும்பமாட்டேன்.
கொல்லப் போகிறவன் சமயத்தில் கொல்லப்பட்டு மடிவதும் இயல்புதானே?
அதனால் என்ன நேர்ந்துவிடும்... செய்தி கேட்டு எனக்காக நீ ஒரு துளிக்
கண்ணீர் வடிப்பாயல்லவா? அந்தக் கண்ணீரில் என் ஆவி குளிர்ந்துவிடும்.
அந்த இன்பம் போதும் எனக்கு!’’

“எத்தனையோ லட்சம் பேர்கள் உங்கள் சாம்ராஜ்யத்தில் இருக்கும்போத
எதற்காக அவர்கள் உங்களை அனுப்ப வேண்டும்? எனக்கு நீங்கள்
மட்டிலுமே இருக்கிறீர்கள்! இளவரசே வேண்டாம். போக வேண்டாம்!’’

காதல் என்னும் நெருப்பு எப்படியெல்லாம் பற்றி எரிந்து அவள்
மனத்தை வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது என்பதைக் கண்டுகொண்டான்
இளங்கோ. முதல் நாள் முற்பகல் ஒருவிதமாகவும், மாலையில் மற்றொரு
விதமாகவும், இப்போது வேறொரு விதமாகவும் அவள் மாறிவிட்ட விசித்திரம்
அவனிடம் அநுதாபத்தை எழுப்பியது. மெல்ல அவளைப் பற்றிக் கட்டிலில்
இருக்கச் செய்துவிட்டுத் தானும் அமர்ந்தான்.

“ரோகிணி! புத்த பகவான் உனக்குப் புத்தியைக் கொடுக்க
மறந்துவிட்டாரா என்ன? நன்றாக யோசித்துப் பார். இப்போது உன் சித்தம்
கலங்கிப் போயிருக்கிறது. நீ ஏதேதோ பேசுகிறாய்’’ என்றான்.

“நீங்கள்தாம் என் சித்தத்தைக் கலக்கி விட்டீர்கள்’’ என்று அவனையே
குற்றம் சாட்டினாள் ரோகிணி.

“இதோ பார். நாம் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொள்ளும் நேரம் இதுவல்ல. நாம் ஒருவரை ஒருவர் மீண்டும் சந்திக்க முடியாமலே
போனாலும் போகலாம். பிரியும் போது புண்பட்ட மனத்தோடு பிரிந்தால்,
பிறகு அதற்காக நீ வாழ்நாளெல்லாம் நினைத்து நினைத்து வருந்த வேண்டிய
நிலை ஏற்படும். ரோகிணி! சிரித்த முகத்தோடு எனக்கு விடை கொடுத்தனுப்ப
மாட்டாயா?’’

மறுமொழி கூறாமல் எதையோ தனக்குள் சிந்திக்கத் தொடங்கினாள்
ரோகிணி.

“ரோகிணி! நான் எங்கிருந்தாலும் உன் விழிகளை நினைத்துக்
கொள்வேன். உன் அன்பு வெறியையும் வெறுப்பு வெறியையும் கூட
நினைத்துக் கொள்வேன். உன்னுடன் கழித்த ஒவ்வொரு கணமும் என்னை
விட்டு அகலாதவை ரோகிணி! அதனால் பிரிவு என்பதே நமக்குள் பொய்; நீ
எப்போதும் என்னுடன்தான் இருப்பாய்.’’

அதற்கும் அவள் மௌனம் சாதிக்கவே, “சரி, நான் வரட்டுமா?’’ என்று
எழுந்தான் இளங்கோ. புறப்படுவதற்கு முன்பு அவன் வல்லவரையர், பெரிய
வேளாளர் முதலியவர்களைப் பார்க்க வேண்டியிருந்தது. மற்றும் பல அவசரப்
பொறுப்புக்களும் அவனுக்கு இருந்தன.

“போகத்தான் வேண்டுமென்றால், நான் கூறுகிற விஷயங்களை
மறந்துவிடாமல் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய
வெற்றியோ தோல்வியோ எனக்கு முக்கியமல்ல. ஆனால் நீங்கள் பத்திரமாகத்
திரும்பி வந்துசேர வேண்டும்! இதுதான் இனி என்னுடைய அன்றாடப்
பிரார்த்தனையாக இருக்கும்.’’

வெற்றி தோல்வி முக்கியமில்லை என்று அவள் குறிப்பிட்டது அவன்
மனதில் சுருக்கென்று தைத்தது. ஏனோ அந்தக் கணத்தில் அவனால்
அருள்மொழியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அருள்மொழியின்
உயிர் போவதானாலும் அவளிடமிருந்து அப்படியொரு அலட்சியச் சொல்
வெளிவருமா?

‘பாவம் வெகுளி!’ என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டு அவள்
மேலே சொல்வதை உற்றுக் கேட்கலானான் இளங்கோ. “இளவரசே! மலைக்கூட்டம் நிறைந்த மலையரதத்தை அடுத்த ரோகணத்துப் பகுதியைப் பற்றித்தான் உங்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் படி சொல்லியிருப்பார்கள். நீண்டகாலம் வரை வழக்கமாக மறைந்து வாழ்பவர்களின் புகலிடம் அதுவாகத்தான் இருந்தது. ஆனால் உங்களுடைய சக்கரவர்த்தி அந்த இடங்களில்கூட இப்போது கட்டுக்காவல்
செய்திருக்கிறாராம். உங்களையும் அந்தப் பகுதிகளுக்கு அனுப்பினால்
அச்சமின்றி சென்று வாருங்கள்.

“ஆனால், தெற்குக் கடற்கரையை அடுத்த காட்டுப் பகுதிகளுக்கும்,
மாணிக்க கங்கை ஓடும் சுற்றுப்புறங்களுக்கும், போகவே போகாதீர்கள்.
எவ்வளவு முயற்சி செய்தாலும், உங்களால் ஒன்றுமே செய்துவிட முடியாது.
அடர்ந்த காடுகள்தானே என்று அலட்சியமாய் நினைப்பீர்கள். சமவெளிதானே,
மரக்கூட்டம்தானே என்று அச்சமின்றித் திரிவீர்கள். நுழைவதற்கே
பயங்கரமான மலைப்பகுதிகளில் நாட்டுக்கே புதியவர்களான பாண்டியர்களைக்
கொண்டுபோய் வைத்து என்ன செய்ய முடியும்? ஆகவே எந்த இடங்களில்
அபாயம் இருக்காது என்று நினைக்கிறீர்களோ அங்கே இருக்கும்; எங்கே
இருக்கும் என்று நினைக்கிறீர்களோ அங்கே இருக்காது. அமைச்சரிடம்
நீங்கள் அகப்பட்டுக் கொண்டுவிட்டால், பிறகு அவர் உங்களை எனக்கும்
தரமாட்டார்; உங்கள் நாட்டுக்கும் திருப்பி அனுப்பமாட்டார்.’’

இளங்கோவின் யோசனை வேறு எங்கோ சென்றது. அவன் அப்போது
தன்னைப் பற்றிக் கவலைப்படாமல், தன் கடமையைப் பற்றிய யோசனையில்
ஆழ்ந்தான்.

“என்ன யோசிக்கிறீர்கள்?’’

“ஆகட்டும் ரோகிணி!’’

“இப்படித்தான் சொல்வீர்கள். பிறகு அகப்பட்டுக் கொள்வீர்கள். முன்பு
ஒருமுறை மலை உச்சியிலிருந்து உங்களை உருட்டி விடும்படி என் தந்தையார்
கட்டளையிட்டது நினைவிருக்கிறதா?’’

“அதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், ரோகிணி!’’ என்று
உணர்ச்சி பொங்கக் கூறினான் இளங்கோ. “அப்போது உங்களிடம் எனக்கு இரக்கமிருந்ததே தவிர அன்பில்லை. என்னுடைய முயற்சி பலிக்காமல் போய் ஏதும் நேர்ந்திருந்தால்கூட அன்றைக்கு நான் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. நீங்கள் உயிருடன் இருக்கும்போதே ஏதும் தவறான செய்தி எட்டிவிட்டால்கூட, என்னுடைய உயிர் இந்த உடலில் நிலைத்து நிற்காது.’’

இளங்கோ சிரித்தான் “எந்தச் செய்தியையும் நான் திரும்பி வரும்
வரையில் நீ நம்பக்கூடாது ரோகிணி!’’

“ஆமாம்; நான் சொல்லியதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தெற்குக் கடற்கரை ஓரம் காத தூரத்துக்கு உங்களுக்குத் தெரியாமலே
உங்களுக்கு வலைவிரித்து வைத்திருப்பார்கள்.’’

“நன்றி ரோகிணி, நன்றி!’’ என்று கூறி அவளை அநுதாபத்துடன்
பார்த்தான் இளங்கோ; ‘பாவம்! வெகுளி!’ என்று சற்று முன்பு சிறிது
சஞ்சலத்துடன் நினைத்தவன் இப்போது மகிழ்ச்சியோடு நினைக்கத்
தொடங்கினான்.

ரோகிணி, பிறகு தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவனுக்கு
விழுந்து விழுந்து உபசரிக்க முற்பட்டாள். பழங்களும் பாலும் கொண்டு வந்து
வைத்தாள். அவனோடு கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாள். காரணமில்லாமல்
சிரித்து அடிக்கடி தன் முத்துப் பல் வரிசைகளைக் காட்டினாள். தன்னுடைய
அன்பையெல்லாம் முழுமூச்சோடு அன்றைக்கே அவனிடம் கொட்டிவிடத்
துடிப்பவள்போல் அவள் செயல்கள் தோன்றின.

அவளிடம் ஏற்பட்டிருந்த சித்தக்கலகம் எங்கே தன்னையும் பற்றிக்
கொண்டுவிடுமோ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டான் இளங்கோ. அவள்
விடைகொடுத்து அனுப்பினால் கூட தனக்கு அவளை விட்டுப் பிரிய மனம்
வருமா என்று ஏங்கும் நிலை வந்தது.

“ரோகிணி! உன்னை நினைத்து ஆனந்தப்படுவதா துக்கப்படுவதா என்று
எனக்கே தெரியவில்லை. எனக்கு எதிரில் நீ நெருப்பாய்ப் பற்றிக்கொண்டு
மேலே மேலே அன்புத்திவலைகளை வீசி எறிந்தபடி சுழல்கிறாய். இவ்வளவு
மிகுதியாக ஓர் உயிர் மற்றொரு உயிரின் மேல் பற்றுதல் வைக்கக்கூடாது ரோகிணி!
எனக்கு இப்போது உன் அறையை விட்டு எங்குமே போகப் பிடிக்கவில்லை.’’
இளங்கோவில் குரல் தழுதழுத்தது.

ரோகிணி அவனுடைய இரு கரங்களையும் பற்றிக்கொண்டு சிரித்தாள்.
பிறகு அவன் காதருகில் எதையோ தெளிவாகக் கூறினாள். சில விநாடிகள்
தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தாள்.

“இப்போது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. கட்டாயம் திரும்பி
வருவீர்கள்’’ என்று சொல்லி விடை கொடுத்தாள்.

அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே பிரிய மனமின்றிப்
பிரிந்து சென்றான் இளங்கோ.

தொடரும்

Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 31. காதல் வெறி; கடமை வெறி!

மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது. கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம். கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான். நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.
“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.
“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போகப்போகிறோம்.’’
ஆதித்த பிராட்டிய…

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறியர்.

ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான் அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள் எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்கொட்டிவிடுகின்றன.
“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப் புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.
“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.
“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக் காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார். தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும் தான் இருக்கும்.’’
இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல் தழுதழுத்ததை ரோகிண…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-கட்டுரை.

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம் :
புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் கா…