வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,33. சூரபத்மன் விழா

பாகம் 2 ,33. சூரபத்மன் விழா 


இளங்கோ சுட்டிக்காட்டிய குன்றை மாங்குடி மாறன் திறந்தவாய்
திறந்தபடியே பார்த்துக் கொண்டு நின்றான். அந்தக் குன்றும் தனக்கெதிரே
அடர்ந்திருந்த மரக்கூட்டத்தைத் திறந்த வாய் திறந்தபடியே பார்த்துக்
கொண்டிருந்தது. தன்னிடம் வருவோரை விழுங்குவதற்குக் காத்திருக்கும்
பசியெடுத்த பூதம்போல் காட்சியளித்தது அது.

தூரத்தில் நின்று அதைப் பார்வையிட்ட பின்னர், இளங்கோவும்
மாறனும் செடிப்புதர்களுக்குள் மறைந்தார்கள். அருகில் சலசலத்தோடிய
அருவியில் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு உணவருந்த
அமர்ந்தார்கள். மாங்குடி மாறன் கொண்டுவந்திருந்த கட்டுச்சோறு அந்த
நடுப்பகல் வேளைக்கு அமுதம்போல் இருந்தது.

பிறகு உண்டு களைப்புத் தீருவதற்காகவும் மாலைப் பொழுதை
எதிர்பார்த்துக் கொண்டும் அவர்கள் செடி மறைவில் படுத்துப் பேசத்
தொடங்கினார்கள். காற்றில் இலைகளின் சலசலப்புச் சத்தம் எப்போதும்
கேட்டுக் கொண்டிருந்ததால் அவர்களுடைய குரல்கள் அதில் அழுந்தி
விட்டன.

“மாங்குடி மாறா! நாம் பார்த்த அந்தக் குன்று இப்போது தன் அடி
வயிற்றுக்குள்ளே ஆயிரம் துரோகிகளை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.
அக்கம் பக்கத்தில் காவலுக்குப் போனவர்களும் உளவறியப் போனவர்களும்
அந்திப்பொழுதுக்குள் அங்கே திரும்பி விடுவார்கள்... இன்றைக்கு இரவில்
நாம் கோயிலில் விழா நடத்திவிட்டு நாளைக்கு அதிகாலையில் இங்கே
சம்ஹாரத்தைத் தொடங்க வேண்டும்.’’

“ஆமாம், நமக்குப் பின்னால் வந்து கொண்டிருப்பவர்கள் இதற்குள்
கதிர்காமத்தை நெருங்கியிருப்பார்கள் அல்லவா?’’

“நெருங்கியிருப்பார்கள். நம்மோடு வந்து திரும்பியவர்களும்
கூட்டத்தோடு கூட்டமாய்ச் சேர்ந்திருப்பார்கள். ஒருவேளை நம்முடைய
திட்டங்கள் கீர்த்திக்குத் தெரியவந்தாலும், அவர் விழித்துக் கொண்டு
தம்முடைய ஆட்களைத் தப்புவிக்க முயலுவதற்குள் நாம் அவர்கள் மீது
பாயவேண்டும்!’’

“எதிர்க்கத் துணிந்தாலும் துணிந்துவிடுவார்’’ என்றான் மாங்குடிமாறன்.

“நன்றாக எதிர்க்கட்டும். எனக்கு இப்போது கீர்த்தியின் மேல்கூட
வெறுப்பில்லை. சொந்த நாட்டினருக்கும் இனத்தவருக்கும் துரோகம்
செய்பவர்களை நினைக்கும் போதுதான் எனக்குப் பற்றிக்கொண்டு வருகிறது.
தமிழர்களுக்கு எதிராகத் திரண்டிருக்கும் தமிழர்களைப் பூண்டோடு அழித்துத்
தீர வேண்டியதுதான்; உள் பகையே நம் பெரும்பகை.’’

பின்னர் சற்றுநேரம் சென்று, கதிரவன் மேற்கே சரியத் தொடங்கியவுடன்
“மாங்குடி மாறா. நீ கதிர்காமத்துக்குப் போய் விழாவில் கலந்து கொண்டு,
இரவோடு இரவாக அவர்களை இங்கே அழைத்துக் கொண்டு வா. நானும்
நன்றாகப் பொழுது சாய்ந்தவுடன் அந்த மலைக்குகைக்குப் போய் விட்டுத்
திரும்புகிறேன்’’ என்றான் இளங்கோ.

“பகைவர்களின் இருப்பிடத்துக்கா? தனியாகவா?’’

“ஆமாம், அவர்களுக்கு மத்தியில் ரோகணத்து இளவரசன் காசிபன்
இருக்கிறானா என்று பார்க்கவேண்டும். நம்முடைய கைகலப்பின்போது
அவனுடைய உயிருக்கு ஆபத்து ஏதும் நேராமல் இருக்க அவனை அங்கிருந்து
அப்புறப்படுத்தியாக வேண்டும்.’’

“இளவரசே! நீங்கள் வேண்டுமென்றே அங்கு போய் அவர்களிடம்
அகப்பட்டுக் கொள்ளப் பார்ககிறீர்கள். அவனைக் காப்பாற்றுகிற முயற்சியில்
நீங்கள் அபாயத்தை வரவழைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள்-வாருங்கள்;
இருவரும் ஒன்றாய்க் கதிர்காமத்துக்குப் போவோம். அல்லது இருவரும்
இங்கேயே தங்கிவிடுவோம். உங்களைத் தனியே விட்டுவிட்டு நான் எங்கும்
போகமாட்டேன்.’’

நெடுநேரம் அவனிடம் வாதாடினான் இளங்கோ. மாங்குடி மாறனோ
அவனை விட்டு அசைவதாக இல்லை.

“இதோ பார்! இரவு நேரத்தில் குகைக்குத் திரும்புகிற பாண்டியக்
காவலர்களுடன் நானும் ஒன்றாகி விடுவேன். அவர்களைப் போலவே
உடைமாற்றிக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டால் அவர்களுக்கு ஒன்றும் தெரியப் போவதில்லை.
குகைக்குள்ளேயும் அதிகமான தீவர்த்திகளை அவர்கள் ஏற்றி
வைத்திருக்கமாட்டார்கள். எனக்கு ஒன்றும் நேர்ந்து விடாது, நீ அஞ்சாமல்
போய் வா. நான் இதே இடத்தில் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்’’
என்றான் இளங்கோ.

அரை மனத்தோடு மாங்குடி மாறன் புறப்பட்டுச் சென்றான்.
புறப்பட்டவன் உடனே திரும்பி வந்து, “நம்முடைய சூரசம்ஹார இரகசியத்தை
அவர்கள் தெரிந்து கொண்டு விட்டால்?...’’ என்று சந்தேகத்தோடு கேட்டான்.

“எப்படியும் அது கடைசி நேரத்தில் தெரியத்தானே போகிறது? தெரிந்து
கொண்டவர்களை இந்தப் பக்கம் திரும்பி வர முடியாதபடி செய்துவிடுங்கள்.
அவ்வளவு தான்!’’

மாங்குடிமாறன் கதிர்காமத்துக்குப் போய்க் கொண்டிருந்த நேரத்தில்,
முதல் நாள் அவர்கள் வந்து சேர்ந்த காட்டுவழியில் ஒரு பேரதிசயம் நிகழ்ந்து
கொண்டிருந்தது.

இருநூறு முந்நூறு பக்தர்கள் கதிர்காமத்து முருகனின் பெயரைச்
சொல்லிக்கொண்டே அந்த வழியில் திரண்டு வந்தார்கள். பலரது தோள்களில்
பெரிய பெரிய காவடிகள் தெரிந்தன. தூரத்துப் பார்வைக்குக் காவடிகளாகத்
தோன்றினாலும், அருகே சென்று நோக்குகிறவர்களுக்கு அவை விற்களாலான
காவடிகள் என்று தெரியும். மூன்று நான்கு விற்களையும் கூரிய அம்புகளையும்
கொண்டு அவர்கள் காவடிகள் கட்டியிருந்தார்கள்.

கூட்டத்தின் மத்தியில் பலரது தோளின்மீது சூரபத்மன் தன்
பிரும்மாண்டமான உருவத்துடன் பவனி வந்தான். பெரிய பெரிய
கொள்ளிக்கண்களும், தொங்கவிட்ட நாக்கும் நீண்டு வளைந்த கடைவாய்ப்
பற்களுமாக அவனைப் பார்ப்பதற்கே கோரமாக இருந்தது. அகோர வீர
சூரபத்மன் அவன். உலகத்திலிருந்த தீய சக்திகள் அனைத்தும் ஒன்றாகச்
சேர்ந்து அவன் உருவத்தில் திரண்டிருந்தது. சிற்றானைக் குட்டி ஒன்றைப்
பீடத்தில் உட்கார வைத்துச் சுமந்து வருவது போல் அவர்கள் சுமந்து
கொண்டு வந்தார்கள். சங்கநாதம் ‘பூம் பூம்!’ என்று முழங்கியது. சேகண்டிகள் காதுகளைத்
துளைத்தன. புலிக்கொடியை ஏந்திக் கொண்டு வந்திருக்க வேண்டியவர்கள்,
சேவற்கொடிகளை ஏந்தி நடந்தார்கள். மெய்யான பக்தர்களுடைய ஆவேசமே
பலருக்கு அங்கே வந்துவிட்டது. துரோகம் என்ற தீமையை அழிக்கப் பிறந்த
ஆவேசம் அது.

ஆடினார்கள்; பாடினார்கள்; அழுதார்கள்; சிரித்தார்கள்; கொடுமையைத்
தொலைத்து விட வேண்டுமென்று கொக்கரித்தார்கள். அவர்களுடன் மாங்குடி
மாறனும் சேர்ந்துகொண்டு கூத்தாடினான்.

கோயிலுக்கு வந்தவுடன் பூசனைகள் முடிந்தன. சூரபத்மனைச் சுற்றி
வந்து ஆவேசத்தோடு அலறிக்கொண்டு அதன் தலையை வெட்டி
வீழ்த்தினார்கள். கரங்களைத் துண்டித்தார்கள், வயிற்றைக் கிழித்தார்கள்.
என்ன அதிசயம்!

அவன் வயிற்றிலிருந்து வாட்களும் வேல்களும் பொல பொலவென்று
உதிர்ந்தன. உருண்ட தலைக்குள்ளிருந்து கேடயங்கள் எட்டிப் பார்த்தன.
கைகளிலிருந்து கவசங்கள் நழுவி விழுந்தன. பக்தர்கள் அனைவரும்
பயங்கரப் போர் வீரர்களாக மாறினார்கள்.

வழியில் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்த பாண்டியர்கள் வேடிக்கை பார்க்க
வந்தவர்களைப் பின்பற்றி வந்ததால் அவர்களை மாணிக்க கங்கைக் கரையில்
‘ஏமகூடம்’ என்ற இடத்தில் எமகூடத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

பின்னர் வீரர்கள் இரவோடு இரவாகப் புறப்பட்டு வெள்ளி முளைக்கும்
நேரத்தில் இளங்கோவின் இருப்பிடத்தை அடைந்தனர்.

இளங்கோ அங்கே சோர்ந்து போய்த் தனியாக நின்று கொண்டிருந்தான்.
தன்னுடைய வீரர்கள் பத்திரமாக அங்கு வந்து சேர்ந்ததில் அவன்
மகிழ்ச்சியுற்றானென்றாலும் அது அரைகுறை மகிழ்ச்சியாகவே தோன்றியது.

காரணத்தைக் கேட்டான் மாங்குடி மாறன். “போய்ப் பார்த்துவிட்டு
வந்தீர்களா? இல்லை, போக முடியவில்லை என்பதால்
சோர்வுற்றிருக்கிறீர்களா?’’ “நன்றாகப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். அங்கே காசிபனும் இல்லை; அமைச்சர் கீர்த்தியும் இல்லை.’’

“அதனால் என்ன? கீர்த்தி இல்லாவிட்டால் அதுவும் நமக்கு நல்ல
வாய்ப்புத்தானே!’’

“வெளியில் கீர்த்தி இருந்தாரென்றால் இதற்குள் நாம் அவர்
கண்களிலிருந்து தப்பியிருக்க முடியாது.’’

“அப்படியானால் தாமதியாமல் புறப்படுங்கள், இளவரசே!’’ என்று
இளங்கோவைத் துரிதப்படுத்தினான் மாங்குடிமாறன். “வேறு என்ன யோசனை
செய்து கொண்டிருக்கிறீர்கள்? யோசனை செய்கிற நேரமா இது?’’

இளங்கோவுக்கு அங்கே காசிபனைக் கண்டுபிடிக்க முடியாமற் போனது
பேரதிர்ச்சியைத் தந்தது. கூட்டத்தில் அவன் இருந்து, தான் சென்றபோது,
அவனைப் பிடித்துக் கொண்டு வர முடியாவிட்டால்கூட, போர் நடக்கும்
குழப்பத்தில் அவனை எப்படியாவது கைப்பற்றி விடலாம் என்று நம்பினான்.

கீர்த்தி மிகமிகத் தந்திரசாலி என்பது அவனுக்கு அப்போதுதான்
தெரிந்தது. ஆயிரம் பாண்டியர்களின் உயிரை விட அந்த ஒரு சிறுவனின்
உயிர் மிகப் பெரியதென்று அவர் மதித்திருக்க வேண்டும். அவனை அவர்
எங்கே வைத்திருப்பார்? அவர் இப்போது எங்கே இருப்பார்?

எதையும் நிதானமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கு அப்போது நேரமில்லை.
கிழக்கே வெளுத்துக் கொண்டு வந்தது. இன்னும் சில நாழிகைக்குள் பொழுது
பலபலவென்று விடிந்துவிடும்.

வீரர்களை மூன்று பிரிவினராகப் பிரித்து, குன்றின் பின் புறத்திலிருந்தும்
இரு பக்கங்களிலிருந்தும் மளமளவென்று முன்னேறச் செய்தான் இளங்கோ.

எதிர்பாராத தாக்குதலால் மலைக் குகையின் அடிவயிறு எரிமலையின்
அடிவயிறாக மாறியது. வாட்களுடன் வாட்கள் மோதித் தீப்பொறி பறந்தன.
வேல்கள் பாய்ந்தன. வில்கள் அம்புமழை பொழிந்தன. கூக்குரல்களுக்கும்
மரண ஓலங்களுக்கும் குறைவே இல்லை. இளங்கோவும் மாங்குடி மாறனும் குகையின் வாய்ப்புறத்து விளிம்பில் நின்றுகொண்டு போரிட்டனர். உள்ளேயிருந்து வெளியே ஓடுபவர்களைத் தப்பவிடாதபடி சில வீரர்கள் நின்று தடுத்தார்கள். ஒரு நாழிகைப் பொழுதுக்குள் எரிமலை வெடித்துக் கிளம்பி ஓய்ந்து விட்டதுபோல்
தோன்றியது. மனிதர்களின் கூக்குரல்களைத் தவிர, ஆயுதங்களின்
மோதல்களைக் காணோம்.

விளிம்பிலிருந்து உள்ளே நுழைவதற்குத் திரும்பிய இளங்கோவின்
காதருகே எங்கிருந்தோ ஓர் அம்பு ‘விர்’ரென்று பாய்ந்து வந்தது.
நல்லவேளையாக மயிரிழையில் தப்பினான் இளங்கோ. சட்டென்று
இளங்கோவும் மாங்குடிமாறனும் திரும்பிப் பர்த்தார்கள். குன்றின்
அடிவாரத்தில் குதிரையின் மீது ஓர் உருவம் தெரிந்தது. அடுத்த அம்பை
அது குறிபார்த்து நாணேற்றிக் கொண்டிருந்தது.

ஓர் ஒருவம்தானா? அல்லது அதற்குப்பின் மற்றொரு உருவம்
மறைந்திருக்கிறதா? இளங்கோ ஒரு கணம் தடுமாறி விட்டுப் பின்பு வில்லை
எடுக்கப்போனான். அதற்குள் இளங்கோவைத் தன் பக்கமாகப் பின்புறம்
தள்ளிவிட்டான் மாங்குடி மாறன். ஆனால் அவனுடைய முயற்சி இளங்கோவை
ஒதுக்கிவிட்டதே தவிர, மல்லனின் தோளைக் காப்பாற்றவில்லை.
அலறிக்கொண்டே பாய்ந்த அம்பைப் தன் வலது கரத்தினால் பிடுங்கினான்
மாங்குடிமாறன்.

வெறிகொண்டவன் போல் இளங்கோ கீழே இறங்கி ஓடினான். அதற்குள்
குதிரை புழுதியைக் கிளப்பிக் கொண்டு பின்னால் திரும்பி ஓட்டம் எடுத்தது.
அந்தப் பாதையில் யாரும் குதிரையில் ஏறி வரக்கூடுமென்றே அதுவரையில்
இளங்கோ நம்பவில்லை. அப்படியும் ஒரு பாதை உண்டா கீர்த்திக்கு!

குதிரையைப் பின் தொடர்ந்து இளங்கோ ஓடினால் இளங்கோவின் கதி
என்ன ஆகும் என்று மாங்குடிமாறனுக்குத் தெரியாமல் இல்லை. பின்
வாங்குவது போல் பின் வாங்கி இளங்கோவைத் தனித்து இழுக்கத்தானே இந்த
முயற்சி?

அம்பு பாய்ந்த புண்ணோடு ஓடிச்சென்று, பின்புறத்திலிருந்தவாறே
இளங்கோவின் தலையில் ஓங்கி அடித்தான் மல்லன். மல்லர்களின் தலைவனுக்கு எங்கே, எப்படி அடித்தால் என்ன நடக்குமென்று
தெரியாதா? தலை சுற்றிக் கீழே விழுந்தான் இளங்கோ.

மாங்குடி மாறனாலும் அதற்கு மேல் புண்பட்ட தோளோடு அங்கு
நிமிர்ந்து நிற்க முடியவில்லை. இளங்கோவின் அருகில் மயங்கி
விழுந்துகொண்டே, “ஓடுங்கள்! முடியுமானால் அந்தக் குதிரையைப் பின்பற்றி,
அவனை வீழ்த்தப் பாருங்கள்!’’ என்று வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

வீரர்கள் மலை அடிவாரத்துக்குப் போய்ச் சேருவதற்குள் அவர்கள்
தேடிச்சென்ற குதிரை எங்கோ மாயமாய் மறைந்து போய் விட்டது. திரும்பிப்
போய் மயங்கிக் கிடந்த இருவரையும் மெல்லத் தூக்கிக்கொண்டு
இறங்கினார்கள் அவர்கள்.

மயக்கத்தோடு மயக்கமாக, “மாங்குடி மாறா! அந்தக் குதிரையின்மேல்
எத்தனை பேர் இருந்தார்கள் என்று நீ பார்த்தாயா? இருளில் எனக்குச்
சரியாகத் தெரியவில்லை. கீர்த்தி மட்டும் இருந்தாரா? அல்லது அவருக்குப்
பின்னால் காசிபனும் இருந்தானா?’’ என்று கேட்டான் இளங்கோ.

மாங்குடி மாறன் அதற்குப் பதிலளிக்கும் நிலையில் அப்போதில்லை.

தொடரும்

Comments