வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 34. உறவு ஒப்பந்தம்

பாகம் 2 , 34. உறவு ஒப்பந்தம்


ஈழத்திலிருந்து பொதிகை மலைச்சாரலுக்கு வந்து சேர்ந்த
சுந்தரபாண்டியரின் விருந்தினன் வேறு யாருமில்லை. ரோகிணியின் அன்புத்
தம்பி காசிபன். அமைச்சர் கீர்த்தியால் ரோகணத்தின் அரசுரிமை வாரிசாக
வளர்க்கப்பட்டு வந்த இளம் வீரன். இந்த ஓராண்டுக் காலத்துக்குள் அவன்
எவ்வளவு செழுமையாக வளர்ந்துவிட்டான்! ஆம், அவன் எப்படி இங்கு வந்து
சேர்ந்தான்? அதைத் தெரிந்துகொள்ள தஞ்சை மாநகரத்திலிருந்து
ஆனைமங்கலத்துக்குப் பறந்து சென்ற புறாவின் பின் நாமும் பறந்து செல்ல
வேண்டும். அங்கிருந்த ரோகணத்து வீரர்கள் சிலர் தோணியில் ஈழத்துக்கு
இரவோடு இரவாகப் புறப்படுகிறார்கள். பிறகு மறு கரையிலிருந்து காசிபனை
அழைத்துக்கொண்டு தென்பாண்டிக் கடற்கரையோரமாக ஒதுங்குகிறார்கள். பொதிகை மலைச் சாரலுக்கு வந்து சேருகிறார்கள்.

வந்திருப்பவன் யார் என்று தெரிந்தவுடன் வீரமல்லன் அவனைக்
கட்டித் தழுவிக் கொள்கிறான். நெடு நாட்கள் பழகியவன் போல் அவனிடம்
உறவுரிமை பேசுகிறான். அவன் மகிந்தரின் குடும்ப நண்பனாம்! ரோகிணியின்
நம்பிக்கைக்குரிய வீரனாம்! வீரமல்லனிடம் அவள் தன் தம்பியைப் பற்றி நாள்
தவறாது பேசிக் கொண்டிருப்பாளாம்! காசிபனைக் காணவேண்டுமென்று
அவன் செய்து வந்த தவம் பலித்து விட்டதாம்!

காசிபன் என்ன இருந்தாலும் இளம் பிள்ளைதானே? வீரமல்லன்
அவனுக்காக விரித்த வலை வீண் போகவில்லை! அவர்கள் இருவரும்
நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். காசிபனின் முகத்தில் ரோகிணியின்
சாயலைக் கண்டுவிட்ட வீரமல்லன் அவனை நன்றாகச் சுற்றி வளைத்துக்
கொண்டான்.

அமைச்சர் கீர்த்தியும் தஞ்சையிலிருந்த புறாவை அனுப்பியதற்கு
மறுநாளே அங்கிருந்து கிளம்பிவிட்டார். வேடுவன் வேடம் ஒன்றுதான்
அவருக்குப் போடத் தெரியுமென்பதில்லை. எத்தனையோ வேடங்கள்,
எத்தனையோ ஆசைகள், எத்தனையோ திட்டங்கள் அவருக்கு. இளங்கோ
ரோகணத்துக்குக் கிளம்பிவிட்டான் என்று தெரிந்ததும், அவனுடைய
படைபலத்தை அளந்துகொண்டு தாமும் அங்கு போய்ச் சேர்ந்தார். ஆயிரம்
வீரர்களோடு அவனையும் சேர்த்து ஒழிப்பதற்கு ஐம்பது நாட்கள்
போதுமென்ற எண்ணம் அவருக்கு. ஆனால் அங்கு போய்ச் சேர்ந்த பிறகு
தான் இளங்கோ எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொண்டார் அவர். ஒரே
இளங்கோ ஒன்பது இளங்கோக்களை நாட்டில் நடமாட விட்டான்.

பாவம்! அவனுக்குப் பின்னால் இருந்த ஒரு வெகுளிப் பெண்ணின்
ஆசைகளை அவர் அறிந்திருக்கவில்லை. அவள் தங்களைச் சேர்ந்தவள்
என்பது அவர் நம்பிக்கை.

ஒருவகையில் பார்க்கப் போனால் ரோகிணியும் அவரைச்
சார்ந்தவள்தான்- ரோகணத்து மண்ணை இளங்கோ மிதிப்பதற்கு முன்னால் காசிபன் அந்த மண்ணிலிருந் மறைந்து விடுவான் என்பதை அவள் இளங்கோவிடம் சொல்லவில்லை. அவனுடைய சொந்தப் பாதுகாப்புக்கு மட்டிலுமே வழி வகைகளைக் கூறி அனுப்பினாள்.

உணர்ச்சி வயப்பட்ட பெண்ணின் கூற்றை அறிவால் உலகாள விரும்பிய
ஆண்மகன் வேறுவிதமாக எடுத்துக் கொண்டான். ‘கதிர் காமத்துப் பக்கம்
போகவே போகாதீர்கள்’ என்று மட்டும் அவள் எச்சரிக்கை செய்து
அனுப்பினாள். அந்த எச்சரிக்கை ஒன்று போதாதா அவனுக்கு?

பாண்டி நாட்டுப் பகைவர்களைப் பூண்டோடு ரோகணத்தில் களைந்த
பின்னரும் இளங்கோவுக்கு அமைதி ஏற்படவில்லை. அங்கே இல்லாத
காசிபனை அவன் எங்கெல்லாமோ தேடி அலைந்தான். அமைச்சரைக்
கைப்பற்றுவதற்கும் ஆயிரம் முயற்சிகள் செய்து பார்த்தான். இந்த இரண்டுமே
அவனுக்குப் பலிக்கவில்லை.

அவ்வாறே அமைச்சர் கீர்த்தி, இளங்கோவை ஒழிப்பதற்கு வகுத்த
திட்டங்களும் அவருக்கு ஏமாற்றம் தந்தன. இந்த இருவருமே ரோகணத்துக்
காடுகளில் சில தினங்கள் ஒருவரை ஒருவர் பிடிப்பதற்காகக் கண்ணாமூச்சி
விளையாட்டு விளையாடிப் பார்த்தார்கள். இருவருக்கும் இந்த விஷயத்தில்
வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை. விளையாட்டு விளையாட்டாகவே
முடிந்தது.

கடைசியில் இளங்கோ தன் வீரர்களுடன் கப்பலேறினான்.

அதற்குள் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரையில் வைகாசி
பௌர்ணமி விழாவும் சிறப்பாக நடந்தேறியது. சோழநாட்டுப் பௌத்தர்கள்
அனைவரும் அந்த நகரத்தில் அன்று குழுமியிருந்தனர். கடற்கரையில் புனித
நீராடி, வெள்ளை உடை உடுத்தி, ஆண்களும் பெண்களும் சாரிசாரியாக
மலர்களைச் சுமந்து வந்து புத்தர்பிரானின் திருவடிகளில் தூவினர்.

அன்று அவர்களுக்குக் கடுமையான விரத நாள். பொய், களவு, கொலை,
சூது, சோரம் இவற்றை அறவே அவர்கள் அன்று விலக்கிவிட்டார்கள். புனித
நினைவுகளைத் தூண்டாத சாதாரணக் கேளிக்கைகளில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. சூடாமணி விஹாரையில் பிரார்த்தனைகள் ஒருபுறம்.
நடந்தன! புத்தரது திருஅவதாரத்தைப் பற்றிய கதைகளும் பாடல்களும்
மறுபுறம் நடந்தன.

மகிந்தரின் குடும்பத்தாரும் அந்த விழாவில் கலந்து கொண்டது.
விஹாரையிலிருந்த பிக்குப் பெரியோர்களுக்கும் மற்றவர்களுக்கும் பேரானந்தம்
தந்தது. மலர்க் கூட்டத்தைச் சுமந்துகொண்டு வந்து ரோகிணி தானும் ஒரு
மென்மலராகவே காட்சியளித்தாள்.

அவளது மான்விழிகளில் ஒளிவிட்ட மருட்சியையும் நடையில் தெரிந்த
மயிலின் ஒயில் சாயலையும், அவளது மேனியின் பளிங்கு நிறத்
தோற்றத்தையும் கண்டு வியக்காதவர்கள் அங்கு யாருமில்லை.

பெருங் கருணைப் பேருருவான புத்தர் பிரானின் திருவடிகளிலிருந்து
நெடுநேரம் அவள் தன் சிரத்தை எடுக்கவில்லை. கீழே குவிந்து கிடந்த
தாமரை மலர்களுக்கிடையில் அவள் முகம் புதைந்திருந்தது. தன்
உடன்பிறந்தவனுக்காகவும் தன் காதலனுக்காகவும் அவள் புத்தர்பிரானிடம்
கண்ணீர் உதிர்த்தாள். இருவரிடமும் கருணை காட்டும்படி வேண்டிக்
கொண்டாள்.

பிறகு, குனிந்த தலை நிமிராமல் தனது நினைவுகளை எங்கேயோ
மிதக்கவிட்டு குடும்பத்தாருடன் ரதமேறி ஆனை மங்கலம் சோழ மாளிகைக்கு
வந்துசேர்ந்தாள். மாளிகைக்குள் நுழைந்தவுடன், மகிந்தருக்காக யாரோ ஒருவர்
கூடத்தில் காத்திருப்பது சாளரத்தின் வழியே ரோகிணிக்குத் தெரிந்தது. அவள்
திடுக்கிட்டாள். ஒருகணம் மறைந்து நின்று பார்த்துவிட்டுத் தடுமாறிய
கால்களுடன் தன் அறைக்குப் போய்ச் சேர்ந்தாள். அவள் பார்த்த உருவம்
அவள் கண்களை விட்டு அகல மறுத்தது. சாந்தமும் கருணையும் குடிகொண்டு
விளங்கிய புத்தரைப் பார்த்த கண்களுக்கு இப்படி ஒரு காட்சியா!

அங்கே அந்தக் காளமுகன் கம்பீரச் செருக்கோடு அமர்ந்து சுற்று
முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். திருட வந்த கள்வன் தான் தேடிவந்த
பொருளைக் காணக் கண்களை அலைய விடுவதுபோல் அவன் அலையவிட்டுக்
கொண்டிருந்தான்.

“நண்பா! வரவேண்டும் வரவேண்டும். உன்னைத்தான் எதிர்பார்த்துக்
கொண்டிருந்தேன்’’ என்று அவனைத் தமது இரு கரங்களாலும்
தழுவிக்கொண்டார் மகிந்தர். தழுவியவாறே அவனைத் தமது மாளிகையறைக்கு
அழைத்துச் சென்றார்.

“நான் இப்போது காளமுக சமய ஆராய்ச்சியில் முனைந்திருக்கிறேன்.
ஆனைமங்கலத்துக்கு வந்ததிலிருந்து எனக்கு அதுதான் வேலை. அக்கம்
பக்கத்திலுள்ள துறவிகளை அழைத்து விளக்கம் சொல்லச் செய்கிறேன்.’’
இப்படிக் கூறிவிட்டு மகிந்தர் அவனைப் பார்த்து நகைத்தார்.

“பெரிய வேளாரே தங்களிடம் ஒருநாள் விளக்கம் கேட்க வந்தாலும்
வந்து விடுவார், அவருக்கு இதில் அவ்வளவு பக்தி!’’ என்றான் வீரமல்லன்.

“ஈழத்திலிருந்து ஏதாவது செய்தி கிடைத்ததா? நானும் இங்கு வந்து
இரண்டு மாதங்களாகின்றன; ஒன்றுமே தெரியவில்லை. அங்கிருந்தவர்களையும்
அமைச்சர் தம்மோடு அழைத்துச் சென்று விட்டாரென்று தெரிகிறது.’’

“தங்களுடைய குமாரர் இளவரசர் காசிபன் என்னுடைய பாதுகாப்பில்
பத்திரமாக இருக்கிறார்’’ என்றான் வீரமல்லன்.

“நாங்கள் இருவரும் இப்போது இணைபிரியாத நண்பர்கள்.’’

“என்ன!’’

மகிந்தரிடம் தனக்குத் தெரிந்த விவரங்களையும் தெரியாத
செய்திகளையும் ஆர்வத்துடன் கூறினான் வீரமல்லன். பொதிகை மலைச்
சாரலில் தான் சுந்தரபாண்டியருக்கு வலதுகரமாக விளங்குவது பற்றியும் அவன்
பெருமைப்பட்டுக் கொண்டான். விரைவில் தானே காசிபனை அவரிடம் நேரில்
அழைத்து வந்து அவர்களுடைய சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகவும்
வாக்களித்தான்.

“வீரமல்லவா! இதுவரையில் அமைச்சர் கீர்த்தி ஒருவரைத்தான் என்
உயிருக்குயிரானவர் என்று நினைத்திருந்தேன். இன்றிலிருந்து உன்னையும்
சேர்த்து இருவர் என்று நம்புகிறேன். எனக்காக நீ செய்திருக்கும் உதவிகளை
நினைக்கும்போது உனக்கு என்ன கைம்மாறு செய்வதென்றே தோன்றவில்லை.’’

“கைம்மாறு கருதி நான் எதையுமே செய்யவில்லை. ஆனால் தங்களைப்
போல்தான் சுந்தரபாண்டியரும் என்னிடம் நன்றிக்கடன் பட்டிருப்பதாய்ச்
சொல்லுகிறார். அதற்காக அவர் எனக்கு என்ன வாக்களித்திருக்கிறார்
தெரியுமா?’’

என்னவென்று கேட்பதுபோல் அவனை ஏறிட்டுப் பார்த்தார் மகிந்தர்.

“அவர் தமது முயற்சிகளில் வெற்றி பெற்றவுடன் ரோகணத்தைத்
தங்களுக்கு மீட்டுக் கொடுத்துவிட்டு, அடுத்தாற்போல் கொடும்பாளூர்க்
கோனாட்டுக்கு என்னை அரசனாக்கப் போகிறாராம். அவரது
திருக்கரங்களாலேயே எனக்கு முடிசூட்டிவிடப் போகிறாராம்.’’

“அதற்கு முற்றிலும் தகுதியுடைவன்தான் நீ. எப்படியும் அந்த நல்ல
காலம் வந்தே தீரும்.’’

“அரசே!’’ என்று மெல்ல அழைத்து, பிறகு ஒன்றுமே கூறாமல், நெடிய
பெருமூச்சு விட்டு நிறுத்தினான் வீரமல்லன்.

“என்ன?’’

“எனக்கு ஒரு நாட்டுக்கு அரசனாக விளங்க வேண்டுமென்ற ஆசையே
கிடையாது. ஆனால் அப்படி அரசுரிமை கிடைத்தாலாவது தங்களுடைய
பேரன்பும் நல்லுறவும் கிடைக்குமென்றால், அதற்காகவேனும் நான் நாடாள
விரும்புகிறேன். கொடும்பாளூர் எனக்குக் கிடைத்துவிட்டால் பிறகாவது தங்கள்
மதிப்பை நான் பெற முடியுமல்லவா? எப்படியும் நான் தங்களிடம் நெருங்கிய
தொடர்பு கொள்ள வேண்டும்; தங்கள் உறவினனாக வேண்டும்.’’

“நீ என்ன சொல்லுகிறாய் வீரமல்லா?’’

சற்று நேரம் மௌனமாக இருந்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டே,
“தாங்கள் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டீர்கள் என்று நம்புகிறேன்’’ என்று
தொடங்கினான் வீரமல்லன். “இளவரசி ரோகிணியாரை என்றைக்கு நான்
முதல் முதலில் கண்டேனோ அன்றிலிருந்து என் மனம் அவர்களுக்கு
அடிமையாகிவிட்டது. அதை இனியும் நான் தங்களிடம் மறைக்க
விரும்பவில்லை. அவர்களுக்காகவே நான் தங்களுக்கு உழைக்கிறேன். மீண்டும் தங்களை ரோகணத்து அரியாசனத்தில் அமர்த்திப் பார்த்தால்தான் என் கண்களுக்கு உறக்கம் வரும். அதற்காகவே நான் என் உயிருக்கு வந்த அபாயங்களைப் பொருட்படுத்தாமல் சுந்தரபாண்டியரிடம் சேர்ந்திருக்கிறேன். அதற்காக அமைச்சர் கீர்த்தியோடும் உறவு பூண்டிருக்கிறேன். அதற்காகவே இளவரசர் காசிபனைக் கண்ணிமை போல் காத்து வருகிறேன்! என்னுடைய ஆசைகளுக்குத் தங்கள் ஆசி
கிடைக்குமா அரசே?’’

வீரமல்லனின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார் மகிந்தர்.
அவனுக்கும் ஒரு நாடு கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் அவன் மதிப்பை
அவரிடம் உயர்த்தி விட்டது. அவனைத் தமக்குச் சமமானவன் என்ற
முறையில் மதிக்கச் செய்துவிட்டது.

“வீரமல்லா! என்னுடைய குமாரத்தியிடம் உனக்குள்ள பற்றுதல்
இதுபோன்ற நல்லாசைகளை உன்னிடம் வளர்த்திருப்பது கண்டு நான்
பெருமைப்படுகிறேன். இதுதான் ஆண்களுக்கு அழகு. பகைவர்களை வெல்ல
வேண்டும்; நாடுகளைக் காப்பாற்றி அரசாள வேண்டும்; அந்தப்புரங்களில்
அகமகிழ்ந்திருக்க வேண்டும்! உன் ஆசைகளில் எதுவும் தவறில்லை!’’

“அதில் தங்கள் பங்கை எனக்காக நிறைவேற்றித் தருவீர்களா, அரசே!’’

“கட்டாயம் தருகிறேன்!’’ என்றார்.

வீரமல்லனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி வெள்ளப்பெருக்கில் அந்தச்
சோழமாளிகையே அவன் கண்முன் பம்பரமாகச் சுழல்வது போலிருந்தது.

“நன்றி அரசே, நன்றி!’’ என்று நாத் தழுதழுக்கக் கூறினான் அவன்.

“ஆனால் இப்போதே நீ அதற்காக ஆனந்தப்பட்டு விடவேண்டாம்.
பெண்ணாசை கைகூடாதவரையில்தான் நம்மைப் போன்றவர்களுக்கெல்லாம்
அது ஒரு மலைபோல் தோன்றும். எளிதில் அது கைகூடி விட்டால்
நம்முடைய மற்ற ஆசைகளை நாம் மறந்தே போய்விடுவோம். அதனால் ஒன்றை நீ மனதில் உறுதியாக வைத்துக்கொள். எனக்கும் உனக்கும் நாடுகள் கிடைத்த பிறகுதான் என் குமாரி ரோகிணி உன்னுடைய பட்டமகிஷியாவாள்.’’

“இப்போதைக்கு இவ்வளவு போதும், அரசே!’’ என்றான் வீரமல்லன்.

“இன்னொரு முக்கியமான விஷயம். ரோகிணி ஒரு வகையில்
ராஜதந்திரங்களை ஓரளவுக்கு அறிந்து வைத்துக் கொண்டிருக்கும் பெண்.
அவளுடைய அநுதாபத்தையும் அன்பையும் பெற்றுக் கொள்வது முதலில்
சிரமம்தான். ஆனால் உன்னுடைய இந்த உடையோடு அவளிடம் சென்று பேசி
வெறுப்பைத் தேடிக்கொள்ளாதே. காசிபன் உன்னுடைய பாதுகாப்பிலிருப்பதால்
ஒருவேளை உன்னிடம் அவளுக்கு இரக்கம் பிறந்தாலும் பிறக்கும்.
எங்களையெல்லாம் விட அவளுக்குக் காசிபனிடம் தான் உயிர்.’’

“அப்படியானால் அவருக்காகவே இளவரசரை இங்கு விரைவில்
அழைத்து வருகிறேன். இதை நானே அவர்களிடம் போய்க் கேட்கட்டுமா?’’

“உடையை மாற்றிக்கொண்டு போய் வா!’’ என்றார் மகிந்தர். “நான்
அழைப்பதாக நீயே இங்கு அவளை அழைத்து வா. அவசரப்பட்டுக்கொண்டு
என்னிடம் கூறிய எல்லா விஷயங்களையும் இப்போதே அவளிடம்
வெளியிட்டு விடாதே!’’ என்று எச்சரித்து அவனை அனுப்பி வைத்தார்.

வீரமல்லன் வீரமல்லனாகவே ரோகிணியைக் காணச் சென்றான்.

தொடரும்

Comments