அழிக்கப்பட முடியா தேசம்

அழிக்கப்பட முடியா தேசம்சிறுவயதுக் கரையோரம்
கட்டிய மணல் வீட்டை அலை
வந்து வந்து அழித்துப் போனது.
மீண்டும் மீண்டும்
கட்டக் கட்ட
அழித்தல் சாத்தியமாயிற்று அலைக்கு

பின்,
என்சிறு கிராமக்கோடியில்
வியர்வையாலுங் குருதியாலும்
கட்டிய என்சிறு குடிலை
சிதைக்க முடிந்தது உங்களால்
மீண்டும் மீண்டும்
கட்டக் கட்ட
அழித்தல் சாத்தியமாயிற்று உங்களுக்கு

இப்போ
நகரங்களாலும், ஊர்களாலும், கிராமங்களாலும்
கட்டியெழுப்பப்பட்ட எனது தேசத்தை
எந்தப் பீரங்கி கொண்டும், யாராலும்
அழித்துவிட முடியாது என்பதை
அறுதிட்டுச் சொல்ல முடியுமென்னால்.
ஏனெனெல்,
ஓர் அகதியின் கனவுகளாலனவை
எனது தேசம்.

-தமயந்தி -

நன்றி :http://www.piraththi...og-post_11.html


Comments