நெஞ்சுரம்...............- பத்தி .


குறுந்தொகை
பாடியவர் : செம்புலப் பெய்நீரார்
பாடல் :

” யாயும் ஞாயும் யாராகியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
செம்புலப் பெய்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.”

எத்தனை சுவை மிகுந்த பாட்டு? காதலின் கண்ணியம் உணர்த்தும் பாட்டு.மனம் கொள்ளை கொண்டவளை தன் வானாள் முழுதுக்கும் துணைவியாய் மனதளவில் ஏற்றுக் கொண்ட ஒரு தூய்மையான காதலன் தன் உள்ளத்து உறுதியை காதலிக்குச் சொல்லுவதாய் அமைந்தது இப்பாடல்.

காட்சி இப்படி விரிகிறது ,

தலைவனும் தலைவியும் தனித்திருக்கிறார்கள்.அவன் தன்னை கை விட்டு விடுவானோ என்கிற பயம் அவளுக்கு. கூடலுக்கு பின் பிறந்த ஞானோதயம். வார்த்தையாய் கேட்டும் அவன் தரும் நம்பிக்கை அவளுக்கு போதுமானதாயில்லை. சஞ்சலத்துடன் அவனை காதலாய் பார்க்கிறாள். காமம் களைந்த பின்னும் உயிர்க்காதல் வடியுமா? வழமையாய் மது சிந்தும் விழியாவும் சந்தேகத்தின் சாயலே நிரம்பிக் கிடக்க அதைச் சகியாதவனாய், அறியாமையை போக்க எண்ணி, அவளை குழந்தையென தோளில் சாய்த்து முகம் வருடி , தலை கோதியபடி இவ்விதம் சொல்கிறான். காதலில் பெண்களுக்கு எப்போதும் நம்பிக்கை இருப்பதில்லை. உணர்த்த வேண்டிய பொறுப்பு சில சமயம் ஆண்களுக்கு கிடைக்கிறது. அதை இந்த தலைவன் எங்ஙனம் கையாளுகிறான் பாருங்களேன்!

”அன்பே! என் தாயும் உன் தாய் இருவரும் தோழிகளா என்ன? இல்லை அப்படித்தானே. உன் தந்தை யார்? என் தந்தை யார்? இருவருக்கும் முன்பின் பரிச்சயமுண்டா? இவ்வளவு ஏன் இந்த காதலெனும் வரம் நமக்கு கிட்டும் வரை நீயாரென்பதோ நான் யாரென்பதோ நம்மிருவரின் புத்திக்கும் தெரியாத ஒன்று.எப்போது நீ என் வசமானாய்? காதல் உதித்த போது தானே? ”

ஆமோதிக்கும் வகையினில் அவள் தலையசைப்பைக் கண்டவன் மேலும் பேசத் துணிகிறான். ஆரத்தழுவியிருந்தவள் மேனியில் ஒரு தேர்ந்த வினைஞனை போல அவனின் விரல்கள் பயணிக்கிறது.காதலில் மயங்கிக் கிடந்தாலும் அவன் கருத்துக்கு செவி சாய்க்கிறாள் தலைவி.அவனும் மெல்ல மயங்கிச் சொல்கிறான் இப்படியாக,

”ஏன் காதல் வந்தது தெரியுமா? இது பிறப்பின் பந்தம். ஆகையினாலே நம்மிடையே காதல் தோன்றிற்று.செம்மண் நிலத்தில் நீர் விழுந்தால் என்னவாகும்? மண்ணும் நீரும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றுக்குள் ஒன்றாகிப் போகும்.அப்படிப் பட்டது தான் நம் காதல்.ஒன்றான பின்னே அதற்குப் பிரிவென்பதே இல்லை. என் நேசத்திற்குரியவளே! இதை நீ மனதில் கொள்வாயாக!கவலை வேண்டாம்” என்று கூறி முடிக்கிறான்.

தலைவனின் பதிலில் - உறுதியில் தெளிவுற்ற தலைவி மகிழ்ச்சியுற்று அவன் காதலில் திளைத்ததாய்க் கொள்வீராக!

Comments