குளிருக்குப் பயந்து
ஒதுங்கிய பகலவன்.
இருட்டின் அரசாட்சி.
பனி மூடிய மலைகள்
வழிய வழி இல்லை.
நாட்கள் விறைத்தபடி.
காற்றில் ஈரம் இறுகி
பனிப் பாதையாகி,
வழுக்கி வழுக்கி
தெருவில் திரிவதோ
செப்படி வித்தையாய்.
உடைகள் பாதணிகள் பாரமாய்
மனம் அதைவிட கனமாய்.
என்றாலும் ஓர் இதம்
பனியின் உறைதலில்.
பனி கிழித்து
சாணகம் தெளித்து
கோலம் வரைய நினைக்கிறேன்.
நிமிடங்கள் சேமித்து
ரசிக்க மறுக்கும்
தெருப்பாடகனின் பாடலாய்,
அவரவர்க்கான
அவசர அழைப்புக்களாய் அலுவல்கள்.
கம்பளிப் பூச்சிகளாய் சிறுவர்கள்.
பூச்சாண்டி மனிதர்கள்.
பனி ரசித்து
பார்வைகள் கண்ணாடி உடைக்கும்
படியோடு நடை நிறுத்தும்
பூனைக்குட்டிகள்.
புகைத்தல் தடை
என்றாலும்,எல்லோருமே புகைத்தபடி.
மதுக்கடை வியாபார அமளி.
குருவிகள் காக்கைகள் எங்கே.
புறாக்கள் தவிர
பறப்பன கண்ணில் இல்லை.
பனிபூண்ட வெள்ளை மரங்கள்.
உருக் கொடுத்து உடைபோட்டு
கண்ணாடி அணிவித்த
மதிலோர பனி மனிதர்கள்.
துன்பம் மழித்து
தோளில் தூக்கா
வெள்ளை மனிதர்கள்.
ம்ம்ம்...
எங்கள் இருப்புக்கள்?
யுகங்கள் வேண்டும்
வெளுத்த வாழ்வுக்கு.
குளிரூட்டி இல்லாமல்
குளிரின் விறைப்பில்
பனியின் முகத்தை
பார்த்து ரசிக்க இலகுவாய்.
பறவை இறக்கையில்
மெத்தென்ற போர்வைக்குள்
குடங்கி முடங்கி
நானே என்னைக் கட்டிய தூக்கம்.
ரம்மியக் கலவியில்
குளிர் ஒரு கவிதையாய்.
பல கால ஆசை
பனி திரட்டி உருட்டிய மனிதன்
கை அளைந்த வண்ணமாய்.
வந்த புதிதில்
பனியை...
சுவைத்ததும் ரசித்ததும்
திருட்டுத்தனமாய்,
சிரிப்பாய் எனக்குள் இப்போ !!!
ஹேமா(சுவிஸ்)
நன்றி: http://kuzhanthainila.blogspot.fr/2009/03/blog-post.html
Comments
Post a Comment