Skip to main content

"சிறுமியும் தேவதையும்"-கவிதை.

''48மணிநேரத்தில் உலகப்பந்து கிழியப்போகிறது. ஏறுவோர் ஏறுக, என்சிறகில். இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன். இரண்டே இரண்டு நிபந்தனைகள்: எழுவர் மட்டுமே ஏறலாம்.உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும் உடன்கொண்டு வரலாம்".

திடீரென்று...
மேகங்கள் கூடிப்
புதைத்தன வானை.
ஒரே திசையில் வீசலாயிற்று
உலகக் காற்று.
பூனையுருட்டிய கண்ணாடிக்குடமாய்
உருண்டது பூமி.

மருண்டது மானுடம்
அப்போதுதான்
அதுவும் நிகழ்ந்தது.
வான்வெளியில் ஒரு
வைரக்கோடு.
கோடு வளர்ந்து
வெளிச்சமானது.

வெளிச்சம் விரிந்து
சிறகு முளைத்த தேவதையானது.
சிறகு நடுங்க
தேவதை சொன்னது:
''48 மணி நேரத்தில்
உலகப்பந்து கிழியப் போகிறது.
ஏறுவோர் ஏறுக என்சிறகில்
இன்னொரு கிரகம் எடுத்தேகுவேன்
இரண்டே இரண்டு
நிபந்தனைகள்:
எழுவர் மட்டுமே ஏறலாம்.
உமக்குப் பிடித்த ஒரு பொருள் மட்டும்
உடன்கொண்டு வரலாம்".

புஜவலியுள்ள இளைஞன் ஒருவன்
சிறகு நொறுங்க ஏறினான்.
அவன் கையில்
இறந்த காதலியின்
உடைந்த வளையல்
முதல் முத்தத்து ஞாபகத்துண்டு.

'இன்னொரு கிரகம் கொண்டான்
என்றென்றும் வாழ்க"
கொட்டிமுழங்கும் கோஷத்தோடு
சிறகேறினார் அரசியல்வாதி.
தங்கக் கடிகாரம் கழற்றியெறித்து
களிம்பேறிய கடிகாரம் கட்டிக்கொண்டார்.
உள்ளே துடித்தது -
சுவிஸ் வங்கியின்
ரகசியக் கணக்கு.

இறந்துவிடவில்லையென்ற சோகத்தை
இருமி இருமியே
மெய்ப்பித்துக் கொண்டிருக்கும்
நோயாளி ஒருவர்
ஜனத்திரள் பிதுக்கியதில்
சிறகொதுங்கினார்
அவர் கையில் மருந்து புட்டி
அதன் அடிவாரத்தில்
அவரின்
அரை அவுன்ஸ் ஆயுள்.

அனுதாப அலையில்
ஒரு கவிஞனும் சிறகு தொற்றினான்
ஜோல்னாப் பையில் -
அச்சுப் பிழையோடு வெளிவந்த
முதல் கவிதை

தன் மெல்லிய ஸ்பரிசங்களால்
கூட்டம் குழப்பி வழிசெய்து
குதித்தாள் ஒரு சீமாட்டி
கலைந்த ஆடை சரிசெய்ய மறந்து
கலைந்த கூந்தல் சரிசெய்தாள்.
கைப்பையில்
அமெரிக்க வங்கிக் கடன் அட்டை.

கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்
லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்.

'ஒருவர்
இன்னும் ஒரே ஒருவர்"
என்றது தேவதை.
கூட்டத்தில்
சிற்றாடை சிக்கிய சிறுமியருத்தி
பூவில் ரத்தஓட்டம்
புகுந்தது போன்றவள்
செல்ல நாய்க்குட்டியோடு
சிறகில் விழுந்தாள்.

'நாய்க்குட்டியென்பது
பொருள் அல்ல - உயிர்
இறக்கிவிடு"
என்றது தேவதை.
'நாய் இருக்கட்டும்
நானிறங்கிக் கொள்கிறேன்".
என்றனள் சிறுமி.

சிறகு சிலிர்த்தது தேவதைக்கு
சிலிர்த்த வேகத்தில்
சிதறிவிழந்தனர் சிறகேறிகள்
வான் பறந்தது தேவதை
சிறுமியோடும் செல்ல நாயோடும்..!

"சிறுமியும் தேவதையும்"
கவிஞர் வைரமுத்து
நன்றி:முகநூல்

Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 31. காதல் வெறி; கடமை வெறி!

மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது. கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம். கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான். நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.
“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.
“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போகப்போகிறோம்.’’
ஆதித்த பிராட்டிய…

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறியர்.

ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான் அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள் எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்கொட்டிவிடுகின்றன.
“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப் புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.
“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.
“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக் காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார். தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும் தான் இருக்கும்.’’
இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல் தழுதழுத்ததை ரோகிண…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-கட்டுரை.

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம் :
புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் கா…