எனது நத்தார் (கிறிஸ்மஸ்) இரவு - கவிதை .



வழி தவறிய கனவொன்று 
உண்மையாகவே உத்தரவில்லாத கனவொன்று
ஓட்டையூடாகக் குடிசையினுள் சிரம் நுழைத்து
மேசை மீது தலை சாய்த்துறங்கும்
கவிதையொன்றைத் துயிலெழுப்பும்

துப்பாக்கிச் சன்னம் பட்ட வால் நட்சத்திரமொன்றெழும்பும்
இறுதி ஓலம்
மடு ஆலயத்தின் மேல் வானில்
ஒலியெழுப்பும்

நட்சத்திரக் குறிகளற்று
மூவேந்தர்களுக்கும்
பாதை தவறும்
ஏ ஒன்பது சாலை வழியே வன்னிக்கு
சமாதானத்தின் செய்தியைக் கொண்டு செல்லும்

ஒலிபெருக்கி கெரொல் வதந்திகள்
கீர்த்தனை ஷெல் வெடிகள்
"இலங்கை ராணி அன்னையே
முழுச் சிங்களத்தின் அன்னையே"
வத்திக்கானின்
நாணயங்களை கணக்கிட்ட பிதா அவர்கள்
வைக்கோல் படகொன்றில் பூக்கின்ற
காளான்களுக்கு பெயரிடுகிறார்

புறாக்கள்
நத்தார் இரவிலும்
வெண்கொடிகள் குறித்த தர்க்கங்களில்
சிவனொளிபாதமலை உச்சியில்
ஆதாமின் புனித அடிப்பாதம் வெடிப்பெடுத்து
நாற்றிசையிலும் பிரவாகிக்கிறது குருதி
உத்தரவு இல்லாத கனவை
படுக்கையில் சாயவைத்துக்
கவிதை விழித்திருக்கிறது.


(சிங்கள மூலம்: மஞ்சுள வெடிவர்த்தன)
(தமிழில்: பஹீமா ஜஹான்)
(நன்றி :உயிர்நிழல், ஏப்ரல்-ஜூன் 2010)









Comments