வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2- 35-புன்னகையின் பொருள்?







வீரமல்லனைக் கண்டவுடன் ரோகிணி தன் இருக்கையை விட்டு எழுந்திருக்கவோ, அவனை ஏறெடுத்துப் பார்க்கவோ, அவன் ஏன் வந்தானென்று கேட்கவோ இல்லை. தன் தந்தையைப் பார்த்துவிட்டு வந்த வழியே திரும்புவான் என்று நினைத்தாள் அவள். இப்போது அவனுடைய குறுக்கீடு அவளுக்கு எரிச்சலைத் தந்தது.

“இந்த ஏழையின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் இளவரசி!’’ என்று கூறிப் பணிவோடு அவள் முன்னால் குழைந்து நின்றான் வீரமல்லன். கூப்பிய கரங்களோடு புன்னகை செய்தான்.

புலித்தோலாடையைக் களைந்துவிட்டு வந்திருந்தவன் இப்போது ரோகிணிக்குப் பசுத்தோல் போர்த்திய புலியெனத் தோற்றமளித்தான். ரோகிணியுடைய எரிச்சல் மிகுதியாயிற்று.

“நீ வந்த வேலை முடிந்திருக்கும். தந்தையாரைக் கண்டு பேசியிருப்பாய். இனி நீ உடனே இவ்விடத்தை விட்டுத் திரும்பிச் செல்வதுதான் நல்லது’’ என்றாள்.

“வந்த வேலை இன்னும் முடியவில்லை, இளவரசி!’’

“வீரமல்லா, உன்னை யாரும் இங்கே பார்த்துவிடுவதற்கு முன்னால் நீ இங்கிருந்து போய்விடு’’ என்று அதட்டினாள் ரோகிணி. எங்கே தன்னை அவள் காட்டிக்கொடுத்துவிடுவாளோ என்று அஞ்சி வந்தவனுக்கு, இந்த அவளுடைய பேச்சு விந்தையாகத் தோன்றியது. தன் தந்தையாரிடம் அவள் கையடித்துக் கொடுத்திருப்பதை அவன் எங்கே கண்டான்?

இதனால் சிறிதளவு உரம் பெற்ற வீரமல்லன், “இளவரசி! தாங்கள் என்மீது இவ்வளவு இரக்கம் கொண்டிருக்கிறீர்கள் என்பது இப்போதுதான் தெரிந்தது. இனிமேல் நான் பகைவர்களிடம் அகப்பட்டுக்கொண்டாலும் கவலையுற மாட்டேன்’’ என்றான்.

“யாரிடமும் எனக்கு இரக்கமில்லை. நீ இங்கு வந்திருப்பதால் எங்களுக்குத் தொல்லை நேரலாம். அதனால்தான் சொல்கிறேன்!’’

வருந்துகிறவன்போல் சிரித்துவிட்டு அவன் கூறினான்: “யாருக்காகவும் இரக்கப்பட்டுத்தான் நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். உங்களுக்கு என்னால் தொல்லை என்கிறீர்கள். உங்களால் நான் எத்தனை எத்தனை தொல்லைக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கிறேன் தெரியுமா? எதற்காக நான் இந்த மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தைவிட்டு ஓடிப்போய் இப்படிப் புலித்தோலாடைக்குள் ஒளிந்து கொண்டு திரிய வேண்டும்? எதற்காக இப்படி நான் உயிருக்கு அஞ்சி நடமாட வேண்டும்? உங்களுக்காக நான் இரக்கப்பட்டேன்; உங்கள் தந்தையாரின் கட்டளைப்படி நான் இந்த நாட்டைவிட்டு ஓடினேன். ஆனால் உங்களுக்கோ என்னிடம் இரக்கமில்லை!’’

“இவையெல்லாம் நீ என் தந்தையாரிடம் பேசவேண்டிய விஷயங்கள். நான் உன்னிடம் எதையும் சொல்லவும் இல்லை; எதையும் எதிர்பார்க்கவும் இல்லை; உனக்கு இங்கே வேலையும் இல்லை!’’ என்று கண்டித்துக் கூறினாள் அவள்.

“வேலை இருந்ததால்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். ரோகணத்து இளவரசர் காசிபன் என்னைத் தமது தமக்கையாரிடம் தூதுவனாக அனுப்பியிருக்கிறார். அவருடைய அன்பையும் பாசத்தையும் சுமந்து கொண்டு நான் பல காத தூரத்துக்கு அப்பாலிருந்து ஓடோடியும் வருகிறேன். நீங்களோ உங்கள் தம்பியாரின் தூதுவன் என்றும் பாராமல் என்னை அலட்சியப்படுத்துகிறீர்கள்.’’

இப்படிக் கூறிக்கொண்டே அருகிலிருந்த ஆசனத்தில் தானாகச் சென்று அமர்ந்தான் வீரமல்லன். அவனுடைய செய்கை அப்போது அவளுக்குத் தவறாகப் படவில்லை. தம்பி காசிபனின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அவளுக்குத் தேகமெங்கும் புல்லரித்தது. மற்ற எதையுமே அந்தச் சமயத்தில் மறந்துவிட்டாள்.

ரோகிணி வாயைத் திறந்து வீரமல்லனிடம் காசிபனைப் பற்றிக் கேட்காவிட்டாலும், தம்பி என்ற சொல் எப்படி அவளிடம் மந்திரம் போல் செயல் புரிகிறது என்பதைக் கண்டு கொண்டான் வீரமல்லன்.

“இளவரசி! அவரைப்பற்றி நீங்கள் சிறிதுகூடக் கவலையுற வேண்டாம். அவருடைய தலைக்கு வந்த ஆபத்திலிருந்து நாங்கள் அவரைத் தப்புவித்துத் தமிழ் நாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டோம். இப்போது அவர் என் உயிர்த்தோழர். என் உயிரைக் கொடுத்தாவது அவரைக் காப்பது என் கடமை என்று நான் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறேன்.’’

“காசிபன் இப்போது எங்கேயிருக்கிறான்?’’ என்று மிகுந்த ஆவலோடு கேட்டாள் ரோகிணி.

“வந்ததிலிருந்து அவர் தென்பாண்டி நாட்டில் சுந்தர பாண்டியரின் விருந்தினராக இருந்தார். நானும் அவரும் ஒன்றாகவே அங்கிருந்து வடக்கே புறப்பட்டு வந்திருக்கிறோம். இப்போது அவர் எங்கே இருக்கிறார் என்பது உங்கள் தந்தையாருக்குக்கூடத் தெரியாத இரகசியம்.’’

“என்ன! என் தம்பி இருக்குமிடம் எனக்கே தெரியக் கூடாதா?’’

“மன்னர் மகிந்தரிடமே அவர் மைந்தர் இருக்குமிடத்தைச் சொல்லவில்லை நான். சொல்லக் கூடாதென்பது சுந்தரபாண்டியரின் கட்டளை.’’

“அப்பா!’’ என்று கூவிக்கொண்டு தன் தந்தையாரிடம் செல்ல முயன்றாள் ரோகிணி. தானாக அதை அவனிடம் கெஞ்சிக் கேட்க விரும்பவில்லை. ஆனால் அவள் மனமோ அதை உடனடியாகத் தெரிந்து கொள்ளத் துடிதுடித்தது. ‘மகிந்தரே வற்புறுத்தினால் கூறமாட்டானா என்ன?’’

“பொறுங்கள், இளவரசி! உங்களுக்கோ அரசருக்கோ அவரிடம் இல்லாத உரிமை எனக்குக் கிடையாதுதான். நாளைக்கு நான் ஒரு நாட்டுக்கு அரசனாகப் போகிறவன் என்றாலும் இன்றைக்கு உங்கள் பணியாளன்! ஆனால் என்னுடைய பொறுப்பு இப்போதைக்கு உங்கள் பாசத்தை விடப் பெரியதாயிற்றே! நீங்கள் வேண்டுமென்றே அவருக்குத் தீங்கு செய்துவிட மாட்டீர்கள். ஆனாலும் உங்கள் அன்பின் வேகம் அவரைப் பகைவர்களிடம் காட்டிக் கொடுத்துவிடக் கூடுமல்லவா?’’ எவ்வளவு அதிகமாக அவளுடைய பாசத்தின் பலவீனத்தைத் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமோ, அவ்வளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்த்தான் வீரமல்லன். தன் துணை அவர்கள் குடும்பத்துக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை அவன் ஒவ்வொரு கணமும் வலியுறுத்தத் தவறவில்லை.

“நானே இளவரசரைக் கூடிய விரைவில் உங்களிடம் நேரில் அழைத்து வருகிறேன். உங்களைச் சந்திக்க வேண்டுமென்பதில் அவருக்குள்ள ஆவலை நான் வார்த்தைகளால் வர்ணித்துக் கூற முடியாது. இன்னும் ஓரிரு தினங்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்.’’

“ஏன், உன்னோடு இப்போதே அவனை அழைத்துக் கொண்டு வந்திருந்தால் என்ன? உன்னை நாங்கள் எப்படி நம்புவது?’’ என்று கேட்டாள் ரோகிணி.

“நீங்கள் எப்போதுதான் என்னை நம்பப் போகிறீர்களோ தெரியவில்லை!’’ என்று கூறிச் சிரித்தான் வீரமல்லன். “நான் மட்டிலும் முதலில் தனியாக வந்து இங்குள்ள கட்டுக்காவல்களைத் தெரிந்துகொள்ள நினைத்தேன். வைகாசி பௌர்ணமிக் கூட்டத்தில் காவலர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பியிருக்கிறது. ஒருவேளை அப்படியில்லாமல் நான் அகப்பட்டுக் கொண்டிருந்தாலும் அது என் தலையோடு மட்டும் போகும். இன்று நள்ளிரவுக்குள் நான் அவரை மீண்டும் சந்திக்காவிட்டால் எனக்கு ஆபத்து என்பதை அறிந்து கொண்டு, அவர் திரும்பிப் போய்விடுவார், இளவரசி! நான் ஏன் இப்போதே அவருடன் வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டீர்களா?’’

என்றான் வீரமல்லன்.

முதல்முறையாக வீரமல்லனிடம் அனுதாபம் ஏற்பட்டது ரோகிணிக்கு. உருக்கம் நிறைந்த அவன் குரலிலிருந்து அவன் உண்மை பேசுகிறான் என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். வீரமல்லனும் அவள் முகமாற்றத்தைக் கவனிக்கத் தவறவில்லை.

“உங்கள் தந்தையாரிடமே வெளியிடாத உண்மையை இப்போது உங்களிடம் வெளியிடுகிறேன். அவர் இப்போது திருவாரூரில் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். நாளைக்குப் பிற்பகலிலோ, அல்லது மறுநாள் பிற்பகலிலோ நாங்கள் இங்கு வருவோம். இந்தாருங்கள், அவர் தங்களுக்கு எழுதி அனுப்பிய ஓலை.’’

காசிபன் எழுதிய ஓலையை ரோகிணியிடம் நீட்டினான் வீரமல்லன்.

“என்னுடைய உயிர்த்தோழன் வீரமல்லன் உனக்கு நேரில் விவரங்களைச் சொல்வான். அன்னை தந்தையாருக்கு என் வணக்கத்தைச் சொல்; சந்திக்க முயலுகிறேன்.

- காசிபன்’’

அந்த ஓலையிலிருந்த கையெழுத்தைக் கண்டவுடன் அருகில் அந்நியன் இருப்பதையும் பாராமல் கதறி அழவேண்டும் போலி ருந்தது ரோகிணிக்கு. காசிபன் எழுதிய ஓலைதான் அது. கதறி அழவில்லையென்றாலும் கண்ணீர் அருவிக்கு அவளால் அணைபோட முடியவில்லை.

“நன்றி, வீரமல்லா!’ என்று தன்னையும் மீறிச் சொல்லி விட்டுத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் ரோகிணி.

“நான் மிகவும் பாக்கியம் செய்தவன், இளவரசி! என்னுடைய வாழ்நாளில்

உங்களுக்காக, இந்தச் சிறு உதவியைச் செய்ய முடிந்ததில் நான் எவ்வளவோ பெருமையடைகிறேன். நீங்கள் இதற்காக நன்றி கூறியதை நான் என்றென்றும்மறக்க மாட்டேன். சரி, நாழியாகிறது. நான் போய் வரட்டுமா!’’

வீரமல்லன் எழுந்தான்; தன் தம்பியையே அவன் உருவில் நேரில் பார்ப்பதாக மதிமயங்கி அவனை ஆவலோடு பார்த்தாள் ரோகிணி. பிறகு அவனிடம் காசிபனைப் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் கேட்டு விவரம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு.

“இளவரசி! உங்கள் தம்பியாரை நீங்கள் அன்போடு அணைத்துக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் விடும் காட்சியை நான் நேரில் காண வேண்டும்!இப்போதே திருவாரூருக்குப் பறந்து செல்கிறேன். கண்ணிமை கருவிழியைக்காப்பதுபோல் அவரைக் காப்பாற்றி உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கிறேன்,இளவரசி! அதற்குப் பிரதியாக நீங்கள் இப்போது உங்கள் அன்புப் புன்னகையோடு எனக்கு விடைகொடுத்தால் போதும்! ஒரே ஒரு புன்னகை உதிர்த்து, ‘போய் வா’ என்று சொல்லுங்கள்!’’

காசிபனைத் தன் இருகரங்களாலும் தழுவிக்கொண்டு அவன் உச்சியில் தான் முத்தமிடும் காட்சி அப்போதே ரோகிணியின் மனக்கண்முன் எழுந்தது.

அந்தக் கற்பனைக் காட்சி அவள் விழிகளின் ஓரங்களில் கண்ணீர்க் கசிவைக் கொடுத்தது. அந்தக் காட்சியைக் கண்டுகொண்ட அவள் ஆனந்தப் புன்னகையொன்றை மலரவிட்டாள்.

வீரமல்லன் அந்தப் புன்னகையைக் கண்டவுடன் புதுப்பிறவி எடுத்து விட்டவன் போல் பூரித்துப்போனான். “வருகிறேன் வருகிறேன்’’ என்று கூறிக்கொண்டே வெளியில் வந்தான். ‘என் வேண்டுகோளுக்கு இணங்கி இன்றைக்குப் புன்னகை உதிர்த்தவளை இனி என்னதான் செய்ய முடியாது?’

வெளியில் அவன் வருவதற்கும் மகிந்தர் அவனை அங்கே தேடிக்கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது. நெடுநேரமாக அவன் ரோகிணியிடம் பேசிக்கொண்டிருந்தது ஒருவகையில் அவருக்குத் திருப்தியை அளித்தது.

“என்ன வீரமல்லா! ரோகிணி என்ன சொல்கிறாள்?’’ என்று கேட்டுக்கொண்டே வந்தார்.

“அவர்களுடைய பேரன்பு நமக்கு மிகவும் துணை செய்யும் அரசே! நான் போய் வருகிறேன்’’ என்று கிளம்பினான்.

“பொறு! ஈழத்திலிருந்து ஒருவிதச் செய்தியும் வராதது எனக்குக் கவலையளிக்கிறது. சுந்தரபாண்டியருக்கும் செய்தி வரவில்லையென்கிறாய். அங்கே நம்முடைய வீரர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ?

அவர்களை அடக்குவதற்காகப் போன கொடும்பாளூரானும் இன்னும் திரும்பி வரவில்லை. அவன் வந்தால் நாகைப்பட்டினம் வழியாகத்தானே திரும்பி வரவேண்டும்?’’

“அவன் இன்னும் திரும்பி வராததிலிருந்தே நாம் நடப்பைத் தெரிந்து

கொள்ளலாமே! அமைச்சர் கீர்த்தி அங்கே இருக்கும்போது நமக்கென்னகவலை? எப்படி அவனை உயிரோடு இங்கு திரும்ப விடுவார்?’’

பகீரென்று ரோகிணியின் அடிவயிற்றில் பெரு நெருப்புப் பற்றி எறியத் தொடங்கியது.

“அவன் வருவது நிச்சயமில்லை என்று சொல்’’ என்றார் மகிந்தர்.

“நிச்சயமில்லை என்ன? அவன் வரவே மாட்டான்; தன் தகப்பனைப்போல் முரடன் அவன்.’’

இந்தச் சமயத்தில் தெருவழியே மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்த்தொலி எழுப்பிக்கொண்டு எங்கோ நடந்து செல்லும் சத்தம் கேட்டது. “கொடும்பாளூர்க் குலக்கொழுந்து வாழ்க!’’ என்று கூவிக்கொண்டே அவர்கள் நடந்தார்கள். கந்துலன் ஓடோடி வந்து, “கொடும்பாளூர் இளவரசர் நாகைப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து இறங்கியிருக்கிறாராம். அவரை வரவேற்பதற்காக

ஆனைமங்கலத்திலிருந்து எல்லோரும் கிளம்புகிறார்கள்’’ என்றான்.

இந்தச் செய்தி கொடுத்த ஆனந்தப் பெருக்கிலிருந்து ரோகிணி மீள்வதற்குள் வீரமல்லன் அங்கிருந்து மாயமாய் மறைந்துவிட்டான். எந்த வழியாக எப்படிப் போனான் என்று அவளுக்குத் தெரியவில்லை.

“அப்பா! வாருங்கள் அப்பா! நாமும் துறைமுகத்துக்குப் புறப்படுவோம்’’என்றாள் ரோகிணி.

மகிந்தர் தமது கண்களால் அவளைச் சுட்டெரித்துக் கொண்டே,“உனக்குச் சித்தப் பிரமை ஏற்பட்டிருக்கிறது ரோகிணி!’’ என்றார்.

தொடரும்







Comments