கடற்கரையோரத்து மரங்களில் கூடுகட்டி வாழ்ந்த பறவைகள் கூட்டங்கூட்டமாகக் கடலின் மீது பறந்து கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. இளங்கோவின் படைக்கலமும் அதனுடன் சென்ற துணைக்கலங்கள் இரண்டும் அவ்வாறே நாகைத் துறைமுகத்தை நாடி விரைந்து வந்தன.
மேலே வானத்தில் பறந்து கொண்டிருந்த கடற்பறவைகளுக்குத் தங்கள் கூடுகளின் நினைவுதான். கீழே கலங்களுக்குள் குழுமியிருந்த மனிதப் பறவைகளுக்கும் தங்கள் வீடுகளைப் பற்றிய எண்ணந்தான். பறவைகளுக்கோ ஒரே ஒரு பகல் நேரத்துப் பிரிவு! மனிதர்களுக்கோ அறுபது நாள் பிரிவு.
சோழநாட்டுவீரன் ஒவ்வொருவனும் சிறகிருந்தால் அவன் ‘ஜிவ்’வென்று மேலே எழுந்து பறந்திருப்பான். காற்றைக் கிழித்துக்கொண்டு தனது நகரத்துக்குச் சென்ற கூரையைக் கிழித்துக்கொண்டு தனது வீட்டுக்குள் குதித்திருப்பான். குதித்தவுடன் அவன் தன்னைக் கண்ணீருடன் வழியனுப்பி வைத்த அன்பு மங்கையை அணைத்துக் கொண்டு அவளிடம் என்ன சொல்வான் தெரியுமா? ‘பெண்ணே, வழக்கம்போல் என்னுடைய வீரதீரப் பிரதாபங்களை இப்போது உன்னிடம் சொல்லப் போவதில்லை. எங்கள் தலைவர் இளங்கோ மட்டிலும் இல்லாதிருந்தால் இம்முறை நாங்கள் வெற்றி கண்டிருக்கவும் மாட்டோம்; வீடு திரும்பியிருக்கவும் மாட்டோம். ஆயிரம் பேர்களைக் கூட்டிச் சென்று ஐந்தாறு வீரர்களை மட்டும் பலிகொடுத்து, ஆயிரம் பகைவர்களை அழிக்கச் செய்திருக்கிறார் அவர்! அவருடைய நெஞ்சின் வீரத்தை நாங்கள்
முதற்போரில் கண்டோம்; அவரது மூளையில் உதித்த முத்துக்கள் போன்ற யுத்த தந்திரங்களையெல்லாம் இந்தப் போரில் கண்டோம். அவர் உடல் இரும்புதான்; ஆனால் அவர் மனமோ எங்களுக்குக் கரும்பு! ஆம்; வீரர்கள் அனைவரும் மாறி மாறித் தங்கள் படைத்தலைவனைப் பற்றியும் காதல் தலைவியரைப் பற்றியுமே பேசிக்கொண்டு வந்தனர். இளங்கோவை வெறும் வீரன் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அவனுடைய சிந்தனைத் தெளிவு மந்திர சக்தியாகத் தோன்றியது. அவனைப் போற்றாத மனமில்லை. புகழாத வாயில்லை. பூரிப்படையாத வீரர்கள் இல்லை.
ஆனால் இவ்வளவு புகழுக்கும் பெருமைக்கும் உரியவனாகக் கருதப்பட்ட இளங்கோவின் முகத்தில் மாத்திரம் மகிழ்ச்சியைக் காணோம். தன் முயற்சியில் முழு வெற்றி கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவனுக்கு. போர்த் தொழிலை ஓர் அருங்கலையாக அவன் பயின்று வந்ததால் மெய்க் கலைஞனுக்கு ஏற்படுகிற மனக்குறை அவனிடமும் இருந்தது. அமைச்சர் கீர்த்தியைத் தப்பவிட்டதற்காகவும் காசிபனைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பியதற்காகவும், அவன் தன்னையே நொந்து கொண்டான். கரையை நோக்கிக் கப்பல்கள் நெருங்க நெருங்க அவனுடைய மனக்குறை மனத்தின் ஆழத்துக்குச் சென்று மறைந்து கொண்டது.
துறைமுகத்தைக் கண்டதும் அவனுடைய நினைவு வேறுபுறம் திரும்பியது. மனத்திலிருந்து பேரலைகள் பொங்கி எழுந்து ஆனந்தத் தாண்டவம் புரியத் தொடங்கின. ரோகிணி என்ற முழுமதி அவன் உள்ளத்தில் உதயமாகித் தனது அமுதக் கிரணங்களைச் சொரிய முற்பட்டாள்.
அலைமேல் அலையாக எழுப்பச் செய்து அவனது இதயத்தையே கூத்தாட வைத்துவிட்டாள் ரோகிணி. அவளே அந்த அலைகளாகவும் மறி, பொங்கும் நுரையால் தன் வெண்முத்துப் பல் வரிசையைக் காட்டிச் சிரித்தாள்.
கப்பலின் மேல்தளத்தில் கொடி மரத்தின் அருகில் நின்றுகொண்டே, ‘ரோகிணியை இத்தனை நாட்களாக எப்படித்தான் பிரிந்திருக்க முடிந்ததோ?’ என்று எண்ணி வியந்தான் இளங்கோ. ‘அறுபது நாட்களா அவை? இல்லை! ஒவ்வொரு நாளைக்கும் எத்தனை விநாடிகளோ அவ்வளவும் சேர்ந்த யுகங்கள் அல்லவா அவை!’
அறுபது நாட்கள் பொறுத்தவனுக்கு அதற்குமேல் அரைக்கணமும் பொறுக்க முடியாதுபோல் தோன்றியது. அருகில் நின்று கொண்டிருந்த மாங்குடிமாறனையும் மறந்து வானத்தைப் பார்த்தவாறே, “சிறகிருந்தால் இப்போதே தஞ்சைக்குப் பறந்து போய்விடலாம்” என்று சொல்லி நீண்ட பெருமூச்சுவிட்டன் இளங்கோ.
“பறந்து போய் மகிந்தர் மாளிகையின் மேல் மாடத்தில் குதித்துவிடலாம்! இல்லையா?” என்று கேட்டு மாங்குடி மாறன் சிரித்தான்.
சட்டென்று கோபமாகத திரும்புகிறவன் போல் திரும்பித் தன் சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டே, “மாறா! நீ மிகவும் பொல்லாதவன்!” என்றான் இளங்கோ.
“இந்த மாறன் பொல்லாதவனல்ல; உங்கள் மாறன்தான் மிகவும் பொல்லாதவன்! மாலை நேரமும் மாளிகை நினைவும் வந்துவிட்டதல்லவா?அவன் கரும்பு வில்லெடுப்பான். மலர்க்கணை தொடுப்பான்; பதைபதைக்க வைத்து விடுவான்! இன்னும்...’’
“நீ சும்மா இருக்க மாட்டாய்?” என்ற அதட்டினான் இளங்கோ. மாங்குடிமாறன் தன் வாயை மூடிக்கொண்டான். அவனுக்கு ஓரளவு இளங்கோவின் இனிய நினைவுகளைப் பற்றித் தெரியும்; இன்பக் கனவுகளைப் பற்றித் தெரியும்.முற்றிலும் தெரியாதென்றாலும் ஓரளவு தானாகவே ஊகித்தறிந்து கொண்டிருந்தான் மாறன். நாகைப்பட்டினத்துத் துறைமுகத்தில் அந்த நகரத்து மக்களும் அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்களும் குழுமியிருந்தார்கள். ஆனைமங்கலமும் அங்கே வந்திருந்தது. ஆனால் ஆனைமங்கலம் சோழ மாளிகையில் மகிந்தரின் குடும்பம் தங்கியிருப்பதை இளங்கோ எங்கே கண்டான். அவனுடைய ரோகிணி அவ்வளவு அருகில் இருந்தாள் என்பது அவனுக்கு எப்படித்தெரியும்?
மாலை மயங்கி மதியொளி பொங்கப்போகும் நேரத்தில் மரக்கலங்கள் துறைமுகத்தை அடைந்தன. நாகை நகரத்தின் ஐம்பெருங் குழுத்தலைவர்களும் எண்பேராயத்தின் அதிகாரிகளும் மாலைகள் சுமந்து வந்து இளங்கோவை மலர்க் குவியலுக்குள் அகப்பட்டுத் திணற வைத்தனர். கூட்டத்தினரின் வாழ்த்தொலி வெகுநேரம் வரையில் அடங்கவில்லை.
மகிழ்ச்சி ஆரவாரம் ஒருவகையாக ஓய்ந்தபின்னர், ஐம்பெரும் குழுத்தலைவர்களில் ஒருவர் மெல்ல இளங்கோவை நெருங்கி, “தங்களைக் காண வேண்டுமென்று ரோகணத்து இளவரசியாரும் இங்கு வந்திருக்கிறார்கள்.அதோ அந்த ரதத்தில் இருக்கிறார்கள்” என்று சுட்டிக் காட்டினார்.
“என்ன!” இளங்கோவின் இருதயம் ஒருகணம் துடிப்பை நிறுத்தி, மீண்டும் பன்மடங்கு வேகத்துடன் அடித்துக்கொண்டது. “தஞ்சையிலிருந்து அவர்கள் இங்கு எங்கே வந்தார்கள்?”
விஷயத்தை விளக்கினார் குழுத்தலைவர், விரைந்து ரதத்தை நோக்கிப் பறந்து சென்றான் இளங்கோ. மாறனும் அவனைப் பின்பற்றிச் சென்று ரதத்தை நெருங்காமல் ஓர் ஓரமாக ஒதுங்கிக் கொண்டான். ரதத்தை ஓட்டி வந்திருக்கும் கந்துலனை அழைத்து அவனிடம் பேச்சுக் கொடுத்தான். அவர்கள் தனிமையைக் குலைக்க கந்துலன் மட்டும் அங்கே எதற்கு?
ரதத்தின் திரை விலகியது. இருவருக்கும் என்ன பேசுவது, எப்படிப் பேசுவதென்று விளங்கவில்லை. அத்தனை பெரிய வட்டம், தங்களைச் சூழ்ந்திருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள். கண்ணிமைக்காது இரண்டு சிலைகளென மாறி ஒருவரையொருவர் கண்களால் விழுங்கத் தொடங்கினர். அப்படியும் அவர்கள் பசி தீரவில்லை. ரதத்தின் திரை ஒன்று அவர்கள் முகங்களை மறைத்ததால். இந்த உலகத்தில் தங்கள் இருவரைத் தவிர வேறு யாருமே இல்லை என்ற எண்ணம் அவர்களுக்கு.
“ரோகிணி!” நீண்ட பெருமூச்சுவிட்டான் இளங்கோ. ரோகிணியின் கண்ணிமைகள் படபடத்தன. கருவிழிகள் சிறிது நடுக்கம் கண்டன.
“இளவரசே! இன்று புத்தர் பிரானிடம் நான் வேண்டிக்கொண்டது வீண்போகவில்லை. அவர் கருணை உள்ளவர். உங்களை உயிரோடு என் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார். மறுபடியும் நான் விஹாரைக்குப் போய் அவருக்கு மலர்க் காணிக்கை செலுத்தவேண்டும்.”
“உன்னிடம் எவ்வளவோ பேச வேண்டியிருக்கிறது ரோகிணி. ஆனால் இந்த இடத்தில் எப்படிப் பேசுவது? உன் தம்பி காசிபனை மட்டும் என்னால்
கண்டுபிடித்து உன்னிடம் கொண்டுவர முடியவில்லை. அந்த விஷயத்தில் எனக்குத் தோல்விதான்.”
ரோகிணி அவனறியாமல் தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
“நீங்கள் எப்போது தஞ்சைக்குத் திரும்புகிறீர்கள் இளவரசே?”
“நாளைக்குக் காலையில் புறப்பட வேண்டும். அதற்குள் உன்னைச் சந்தித்துத் தனியே பேச வேண்டும். முடியுமா?”
“இப்போதே என்னுடன் ஆனைமங்கலம் மாளிகைக்கு வரலாமே?”
வருத்தத்துடன் சிரித்தான் இளங்கோ. “தஞ்சை அரண்மனையில் இருந்த இளங்கோ இல்லை நான். ஆசை வெட்கமறியவில்லை. அதனால் இவ்வளவு கூட்டத்துக்கு மத்தியிலும் உன்னைக் காண வந்திருக்கிறேன். இப்போது உன்னோடு மாளிகைக்கு வந்தால் என்னைச் சார்ந்தவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள் தெரியுமா?”
“ஆமாம், என் அப்பாவும் இங்கு வரவில்லை; வந்திருந்தாலாவது அவர் அழைப்பைக் காரணம் சொல்லலாம்.”
“உனக்காக நான் நாளைக்குப் பகல் இங்கு தங்கிச் செல்லட்டுமா? இன்று அவர்களோடு தங்கிவிட்டு. நாளைக்குப் பிற்பகல் ஆனைமங்கலத்துக்கு வருகிறேன்” என்றான் இளங்கோ.
“வேண்டாம். இளவரசே!” என்று நடுங்கியவாறே கூவினாள் ரோகிணி. அவளுடைய குரலின் நடுக்கம் இளங்கோவுக்கு விந்தையாகத் தோன்றியது. நாளைக்கோ. அதற்கு மறுநாளோ மாளிகைக்குக் காசிபனும் வீரமல்லனும் வருவார்கள். இளங்கோவையும் அவர்களையும் சந்திக்க வைப்பதைவிட வேறு வினை என்ன இருக்கிறது?
“ஏன் நான் தங்கினால் என்ன?” என்றான் இளங்கோ.
“என் ஒருத்திக்காக உங்களுடைய கடமையிலிருந்து நீங்கள் நழுவ வேண்டாம். மேலும் எப்போது என் தந்தையார் இங்கு தங்களைக் காண வரவில்லையோ, அப்போது நீங்கள் அங்கு வருவதும் உங்களுக்குப் பெருமை தராது. சரி, நாம் தஞ்சையில் சந்திப்போம்.” ரோகிணியின் குரல் தழுதழுத்தது.
“எனக்கும் உங்களிடம் எவ்வளவோ பேச வேண்டுமென்று ஆசைதான்.”
“எப்படியும் உன்னைத் திரும்பவும் காணாமல் என்னால் இந்த ஊரைவிட்டுப் போக முடியாது.”
“சிறு குழந்தையா நீங்கள்?” ரோகிணி சிரித்தாள்.
“அப்படிய வைத்துக்கொள்” என்று கூறிவிட்டு. “நீ எனக்கு ஓர் உதவி செய்வாயா?” என்று கேட்டான்.
“என்ன?”
இளங்கோவின் இதழ்கள் ரோகிணியின் செவிகளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் எதையோ மெல்லக் கூறின. மேகத்துக்குள்ளே மறைந்திருந்த நிலவு திடீரென்று நீலவானத்தை அடைந்ததுபோல் ரோகிணியின் முகம் பிரகாசித்தது. அவள் செவிகளில் தேனமுதம் பாய்ந்துவிட்டதா?
“ஆகட்டும். இளவரசே! மறந்துவிடாதீர்கள்! சொன்ன சொல் தவறிவிட்டீர்களானால் நான் தஞ்சைக்கு வந்தாலும் உங்களுடன் பேசமாட்டேன்.”
இளங்கோவின் தலை திரைத் துணிக்கு வெளியே வந்தவுடன் ஓடோடிச் சென்று ரதத்திலேறிக் கொண்டு குதிரைகளைத் திருப்பினான் கந்துலன்.
“இளவரசரின் முகம் இப்போதுதான் இளவரசர் முகம் மாதிரி இருக்கிறது!” என்று இளங்கோவை வரவேற்றான் மாங்குடி மாறன்.
“நீ இங்கேயா இருக்கிறாய்?”
“நான் இங்கே இல்லாவிட்டால் இதுவரையில் கந்துலனல்லவா ரதத்தினருகேயிருந்து கொண்டு உங்கள் பேச்சை உற்றுக் கேட்டிருப்பான்!”
ரோகிணியின் ரதம் கூட்டத்துக்குள்ளே மெல்லச் சென்று கொண்டிருந்தபோது அவள் கண்கள் கூட்டத்திலிருந்த ஓர் உருவத்தைக் கண்டு திடுக்கிட்டன. காளமுகன் ஒருவன் அங்கே நின்று தன் கழுகுக் கண்களால் ரதத்தின் போக்கையே கவனித்துக்கொண்டிருந்தான். “ஆ!இன்னும் வீரமல்லன் திருவாரூக்குத் திரும்பவில்லையா? இங்கு எதற்காக நிற்கிறான்?”
“கந்துலா! ரதத்தை நிறுத்து!” என்று அதட்டினாள் ரோகிணி.
திரும்பவும் இளங்கோவைப் பார்த்து எச்சரிக்க வேண்டுமென்ற துடிப்பு அவளுக்கு. ஆனால் உடனே அதன் பின் விளைவுகளை நினைத்துப் பார்த்துத் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள் ரோகிணி. ரதம் முன்போலவே நகர்ந்தது.
அன்று நள்ளிரவில் நாகைப்பட்டினம் சோழ மாளிகையிலிருந்து யாருமறியா வண்ணம் ஒரு குதிரையில் ஆனைமங்கலத்தை நோக்கி விரைந்தான் இளங்கோ. அவனுக்குத் தெரியாமல் அவனையே கவனித்து வந்து மற்றொருவனும் அவனுக்குப் பின்னால் கிளம்பினான். மறைந்து மறைந்து அவன் இளங்கோவைத் தொடர்ந்து சென்றான்.
பெரிய சால்வைகளைப் போர்த்திக் கொண்டு உருமாறிச் சென்ற இரண்டு மனிதர்களை அந்த நள்ளிரவில் இரண்டு குதிரைகள் சுமந்து கொண்டு பறந்தன.
தொடரும்
Comments
Post a Comment