Thursday, January 3, 2013

வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,37. வீரம் எங்கே?

பாகம் 2 ,37. வீரம் எங்கே?


வைகாசிப் பௌர்ணமி நிலவு அந்த வையகத்தையே மோகனக் கனவில்
ஆழ்த்தியிருந்தது, நாகைப்பட்டினத்திலிருந்து ஆனைமங்கலம் செல்லும்
சாலையில் கனவுலகத்தில் சஞ்சரிக்கும் மனோநிலையுடன் இளங்கோ
சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தான். ஒரே அரண்மனைக்குள் அருகிலிருந்த
மாளிகையில் ரோகிணி தங்கியிருந்தபோதுகூட அவளைக் காணவேண்டுமென்ற
ஆவல் இளங்கோவுக்கு இவ்வளவு மிகுதியாக எழுந்ததில்லை.

இடத்தையும் காலத்தையும் கடந்துசென்று காணும் துடிப்பில்தான்
காதலின் ரகசியம் மறைந்திருக்கிறது போலும். மாலையில் அவளைச் சந்தித்தது
அவனுக்குச் சந்திப்பாகவே தோன்றவில்லை. நீண்ட நாட்கள் பட்டினி
கிடந்தவனுக்கு முன்னால் அறுசுவை உணவு அரைக்கணம் காட்டி
மறைத்ததுபோல் இருந்தது அந்தச் சந்திப்பு. பசியை அது மேலும்
கிளறிவிட்டதே தவிர, அடக்கவில்லை.

உருவம் பெறாத ஓர் இன்ப கீதம் இளங்கோவின் இதயத்திலிருந்து
ஊற்றெடுத்துப் பொங்கியது. சுற்றுப்புறத்தில் பொழிந்த நிலவையும் அதன் கை
வண்ணத்தால் உருமாறிய இயற்கை அழகையும் அவன் தன் மனங்கொண்ட
மட்டும் வாரிப் பருகினான். அப்போதும் அவன் தாகம் தணியவில்லை.

குதிரைக் குளம்பொலி அவன் மனத்துடிப்பைப் பிரதிபலித்தது.
குதிரையின் வேகம் அவன் மன வேகத்துடன் போட்டியிட முடியாமல் பின்
தங்கியது. நடுவானத்தில் மிதந்து கொண்டிருந்த நிலவை அவன் அடிக்கடி
அண்ணாந்து பார்த்துப் பெருமூச்செறிந்தான். ரோகிணிக்கும் அவனுக்கு
மிகுந்த இடைவெளி வையகத்துக்கும் வானத்துக்கும் இருந்த இடைவெளி
போன்றதுதானா?

ஆனைமங்கலம் சோழ மாளிகை அவன் கண்களுக்குத் தெரிந்தது.
பகலில் பலமுறை அதை அவன் கண்டு களித்திருக்கிறான். ஆனால் நிலவு
பொழியும் இரவு நேரக் காட்சியே தனிக் காட்சிதான். அல்லது அவனுடைய
ரோகிணி அங்கிருப்பதால் அவன் கண்களுக்குமட்டிலும் அது அப்படித்
தோன்றுகிறதோ? தூரத்து மரத்தடியில் குதிரையைக் கட்டிவிட்டு திருடனைப்போல்
பதுங்கிப் பதுங்கி நடந்தான் இளங்கோ. அதே மாளிகைக்கு அவன் பகல்
பொழுதில் வந்திருந்தால் அவனுக்கு நடைபெறக்கூடிய உபசாரங்களே வேறு.
காவலர்கள் வாழ்த்தொலி எழுப்பி அவனுக்கு வணக்கம் செலுத்தியிருப்பார்கள்;
தாழ்ந்த சிரங்களுடன் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருப்பார்கள்.

இப்போது அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டுவிட்டாலோ-? ‘திக்திக்’
கென்று அடித்துக்கொண்டது இளங்கேவின் நெஞ்சு. அவன் இப்போது
காவலர்களின் காவலன் இல்லை; கள்வன்!

மாளிகையின் பின்புறம் நிழல் படிந்த ஒரு மூலைக்குச் சென்று எதையோ
உற்றுப்பார்த்தான் இளங்கோ. பிறகு மேலே தலயை உயர்த்தினான். சந்திர
வட்டத்துக்கு நேர் கீழே மேல் மாடத்தில் மற்றொரு சந்திர வட்டம்
தெரிந்தது. மௌனமாக அது அவனைப் பார்த்துக் கையசைத்து
மாடத்திலிருந்து கீழே தொங்கிய நூலேணி போன்றதொரு பொருளைச் சுட்டிக்
காட்டியது.

அவ்வளவுதானே! இரண்டே விநாடிகளில் மாடத்தில் போய்க் குதித்தான்
இளங்கோ.

“என்ன ரோகிணி! உன்னுடைய பட்டாடைகளையே முடிந்து எனக்கு
நூலேணியாக்கி விட்டாயா?”

“நீங்கள் வழுக்கி விழுவதை வேடிக்கை பார்க்கலாம் என்று
நினைத்தேன்.” ரோகிணி சிரித்தாள்.

“என் பிடி இரும்புப் பிடி, ரோகிணி! வழவழப்பாக இருந்தாலென்ன?
மென்மையாக இருந்தால் என்ன? உறுதியாக மட்டும் இருந்தால் போதும்.
மென்மையிலும் உறுதியிருக்கிறதல்லவா?”

நீங்கள் பொல்லாதவர்!” என்று சிணுங்கிய ரோகிணியை, “நீயும்
பொல்லாதவள்தான்! இல்லாவிட்டால் எல்லோரும் உறங்கும் வேளையில்
இப்படி எனக்காகக் காத்து நிற்பாயா?” என்று சொல்லி, அவள் மென்கரம்
பற்றினான் இளங்கோ. அதன் மென்மையில் அவனுக்கு உறுதி தென்பட்டது.

“மெதுவாகப் பேசுங்கள்! தந்தையார் வழக்கமாக இரவில் உறங்குவதே
இல்லை. சிறு சத்தம் கேட்டால்கூடக் கண் விழித்து என்னைத் தேடி
வந்துவிடுவார்!” என்றாள ரோகிணி.

“வந்தால் என்ன?”

“அப்படியில்லை. இன்று மாலை நான் கடற்கரைக்கு வருவதற்குப்
பட்டபாடு பெரும்பாடாகிவிட்டது. என்னை அவரால் தடுக்கவும் முடியவில்லை;
தடுக்காதிருக்கவும் முடியவில்லை.”

ஒரு கணம் யோசித்துவிட்டு, “உண்மைதான்” என்று பெருமூச்செறிந்தான்
இளங்கோ. “ரோகணத்துக்கு நான் மீண்டும் புறப்பட்டுச் சென்றதை அவர்
விரும்பியிருக்க மாட்டார். கசிபனுக்கு என்னால் ஏதும் நேர்ந்து விடுமோ
என்ற கவலை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். இனி நாம் முன்னைவிடக்
கவனமாக இருக்க வேண்டியதுதான்.”

ஒருவருக்கொருவர் ஏதும் பேசிக்கொள்ளாமல் அந்த நிலவில்
அமர்ந்திருந்தனர். அவர்களுடைய கண்கள் பேசின; மனங்கள் பேசின;
உயிர்கள் ஒன்றின.

“ரோகிணி! இப்படியே சிறிது நேரம் உன்னருகில் அமைதியாக
அமர்ந்திருந்துவிட்டு, உன்னிடம் நன்றி சொல்லிப் போவதற்குத்தான் நான்
இங்கு வந்தேன். முன்பு உன்னிடம் எவ்வளவோ பேசவேண்டுமென்றுதான்
நினைத்தேன். இப்போது எதையுமே பேசத் தோன்றவில்லை. என் நன்றியை
ஏற்றுக்கொள். நான் ஈழத்துக்குப் போகும்பாது நீ எனக்குச் சில யோசனைகள்
சொல்லி அனுப்பினாயல்லவா?”

“அங்கே என்ன நடந்தது?” என்று கேட்டாள் ரோகிணி.

“அங்கு மறைந்திருந்த பாண்டிய நாட்டாரைப் பூண்டோடு அழித்தேன்.
பத்திரமாய்த் திரும்பி வந்தேன். அமைச்சர் கீர்த்தி மட்டும் தப்பிவிட்டார்.
உன் தம்பியைக் கண்ணால்கூடக் காண முடியவில்லை.”

“என்ன! அத்தனை வீரர்களையுமா அழித்தீர்கள்?”

“எத்தனை பேர் இருந்தால் என்ன?”

ரோகிணி மனம் திறந்து அவனிடம் பேசினாள். “எனக்கு உங்களுடைய
வீரம் என்கிற முரட்டுத்தனம் சிறிதுகூடப் பிடிக்கவில்லை. ஆனால் அதுவே
எனக்குப் பெருமையாகவும் இருக்கிறது. எனக்குப் பிடிக்காத அந்தச்
செய்கைக்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன்; போற்றுகிறேன். இளவரசே!
பகைவராக என்னிடம் வந்த நீங்கள் என்னைச் சேர்ந்தவர்களையே நான்
பகைக்கச் செய்துவிடுவீர்கள் போலிருக்கிறது.”

“ரோகிணி! நான் யாரையுமே பகைக்கவில்லை, நானும் என்னைச்
சேர்ந்தவர்களும் பத்திரமாக வாழவேண்டுமென்றே நினைக்கிறேன்.
என்னிடமும் நாட்டிடமும் பகைமை பாராட்டாத எல்லோரும் என்னைச்
சேர்ந்தவர்கள்தாம். உன்னிடம் நான் கொண்டிருக்கும் பற்றுதலை எப்படிச்
சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.”

“நீங்கள் ஒன்றுமே சொல்லவேண்டாம். உங்கள் முகம் எல்லாவற்றையும்
என்னிடம் சொல்லிவிடுகிறது” என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டாள்
ரோகிணி.

இந்தச் சமயத்தில் தூரத்து மரங்களிடையே ஏதோ சலசலப்புச் சத்தம்
கேட்டது, இருவரும் ஒரு கணம் திடுக்கிட்டனர். ஆனால் இளங்கோ அதை
அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. மரத்தடியில் கட்டிவிட்டு வந்த
குதிரையின் நினைவு வந்தவுடன் அவன் தனக்குள்ளாகவே சிரித்துக்
கொண்டான்.

ஆனால் ரோகிணி அடியோடு பதறிப் போனாள். கீழே தொங்கிக்
கொண்டிருந்த ‘பட்டேணி’யை இழுத்து மேலே போட்டாள், பீதியோடு சத்தம்
வந்த திக்கையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

அவளது பயத்தை அப்பொழுது நீக்க விரும்பாத இளங்கோ
கலக்கமின்றி அவளை வேடிக்கை பார்த்து நகைத்தான்.

ரோகிணிக்கு மாலையில் கடற்கரையில் அவள் கண்ட வீரமல்லனின்
நினைவு வந்துவிட்டது. ‘இரவுக்குள் திருவாரூருக்குத் திரும்ப வேண்டுமென்று
துடித்த வீரமல்லன் அங்கே போகாமல் ஏன் கடற்கரையில் சுற்றிக் கொண்டி
ருந்தான்? குறிப்பிட்ட நேரத்தில் காசிபனைச் சந்திக்காவிட்டால் காசிபன் திரும்பியிருப்பானே? அல்லது வேறு யாரையாவது காசிபனிடம்
அனுப்பி வைத்துவிட்டு அவன் இங்கே அலைந்து கொண்டிருக்கிறானா?’

கடற்கரையிலேயே அவனை இளங்கோவிடம் காட்டிக் கொடுத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அது அவள் தன் தந்தைக்குக் கொடுத்திருந்த வாக்கை மீறியதாகும். மகிந்தருக்கு அவர் மகளே துரோகம் செய்வதா?

துரோகம் இருக்கட்டும். வீரமல்லனின் துணையில்லாமல் எப்படி அவள்
தன் தம்பியைச் சந்திக்க முடியும்? காசிபனின் உயிரும் உண்மைகளும்
வீரமல்லனிடம் ஊசலாடிக் கொண்டிருக்கும்பாது அவள் என்னதான் செய்ய
முடியும்?

இளங்கோ கலகலவென்று நகைத்ததைக் கேட்டு, அவனை மருண்டு
நோக்கினாள் ரோகிணி.

“பயப்படாதே, ரோகிணி! என்னுடைய குதிரையை அருகில் கட்டிவிட்டு
வந்திருக்கிறேன். நிலவு பூத்த இரவல்லவா? அதற்கும் தன் துணைவியின்
நினைவு வந்திருக்கும். அருகில் வா! நான் இருக்கும்போது ஏன் இந்தப் பயம்
உனக்கு?” என்றான்.

“நீங்கள் இங்கிருப்பதால் உங்களுக்காகத்தான் அஞ்சுகிறேன்” என்றாள்
ரோகிணி.

“அஞ்சாதே! யாரும் வந்தால் உன்னையே எடுத்துக் கொண்டு என்
குதிரைக்குத் தாவி விடுகிறேன்.”

அஞ்சுகிற பெண்ணின் துடிப்பில் ஓர் அபூர்வமான அழகு
மறைந்திருக்கிறது. அந்தக் காட்சியை அணு அணுவாக அவள் கண்களில்
கண்டு மயங்கினான் இளங்கோ. அச்சம் அவளுக்கு மிகுதியாக மிகுதியாக
இளங்கோவுக்கு ஆனந்தம் மிகுந்து வந்தது.

அவளை எள்ளி நகையாடினான். பரிகசித்துச் சிரித்தான்.
வேண்டுமென்றே அவளை அச்சுறுத்தி வேடிக்கை பார்த்தான்.

உண்மையாகவே அவள் கலங்கித் தவிக்கிறான் என்பதை ஏனோ அந்த
இளங்கன்று இன்னும் அறியவில்லை.

இதற்குள் மாடத்தின் பின்புறத்திலிருந்து ஒரு நிழலுருவம் அடிமேல் அடிவைத்துப் பதுங்கி பதுங்கி இவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது. அதை இளங்கோவும் கவனிக்கவில்லை; ரோகிணியும் கவனிக்கவில்லை.

ஆனால் ரோகிணியின் உள்ளத்துக்குள்ளே மட்டிலும் ஏதோ ஒரு
பயங்கரக் குறுகுறுப்பு குடிகொண்டு விட்டது. ஒவ்வொரு கணமும் அவள்
தனக்குள் புலனாகாத பேராபத்தை எதிர்பார்க்கத் தொடங்கினாள்.

“ரோகிணி, வீணாக நடுங்கி இந்தப் பொன்னான நிலவைக் கண்ணீரால்
கழுவாதே, ரோகிணி!”

“இளவரசே! தயவுசெய்து இப்போதே இங்கிருந்து கிளம்பி விடுங்கள்.
காவலர்களின் கண்களிலோ, என் தந்தையார் கண்களிலோ நீங்கள்
பட்டுவிடுவதை நான் விரும்பவில்லை. உங்கள் பெருமைக்கு அது
இழுக்காகிவிடும்.”

“அப்படியானால் நீயும் வா! கடற்கரைச் சோலையில் எந்தக்
காவலர்களும் இருக்க மாட்டார்களல்லவா?”

விளையாட்டுக்காகவும் அவளுக்குத் தைரியமூட்டுவதற்காகவும் அவளைப்
பற்றித் தன்னோடு வரும்படி அழைத்தான் இளங்கோ. ரோகிணியின்
நிலைமட்டிலும் வேறுவிதமாக இருந்திருந்தால் அவனது குழந்தைத்தனத்தைக்
கண்டு விழுந்து விழுந்து சிரித்திருப்பாள்.

இளங்கோவுக்கு மெய்யாகவே கோபம் வந்துவிட்டது. “உன் முகத்தில்
சிரிப்பு வராதவரையில் உன்னை நான் விடப்போவதில்லை” என்று
வெடுக்கென்று அவளைப் பற்றி இழுத்தான்.

இருளிலிருந்து இப்போது வேறு ஒரு பயங்கரச் சிரிப்பொலி கிளம்பியது
“உன்னையும் நான் உயிரோடு விட்டு விடப்போவதில்லை” என்று கரகரப்பான
குரல்.

பளீரென்று சூலாயுதம் ஒன்று இளங்கோவின் மார்பைக் குறிவைத்து
நெருங்கவே, ரோகிணி அலறிக்கொண்டே இளங்கோவின் மார்பில் சாய்ந்தாள்.
அவள் முகத்தில் சிறு கீறலை ஏற்படுத்திய சூலாயுதம் இலேசாக நடுங்கிச்
சிறிது தயங்கியது. இளங்கோ வீரன்தான், ஆனால் இதுவரை காதல் உணர்ச்சி அவன் நெஞ்சில் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததால். இந்த எதிர்பாராத
கொடுஞ்செயலிலிருந்து எப்படித் தப்புவதென்று அவனுக்கு விளங்கவில்லை.

ஒரே ஒரு கணம் அவன் செயலிழந்து செய்வதறியாது நின்றான்.
சூலாயுதம் பிடித்த கரம் அதை நன்றாகப் பாய்ச்சியிருந்தால் அப்போது
ஈருயிரும் ஓருயிராக ஒன்றிப் பிரிந்திருக்கும்.

தொடரும்

                             

No comments:

Post a Comment