வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -38- இருவருக்கிடையில்...




போர்க்களமே தங்கள் வாழ்வாகக் கொண்டவர்களுக்கும், வாழ்க்கையையே ஒரு போர்க்களமாக அமைத்துக் கொண்டவர்களுக்கும் மற்ற எல்லோரையும்விட சமயோசித புத்தி மிகுதியாகத் தேவைப்படுகிறது, எதிர்பாராத சமயங்களில் எதிர்பாராத இடங்களிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பலாம்; எந்த வேளையிலும் எதுவும் நேரலாம். அந்தச் சம்பவங்களின் போது தவறிவிட்டால் பிறகு அதற்காக மிகவும் வருந்த வேண்டியிருக்கும்.

இளங்கோ சமயயோசித புத்தியுள்ள வீரன்தான். ஆனால் அவனுக்கு அருகில் இப்போது ஒரு பெண்ணல்லவோ இருக்கிறாள்? பொறி தட்டிப்போய் நின்ற இளங்கோவுக்கு ஒருகணம் என்ன செய்வதென்றே புரியவில்லை. கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு சூலாயுதத்தைப் பற்றியிருந்த உருவத்தைப் பார்க்க முயன்றான். நிலவொளி படாத சுவரின் இருளில் பதுங்கியிருந்தது அந்த உருவம். மனித உருவமாகவே அது தோன்றவில்லை.

இளங்கோவுக்கு வந்த ஆபத்து அவனையே தாக்கியிருந்தால் கூட இளங்கோவின் சமயோசித புத்தி அவனுக்குக் கைகொடுத்திருக்கும். ஆனால் ரோகிணி குறுக்கே விழுந்து அதையும் தடுத்து விட்டாளே! ரோகிணியின் கத்தி பதிந்த சூலாயுதத்தின் கூர்முனையைக் கண்டவுடன் இளங்கோவின் மதிக் கூர்மை மழுங்கி விட்டதா! தன்னுயிரைப் பொருட்படுத்தாதவன் பெண்ணுயிருக்காகப் பேதைமை கொண்டு விட்டானா?

எல்லாம் நொடிப் பொழுதுக்குத்தான்.

சட்டென்று ரோகிணியைப் பற்றி ஒதுக்கிவிட்டு, சூலாயுதத்தை எட்டிப் பிடித்தான் இளங்கோ. பகைவனின் பிடியிலிருந்து அது விடுபடுவதாகவே இல்லை. அதைக் கொண்டே அவனைப் பின்னால் தள்ளி, தரையில் வீழ்த்தி அவன் மார்பில் ஏறி அமர்ந்தான். சூலாயுதம் கீழே விழுந்தவுடன் இருவரும் சில விநாடிகள் கட்டிப் புரண்டார்கள்.

பகைவனும் வலிமை மிக்கவன் என்பதை அறிந்து கொள்ள இளங்கோவுக்கு வெகு நேரமாகவில்லை. ஆயினும் ரோகிணி மட்டும் மீண்டும் குறுக்கே வந்து விழுந்திருக்காவிட்டால் அந்தப் பகைவனை அதே இடத்தில் அன்று குற்றுயிராக்கியிருப்பான் இளங்கோ.

ரோகிணி ஒதுங்கி நிற்காமல் அடிக்கடி குறுக்கே வந்து விழுந்தாள்; பதறினாள்; தவித்தாள்; துடித்தாள்; எனினும் இளங்கோவை விட்டு விலகவில்லை.

‘எனக்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு இப்படி என்னைத்தடை செய்கிறாளே!’ என்று ஆத்திரப்பட்டுக் கொண்டு இளங்கோ பகைவனை மறந்து பரபரவென்று அவளை ஒருபுறம் இழுத்துத் தள்ளினான். ரோகிணியின் பக்கம் திரும்பிய இளங்கோவின் கவனத்தைத் தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை பகைவன். கீழே கிடந்த சூலத்தை எடுத்துக்கொண்டு ஆத்திரத்தோடு இளங்கோவின் மேல் பாய்ந்தான்.தம் இரு கரங்களாலும் அதை இளங்கோவின் மார்பில் ஆழமாகப் பாய்ச்சி விடவேண்டுமென்பது அவன் எண்ணம்.

அது அவன் நினைத்தபடியே நிறைவேற்றியிருந்தால்கூட வியப்பில்லை. இளங்கோவின் முதுகுக்குக் கண்கள் கிடையாது அவன் அப்போது ரோகிணியின் பக்கம் திரும்பியிருந்தான். அதற்குள் மற்றொரு காலடி யோசை கேட்டது. ஓங்கப் பெற்ற சூலாயுதம் இளங்கோவின் முதுகில் பாய்வதற்குள் யாரோ ஒருவன் அதைப் பின்புறமிருந்து பற்றினான். பகைவனும் அந்தப் புதியவனும் இருளுக்குள் கட்டிப் புரளத் தொடங்கினார்கள்.

இளங்கோவுக்கு இது கனவா நனவா என்ற ஐயமெழுந்துவிட்டது. யார் இந்தப் பகைவன்? எதற்காக அவர்கள் இப்படி மோதிக்கொள்கிறார்கள்? ஒன்றும் விளங்காமல் ரோகிணியும் இளங்கோவும் ஒருவரையொருவர் பார்த்து விழித்துக் கொண்டார்கள். எதிரில் போரிடுபவர்களை உற்றுப் பார்த்தவண்ணமே, “ரோகிணி நீ உன் அறைக்குப் போய்விடு! ஓடிவிடு! நான் உன்னைப் பிறகு சந்தித்துப் பேசுகிறேன்” என்றான் இளங்கோ.

அவள் போகவில்லை; மறுத்துவிட்டாள்.

“போ ரோகிணி! நான் இவர்களைக் கவனித்துக் கொள்ளுகிறேன்; நீ

போ!”

“ஊஹு ம் !”

இளங்கோவுக்கு அதன் பிறகு தன்னையோ அவளையோ கவனித்துக்கொள்ள வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. சூலாயுதம் தாங்கி வந்த மனிதன் புதியவனின் தாக்குதலுக்கு அஞ்சி ஓட்டமெடுக்கத் தொடங்கினான். மாடத்திலிருந்து வெளிப்புறம் இறங்கினான். அங்கிருந்து அருகில் நின்ற மரத்துக்குத் தாவினான். பின்னால் வந்தவனும் அவனை லேசில் விடுவதாக இல்லை.

இருவருடைய உருவங்களும் கீழே மரத்தடியில் சிறிது நேரம் முட்டி மோதிக்கொண்டன. பின்னர் சூலந்தாங்கிய பேய்க்கணம் வெகுவேகமாக ஓட்டம் பிடித்தது; இருளில் மறைந்தது. பின்னால் சென்றவனும் மறைந்தான்.

மாடத்தின் கைப்பிடிச் சுவரருகே நின்ற இளங்கோவுக்குத் தானும் இறங்கி அவர்களின் பின்னே செல்லவேண்டும் போல் தோன்றியது.

“எப்படியாவது அந்தப் பேயுருக் கொண்டவனைப் பிடிக்க வேண்டும், பிடித்து அவன் யார் என்பதைப் பார்க்கவேண்டும். இந்த வேளையில் அவன் எங்கிருந்து வந்தான்? என்னிடம், என்ன பகைமை அவனுக்கு?” 

ரோகிணி அவனைப் போகவிடாமல் இறுகப் பற்றிக்கொண்டாள்.

“வேண்டாம், இளவரசே! நகரத்துக் காவலாளிகள் யாராவது மாற்றுருவில் வந்திருப்பார்கள். முன்னால் வந்தவனுக்குத் தாங்கள் யாரென்பது தெரியாமல் இருந்திருக்கலாம். பின்னால் வந்தவனுக்குத் தெரிந்திருக்கலாம்! வேறு யார் இங்கே வரப்போகிறார்கள்?”

“எங்களுடெய வீரர்களில் என்னைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதிலும் நான் நிலவில் நின்று கொண்டிருந்தேன். இருளில் மறைந்து நின்றவன் என்னை நன்றாகப் பார்க்காமல் என்மேல் பாய்ந்திருக்க மாட்டான்.”

இளங்கோ சற்று நேரம் எதையோ யோசித்தான். ரோகிணியின் பேச்சில் ஏதும் மறைபொருள் இருப்பதாக அவன் எண்ணவில்லை. அறியாமையில் அப்படி நினைப்பதாகக் கருதினான். இதற்குள் கீழே ஆளரவம் கேட்டது. மகிந்தர் விழித்துக் கொண்டார் போலும்! “அம்மா! ரோகிணி!” என்று கூறி அழைத்துக்கொண்டே அவர் மேல்மாடத்துக்கு வரலானார்.

“சென்று வாருங்கள், இளவரசே!” ரோகிணி பதறினாள்.

“ரோகிணி!” என்று மெல்ல அவள் முகத்தைப்பற்றி, “முன்பு பலமுறை நாம் சந்தித்ததைவிட இந்தச் சந்திப்பு எனக்கு எப்போதும் நினைவிருக்கும், ரோகிணி!” என்றான் இளங்கோ. “கட்டுக்காவல்களை மீறி, எளிதில் பெறக்கூடிய இன்பத்தையே தொலைவில் வைத்து அதை எட்டிப்பிடிக்க முயல்வதில் ஓர் உற்சாகம் பிறக்கத்தான் செய்கிறது. இந்த இரவின் சந்திப்பும் அதன் சலசலப்பும்கூட எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. வெகுநாட்களுக்குப் பிறகு நாம் நெருங்கினோம்; ஆனால் இன்னும் நமக்கு நற்காலம் வரவில்லை என்பது இந்தக் குறுக்கீடால் தெரிகிறது; பொறுத்திருப்போம் - இப்போதைக்கு நான் போய் வரட்டுமா?”

அவசரமாகத் தலையசைத்துத் தான் முன்னதாகவே தொங்க விட்டிருந்த நூலேணியைச் சுட்டிக் காட்டினாள் ரோகிணி. அவன் அதில் இறங்கிச் சென்ற பிறகு அதை மடித்து ஒரு மூலையில் பதுக்கிவிட்டுத் தன் தந்தையிடம் வந்தாள். “மேல் மாடத்தில் ஏதோ சத்தம் கேட்டாற்போலிருந்தது, அப்பா! எழுந்து வந்து பார்த்தேன், யாரையுமே காணவில்லை.”

“இரவு நேரத்தில் நீ தனியாக எழுந்து வரலாமா? என்னை எழுப்பிக் கொண்டு வந்திருக்கக் கூடாதா?” என்றார் மகிந்தர்.

ரோகிணி தன் தந்தைக்குத் தெரியாமல் மெல்ல நகைத்துக் கொண்டாள்.

கீழே இறங்கிவந்த இளங்கோ சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே நிழல் படர்ந்த இடங்களாகத் தேடித் தன்னை மறைத்துக்கொண்டு நடந்தான்.

குதிரையைக் கட்டியிருந்த மரத்தடிக்குச் சற்றுத் தூரத்தில் ஏதோ ஓர் உருவம் அவனைக் கண்டு விட்டுப் புதருக்குள் பதுங்குவது போல் தோன்றியது. திடுக்கிட்டுத் தன் உடைவாளை உருவினான் இளங்கோ; அவன் மேல் பாய்ந்தான்.

“பொறுங்கள் இளவரசே, கொஞ்சம் பொறுங்கள்!”

“யாரது நீயா?- நீ இங்கு எங்கே வந்தாய்?” என்றாள் இளங்கோ வியப்புடன். 

“தாங்கள் எங்கு இங்கே வந்தீர்கள்?” மாங்குடிமாறன் சிரித்தான்.

“துணையில்லாமல் இப்படி நள்ளிரவில் தனியே புறப்பட்டால், நாளைக்கு நாம் தஞ்சை திரும்புவது எப்படி? கடற்கரையில் தாங்கள் இளவரசியாரிடம் பேசிக்கொண்டிருந்த போதே ஏதாவது நடக்கும் என்று பயந்தேன். பயந்ததைவிட அதிகமாகவே நடந்துவிட்டது!”

“அப்படியானால்,,,,”

“ஆமாம், அந்தக் காளமுகன் தப்பிவிட்டான். சுடலையிலிருந்து நேரே சாம்பல் பூசிக்கொண்டு வந்திருப்பான் போல் தெரிகிறது. அவனுடைய உருவத்தைப் பார்த்த அருவருப்பு இன்னும் எனக்குத் தீரவில்லை. அதனாலேயே அவனை விட்டு விட்டேன்.”

“எவனோ ஒரு காளமுகன் எதற்காக இந்த வேளையில் மாளிகையின் மேல் மாடத்துக்கு வரவேண்டும்?” இளங்கோவின் புருவங்கள் நெரிந்தன.

மாங்குடி மாறனே அதற்கும் விளக்கம் கூறினான்.

“சர்வ அலங்காரங்களும் பொருந்தியுள்ள பெண்களாகத் தேடிப் பார்த்து, சக்தி வழிபாட்டுக்கு அவர்களை வயப்படுத்தி விடுவது காளமுகர்களின் வழக்கம். ரோகணத்து இளவரசியாரின் அழகைப் பற்றி நான் இளவரசரிடம் கூறவேண்டியதில்லை. மேலும் புத்த மதத்தைச் சார்ந்தவர்களிடம் காளமுகர்களுக்கு உள்ளூரப் பகைமையுண்டு. பகைமைக்காகவும் வழிபாட்டுக்காகவும் அவன் இளவரசியாரைக் கைப்பற்றிச் செல்ல வந்திருக்கலாம். அந்த வேளையில் தாங்கள் அவனுக்கு இடையூறாகக் குறுக்கே நின்றிருக்கிறீர்கள்.”

“நான் இதை நம்பவில்லை, மாறா!”

“நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, புறப்படுங்கள் இளவரசே!” என்று துரிதப்படுத்தினான் மாறன். “நாகைப்பட்டினம் சோழமாளிகையில் இருப்பவர்கள் நம்மைத் தேட முற்படுவதற்கு முன்பு நாம் அங்கு போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதிகாலையில் தஞ்சைக்குக் கிளம்ப வேண்டும்.”

“இல்லை மாறா! இன்று நடந்த விஷயத்தை இப்படியே விட்டுவிடுவது சரியென்று எனக்குத் தோன்றவில்லை. இதற்குப் பின்னால் ஏதாவது இருக்கக்கூடும். நீங்கள் எல்லோரும் நாளைக்கே புறப்படுங்கள். நான் மட்டிலும் ஓரிரண்டு தினங்கள் தங்கிவிட்டுத் திரும்புகிறேன்.”



“தங்களைத் தனியே விட்டுவிட்டு இனி எங்குமே என்னைப் போகச் சொல்லாதீர்கள், இளவரசே!” என்று நாத்தழுதழுக்கக் கூறினான் மாறன்.

“அதுவும் நல்லதுதான். நாளைக்கு எல்லோருமே நாகையிலிருந்து புறப்படுவதுபோல் போக்குக்காட்டி நகரத்தின் எல்லை வரையில் சென்று விடுவோம். ரதத்துக்குள் செல்வதால், நம்முடைய வீரர்கள் பலருக்கு நமது திட்டம் தெரியப் போவதில்லை. பிறகு எல்லையைக் கடந்தவுடன் நான் சொல்லுகிறபடி நீ நடந்துகொள்.”

“சித்தம் இளவரசே!”

தனித்தனியே ஆனைமங்கலத்துக்குச் சென்ற இரண்டு குதிரைகளும் இப்போது ஒன்றாகவே நாகைப்பட்டினம் சோழ மாளிகைக்குத் திரும்பின.

தொடரும்






Comments