வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 2 -39-ஆசையும் பாசமும்.





மறுநாள் கருக்கிருட்டு நேரத்தில் இளங்கோவின் காலாட்படை நாகைப்பட்டினத்திலிருந்து தஞ்சையை நோக்கிக் கிளம்பியது. பொழுது நன்றாகப் புலர்ந்தவுடன் அவனுடைய குதிரைப் படையினரும் புறப்பட்டார்கள். அவர்களுடன் ஒன்றாக இளங்கோவும் ரதத்தில் கிளம்பினான். வேண்டுமென்றே இளங்கோ தன் வீரர்களை ஆனைமங்கலம் வழியாகத் தஞ்சை நெடுஞ்சாலையை அடையச் செய்தான். நாகைப்பட்டினத்து மக்களும் ஆனைமங்கலத்து மக்களும் அவனுக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பினர்.

ஆனைமங்கலம் சோழ மாளிகையின் வழியே அவனுடைய படை அணி சென்று கொண்டிருந்தபோது, மகிந்தர் வெளியே வந்து தனக்கு வாழ்த்துக் கூறுவார் என்று இளங்கோ எதிர்பார்த்தான். அவருக்கு அது விரும்பாத விஷயமாக இருந்தாலும் பண்புக்காகவாவது அவர் மற்றவர்களுடைய உணர்ச்சியில் பங்கு கொள்ளக்கூடும் என்று நினைத்தான்.

ஆனால் அங்கே காவலுக்கு நின்ற ஒரு சில வீரர்களைத் தவிர யாருமே வெளியில் வரவில்லை. காவல் வீரர்கள் மட்டிலும் வாழ்த்தொலி எழுப்பினார்கள். அவர்கள் சோழ நாட்டு வீரர்கள்.மேல் மாடத்தில் ரோகிணி தனியே நின்றுகொண்டு கையசைத்தாள். மகிந்தருடைய புறக்கணிப்பால் சிறிது புண்பட்டிருந்த இளங்கோவின் மனதுக்கு

இது ஆறுதலாக இருந்தது. அவளுடைய சைகையைப் புரிந்துகொண்டவன் போல் தானும் கையசைத்துவிட்டு, ரதத்திலே நேரே திரும்பி அமர்ந்து கொண்டான்.

“பகை நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் பண்புடன் விருந்தினராக நடத்துகிறோம் நாங்கள். ஆனால் மகிந்தருடைய மனம் இந்த அளவுக்குக்கூட விட்டுக் கொடுக்க மறுக்கிறதே!” என்று மனம் பொருமினான் அவன்.

முதல் நாள் இரவு மாறனுடன் செய்த முடிவை மாற்றிக்கொண்டு நேரே தஞ்சைக்குப் போக விரும்பியவன். இதனால் திரும்பவும் தன் பழைய முடிவுக்கே வந்துவிட்டான். ஆனைமங்கலத்தின் எல்லையைக் கடந்து சென்றபோது, அந்தப் படையின் அணிவகுப்பில் இருவர் குறைந்தார்கள்.

திறந்த ரதத்தின் திரைச்சீலைகள் தொங்கவிடப் பட்டன. முக்கியமான படைத்தலைவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இளங்கோவும் மாறனும் மறைந்தமாயம் தெரியவில்லை.

படையணி திருவாரூரை நெருங்கிப் போய்க்கொண்டிருந்த போது அதே சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த இருவர் தங்கள் குதிரையிலிருந்து குதித்தார்கள். வழியோரத்தில் மூங்கில் புதர்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டார்கள். தங்களுடைய ஒற்றைக் குதிரையையும் மறந்தார்கள்.

“இளவரசே! அதோ அந்த ரதத்துக்குள் ஒளிந்து கொண்டு செல்பவன்தான் இளங்கோ. ஒரே ஒருகணம் தப்பிவிட்டது. இல்லாவிட்டால் இந்நேரம் அவனுடைய பிணத்தைச் சுமந்துகொண்டு செல்லும் இந்த ரதம்!” யவனத்துக் குதிரை வணிகரைப் போன்ற உடையிலிருந்தனர் காசிபனும் வீரமல்லனும். வீரமல்லன் சாலையில் சென்ற காட்சியைக் கண்டு தன் பற்களைக் கடித்தான். இரவில் நடந்தவை அவன் நினைவுக்கு வந்துவிட்டன.

“என்ன?” என்று வியப்போடு கேட்டான் காசிபன்.

அதற்குள் நடந்தவற்றைக் காசிபனிடம் வெளியிடுவது அவ்வளவு உசிதமாக அவனுக்குத் தோன்றவில்லை.

“நேற்று கடற்கரைக் கூட்டத்தில் எனக்கு மிகவும் நெருக்கமாக நடந்து போனான். வாளைப் பாய்ச்சிவிட்டு கூட்டத்தில் குழப்பம் விளைவித்துத் தப்பிவிடலாமா என்று பார்த்தேன்” என்று கூறி அப்போதைக்குத் தப்பித்துக் கொண்டான் வீரமல்லன். யவனத்து வணிகர்களாக ஆனைமங்கலம் எல்லை வரையில் குதிரையில் சென்றவர்கள், பின்பு காளமுகர்களாக நகரத்துக்குள் நடந்தார்கள். பிற்பகல் நேரத்தில் அவர்கள் மாளிகைக்குள் நுழைந்தபோது அவர்களை யாரும் தடைசெய்யவில்லை. மகிந்தரின் மாளிகைக்கு அடிக்கடி காளமுகர்கள் வந்துசெல்வது வழக்கமாக இருந்தது.

“தேவி ஜகன்மாதா! திரிபுரசுந்தரி!” என்று அவர்கள் காவலர்களுக்குக் கரங்களை நீட்டி ஆசி கூறிக்கொண்டே கம்பீர நடை போட்டார்கள்.

மாளிகையின் உட்புறத்துக்குச் சென்றவுடன். “தம்பீ! வந்துவிட்டாயா. தம்பீ!” என்று கதறிக்கொண்டே ஓடி வந்து காசிபனைக் கட்டிக்கொண்டாள் ரோகிணி. தாயாரிடமோ, தந்தையிடமோ கூட அவனை விடுவதற்கு ரோகிணிக்கு மனமில்லை.

மாலை மாலையாகச் சொரிந்தது கண்ணீர். அவள் விம்மினாள்; விக்கினாள்; சிரித்தாள்; அழுதாள்; துடிதுடித்துப் போனாள். “காசிபா! என் கண்ணே! இனிமேல் உன்னை நான் இங்கிருந்து விடப்போவதில்லை. அமைச்சரே நேரில் வந்து அழைத்தால்கூட விடமாட்டேன். இனி நீ எப்போதும் எங்களுடன்தான் இருக்கவேண்டும். என்னை விட்டுப் பிரிந்து போய்விடாதே. காசிபா! போகவே போகாதே!” என்று என்னென்னவோ பிதற்றினாள்.

ஒரே இடத்தில் பிறந்த இரண்டு இரத்த நதிகள் இடையில் வெகுதூரம் பிரிக்கப்பட்டு மீண்டும் பயங்கரமான வேகத்துடன் பாய்ந்து சென்று ஒன்றோடொன்று சங்கமமாகிக் குமுறுவது போலிருந்தது அந்தக் காட்சி. ஒரேஇரத்தம், ஓரிடத்தில் பிறந்தவை, ஒன்றாகவே வளர்ந்தவை, ஒரே உயிரின் இரு உருவெளித் தோற்றங்களா!

நேரம் சென்றது, மகிந்தரும் அவர் மகிஷியும் தங்கள் மைந்தனை மகளிடமிருந்து பிய்த்துக் கொண்டு சென்றார்கள். மகிஷியின் உணர்ச்சிப் பெருக்கு கண்ணீருக்கு அப்பாற்பட்டது. மாண்டவனை மீண்டும் காண்பது போல் அவர்தம் மகனை மடியில் கிடத்திக்கொண்டார், மகிந்தரின் கண்கள் காசிபனின் உருமாற்றத்தை அளவெடுக்க முற்பட்டன.

“அரண்மனையில் இருந்ததைவிடக் காசிபன் இதற்குள் எவ்வளவோ வளர்ந்துவிட்டான்!” என்று பெருமையோடு கூறினார் மகிந்தர்.

“அரண்மனை வாசத்தைவிட ஆரண்யவாசம்தானே ஆண்மையை வளர்க்கக்கூடியயது? தங்களுடைய அமைச்சரின் ஆற்றலுக்கு இளரவசர் ஓர் உதாரணம்!” என்றான் வீரமல்லன். பிறகு காசிபனின் வீரத்தைப் பற்றியும் போர்ப்பயிற்சிகளைப் பற்றியும் அவன் அடுக்கடுக்காக விவரித்துக் கொண்டு போனான். மகிந்தரின் மனம் பூரிப்பால் நிரம்பி வழிந்தது.

ரோகிணிக்கு காசிபனிடம் எவ்வளவோ பேசவேண்டும் போலிருந்தது. வீரமல்லனை அருகில் வைத்துக்கொண்டு அவளுக்குப் பேசப் பிடிக்கவில்லை.

“வா, தம்பி! முதலில் உன் உடையை மாற்றிக்கொள். இப்போது இங்கே யாரும் வர மாட்டார்கள்” என்று கூறி அவனைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்...

காசிபன் உடைமாற்றிக் கொள்வதற்குள் பழங்களையும் தின்பண்டங்களையும் கலங்களில் கொண்டு வந்து நிரப்பினாள் ரோகிணி. தன், கரத்தாலேயே அவனுக்கு எடுத்துக் கொடுத்து உண்ணச் செய்தாள். அவன் உண்பதைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பழைய காசிபனில்லை அவன். மீசை அரும்புகளுடன் அவன் இளங்குமரனைப்போல் தோற்றமளித்தான். வலிமையும் வனப்பும் இரும்பொத்த அவன் உடலில் எங்கும் பரவியிருந்தன.

“தம்பி! உண்ணும்போதும் உறங்கும்போதும் உன்னுடைய நினைவுவராத நாளே எனக்குக் கிடையாது. அரண்மனையில் ஆனந்தமாகச் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தவன் ஒருவேளை உணவுக்கு என்ன பாடுபட்டாயோ! உயிருக்கு அஞ்சி எங்கெல்லாம் ஒளிந்துகொண்டு திரிந்தாயோ! உன்னுடைய ஒவ்வொரு நாள் பொழுதும் எப்படிக் கழிந்திருக்கும் என்று நினைத்த போதெல்லாம் என் மனம் குமுறிய குமுறலை எப்படிச் சொல்வேன், காசிபா! தம்பி, எங்களையெல்லாம் பற்றி நீ நினைத்துப் பார்த்ததுண்டா? இன்னும் எங்களிடம் பாசம் இருக்கிறதல்லவா உனக்கு?”

“பாசம் இருந்து பலன் என்ன. அக்கா?” என்று கேட்டுக்கொண்டே, ரோகிணி கொடுத்த ஒரு மாங்கனியை வெடுக்கெனக் கடித்தான் காசிபன். பிறகு முகத்தைச் சுளித்துக்கொண்டே அதை வெறுப்போடு வீசி எறிந்தான். “சோழ நாட்டில் விளைந்த மாங்கனியல்லவா? அதுகூட எனக்கு வேம்பாகத்தான் கசக்கிறது!”

“காசிபா! இதற்குள் உனக்கு இந்த நாட்டின்மேல் இவ்வளவு வெறுப்பா?”

“உண்மையைச் சொல்லட்டுமா அக்கா? எனக்கு யாரிடமும் பாசம் இல்லை. நான் வைத்திருந்த பாசமெல்லாம் இப்போது கசப்பாகவும் வெறுப்பாகவும் வளர்ந்திருக்கிறது. வழியில் திருவாரூருக்குப் பக்கத்தில் அந்தக் கொடும்பாளூரான் போவதைப் பார்த்தேன். அவனை என் கையால் கொன்றுவிட்டு அதே இடத்தில் நானும் கொலையுண்டு இறக்க வேண்டுமென்று தோன்றியது. முதன்முறை வந்தபோது முடியைக் கொண்டுவந்தான். உங்களையும் சிறை பிடித்தான். இப்போது அங்கே என்னென்ன கொடுமைகளைச் செய்துவிட்டு வந்திருக்கிறானோ தெரியாது.”

ரோகிணி திடுக்கிட்டாள். அவளுடைய நெஞ்சு வலித்தது.வெகுநாட்களாக அவள் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாளோ, அவன் வந்ததும் வராததுமாக அவளுடைய நெஞ்சில் வாளைப் பாய்ச்சியது போன்ற பிரமை ஏற்பட்டது அவளுக்கு.

“தம்பி, கோபப்படாமல் நான் சொல்வதைச் சற்றுக் கேள். நீ நினைப்பது

போலச் சோழ நாட்டார் அவ்வளவு கொடியவர்களாக இருந்திருந்தால் வந்தவுடன் எங்களைச் சிறையில் அடைத்திருப்பார்கள். எப்படியெல்லாமோ, துன்புறுத்தியிருப்பார்கள்; நம்முடைய பெருமைகளைக் குலைத்திருப்பார்கள்; ஆனால் அவர்களோடு பழகப் பழகத்தான் அவர்களுடைய அருமை தெரிகிறது.”

காசிபனின் முகம் சிவந்தது. ஆனால் அவன் தன் தமக்கை கூறவந்ததைத் தடுக்காமல் மேலே உற்றுக் கேட்டான். அவள் சொல்ல வந்ததையெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு.

அவன் இப்போது சோழ நாட்டாரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. தன் தமக்கையை அளக்க நினைத்தான். சாண்பிள்ளையாக இருந்த காசிபனை ஆண்பிள்ளையாக்கிவிட்டாரல்லவா அமைச்சர்?

“காசிபா! நாளைக்கே நீயும் அமைச்சரும் உடன்பட்டால்கூட நம்முடைய ரோகணம் நமதாகிவிடும். நம்முடைய தந்தையாருக்கு முடிசூட்டி உன்னை இளவரசனாக்க அவர்கள் எப்போதும் சித்தமாயிருக்கிறார்கள். அவர்கள் நம்மை அழிக்க விரும்பவில்லை. அவர்களுடைய பாதுகாப்புக்காக, அவர்களுடைய பகைவர்களுடன் நம்மைச் சேரவேண்டாம் என்கிறார்கள். ஆத்திரப்படாமல் நிதானமாகச் சிறிது யோசனை செய்து பார். அவர்களுடைய விருப்பம் நியாயமானதென்று உனக்குத் தோன்றவில்லையா? நீ முன்போல் சிறுபிள்ளை இல்லை. நன்றாக யோசனை செய்!”

“ரோகிணி!” அடித் தொண்டையில் கத்திக்கொண்டே எதிரில் இருந்த பொற்கலங்களைத் தாறுமாறாகத் தரையில் தட்டிவிட்டான் காசிபன். “நீ என்னுடைய தமக்கைதானா? உன் உடலில் ஓடுவது ரோகணத்து இரத்தம்தானா? எனக்கு நாடும் பெரிதில்லை. முடியும் பெரிதில்லை; அடிமைச் சிற்றரசனாக வாழ்வதை விட அழிந்து போய்ப் பெருமை தேடிக் கொள்வதையே நான் விரும்புகிறேன், எனக்கும் அமைச்சருக்கும் பெருமை வேண்டும் ரோகிணி! இந்தச் சோழநாட்டுப் பதர்கள் உங்களைப்போல் எங்களையும் சிறைப்பிடித்திருந்தால் நாங்கள் வரும் வழியில் கடலில் குதித்துமாண்டிருப்போம்!”

அவன் பேசிய ஒவ்வொரு சொல்லும் அமைச்சரின் வாய்ச்சொல் என்பதைக் கண்டுகொண்ட ரோகிணி நடு நடுங்கிப்போனாள். பாசத்தைச் சுட்டெரிக்க அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. “என்னை மன்னித்து விடு, தம்பி மன்னித்துவிடு! என்ன இருந்தாலும் நான் பெண் பிள்ளை; கோழை. நீ.எப்படி நினைக்கிறாயோ, அப்படியே நடந்துகொள். ஆனால் விதிவிட்ட வழிக்காக எங்களை மட்டும் வெறுத்துவிடாதே!’ என்று புலம்பினாள். பாசம் இல்லை என்று வீரம் பேசியவனும் அதன் பிறகு இளகிவிட்டான். பாச வலையில் அகப்பட்டுக் கொண்டு தடுமாறிக் கண்ணீர் உதிர்த்தான். தன் தமக்கையிடம் மன்னிப்புக் கோரிக் கெஞ்சினான்.

பின்னர் மகிந்தர் முதலிய எல்லாருமே அங்கு வந்து சேர்ந்தார்கள். வீரமல்லன் ரோகிணிக்கு மட்டிலும் தெரியவேண்டுமென்பதற்காக, “நேற்று மாலையிலேயே இளவரசருக்கு ஆள் அனுப்பிவட்டு நான் நள்ளிரவுக்கு மேல்தான் இங்கிருந்து புறப்பட்டேன். கொடும்பாளூரான் வந்த செய்தி தெரிந்தபிறகு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமல்லவா?” என்றான்.

ரோகிணி சுட்டெரித்தாள் வீரமல்லனைத் தன் விழிகளால். அவன் ஏதுமறியாதவன்போல் சிரிக்க முயன்றான்,

தான் அங்கு இரவில் வந்ததை ரோகிணி மகிந்தரிடம் வெளியிட்டிருக்க மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும். அப்படித் தெரிவித்தால் அத்துடன் இளங்கோவின் வருகையையும் பற்றி அவள் கூறியாக வேண்டுமே! ‘ரோகிணி. நீ எங்கும் போய்விட மாட்டாய்!’ என்று சொல்வது போலிருந்தது அவனுடைய வினைச் சிரிப்பு! எல்லோரும் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் கந்துலனின் மகள் அங்கு பரபரப்புடன் ஓடி வந்தாள், ரோகிணியின் செவிகளில் எதையோ கூறினாள்.

அதைக் கேள்வியுற்றவுடன் ரோகிணிக்கு ஏற்பட்ட முக மாறுதலைக் கவனித்த அனைவருமே நடுக்கமுற்றனர். ரோகிணி வெறிப்பிடித்தவள்போல் மேல் மாடத்துக்கு ஓடினாள். ஓடிப்போய் நிலா முற்றத்தின் விளிம்பில் நின்றுகொண்டு எதிரே கவனித்தாள்.

வெகுதூரத்தில் புழுதிப் படலம் எழும்புவது அவள் கண்களுக்குத் தெரிந்தது. அந்தப் படலத்தினூ டே இரண்டு புரவிகள் பறந்து வந்தன. மாடத்தில் நிற்கும் அவள் நெஞ்சில் தங்கள் குளம்புகளைப் பதித்துச் செல்வதற்காக அவை அப்படி ஓடி வருகின்றனவா?

தொடரும்



Comments