வேங்கையின் மைந்தன்--புதினம்- பாகம் 2 -40- யாரைத்தான் நம்புவது?


காதலர்களின் கனவுக் கண்களுக்கும் ஒற்றர்களின் கழுகுக் கண்களுக்கும் ஒரு வகையில் ஒற்றுமை உண்டு. தங்கள் நாட்டத்துக்குரியவர்கள் நெடுந் தூரத்திலிருந்தாலும் பெருங்கூட்டத்தில் மறைந்திருந்தாலும் எப்படியோ அவர்களை இனம் கண்டு கொள்ளும். நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரத்தில் குதிரைமேல் வந்து கொண்டிருந்த இளங்கோவை ரோகிணியின் கண்கள் அடையாளம் கண்டுகொண்டன. ஆனாலும் அவளால் உடனே அதை நம்ப முடியவில்லை.

முற்பகலில் தனது படைவீரர்களுடன் மாளிகை வழியே தஞ்சைக்குச் சென்றவன், அதற்குள் எப்படித் தென்திசையிலிருந்து பறந்துவருகிறான்? திருவாரூர்ச் சாலையில் அவனைக் கண்டதாக காசிபனே சற்றுமுன்பு கூறினானே! இளங்கோவுக்குப் பின்னால் வரும் மற்றொரு வீரன் யார்?

யோசிப்பதற்கு நேரமில்லை ரோகிணிக்கு. குதிரைகளோ காற்றெனக்கடுகி விரைந்து வந்து கொண்டிருந்தன. பதறியடித்துக்கொண்டு அவள் கீழே இறங்கிப்போவதற்குள். மகிந்தர், காசிபன், வீரமல்லன், மகிஷி ஆகிய அனைவருமே மேல் மாடத்துக்கு வந்து விட்டனர். குதிரைகளை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினாள் ரோகிணி.

“வருகிறவர்கள் யார்?” நடுங்கும் குரலில் கேட்டார் மகிந்தர்.

“கொடும்பாளூர் இளவரசர்!” என்றாள் ரோகிணி.

வீரமல்லனின் கழுகுக் கண்கள் அந்தக் கணத்தில் எவனை நினைத்துச் சந்தேகப்பட்டனவோ, அவனையே ரோகிணியும் கூறினாள்.

“இளவரசியார் சொல்வது மெய்தான்” என்று கூறிவிட்டு, அவளை ஓரக்கண்களால் பார்த்தபடியே, “எங்களுடைய வருகை இங்குள்ளவர்களைத் தவிர வேறு யாருக்குமே தெரியாதே! அப்படியிருக்கும்போது எப்படி அவனுக்குச் செய்தி எட்டியிருக்கும்? நமக்குள் கூடவா ஒற்றர்கள் இருக்கிறார்கள்?” என்று வினயத்தோடு நகைத்தான்.

“துறைமுகத்துக்குப் போக வேண்டாமென்று தலையிலடித்துக் கொண்டேன்! கேட்டாயா நீ?” என்று பற்களைக் கடித்தார் மகிந்தர்.

“அக்கா! செய்வதையும் செய்துவிட்டு இப்போது நீலிக் கண்ணீரா வடிக்கிறாய்? அவர்களுக்குப் பரிந்து நீ பேசியபோதே நான் சந்தேகப்பட்டேன். என் சந்தேகம் உண்மையாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் வரட்டும்! இரண்டிலொன்று பார்த்துவிடலாம் இன்றைக்கு.’’

பயமறியாத இளங்கன்றான காசிபன் தன்னுடைய குத்துவாளை உருவிக்கொண்டே மாடத்தின் சுவருக்குப் பின்புறம் சென்று மறையப் போனான். தொலைவில் வந்து கொண்டிருந்த குதிரைகள் மாளிகையின் முகப்பை நெருங்கும் சமயம் பார்த்து முதலில் வந்துகொண்டிருந்த இளங்கோவை வீழ்த்திவிட வேண்டுமென்பது அவன் திட்டம்.

“தம்பி நீ என்னை நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி! உடன்

பிறந்த பிறப்புக்குத் துரோகம் செய்யும் கொடியவளில்லை நான். எத்தனையோ ஒற்றர்கள் அவர்களுக்கு. சரி, இனிப் பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. நீயும் வீரமல்லனும் உங்கள் உடைகளை எடுத்துக் கொண்டு உடனே தப்பி ஓடுங்கள். வருகிறவர்களை நான் வழிமறித்து நிறுத்தப் பார்க்கிறேன். அதற்குள் நீங்கள் தப்பிவிடுங்கள்.’’

“தப்பி ஓடுவதா!” காசிபன் வெறிச் சிரிப்புச் சிரித்தான்.

அவனைப் பிடித்து பரபரவென்று இழுத்து வந்து வீரமல்லனிடம் ஒப்புவித்தாள் ரோகிணி. “வீரமல்லா! காசிபனை எப்படியாவது காப்பாற்று! வருகிறவர்கள் இரண்டு பேரென்றாலும் அவர்களுக்குப் பின்னால் இரு நூறு பேர்கள் இருக்கக்கூடும். எதிர்த்துப் போரிடுவதற்கு இது நேரமில்லை... வீரமல்லா! வீரமல்லா! காசிபனை அழைத்துக் கொண்டு போ! ஓடு...!”

மண்டியிட்டுக் கதறாத குறையாக வீரமல்லனிடம் கெஞ்சிவிட்டு மறுமொழிக்குக் காத்திராமல் அவ்விடத்தை விட்டுச் சிட்டாகப் பறந்தாள் ரோகிணி. மறுகணம் அவளுடைய உருவம் கீழே உள்வாயிலுக்கு வெளியே தெரிந்தது. வெறி கொண்டவள் போல் குதிரைகள் வரும் திசையை நோக்கி அவள் ஓடத் தொடங்கினாள்.

கேசம் புரண்டலைய, மேலாடை காற்றில் படபடக்க, நெஞ்சு துடிதுடிக்க, கால்கள் தரையில் பாவுவது தெரியாமல் அவள் பறந்தாள். கண்கள் இருண்டன; தலை சுழன்றது; கால்கள் தடுமாறின. ஆனால் ரோகிணி தயங்கவில்லை; நிற்கவில்லை. அவளுடைய கால்களுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு வலிமை வந்ததோ, தெரியாது.

இளங்கோவின் வருகையைக் கண்டு, திகைப்புற்ற வெளிவாயில் காவலர்கள் அஞ்சி ஒதுங்கி அவனுக்கும் மாறனுக்கும் வழி விட்டனர். வெளி வாயிலுக்குள் நுழைந்த பிறகுதான் ரோகிணியின் உருவம் இளங்கோவின் கண்களில் பட்டது. அவன் கண்கள் கோபத்தால் கொப்பளித்தன. ‘எதற்காக இவள் இப்படி ஓடிவருகிறாள்?’

“இளவரசே சற்று மெதுவாகச் செல்லுங்கள்’’ என்று தயங்கியபடியே கூறினான் மாங்குடி மாறன்.

கடுகடுத்த முகத்தோடு மாறனைத் திரும்பி நோக்கி, “உனக்கு அச்சமாக இருந்தால் இப்படியே நில்!” என்று கூறிவிட்டு, முன்னிலும் இருமடங்கு வேகமாகக் குதிரையைத் தட்டிவிட்டான். குதிரையின் பிடரி சிலர்த்தது; கண்களில் நீர் வடிந்தது; நுரை தள்ளியது. இதுவரை சற்று ஒதுங்கியபடி ஓடி வந்து கொண்டிருந்த ரோகிணி, குதிரையின் வேகம் சிறிதும் குறையாததைக் கண்டு ஆத்திரமடைந்து நேரே அதன் குறுக்கே ஓடத் தொடங்கினாள்.

“இளவரசே! நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்!” என்று கூறிக்கொண்டே தான் மட்டிலும் நிற்காமல் பாய்ந்தோடி முன்னே சென்றாள்.

“ஒதுங்கிப்போ, ரோகிணி! ஒதுங்கிப்போ’’ என்று கத்தினான் இளங்கோ.

“நிறுத்துங்கள்!”

“போ ரோகிணி!”

இளங்கோவும் தன் குதிரையை நிறுத்தவில்லை.ரோகிணியும் அவன் வழியிலிருந்து விலகிப் போகவில்லை.

‘ஒரு பெண்ணின் சாகசத்துக்குப் பணிந்து நம் வழியிலிருந்து பிறழ்வதா?’ என்று எக்காளமிட்டுக் குமுறியது அந்த ஆண் மனம்.

‘காதலனில்லை அவன்! கல்நெஞ்சக் கூற்றுவன்!’ என்று குற்றஞ்சாட்டிக் கொதிப்படைந்து பெண் மனம்.

இருவருமே விட்டுக்கொடுக்கவில்லை. கடமையும் கடமையும் மோதிக் கொண்டன. மின்வெட்டும் நேரத்துக்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது.

“ஐயோ, அப்பா!” என்ற அலறிக்கொண்டே ரோகிணி தரையில் விழுந்து புரண்டாள். புழுவாய்த் துடித்தாள்.

குதிரைக் குளம்பால் பிளக்கப்பட்ட அவள் நெற்றியிலிருந்து ‘குபுகுபு’வென்று செங்குருதி பெருக்கெடுத்துப் புழுதி மண்ணில் வடிந்தது. பேச்சு மூச்சின்றிப் பிணமாகச் சுருண்டு போனாள் ரோகிணி.

ரோகிணியின் ஓலத்தைக் கேட்ட பின்னர் இளங்கோவின் நாடி நரம்புகள் அனைத்தும் ஓய்ந்து போய்விட்டன. குதிரையை அதன் போக்கில் விட்டுவிட்டுக் கீழே தாவிக் குதித்த ஓடி வந்தான். தரையல் மண்டியிட்டு அவள் அருகில் அமர்ந்தான். ரோகிணியின் உடலில் உயிர் இருப்பதாகவே தோன்றவில்லை. மெல்ல அவள் தலையைத் தூக்கினாள். தலை ஒருபுறமாகச் சாய்ந்தது. கண்கள் சொருகிக் கொண்டன. குருதிப்பெருக்கு நின்ற பாடில்லை. தூக்கிய தலையை மடியில் வைத்துக் கொண்டே, தன்னை மறந்து, “அடிப்பாவி’’ என்று கதறினான் இளங்கோ.

மாறனும் தன் குதிரையை நிறுத்திப் பதைபதைக்க ஓடி வந்து நின்றான். குருதிப்பெருக்கிடையே ரோகிணி கிடந்த காட்சி அவனையும் உலுக்கி எடுத்துவிட்டது.

“பெண் பாவம் பொல்லாதது, இளவரசே; நான் அப்போதே சொன்னேனே கேட்டீர்களா?’’

மாறனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, மறுமொழி கூறாமல் சிலையாக அமர்ந்து விட்டான் இளங்கோ. அவனுக்கு ஒன்றுமே பேசத்தோன்றவில்லை. நினைக்கத் தோன்றவில்லை. அவன் எதற்காக அத்தனை வேகமாகப் பறந்தோடி வந்தானோ, அந்தக் காரியம் அறவே சிந்தனையிலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டது. கொலைக்குற்றவாளிபோல் பரிதபமாக ரோகிணியின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ரோகிணியின் கரத்தைப்பற்றி நாடியைப் பார்த்த மாறன், “இன்னும் உயிர்த்துடிப்பு இருக்கிறது; அஞ்சவேண்டாம்! இளவரசே!” என்று கூறி, மளமளவென்று அவள் தலையில் கட்டுப்போடத் தொடங்கினான். மெல்ல அவளைத் தூக்கித் தன் குதிரைமீது கிடத்தி, கடிவாளத்தைப் பற்றிக் கொண்டு முன்னால் நடந்தான். குனிந்த தலையோடு இளங்கோவும் அவனைப் பின்பற்றினான்.

மாளிகையின் முகப்புக்கெதிரே சற்றுத் தொலைவில் இவ்வளவும் நடந்த பிறகும், மாளிகைக்குள்ளிருந்து யாரும் வெளியில் எட்டிப் பார்க்கவில்லை. ரோகிணி அங்கிருந்து ஓடி வந்ததையே, பின்னர் நடைபெற்ற சம்பவங்களையோ யாருமே கவனிக்கவில்லை போலும். அப்படி அவர்கள் அங்கே என்னதான் செய்து கொண்டிருந்தார்கள்?

முகப்பை நெருங்கியவுடன் குதிரையில் கிடந்த ரோகிணியை இரு கரங்களிலும் ஏந்திக் கொண்டு உள்ளே நுழைந்தான் இளங்கோ. போகும் வழியில், “இளவரசே!” என்ற மென்குரல் அவனைத் திடுக்கிட வைத்தது. அழைத்தவள் வேறு யாருமில்லை. அவனுடைய கரங்களில் கிடந்த ரோகிணியேதான்.ரோகிணியின் கண்மலர்கள் இப்போது மலர்ந்திருந்தன. மாண்டு கொண்டிருந்தவள் மீண்டுகொண்டு வருகிறாளா?

“என்னை மன்னித்து விடுங்கள்; என்னை மன்னித்து விடுங்கள்!”

கண்களிலிருந்து சுரந்துவந்த நீர்த்துளிகள் குருதியோடு கலந்து செம்பவளச் சொட்டுக்களாகக் கீழே உதிர்ந்தன. மெதுவாக அவளைக் கூடத்திலிருந்த ஆசனத்தில் கிடத்தினான். அதற்குள் மகிந்தரும் மகிஷியும்அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி வந்தனர். அவளைச் சூழ்ந்து நின்று புலம்பத் தொடங்கினர்.

மகிந்தரைக் கண்டவுடன் இளங்கோவுக்கு ரோகிணியின் மீதிருந்த இரக்கமெல்லாம் எங்கோ மறைந்து கொண்டது. கடமையைத் தவறவிட்ட பதற்றத்தோடு, “மன்னர் அவர்களே! யாரோ இரு அந்நியர்கள் இங்கு தங்களைத் தேடி வந்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் யாரென்பதையும், மாளிகைக்குள் இப்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதையும் எனக்கு அறிவிக்க வேண்டுகிறேன்’’ என்றான்.

இளங்கோவின் குரலில் ஒலித்த கடுமை மகிந்தரை உலுக்கி எடுத்தது. தம்முடைய மகள் இருக்கும் நிலைமையில் எப்படி இவனால் ஈவிரக்கமின்றிப்பேச முடிகிறது?

“ரோகிணி உயிருக்குத் துடிக்கிறாள்; இப்போது நீங்கள் வந்து...’’ என்று இழுத்தார் மகிந்தர்.

“அவள் எப்படியும் பிழைத்துக் கொள்வாள். அப்படியே அவள் போய்விட்டாலும் அதனால் இந்த சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடாது’’ என்று உறுமினான் இளங்கோ.

“மகளே!” என்று கூறிக்கொண்டே ரோகிணியின் பக்கம் திரும்பினார் மகிந்தர். இளங்கோவின் முரட்டுக் கரம் மகிந்தரின் தோளைப் பற்றியது. “சொல்லுங்கள்! சொல்லிவிட்டுப் பிறகு அவளைப் பாருங்கள்!”

“யாரோ இரண்டு காளமுகர்கள் சற்று நேரத்துக்கு முன்புதான் இங்கு வந்தார்கள். வழக்கமாக என்னைத் தேடி வருகிறவர்கள் என்று நினைத்துக் காவலர்கள் அவர்களுக்கு வழிவிட்டிருக்கிறார்கள். ஆனால் வந்தவர்கள் புதியவர்கள். எனக்கே அவர்களை யாரென்று தெரியவில்லை...’’

“ஏன் தெரியவில்லை? அமைச்சர் கீர்த்தியையும் உங்கள் குமாரன் காசிபனையுமே உங்களுக்குத் தெரியாதா? சோழநாட்டாரின் பரிவை அவர்களுக்கே பாதகமாகப் பயன்படுத்த வேண்டாம், அரசே!”

“அபாண்டம்! அபாண்டம்! நீங்கள் என்மீது பெரும் பழி சுமத்துகிறீர்கள்!” என்று கத்தினார் மகிந்தர். “வந்தவர்கள் என்னைச்

சேர்ந்தவர்களே இல்லை. யாரோ என் மீது பழி ஏற்பட வேண்டு மென்பதற்காகவே இப்படிச் செய்திருக்கிறார்கள்! அவர்கள் அவசரமாக வந்தார்கள்; தாங்கள் துரத்தி வந்ததால் என்னிடம் புகலிடம் கேட்க வந்தவர்களாக இருக்குமோ என்னவோ!”

“என்னைத் தடுக்கச் சொல்லி நீங்கள் ரோகிணியை அனுப்பவில்லை?’’

“புத்தர் பெருமான் என்னை மன்னிக்கட்டும். அவர் மேல் ஆணையாகச் சொல்கிறேன்; நான் அவளை அனுப்பவில்ல!”

ஆம்; அவராக அவளை அனுப்பவில்லையல்லவா; ரோகிணி தன்னிச்சையாகத்தானே ஒடி வந்தாள்!

இதைக் கேட்ட பிறகு பொறி கலங்கிப்போனான் இளங்கோ. மகிந்தருடைய வாக்கை அவன் ஓரளவுக்காவது நம்பத்தான் வேண்டியிருந்தது. பிறகு ஏன் ரோகிணி அவனைத் தடுக்க வந்தாள்; அவனுடைய ஆத்திரமெல்லாம் பன்மடங்கு ரோகிணியின் பக்கம் திரும்பியது. வெறுப்போடு அவள்மீது ஒரு பார்வையை வீசிவிட்டு உருவிய வாளுடன் மாளிகையின் அறைக்குள் புகுந்து தேடலானான் இளங்கோ.அதற்குள் மாறனும் பல இடங்களில் தேடிவிட்டு வந்து இளங்கோவின் முன்பு கைகளை விரிக்கலானான்.

“நானே என் கண்களால் அவர்கள் மாளிகைக்குள் நுழைவதைப் பார்த்தேன். பார்த்துவிட்டுத்தான் தங்களை அழைத்து வந்தேன். அவர்கள் இங்கு வந்திருந்தார்களென்பதில் சந்தேகமில்லை.’’

ஆம், தஞ்சை திரும்புவதாக இருவருமே போக்குக் காட்டிவிட்டு ஆனைமங்கலத்துக்குத் திரும்பிய பிறகு மாங்குடி மாறன் மட்டும் மாளிகையின் வெளி வாயிலுக்கருகில் மறைந்து நின்று கண்காணித்தான். காளமுகர்கள் இருவர் உள்ளே நுழைவதைப் பார்த்தபிறகு, அருகில் நகரத்துச் சாவடியிலிருந்த இளங்கோவிடம் ஓடோடிச் சென்று செய்தியை அறிவித்தான்.அங்கிருந்து இருவரும் குதிரைகளில் பறந்தோடி வந்தார்கள்.

“வந்தார்களென்பதைத்தான் மகிந்தரே ஒப்புக்கொள்கிறாரே! அதற்குள் அவர்கள் எங்கே போனார்கள்? வெளிவாயில் வழியாகவும் அவர்கள் திரும்பவில்லையே?’’ என்று சீறினான் இளங்கோ. ‘ஒரு வேளை இளவரசியார் நம்மைத் தடுத்திருக்காவிட்டால்’ என்று சொல்ல நினைத்த மாறன், உதட்டைக் கடித்துக் கொண்டு பேசாதிருந்துவிட்டான்.

மீண்டும் இருவருமே மேல் மாடத்துக்குச் சென்று ஒவ்வொரு மூலையாகப் பார்வையிட்டனர். பார்த்த இடங்களில் யாரும் பதுங்கியிருக்கவில்லை. ஆனால் மாடத்தின் திறந்த வெளியில் நிலா முற்றத்தருகே ஒரு வளைஎறி மட்டிலும் கிடந்தது.வளை எறியைக் குனிந்து எடுத்துத் திருப்பிப் பார்த்தான் இளங்கோ. அவனுடைய மயிர்க்கால்கள் ஒவ்வொன்றிலும் தீப்பற்றி எரிந்தது!

அவனே ஒரு பெரும் தீப்பிழம்பாக மாறினான்.அதற்குப் பிறகு கணப்பொழுதுகூட அந்த மாளிகையில் அவனுக்குத் தங்கி நிற்கப் பிடிக்கவில்லை.மின்னல் வேகத்தில் இறங்கி வந்து ரோகிணியின் முன்னால் நின்றான்.

“இதை நன்றாகப் பார்த்துக் கொள்!”

சட்டென்று அவன் திரும்பியவுடன், தன் இரு கரங்களையும் உயர்த்திக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயன்றாள் ரோகிணி.

“இளவரசே...’’ என்று அழைத்தாள் ஈனக்குரலில்.

“சீ! நீ ஒரு பெண்ணல்ல!” திரும்பிப் பாராமல் அவன் வெளியே ஓடிவந்தபோது தடாலென்று ரோகிணி தரையில் புரண்டு விழும் சத்தம் கேட்டது. அதை அவன் பொருட்படுத்தவில்லை. உலகத்தின் வெறுப்பையெல்லாம் ஒன்றாகத் திரட்டிக்காறி உமிழ்வதுபோல், தரையில் உமிழ்ந்துவிட்டுத் தன் குதிரைமேல் தாவினான்.

தொடரும்Comments