தஞ்சைத் தலைநகரின் ஆட்சிப்பொறுப்பை இப்போது மாமன்னரின் சார்பில் கொடும்பாளூர்ப் பெரிய வேளார் ஏற்று நடத்தி வந்தார். மாமன்னரும் வல்லவரையர் வந்தியத்தேவரும் காஞ்சிபுரிக்குச் சென்றிருந்தனர். வேங்கி இளவரசன் நரேந்திரனோ அவர்களுடன் திரும்பாமல் பழையாறைக்குப் புறப்பட்டுவிட்டான். வேங்கி நாட்டுக்குச் செல்வதற்குள் அருள்மொழியின் வாயால் அவள் கருத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு. இந்த இரண்டு மாத காலமாக நரேந்திரனுக்கு அதற்குரிய வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் ஏற்பட்ட சலிப்பு அவனைப் பழையாறைக்குத் தள்ளிவிட்டது.
ஈழத்தில் நடந்த நடப்புக்கள், இளங்கோ அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னரே பெரிய வேளாருக்கு எட்டி விட்டன. அதனால் அவருக்கேற்பட்ட பூரிப்பு விவரிக்க வொண்ணாதது. ஆனால், அதில் அணுவளவைக்கூட அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ‘முக்கியமானவர்களை விட்டுவிட்டு மற்றவர்களைத் தானே மடக்கியிருக்கிறான்? இதைப்போய் ஒரு பெருமையாய்ச்சொல்லிக் கொள்ளுகிறீர்களே?’ என்று தம்மிடம் பெருமை பேச வந்தவர்களையே அவர் திருப்பி மடக்கினார்.
யாருமில்லாத வேளைகளில் தனிமையில் அவர் மனம் தமது மைந்தனின் வீரத்தை எண்ணி ஆனந்தக் கூத்தாடியது. இளங்கோவைப் பற்றிய நினைவு வந்த போதெல்லாம் தமது மீசைக் காட்டை முறுக்கி விட்டுக் கொண்டார். தமது புஜங்களை உயர்த்திப் பார்த்துத் தாமே பெருமைப்பட்டுக் கொண்டார். அவரது சிவந்த விழிகள் அந்த வேளைகளில் அபூர்வமானதொரு புத்தொளி சிந்தின.
‘என் அருமை மகனே! கொடும்பாளூர்க் குலம் தழைக்க வந்த செல்வமே! நீ எனக்குப் பிறந்ததன் பயனை நான் அடைந்து விட்டேனடா! உன்னால் கொடும்பாளூரின் பெருமை உயர்வது ஒருபுறம் இருக்கட்டும். இந்த மாபெரும் சாம்ராஜ்யமே உன்னை நான் பெற்றதால் பெருமை பெறுகிறதடா! -வெற்றி பெற்றவனே! விரைவில் திரும்பி வா! உன்னை நான் ஒரே ஒரு முறை அன்போடு அணைத்து உனக்கு என் மனதார ஆசி கூறுகிறேன். விரைந்து வா இளங்கோ!’
பெரிய வேளார் நினைத்த வண்ணம் இளங்கோவுக்கு அவனுடையதந்தையாரின் வெளிப்படையான அன்பு மட்டும் கிட்டுவதாக இருந்தால், அவனுடைய வலிமையும் ஆற்றலும் ஐம்பது மடங்கு பெருகுமென்பதில் ஐயமில்லை. அவர் மீது அவ்வளவு மதிப்பும் பயபக்தியும் வைத்திருந்தான் அவன்.பெரிய வேளாளரைப் போன்றே மற்றொரு மென்மையான உயிரும் இளங்கோவின் வரவை ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அருள்மொழிக்கு அவன் ஈழத்துக்குச் சென்ற பிறகு அமைதியான உறக்கமே கிடையாது. அப்படி உறங்கும் சிறு பொழுதுகளிலும் அவன் அவள் கனவில் தோன்றிக் களிப்பூட்டினான்; கண்ணீர் கசியச்செய்து கலங்க வைத்தான்.
அவன் அபாயங்களுக்கிடையில் உலாவுவதாகக் கனவு கண்டபோதெல்லாம் அருள்மொழி கண்ணீர் சிந்தினாள். அவன் வெற்றிக்கு மேல் வெற்றி பெறும் காட்சிகளைக் கண்டபோதெல்லாம் அவள் புன்னகை உதிர்த்தாள்.
பெரிய வேளாளருக்கும் அருள்மொழிக்கும் ஒருவகையில் ஒற்றுமை இருந்தது.இருவருமே தங்கள் உணர்ச்சிகளை வெளியில் காட்டிக் கொள்வதில்லை. தம்முடைய அருமை மகனை அணைத்துக்கொள்ள வேண்டுமென்று துடிதுடித்த பெரிய வேளாரின் கரங்கள் ஏனோ இப்போது வெறுப்பின் மிகுதியால் மூடிக்கிடந்தன. நாகைப்பட்டினத்தில் வந்து இறங்கிய வீரர்கள் அனைவரும் தஞ்சைக்கு வந்து சேர்ந்து விட்டனர். இளங்கோ மட்டும் வரவில்லை. அப்போதே அவர் மனத்தில் ஐயம் முளைத்தெழத் தொடங்கிவிட்டது.அதைப் பூத்துக் காய்த்துக் கனியச் செய்துவிட்டான் பெரிய வேளாளரின் இரகசிய ஒற்றனான அம்பலக்கூத்தன்.
மகிந்தரின் குடும்பம் ஆனைமங்கலத்துக்குப் புறப்பட்ட போதே அவர்களறியா வண்ணம் அங்கு போய்ச் சேர்ந்தவன் அவன்.ஆனைமங்கலம் மாளிகையின் காவலர்களைத் தவிர, வேறு யாருக்கும் அவனைப் பற்றி ஒன்றுமே தெரியாது.அவனுடைய உத்தரவுப்படியே காவலர்களும் நடந்து கொண்டு வந்தார்கள்.
நாகைப்பட்டினம் துறைமுகத்துக்கு இளங்கோ வந்து இறங்கியதிலிருந்து, நடந்தவைகளையெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தான் அம்பலக்கூத்தன். துறைமுகத்தில் இளங்கோ ரோகிணியைச் சந்தித்தது, அதே இரவில் அவன் சோழ மாளிகைக்கு அவளைத் தேடி வந்தது, மாடத்தின்மீது அவன் உரையாடிக்கொண்டிருந்த போது யாரோ ஒருவன் அவனைக் கொல்ல முயன்றது, அவனிடமிருந்து மாறன் இளங்கோவைக் காப்பாற்றியது எதையுமே கூத்தன் வேளாரிடம் மறைக்கவில்லை.
மறுநாள் இளங்கோ தஞ்சைக்குச் செல்வதாகப் போக்குக் காட்டிவிட்டு ஆனைமங்கலத்தில் தங்கியதையும், அதன் பிறகு நடந்த விபரங்களையும்கூட அவன் ஒன்றுவிடாமல் விளக்கினான். ஆனால் அவ்வளவு கைதேர்ந்த ஒற்றனாலும் அந்தக் காளமுகர்கள் யாரென்று கூறமுடியவில்லை. வீரமல்லனைப் பற்றிய சந்தேகமே அவர்களில் யாருக்கும் கிடையாது.அவர்களைப் பொறுத்தமட்டில் அவன் பாண்டிய நாட்டுப் போர்க்களத்தில் மாண்டு போனவன்!
“அரசே! இதற்குள் இளவரசரும் மல்லர் தலைவனும் இங்கே திரும்பியிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு வந்தேன்.எப்படியும் அவர்கள் அந்த இருவரையும் தேடிப் பார்த்துவிட்டு, விரைவில் திரும்பிவிடுவார்கள்’’ என்றான்.
“மாறுவேடத்தில் வந்தவர்கள் யாரென்று உனக்குத் தெரியுமா?’’
“தெரியாது, ஒருவேளை ரோகணத்து அமைச்சரும் ரோகணத்து இளவரசருமே வந்திருக்கலாம். மாளிகையிலிருந் அவர்கள் திரும்பும்போது, மகிந்தருக்குத் தெரியாமல் அவர்களைச் சிறைசெய்யும்படி காவலர்களுக்குச் சொல்லியிருந்தேன். அதற்குள் இளவரசர் அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிட்டார். அவர்மீதுகூடத் தவறில்லை. அந்த ரோகணத்து இளவரசி குதிரையின் குறுக்கே விழுந்து அவரைத் தடை செய்திருக்காவிட்டால் அவர்கள் தப்பியிருக்க மாட்டார்கள்!”
“வீரனாம் வீரன்! கோழை!” என்று உறுமினார் பெரிய வேளார்.
“குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக் காம்பு; அவன் இங்கு வரட்டும், சொல்கிறேன்; ஏன், அவள் வந்து குறுக்கே விழுந்தால், அவள் தலையைச் சீவிவிட்டு இவன் மேலே போனால் என்ன? வேண்டுமென்றே அடிபட்டு விழுந்தவளிடம் இவன் எதற்காக மண்டியிட்டுப் புலம்புகிறான்? படுகளத்தில் ஒப்பாரி வைக்கவா இவன் கொடும்பாளூர்க் குலத்தில் பிறந்தான்?’’
கூண்டுப் புலியாகக் குறுக்கும் நெடுக்கும் குதிக்கத் தொடங்கிய பெரிய வேளாளர் ஒற்றனை வெளியே அனுப்பிவிட்டு உள்ளம் குமுறலானார். கூடத்துக்குப் பின்புறம் கதவோரத்தில் ஒதுங்கி நின்று இவ்வளவையும் கவனித்துக் கொண்டிருந்த அருள்மொழிக்கு அவர் முன்னால் வந்து பேச்சுக் கொடுப்பதற்கு மனம் துணியவில்லை.
கூடத்துக் வெளியே வாழ்த்தொலிகள் முழங்க இளங்கோ நிமிர்ந்த நடைபோட்டுப் பெரிய வேளாரைக் காண விரைந்தோடி வந்தான். அவனுக்குப் பின்னால் மாங்குடி மாறனும் செருக்கு நடைபோட்டான்! வெற்றி கொண்ட வீரனுக்குத் துணையாகச் சென்ற செருக்கு அவனுக்கு.
கூடத்துக்குள் நுழைந்து தன் தந்தையாரின் தாள் பணிந்து வணக்கம் செலுத்தினான் இளங்கோ. எழுந்து நின்று அவர் முகத்தைப் பார்த்தபோது அது முகமாகவே தோன்றவில்லை. இளங்கோவின் இருதயமோ தன் துடிப்பைமறந்தது.
அவ்வளவுதான். அங்கே எரிமலை வெடித்தது. புயல் காற்றுச் சீறியது. இடிமுழக்கம் கேட்டது. வானம் பிளந்து கொண்டு நீரைக் கொட்டுவதுபோல், சொல்மாரி பொழியலானார் பெரிய வேளார். சொல்மாரியில்லை அது, சொற்சரங்கள், கூரம்புகள்!...அம்பலக்கூத்தன் வாயிலாகக் கேள்வியுற்ற செய்திகளனைத்தையும் அவனிடம் கூறி, “இவ்வளவும் மெய்தானே?’’ என்று கேட்டார்.
குனிந்த தலை நிமிராமல் “மெய்தான்’ என்றான் இளங்கோ.
கதவுக்குப் பின்னே நின்றுகொண்டிருந்த அருள்மொழி தனது நெஞ்சை இறுகப் பற்றிக்கொண்டாள். அது இரண்டாக வெடித்துச் சிதறுவது போலவும் அதை அவள் வலிந்து தடுக்க முற்படுகிறவள் போலவும் தோன்றியது.
‘மெய்தான் என்கிறாரே, எது மெய்? ரோகிணிக்காகவே இவர் அங்கு தங்க வந்தது மெய்யா? அவளை நள்ளிரவில் சந்திக்கப்போய் உயிருக்கே உலை தேடிக்கொண்டது மெய்யா? அவள் தடுத்துவிட்டாள் என்பதற்காக இவர் தம் கடமையிலிருந்து தவறியது மெய்யா?- மெய்யாகவே இங்கு வந்து நிற்பவர் கொடும்பாளூர் இளவரசர்தாமா?’
“அவ்வளவும் மெய்தானா?’’ என்று திரும்பவும் கேட்டார் பெரியவேளார்.
“தந்தையாரவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். நடைபெற்ற காரியங்களை மட்டும்தான் தாங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவைகளின் காரணத்தை வெளியிட எனக்கொரு வாய்ப்பளித்தால்...’’
“தந்தையாரா? யார் உன் தந்தை? கொடும்பாளூர்க் குலத்துக்குப்பிறந்தவனா நீ? இல்லை. இல்லவே இல்லை!- இதோ பார், இளங்கோ! இப்போது நீ ஒரு படைத்தலைவன்; நான் இந்த நாட்டின் அமைச்சன்.உனக்கும் எனக்கும் உள்ள உறவு அவ்வளவுதான்!”
ரோகிணியின் உயிருக்கு ஆபத்து வந்தபோதுகூடக் கலங்காத இளங்கோவின் கண்கள் இப்போது கரகரவென்று கண்ணீர் சிந்தின.
“நீ செய்த தவறுகளுக்கெல்லாம் என்ன தண்டனை தெரியுமா?’’ என்று கேட்டுவிட்டுச் சட்டென்று மாங்குடி மாறனைப் பார்த்தார் பெரிய வேளார்.
“மாங்குடி மாறா! இவனைக் கொண்டுபோய் நிலவறைச் சிறையில் அடைத்துவிடு.சக்கரவர்த்திகள் திரும்பி வந்தவுடன் இவனிடம் காரிய காரணங்களைக் கேட்டு நீதி வழங்கிக் கொள்ளட்டும்!- இந்தா, திறவுகோல்; அழைத்துப் போ!”
அவருடைய கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்துதெண்டனிட்டான் மாறன். அவனுடைய குன்றான தேகம் குலுங்கிப் பதறியது.
“அபசாரம், அரசே! அபசாரம்! எனக்கும் சேர்த்துச் சிறைத் தண்டனை கொடுங்கள். ஆனால் இந்தக் கட்டளையை மட்டும் என்னை நிறைவேற்றச் சொல்லாதீர்கள். சோழநாட்டின் செஞ்சோற்றுக் கடனுக்காக என் உயிரையே தருகிறேன். ஆனால் என் உயிருக்கும் மேலான இளவரசரை!...”
அவன் எழுந்திருப்பதற்குள், பின்புறக் கதவு படாரென்று திறந்தது. மின்னலென ஓடிவந்து பெரியவேளாரின் முன்பாகக் கண்ணகித் தெய்வமெனநின்றாள் அருள்மொழி.
“மாமா, இது அடுக்கவே அடுக்காது! எல்லாவற்றையும் நான் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். ஒற்றனின் சொற்களை நம்பி, தீர விசாரிக்காமல் ஒருவருக்கு இவ்வளவு கொடுந்தண்டனை கொடுக்கலாமா என்பதைச் சிறிது யோசித்துப் பாருங்கள்! நான்கு தலைமுறைகளாகத் தலைகுனிந்து கொண்டிருந்த நம்மைத் தலை நிமிரச் செய்த மாவீரர் இவர். இப்போது இவர் ஈழத்தில் பெற்றிருக்கும் வெற்றிக்குச் சக்கரவர்த்திகள் இங்கிருந்தால் எவ்வளவோ பெருமையுடன் வரவேற்றிருப்பார்கள். தாங்கள் ஒன்றுமே செய்யாமல் கிடைத்த வெற்றியை மறந்து யாரோ சிலர் தப்பிவிட்டார்களென்பதற்காக இவருக்கு இந்தக் கொடுந்தண்டனையை அளிக்கிறீர்கள். இது அடுக்காது மாமா!”
“நங்கையாரே! இது நாட்டுப் பணியைப் பொறுத்த விஷயம். இதில் நீங்கள் தலையிடலாகாது” என்று, தமது அடக்கமுடியாத கோபத்தை அடக்கிக்கொண்டு, பணிவோடு கூறினார் பெரிய வேளார்.
“நாளைக்கு நாடாளப் போகிறவரை இன்றைக்குச் சிறைச் சாலைக்குள் தள்ளுவது நியாயமா? தந்தையார் இருந்தால் ஒரு போதும் இதற்கு உடன்படமாட்டார்கள். இது நாட்டுப்பணியல்ல, தங்களுடைய குமாரர் என்ற ஒரே உரிமையால்தான் தாங்கள் இவருக்குத் தீங்கிழைக்கத் துணிகிறீர்கள். இது அரச தர்மமே அல்ல! வேண்டாம்; உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகிறேன்!”
கோவைக் கனிகளாய்ப் பழுத்துப்போன கண்களை உருட்டி விழித்துக்கொண்டே, “நங்கையாரே! தங்கள் விருப்பம் எதுவோ அதன்படியே நடப்பதற்கு நான் சித்தமாக இருக்கிறேன். இப்போது நாட்டின் சுமை என்தோளில் இருப்பதால் நான் என் கடமையை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. பெற்றெடுத்த மைந்தனைத் தேர்க்காலில் கொன்று நீதியை நிலைநாட்டிய சோழர்களின் பரம்பரை இது. அதன் பெருமையை நிலைநாட்ட நினைத்தேன். நீங்கள் தடுக்கிறீர்கள். அப்படியானால், இந்தாருங்கள் என்னுடைய முடியையும் உடைவாளையும் உங்களிடம் கொடுத்துவிடுகிறேன். நாட்டின் பொறுப்பை இந்தக் கணத்திலிருந்து நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள்.’’
தமது சிரத்தில் கைவைத்து அவர் முடியை அகற்றப்போன சமயத்தில்,
“வேண்டாம், மாமா!” என்று கதறினாள் அருள்மொழி.
“மாறா! இளங்கோவை நிலவறைக்கு அழைத்துச் செல்’’ என்று மறுமுறையாகக் கட்டளையிட்டார் பெரிய வேளார்.
மாறனின் பின்னே சென்ற இளங்கோ நிலவறைப்படிகளில் இறங்கிச் சிறைக்குள் நுழைந்து கொண்டவுடன் சிறைக்கதவு தாழிடப்பட்டது.இப்படி ஒரு கட்டம் தன் வாழ்வில் வந்து விட்டதை நினைத்துக் கொடும்பாளூர் இரத்தம் கொதித்தது; குமுறியது.பெருக்கெடுக்கும் கண்ணீருடன் அருள்மொழி அங்கே ஓடி வந்து, சிறைக்கதவுக்கு வெளியே நினைவிழந்து விழுந்தாள்.
இரண்டாம் பாகம் நிறைவு பெற்றது
Comments
Post a Comment