வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 1. கல்லோ கவிதை அதன் சொல்லோ கடவுள்

பாகம் 3 , 1. கல்லோ கவிதை அதன் சொல்லோ கடவுள் 

மூன்றாம் பாகம்

கொடும்பாளூர்க் கோமகன்

1. கல்லோ கவிதை அதன் சொல்லோ கடவுள்


மனிதகுல வளர்ச்சியை அளக்க முற்பட்டு, அதன் நாகரிகப் பிறப்புக்குக்
‘கற்காலம்’ என்ற பெயரைச் சூட்டினவன் தனக்குத் தெரிந்தோ தெரியாமலோ
ஒரு பேருண்மையைக் கூறிவிட்டுப் போய்விட்டான். கற்காலத்து மனிதனாக
உலவிய தமிழன், அந்தக் கற்களைக் கொண்டே உலக வரலாற்றில் ஒரு
பொற்காலத்தை உதயமாகச் செய்துவிட்டான் அல்லவா!

கற்களில் தமிழன் கடவுளைக் கண்டான்! கற்களைக் கொண்டு அவன்
காலனைக் காலால் உதைத்தான். கற்களில் அவன் கன்னித் தமிழால் தன்
மெய்க்கீர்த்தி பொறித்தான். கற்களையே அவன் தனது வரலாற்று ஏடுகளாக்கி
விட்டான்.

“அன்புத் தமிழ் மகனே! நீ உலகத்துக்கு இரண்டு மாபெரும்
செல்வங்களை வழங்கியிருக்கிறாய். சொல்லுக்கு ஒரு வள்ளுவன்; அவன்
உன்னுடைய அறிவின் சின்னம். அடுத்தாற்போல். கல்லுக்கு ஒரு சொல்லுருவம்;
உன்னுடைய நாட்டுக் கற்கோயில்கள்! உன்னுடைய ஆற்றலையும்
அருளுணர்வையும் பறைசாற்றிக் கொண்டு கோயில்கள் உலகத்தின் கண்ணே
தலைநிமிர்ந்து கம்பீரமாக நிற்கின்றன. உனது நாட்டுக் கோயில்களின்
அருமையும் பெருமையும் உனக்குத் தெரியுமோ, தெரியாதோ! ஆனால்
உலகத்தின் பேரறிஞர்கள் உன் இனத்தை அவற்றுக்காகவே போற்றிப்
புகழ்கிறார்கள்.’’*

வீரவேங்கையான இராஜராஜப் பெருமகன் எழுப்பிய விண்ணை முட்டும்
தஞ்சைப் பெரிய கோயில் மட்டிலும் நமது

* The Tamil races were perhaps the greatest temple builders
in the World - Encyclopaedia Brittanica

பெருமைக்குப் போதுமா? உறுதிக்கும் உயரத்துக்கும் கம்பீரமான ஆண்மைத்
தோற்றத்துக்கும் அது சரிதான். ஆனால் காலம் வளர வளரக் கலைச்
செல்வங்களிலும் வளர்ச்சி காண வேண்டாமா?

பெரிய கோயிலை எழுப்பி இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வளர்ச்சியுற்ற
கலைத்திறனின் முத்திரையைப் பதிப்பிக்க வேண்டும்! தந்தையாரை அடுத்து
அவரது திருக்குமாரர் கடவுட் கலைப்பணி என்ன செய்தார் என்று நாடு
கேட்காதா? அல்லது தஞ்சைப் பெரிய உடையாரின் திருவடி நிழலில் தஞ்சம்
புகுந்த இராஜேந்திரசோழர் தாம் ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்
தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்’லை அறியாதவரா?

ஆகவே, வாருங்கள் சோழபுரத்துக்கு, காணுங்கள் அந்தக்
கண்கொள்ளாத காட்சிகளை:-

ஓராண்டு காலத்துக்கு முன்பு வெற்றுப் பொட்டலாகத் தோற்றமளித்த
இடந்தானா இது! தூரத்துப் பார்வைக்குக் கூட்டங்கூட்டமாக எறும்புக்
குவியல்களைப் போல் திட்டுத் திட்டாக மனிதர்கள் குவிந்திருப்பது
தெரிகிறதே! பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் நூற்றுக்கணக்கில்
பிரிந்து கூடி அங்கே என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள்?
‘ஆறில்லா ஊர் பாழ்’ என்ற பழம் சொல்லைப் பொய்யாக்கி, அதற்குப் புதிய
பொருள் கொடுக்கவா இத்தனை முயற்சிகள்? திரும்பிய பக்கமெல்லாம்
கேணிகள், குளங்கள், சிறுசிறு ஓடைகள். அதோ வடக்கே புதிதாக உருவாகும்
நகரத்தின் எல்லையில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஒன்று கூடி ஒரு
செயற்கைக் கடலையா தோண்டப் பார்க்கிறார்கள்? அதற்குப் பெயர் சோழ
கங்கையாமே! ஒன்றரைக் காத தூரத்துக்குமேல் அதை வெட்டிக்கொண்டு
போக வேண்டுமாம். பிறகு ஆறு காத தூரத்திலுள்ள கொள்ளிடத்துக்கும்
அதற்கும் ஒரு கால்வாய் வெட்ட வேண்டுமாம். அடுத்தாற் போல்
வடவெள்ளாற்றுக்கும் ஒரு கால்வாய் வெட்டி அங்கிருந்தும் நீரைக்
கொண்டுவர வேண்டுமாம். அந்த ஏரியை நிரப்புவதற்கு இரண்டு
ஆறுகளிலிருந்தும் நீர் பாய வேண்டுமாம். மனிதர்களால் நடைபெறக்கூடிய
காரியமா இது?

ஆம்! நாம் அங்கே மனிதர்களைத் தான் காணுகிறோம்.
நடப்பவையெல்லாம் செப்பிடு வித்தைகளல்ல, மாயாஜால விசித்திரங்களல்ல;
மந்திர தந்திரங்களல்ல, மனிதர்களின் உழைப்பு, உழைப்பு, உழைப்பு!

அது ஒரு போர்க்களம். பிற்கால வரலாற்றில் எத்தனையோ
போர்க்களங்களுக்கு இலக்காகவிருந்த சோழபுரத்தின் முதற் போர்க்களம் அது.
ஆனால் அழிவுப் போர்க்களமல்ல, ஆக்கப் போர்க்களம்!

நீர் நிறைந்து தளும்பவிருந்த அந்த ஏரியில் அப்போது நமது
மூதாதையரின் வேர்வை வழிந்து தளும்புகிறது. வெய்யிலையும், காற்றையும்
மழையையும் பாராது அவர்கள் இயற்கையுடன் போராடி அதை வெல்லப்
பார்க்கிறார்கள். வென்றுவிட்டால் அவர்களுக்கும் அவர்களது சந்ததியாருக்கும்
தானே பலன்? பாலை நிலமெல்லாம் சோலைவனமாக்கி விடமாட்டார்களா?
பொன்னைக் குவிப்பது போல் நெல்லைக் குவித்து வேலைக் குவிப்பது போல்
கரும்பைக் குவித்து பிறகு அவர்கள் பொங்கலும் புதுநாளும் கொண்டாட
மாட்டார்களா?

உழைக்காத மனிதர்களுக்கு ஊணேது? உடையேது? உறைவிடமேது?
செவ்விரத்தம் சிந்த உழைத்தாலே செஞ்சோறு கிடைக்குமென்பதைக் கண்டு
கொண்டவர்கள் அவர்கள். அப்போது ஆண்டவனும் உண்டு; அடிமையும்
உண்டு. அவர்களுக்குள் அன்பும் உண்டு; இருவருக்குமே உழைப்பும்,
உணவும், உற்சாகமும் பொதுவானவை.

இது சோழபுரப் புதுநகரத்தின் புறவாழ்வுப் போர்க்களம். ஆண்கள்
தங்களது தோள்முண்டாக்கள் புடைத்தெழ மார்பு விம்மி வேர்வை சொரிய
மண்ணை வெட்டி மலைமலையாய்க் குவிக்கிறார்கள். சிங்காரச் சிற்றிடைப்
பெண்டிரோ ஒயில் நடை நடந்து வந்து, ஒய்யாரமாகக் குனிந்து அந்த
மண்ணை அள்ளிச் சுமந்து சென்று ஓர் ஓரமாகக் கொட்டுகிறார்கள். அவர்
களுடைய மெல்லிடைகள் கொடிகளுக்கொப்பானவை தான். ஆனால்
உறுதியான பொற்கொடிகள். சிரிப்பும், பேச்சும், கைவீச்சும், கண்வீச்சும்,
கொஞ்சும்வளைகளுமாக அவர்கள் ஓடி ஓடிப் பம்பரமாய்ச் சுழல்கிறார்கள் -
அவர்களைப் பார்த்துக் கொண்டே மண்வெட்டும் ஆண்களுக்குக்
களைப்புக்குக் காரணம் ஏது? இனி அகவாழ்வுப் போர் நடைபெறும் அதிசய உலகத்துக்குத் திரும்பி வருவோம்; ஆம், அதிசயமான அற்புதமான அழகு பொங்கும் ஆனந்த உலகம்தான் அது.-

கண்களை முதலில் மேலே உயர்த்துங்கள். மனத்தையும் கண்ணீரால்
மாசறக் கழுவி விட்டு, மேலே எழுப்புங்கள்; சிரம் உயர்த்தி விழி உயர்த்த
வேண்டியிருந்தாலும், அகம் தாழ்த்திச் சிந்தனையைக் குவிய விடுங்கள்.
விழிகள் உங்களது நெற்றிப் புருவத்தின் மையத்தே பாய்ந்துசெல்ல, விண்ணுயர
உயர்ந்து கூம்பி நிற்கிறதே அதுதான் சோழேச்சுரத்தின் விமான கோபுரம்!

கங்கையைக் கொண்டுவந்த பின்னர், அப்படிக் கொண்டுவர முடிந்தால்,
அதற்குக் கங்கை கொண்ட சோழேச்சுரம் என்றும், நகரத்துக்குக் கங்கை
கொண்ட சோழபுரமென்றும் பெயர்கள் சூட்ட நினைத்திருந்தார் மன்னர்.

தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுரத்தைவிடச் சற்றே உயரமாக, இதை
எழுப்பியிருக்கக்கூடாதா என்று கேட்கிறீர்கள்? எழுப்பியிருக்கலாம். ஆனால்
மாமன்னர் அதை விரும்பவில்லை. ‘பக்திப் பணியில்கூடத் தம்முடைய
தந்தையாரையும் மிஞ்சிவிட்டார்’ என்ற பெயர் அவருக்கு வரக்கூடாதல்லவா?
பரம்பரை உயர்ச்சிக்கும் பக்தி எனும் அருளுணர்வுக்கும் பணிந்துவிட்டது
அவரது நிமிர்ந்த நெஞ்சம்!

ஆம், அந்தக் கோபுரத்துக்குக் கீழ்ப்புறத்திலிருந்து ஏன் இத்தனை
இத்தனை இனிய ஒலிகள் ஒன்றாக எழும்பி வருகின்றன? யாரேனும்
கந்தர்விகள் அங்கே கூட்டமாகச் சதங்கைகள் கொஞ்ச நடனமாடுகின்றனரா?
அவர்களுடைய நடனத்துக்குத் துணையாக மொரலியம், வாங்கியம், பாடலியம்,
உடுக்கை, உவச்சைப்பறை, சகடை முதலிய பக்க வாத்தியங்கள்
முழங்குகின்றனவா?

என்ன! செந்தமிழ் நாட்டுச் சிற்பக் கலைச் செல்வர்களது சிற்றுளி
ஓசைக்கலவைதானா? சிற்பியரின் விரல்கள் விதம் விதமாக நடனமாட
அவர்களது சிற்றுளிகள் பின்னணிபாட, இதுவே ஓர் ஆடலரங்குபோல்
தோன்றுகிறதே!

சிற்பியாருக்குப் பின்னால் வந்து நின்று பார்த்தால் நாமும் சிலைகளோடு
சிலைகளாகிவிட வேண்டியதுதான். நம்மைவிட உயிர்த்துடிப்பு மிக்க பவித்திரமான கற்கனிகள் அவை. தேனையும் தினைமாவையும் குழைத்த, நினைத்தவாறெல்லாம் உருவங்கள் சமைப்பது போலல்லவோ அவர்கள் கற்பனையைக் கனியச் செய்து உயிர் கொடுக்கிறார்கள்!

கலைகமகள், திருமகள், மலைமகள், உமையொருபாகன், திருமால்
இன்னும் எத்தனை எத்தனையோ தெய்வத் திருவடிவங்கள். கல்லிலே கடவுள்
இல்லை என்பவர்களும் அந்தக் கலைக்கனிகளை உண்ணலாம்.

மாமல்லர் கடல்மல்லையிலே தொடங்கிய கலைப்பணி அதன் சிகரத்தை
அந்தக் கோயிலில் எட்டிப் பிடிக்க முயல்கிறது. கடல் கடந்த நாடுகளிலும்
காணமுடியாத கலை வளப்பச் செழுமையை மாமன்னர் அந்தத்
திருமாளிகைக்குள் எப்படியோ கொண்டு வந்துவிட்டார். சிற்றம்பலச்
சிற்பியாரின் சீடர்களின் கைவண்ணம் அது.

சிற்றம்பலச் சிற்பியார் கர்ப்பக் கிருகத்தை அடுத்த வடக்கு வாயிலுக்கு
அருகில் தனியே அமர்ந்து தமது பணியில் மெய்மறந்திருந்தார். பல
நாட்களாகவே அவருக்கு ஒரு வேளை உணவு. அதுகூடப் பசியற்ற
உணவென்று கூறலாம்.

அவர் செதுக்கிக் கொண்டிருந்த சிவபெருமானின் திரு உருவமும்,
பார்வதியின் வடிவமுமே அவருடைய பசியைப் போக்கிவிட்டன; சண்டேசுவர
அனுக்கிரக மூர்த்தியைப் பார்த்துப் பார்த்து அவர் உளம் பூரித்தார்.
பசியாறினார்.

கருணை வெள்ளம் பாய்ந்தோடியது. எம்பெருமான் கண்களில்
அமர்ந்திருக்கும் கோலத்தில் இருந்தவாறு அவர் நமது இடது
கரங்களிலொன்றால், முழந்தாள் அருகில் மண்டியிட்டு வணங்கும் சண்டேசுவர
அடியாரின் சிரத்தை அன்போடு பற்றியிருந்தார். வலது கரங்களில் ஒன்று
அந்த அடியாரின் முடிமீது மலர்மாலை சுற்றிக்கொண்டிருந்தது.

அன்பு கொண்டு அடிபணிந்த அன்பருக்கு, இறைவன் இன்முகத்தோடு
மாலை சூட்டிவிடும் அந்தக் காட்சியை இமைகொட்டாது
பார்த்துக்கொண்டிருந்தார் சிற்பியார். தாம் தம்முடைய சொந்த முயற்சியாலோ,
கலைத்திறனாலோ செதுக்கிய சிற்பமாகவே அது தோன்றவில்லை.

எதிரில் கல் இல்லை; கடவுள் இருந்தார். கண்ணீர் மாலை மாலையாகப்
பொங்கி வழிந்தது சிற்பியாருக்கு. கரம் குவித்துக் கண்மூடி இந்த
உலகத்தையே மறந்தார்.

கண்களைச் சிற்பியார் திறந்தபோது, அவருடைய கழுத்தை ஒரு மலர்
மாலை வளைத்தது. ஓர் அன்புக்கரம் அவர் சிரத்தை மெல்லத் தாங்கியது.
அங்கே கொடும்பாளூர் பெரிய வேளார் தாங்கமுடியாத பெருமிதத்தோடு
நின்று கொண்டிருந்தார்.

“சிற்பியாரே, நீங்கள் தெய்வக் கலைஞர்! எம்பெருமானிடம் அருள்
பெற்று வணங்கும் இந்த சண்டேசுவரர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?’’

உணர்ச்சிப் பெருக்கால் ஒருகணம் திக்குமுக்காடி விட்டுப் பிறகு
நாத்தழுதழுக்கப் பேசலானார் சிற்றம்பலச் சிற்பியார்!

“அரசே! தாங்கள் எந்தப் பொருளோடு இதை வினவுகிறீர்கள் என்பது
எனக்கு விளங்கிவிட்டது. நானும் தொடக்கத்திலிருந்தே அதே கருத்துடன்தான்
இதை உருவாக்கி வருகிறேன். தம்மைப் போன்ற சிலை எதுவும் இந்தச்
சோழேச்சுரத்தில் செதுக்க வேண்டாமென்று சக்கரவர்த்திகள் என்னிடம்
குறிப்பிட்டிருந்தார்கள். எனக்கு அது ஒரு பெரிய மனக்குறை. அதை நான்
இந்தச் சண்டேசுவரர் சிற்பத்தின் வாயிலாகத் தீர்த்துக்கொள்ள முனைந்தேன்.
இங்கே முடி வணங்கி நிற்கும் அடியார்தாம் நமது சக்கரவர்த்திகள். அவருக்கு
அனுக்கிரகம் செய்பவரே எம்பெருமான். அருகில் அம்பிகையும் புன்னகை
தவழும் வதனத்தோடு வீற்றிருக்கிறார்கள்.’’

இதைக் கேள்வியுற்றவுடன் சிற்பியாரை அப்படியே தமது நெஞ்சாரத்
தழுவிக்கொண்டார் பெரியவேளார். ஒரு விநாடி அவர் தேகம் ஆனந்தப்
பெருக்கால் குலுங்கியது.

“சிற்பியாரே! இப்போதுதான் எனக்கு மேலைச் சளுக்க நாட்டிலிருந்து
செய்தி கிடைத்திருக்கிறது. நமது ஜன்மப் பகைவர்களை வென்று வெற்றிவாகை
சூட்டிவிட்டார் மாமன்னர். காலங்காலமாகத் தமிழ் இனத்தை அழிக்கக்
காதிருந்தவர்களை அடக்கி ஒடுக்கிவிட்டார் சக்கரவர்த்தி. அந்தச் செய்தி
கிடைத்த நாளன்றுதான் நீங்களும் இந்தச் சிலையை முடித்திருக்கிறீர்கள்.
மாமன்னரின் சிரத்தில் இந்த உலகுக் கெல்லாம் தலைவனாகிய எம்பெருமானே மாலைசூடும் அற்புதக் காட்சியல்லவா இது?’’

“சக்கரவர்த்திகள் விரைவில் திரும்பிவிடுவார்களா?’’ என்று ஆவலோடு
கேட்டார் சிற்றம்பலத்தார்.

“வெற்றி கொண்ட வீரர்களில் பெரும்பகுதியினரை அப்படியே
வடநாட்டுக்கு அனுப்பிவிட்டுத் திரும்புவார் சக்கரவர்த்தி. நூற்றுக்கணக்கான
யானைகளுடன், ஆயிரக் கணக்கான குதிரைகளுடன், பல்லாயிரக்கணக்கான
வீரர்களும் வடக்கே வங்க நாட்டுக்குச் செல்கிறார்கள். அங்கே சென்று
புனிதக் கங்கையிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு சோழபுரத்துக்குத்
திரும்புவார்கள். வடதிசை மாதண்ட நாயகர் அரையன் ராஜராஜன்
படைகளுக்குத் தலைமை தாங்கிச் செல்வார்.’’

“வங்கத்தில் உள்ள கங்கைக்கா? வீரர்கள் திரும்பி வருவதற்கு ஓர்
ஆண்டுக்குமேல் ஆகுமே.’’

“இரண்டு ஆண்டுகளானால்தான் என்ன? மெதுவாகத் திரும்பி வரட்டும்.
வழியில் எந்த நாட்டு மன்னரும் எதிர்க்கவில்லையென்றால் விரைவில்
திரும்புவார்கள். இல்லைமேல் எதிர்ப்பாரின் சிரங்களின்மீது கங்கை நீர் குடம்
குடமாக நமது புதிய நகருக்கு வந்து சேரும். நகரத்தின் வேலைகள்
முடிவதற்கும் கங்கை நீர் வருவதற்கும் காலம் சரியாக இருக்குமல்லவா!”

சிற்பியார் தமது மாமன்னருக்கு வணக்கம் செலுத்துவதாக
எண்ணிக்கொண்டு சண்டேசுவரருக்குப் பயபக்தியோடு கைகூப்பினார்.

அப்போது பெரிய வேளார், “சோழபுரக் கோநகரத்தின் நகர்புகு விழா
நடந்துவிட்டால், நானும் என் மைந்தன் இளங்கோவிடம் ஆட்சிப் பொறுப்பை
விட்டு விட்டு இந்த ஆலயத்துக்கே வந்துவிடலாம்’’ என்றார் எங்கோ
நினைவாக.

உடனே அவர் கண்கள் நிலவறைச் சிறைக்குள் அடைப்பட்டிருந்த
இளங்கோவை எண்ணிக் கலங்கின.

தொடரும்

Comments