Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 10- இரவுப் பொழுது.கடினமான கருங்கற் பாறைகளினூடே கன்னற்சுவை தண்ணீர் கசிவதுண்டு; கல்லைவிடக் கடினமான சித்தம் படைத்தவர்கள் கூடக் கலக்கமுறுவதுண்டு.ஆனால் இளங்கோவின் உருவம் கற்சிலையை யொத்ததே தவிர, அவன் உள்ளம் கனிவுடையதுதான். அங்கே கல் இல்லை, கரும்பு இருந்தது.நிலவறைப் படிகளில் ரோகிணியின் நிழலாடி மறையும் வரையில் அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ. முதலில் அவள் மறைந்தாள்; பிறகு அவளுடைய நிழல் அவளைப் பின்பற்றியது. அடுத்தாற்போல் எங்கும் இருள் சூழ்ந்தது.

கால்கடுக்க இரும்புக் கதவோரமாக நின்றுவிட்டுச் சோர்வுடன் திரும்பிச்சென்று தன் படுக்கையில் சாய்ந்தான் இளங்கோ. ஒரே ஒரு முறை, அருள்மொழியின் விருப்பத்துக்காகவாவது, ரோகிணியை ஏறிட்டுப் பார்த்திக்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. முகத்துக்கு முகம் காணத்துடித்த ஆசையில் ரோகிணியைவிட இளங்கோ எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. ஆனால் எப்படியோ தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு விட்டான். அவள் எதிரில் அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது. ஆனால் அவள் போனபிறகு?...

‘ரோகிணி! இந்த நிலையில் உன்னை எப்படி நங்கையார் உன் மாளிகையிலிருந்து அழைத்துக்கொண்டு வந்தார்கள்? எப்படி உன்னால் இவ்வளவு தூரம் நடந்துவர முடிந்தது?- சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து வாடிய பூச்சரம் போன்ற உன்னை, மெல்லச் சுமந்து கொண்டு போய் உன் அறையில் விட்டு வந்தால்தான் என்ன?’

ரோகிணியைப்பற்றி அருள்மொழி கூறிச்சென்ற சொற்கள் ஒவ்வொன்றுமே அவன் உள்ளத்திலிருந்து கொண்டு எதிரொலி செய்தன.

‘அருள்மொழியார் கூறியது அனைத்துமே உண்மைதான். எனக்கு உதவி செய்வதாக எண்ணிக்கொண்டு என் நாட்டுக்கு அவள் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறாள். செய்த நன்மைகள் அனைத்தையும் மறந்துவிட்டு அவள் செய்த ஒரே குற்றத்துக்காக அவளை இவ்வளவு கடுமையாகத் தண்டித்து விடலாமா?’

ரோகிணியைப் பற்றிய நினைவுகளின் அடித்தளத்தில் அருள்மொழி நங்கையும் அழுத்தம் நிறைந்த உறுதியுடன் நின்று கொண்டிருந்தாள். “முதன்முதலில் நான் சிறைப் பட்டவுடன் எதிரில் மயங்கி வீழ்ந்த அதே அருள்மொழிதானா இவள்? அன்றைக்கு அருள்மொழியைப் பற்றி நினைத்தவையெல்லாம் ஒருவேளை தவறாகக்கூட இருக்குமோ? ரோகிணியைப் போலவே, நங்கையாரின் மனமும் வேறுவிதமாக இருந்திருக்குமானால் ரோகிணியை இங்கே எப்படிக் கொண்டு வந்திருக்க முடியும்?

இளங்கோவின் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. சிறைக்குள்ளே விரிக்கப்பட்டிருந்த படுக்கையில் அவன் புரண்டு புரண்டு படுத்தான். அவனுடைய மனமும் புரண்டு கொண்டேயிருந்தது.

படிகளில் ரோகிணியைத் தாங்கியவாறே நடந்த அருள்மொழிக்கே இளங்கோவின் பிடிவாதம் கோபத்தை எழுப்பியது. ரோகிணியிடம் ஏதாவது ஆறுதல் கூறி, அவளுக்கு அமைதி தேடித்தர விரும்பினாள். சந்தடியின்றித் திரும்ப வேண்டிய வேளையாதலால் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

வெளிப்புறம் சுரங்கப் பாதையை ஒட்டினாற்போல் காத்துக் கொண்டிருந்த மாங்குடி மாறன், மீண்டும் ரோகிணிக்கு உதவி செய்ய முன்வந்தான். முன்பு சுமந்து கொண்டு வந்தது போலவே திரும்பவும் அவளைக் கொண்டு போய்விட நினைத்தான்.

“வேண்டாம் ! இப்போது என்னால் நடக்க முடியும்’’ என்றாள் ரோகிணி,

“சிறிது தூரம் எங்களுடன் துணைக்கு வந்தால் போதும். என்னுடைய சோர்வெல்லாம் நீங்கி விட்டது’’ என்றாள்.

வியப்போடு அருள்மொழியும் மாங்குடி மாறனும் ரோகிணியைப் பார்த்தார்கள். அவளோ தன் முத்துப்பல் வரிசை தெரியச் சிரித்து, “மெல்ல மெல்ல நடந்தே போய் விடலாம் அக்கா! உங்களுடைய தோளில் சாய்ந்துகொண்டே நான் நடந்து வருகிறேன்’’ என்றாள்.

மாளிகையை அவர்கள் நெருங்கியவுடன் மாங்குடி மாறன் விடை பெற்றுக் கொண்டு இருளில் மறைந்தான். ரோகிணி சற்றே தாமதித்து நின்று அருள்மொழியின் முகத்தை நோக்கினாள்.

“என்ன ரோகிணி?’’

“இப்படிச் சிறிதுநேரம் அமைதியாகப் புல்தரையில் உட்கார்ந்துவிட்டுப் போகலாமா, அக்கா?’’ அருள்மொழியின் மறுமொழியை எதிர்பாராமலே ரோகிணி தரையைநோக்கிச் சரிந்தாள். அருள்மொழிக்கும் அங்கு உட்காருவதைத் தவிர வேறு வழியில்லை.

சிறிதுநேரம் மௌனமாக வானத்தை உற்றுப் பார்த்து கொண்டிருந்தாள் ரோகிணி. பூங்காவின் மென்காற்று நறுமணத்தோடு நெஞ்சை நிரப்பியது. அவள் தனக்குள்ளாகவே புன்னகை செய்து கொண்டாள்.

ரோகிணியின் மனநிலை அருள்மொழிக்குப் புரியவில்லை. இளங்கோ அவனை ஏறிட்டுப் பார்க்காததால், தாங்க முடியாத ஏமாற்றத்தால் அவள் தவித்துக் கொண்டிருப்பதாக அருள்மொழி நினைத்தாள். எப்படியாவது ரோகிணிக்கு ஆறுதல் கூறவேண்டுமென்பதுதான் அவள் எண்ணம்.

“இன்றைக்கு இந்த உலகமே என் கண்களுக்கு மிகமிக அழகாக

இருப்பதுபோல் தோன்றுகிறது அக்கா!” என்று தொடங்கினாள், ரோகிணி. “வானத்தைப் பாருங்கள்! வாரி இறைத்த வைரமணிகளைப் போல் நட்சத்திரங்கள் கண் சிமிட்டுகின்றன. பூங்காற்றின் சுகந்தத்தில் எவ்வளவு மயக்கம் கலந்திருக்கிறது தெரியுமா? மனங்கொண்ட மட்டும் இந்தக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு, கண் இமைக்காது இப்படியே பச்சைப் புல்மீது படுத்துக் கிடக்கலாம் போல் தோன்றுகிறது!”

துன்பம் மிகுதியாகி, அதைத் தன்னிடமிருந்து மறைப்பதற்காகவே ரோகிணி இப்படிப் பேசுகிறாள் என்று நினைத்தாள் அருள்மொழி.

“ரோகிணி! நீ வீணாகக் கலங்கிப் போயிருக்கிறாய். கொடும்பாளூர் இளவரசர் உன்னிடம் இரக்கமின்றி நடந்து கொண்டதால் உன்னிடம் அவருக்கு அன்பில்லை என்று நினைக்கிறாய் போலும்!”

கலகலவென்று சிரித்தாள் ரோகிணி. அருள்மொழியின் அறியாமையை எண்ணிச் சிரித்த சிரிப்பு அது. அருள்மொழியோ, அதைச் சித்தக் கலக்கம் என்று எண்ணி விட்டாள்.

“இதோ பார் ரோகிணி! கொடும்பாளூர் இளவரசர் வெளித்தோற்றத்துக்கு எப்படி நடந்து கொண்டாரோ அதேபோல் அவர் மனம் நடந்துகொள்ளவில்லை. அவர் பிறந்த கொடும்பாளூர்க் குலமே அப்படிப்பட்ட குலம். ஆராய்ந்து பாராமல் ஆத்திரப் படுவார்கள். பிறகு அதற்காகக் கண்ணீர் சிந்துவார்கள்.’’

அந்தக் குலத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக, ரோகிணி இன்னும் நெருக்கமாக நகர்ந்து வந்து அருள்மொழியின் கரங்களைப் பற்றிக் கொண்டாள். ரோகிணியின் ஸ்பரிசம் ஏனோ இந்த முறை அருள்மொழியை மெய்சிலிர்க்க வைத்தது. அவள் தன்னையே மறந்துவிட்டுப் பேசலானாள். “கொடும்பாளூர்க் காரர்களின் குண விசித்திரங்களை நீ சிறிது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் ரோகிணி!” என்றாள் அருள்மொழி.

“உண்மையாகவா, அக்கா!”

“ஆமாம்; இல்லாவிட்டால் இளவரசரின் தந்தை பெரிய வேளார் தம்முடைய சொந்தக் குமாரரையே சிறையில் அடைத்து வைக்கத் துணிவாரா?’’

“என்ன!”

“ஆமாம், ரோகிணி! அவர் செய்த கொடுமைதான் இது. இதனால் அவருக்குத் தன் குமாரர் மீது ஆசையோ, பாசமோ இல்லை என்று நினைக்கிறாயா? அன்பு கிடையாது என்று எண்ணுகிறாயா? நம் எல்லோரையும் விட இளவரசர் மீது உயிரையே வைத்திருப்பவர் பெரியவேளார் தாம்.’’

யாருக்குமே வெளியிடக் கூடாதென்று வைத்திருந்த ரகசியத்தை அருள்மொழி ரோகிணியிடம் வெளியிட்டு விட்டாள். ரோகிணியின் துன்பத்தை அவள் குறைக்க விரும்பியதும் ஒரு காரணம். இரவு நேரமும், தனிமையும் அவளுடைய சொந்தக் கலக்கமும், பிற காரணங்கள். மேலும் ஓர் முக்கியமான காரணமும் இருந்தது.

ரோகிணியின் நினைவில்கூட இளங்கோ மிகவும் உயர்ந்தவனாகவே விளங்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள். இளங்கோ ஒன்றும் தவறு செய்துவிடவில்லை. அவனுக்கு வேறு யாருமே தண்டனை அளித்து விடவில்லை. என்றுமே தவறு செய்யாத மனம் இளங்கோவின் மனம்.

அவனுக்குத் தண்டனையளிக்கக் கூடிய தகுதி உள்ளவர்கள், சக்கரவர்த்தியைத் தவிர சோழ சாம்ராஜ்யத்தில் வேறு யாருமே கிடையாது. சக்கரவர்த்தி இருந்திருந்தால் இப்படி நடந்திருக்கவே நியாயமில்லை. இவற்றை ரோகிணிக்கு உணர்த்தவே அவளிடம் உண்மையைக் கூறினாள் அருள்மொழி. “இளவரசரைவிட அவர் தந்தையார் மிகவும் பயங்கரமானவரா?’’ என்று கேட்டாள் ரோகிணி.

“கொடும்பாளூர்க்காரர்களே பொதுவில் பயங்கரமானவர்கள் தாம். சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றிய எந்த விஷயமும் அவர்களுடைய உயிரைவிட மேலானது; அவர்களுடைய கொடும்பாளூர்க் கோனாட்டைவிட முக்கியமானது. எதைக் கடமை என்று கருதுகிறார்களோ அதற்காக அவர்கள் தங்களையும் தங்கள் உடைமைகளையும் ஆசாபாசங்களையும் நொடிப்பொழுதில் தியாகம் செய்து விடுவார்கள். கடமை வெறி கொண்ட உத்தமசீலர்கள் அவர்கள்.’’

இதைக் கேட்பதற்கே நடுக்கமாக இருந்தது ரோகிணிக்கு. வெறி என்ற சொல்லை, அருள்மொழியின் வாயால் கேட்ட பிறகு, அவளுக்கு அருள்மொழியின் கூற்றை அப்படியே நம்பத்தான் வேண்டியிருந்தது. தன்னை ஒருமுறை இளங்கோ கடலில் தூக்கி எறிய முயன்றதை ரோகிணி இப்போது நினைவுபடுத்திக் கொண்டாள். அவள் தேகம் மேலும் நடுங்கியது.தொடரும்

Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 31. காதல் வெறி; கடமை வெறி!

மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது. கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம். கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான். நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.
“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.
“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போகப்போகிறோம்.’’
ஆதித்த பிராட்டிய…

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறியர்.

ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான் அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள் எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்கொட்டிவிடுகின்றன.
“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப் புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.
“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.
“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக் காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார். தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும் தான் இருக்கும்.’’
இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல் தழுதழுத்ததை ரோகிண…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-கட்டுரை.

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம் :
புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் கா…