வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறியர்.


ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான் அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள் எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்கொட்டிவிடுகின்றன.

“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப் புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.

“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா நடந்து கொள்வார்?’’

“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.

“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக் காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார். தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும் தான் இருக்கும்.’’

இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல் தழுதழுத்ததை ரோகிணி கவனிக்கவில்லை. எவ்வளவு பெரிய வேதனைச் சுமையை அருள்மொழி உள்ளே அழுத்திக்கொண்டு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது ரோகிணிக்குத் தெரியாது. ரோகிணி நீலவானின் நெடும் பரப்பில், திடீரென்று சிறகடித்துப் பறக்கத் தொடங்கினாள். அருள்மொழி கூறிய அன்பு மொழிகள் அவளுக்கு அமுதத்தின் சுவை தந்தன.

“அக்கா! அவரைக் காண்பதற்காகச் சென்றபோது நடக்க முடியாமல் தடுமாறியவளுக்கு, கண்டு வந்த பின்பு எப்படி நடக்க முடிகிறது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படவில்லையா? வானத்திலும் தரையிலும், காற்றிலும், நான் ஏன் புதிய அழகைக் கண்டு ஆனந்தம் கொண்டேன் என்பது உங்களுக்குப் புலப்படவில்லையா? மெய்யாகவே என்னுடைய மாற்றத்தை நீங்கள் கண்டு கொள்ளவில்லையா அக்கா?’’

ரோகிணியை வியப்போடு உற்றுப் பார்த்தாள் அருள்மொழி.

“இளவரசரின் மனம் இரும்பல்ல என்பதை நான் நன்றாகக் கண்டுபிடித்துவிட்டேன். விளக்கொளியில் நாம் வருவதை நன்றாகப் பார்த்த பிறகே அவர் அறையின் மறு கோடியிலிருந்து எழுந்து வந்திருக்கிறார். அவர் இருளில் வந்தபோதே, அவர் கண்களை நன்றாகக் கவனித்தேன்.அந்தக் கண்கள் நாம் அருகில் நெருங்கும் வரைக்கும் வேறெங்கும் திரும்பவில்லை,அக்கா.’’

அருள்மொழி நீண்ட பெருமூச்சு விடுவதைக் கவனியாமல் ரோகிணி மேலே கூறினாள். “மெய்யாகவே என் மீது வெறு ப்பிருந்தால் அவர் தமது இடத்தை விட்டே எழுந்து வந்திருக்கமாட்டார். வந்தவர் எதற்காகத் தமது முகத்தைப் பின்புறம் திருப்பிக் கொண்டார், தெரியுமா? அவர் மறைக்கத் துணிந்த துன்பத்தை அவர் முகம் எங்கே என்னிடம் காட்டிக் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் அவருக்கு. அதனால்தான் வெறுப்பை வெளியிடுகிற பாவனையில் திடீரென்று அப்படித் திருப்பிக் கொண்டார். அத்தனையும் வெறும் நடிப்பு அக்கா நடிப்பு.’’

“உண்மையிலேயே நீ அவரை அதிகமாய்த் தெரிந்து வைத்திருக்கிறாய் ரோகிணி!’’ என்று உயிரற்ற குரலில் கூறினாள் அருள்மொழி.

“ஆமாம், அக்கா! ரோகணத்துக்கு முதன்முதலில் அவர் தூதுவராக வந்ததிலிருந்து நான் அவரைக் கவனித்து வருகிறேன். அப்போதெல்லாம் எனக்கு அவரிடம் ஆழ்ந்த பற்றுதல் இல்லை. எப்படியாவது அவருடைய முரட்டுத்தனமான செயல்களிலிருந்து என் குடும்பத்தாரைக் காப்பாற்றவே நினைத்தேன். நாளடைவில் என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.’’

“உலகத்திலுள்ள எல்லாப் பெண்களுமே இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கிறது’’ என்றாள் அருள்மொழி.

அவள் கூறியதன் பொருள் ரோகிணிக்கு விளங்கவில்லை. அதைக் கிரகித்துக் கொள்ளாமல், “என்றாலும் ஏனோ தெரியவில்லை; இளவரசரை நினைக்கும்போது சில சமயங்களில் நான் அஞ்சி நடுங்குகிறேன். கடமை என்றால் கண் தெரியாது என்று கூறினீர்களே, அது முற்றிலும் மெய்தான்’’ என்றாள் ரோகிணி.

“ஏன் அப்படிச் சொல்லுகிறாய் ரோகிணி?’’

“ஆனைமங்கலம் மாளிகைக்கு அவர் குதிரைமீது பறந்து வந்தபோது அவர் கண்களில் கலந்திருந்த ஆத்திரத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். நான் தடுக்க முற்பட்டேன் என்பது உண்மைதான். ஆனால் அவர் என்னை ஒதுக்கிவிட்டுக்கூட விலகிப் போயிருக்கலாம். அப்படிப் போகாமல் என் மீதே குதிரையைச் செலுத்திக் கொண்டு போக முடிவு செய்து விட்டார்.’’ அருள்மொழி மௌனமாக அவள் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அங்கே வந்திருந்தவர்கள் யார், எதற்காக ரோகிணி அவர்களைக் காப்பாற்ற முயலவேண்டும் என்றெல்லாம் அருள்மொழி அவளிடம் கேட்கவில்லை.

“அக்கா! மற்றொரு விஷயத்தையும் நான் உங்களிடம் கூறவேண்டும்’’ என்று மீண்டும் தொடங்கினாள் ரோகிணி.

“நீங்கள் சிறைச்சாலையில் இளவரசரிடம் கூறியதுபோல் நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. என்னுடைய தந்தை யாருக்கோ, நாட்டுக்கோ கூட நான் துரோகம் செய்திருப்பதாய்க் கூற முடியாது. இளவரசரிடம் இரக்கம் கொண்டு அவரைக் காப்பாற்றுவதற்குச் சில சமயங்களில் முயற்சி செய்திருக்கிறேன். அதன் பலன் எங்களுடைய நாட்டுக்கு எதிராக முடிந்திருக்கிறது! என்றாலும் உங்கள் தந்தையார் எங்களிடம் காட்டிவரும் கருணையை நினைக்கும்போது நான் செய்தது துரோகமாகாது அக்கா! நம்முடைய இரு நாடுகளும் காலங்காலத்துக்கும் ஒற்றுமையாகவிருந்து அன்பை வளர்க்க வேண்டுமென்றுதான், நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு மத்தியில் எத்தனையோ இடையூறுகள் முளைத்திருக்கின்றன. என்னுடைய தந்தையார் மிகவும் நல்லவர்தாம். ஆனால் அவரை ஆட்டி வைப்பவர்களிடமிருந்து அவரால் விடுபட முடியவில்லை.’’

“பெண்களாகிய நாம் கூடியவரையில் ஆண்களுடைய வழியிலிருந்து விலகியிருப்பதுதான் நல்லது, ரோகிணி!’’ என்றாள் அருள்மொழி.

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் நம்மால் ஆண்களிடமிருந்து விடுபட்டு விலகி நிற்க முடியவில்லையே! என் தந்தையாரும் தம்பியும் எப்படிப் போனாலும் போகிறார்கள் என்று என்னால்

சும்மாயிருக்க முடிகிறதா? அதேபோல் கொடும்பாளூர் இளவரசர் பகை நாட்டார்தாமே என்று அவரை மறந்துவிட முடிகிறதா? அக்கா! நான் இருதலைக் கொள்ளி எறும்பு அக்கா!’’ என்றாள் ரோகிணி. அவளது குரலில் ஏக்கம் பிரதிபலித்தது. தன் நிலையைக் கண்டு அவளுக்கே துன்பம் பீறிட்டுக் கொண்டு வந்தது.

“கவலைப்படாதே, ரோகிணி’’ என்று அவளை இறுகத் தழுவிக் கொண்டாள் அருள்மொழி. “எப்போதும் காலம் இப்படியே இருந்துவிடாது. மேலும் என் தந்தையார் ஒருபோதும் பகைமையை விரும்பாதவர். அன்பால் அணைத்துக்கொள்ள முடியாதபோதுதான் வேறு வழிகளைக் கடைப்பிடிப்பது அவர் வழக்கம்.’’ அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறித் தேற்றினாள் அருள்மொழி.

“இங்கு வந்து பார்த்தபிறகுதான் எனக்கு உங்களுடைய பண்பை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் உணராதவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் ஆக்கவும் அழிக்கவும் வலிமை இருக்கிறது. அவர்கள் ஆடவிடும் பம்பரம்போல் சில சமயங்களில் நாம் சுழலவேண்டியிருக்கிறது அக்கா!’’ என்றாள் ரோகிணி அழாக்குறையாக.

“ரோகிணி! இன்றோ, நாளையோ இந்த ஆண்டிலோ, அடுத்த ஆண்டிலோ நீ ஒரு திடமான முடிவுக்கு வந்து தீரவேண்டும். ஒன்று உன் தந்தையாரின் கருத்தை மெல்லத் தெரிந்து கொண்டு அதை உன் விருப்பத்துக்குச் சாதகமாகக் கொண்டு வரவேண்டும். அல்லது அவசியமானால் இளவரசருக்காக உன் தந்தையை அறவே மறந்துவிடும் துணிவும் வேண்டும். உன்னைப் போன்ற நிலையில் உள்ளவர்களுக்குத் திடமான நெஞ்சுறுதி வேண்டும் ரோகிணி!’’ என்று கூறினாள் அருள்மொழி. ரோகிணி சற்று யோசனை செய்துவிட்டு, “எங்களுடைய கனவு நிறைவேறுவதற்கு இளவரசரைச் சார்ந்தவர்கள் இடம் கொடுப்பார்களா,

அக்கா?’’ என்று கேட்டாள். “அரண்மனைக்குள்ளே இருப்பவர்களைப் பற்றி அதிகமாய்த் தெரிந்து வைத்திருப்பவர்கள் நீங்கள். இளவரசருக்கே நீங்கள் நெருங்கிய உறவுமுறையானவர்கள். நான் கூட ஏதேதோ விஷயங்களை ஒருசமயம் கேள்வியுற்றேன்’’ என்றாள். அருள்மொழி சிலையானாள்.

தொடரும் 


Comments