பாவம்! ரோகிணி தன்னைத் தலைவியாகவும், அருள்மொழியைத் தோழியாகவும் நினைத்துக் கொண்டு விட்டாள். உயிர்த் தோழியர்கூடச் செய்வதற்குத் தயங்கும் ஒப்பற்ற செயலையல்லவா சோழ சாம்ராஜ்யத்தின் இளவரசி அவளுக்குச் செய்திருக்கிறாள்! ரோகிணியின் உயிரையல்லவா இப்போது அவளுக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறாள்.
அருள்மொழி தன் உயிருக்கு உயிரான ஒன்றை, உயிருக்கும் மேலான ஒன்றைப் பறிகொடுத்திருக்கிறாள் என்பதை ரோகிணி உணரவில்லை. ஆனந்தவெறியில் அவள் அருள்மொழியிடம் உளறத் தொடங்கினாள்.
“அக்கா! நான் இங்கே வருவதற்கு முன்பு கொடும்பாளூர் இளவரசர் சக்கரவர்த்திகளுக்கு நெருங்கிய உறவினர் என்று நினைக்கவில்லை. எத்தனையோ சிற்றரசர்களைப் போல் அவரும் ஒருவராக இருப்பார் என்ற எண்ணம் எனக்கு. அவருடைய வீரத்துக்காக மட்டிலும் சக்கரவர்த்தி அவர்மீது தனிப்பட்ட அன்பு செலுத்துகிறார் என்று நினைத்தேன்.’’
“அதுவும் ஒருவகையில் உண்மைதான், ரோகிணி!’’ என்றாள் அருள்மொழி. “வீரர்களிடம் தனிப்பட்ட அன்பு செலுத்துவதுதான் என் தந்தையாரின் வழக்கம்.’’
“இங்கே வந்த பிறகுதான் என் மனத்தில் மற்றொரு அச்சம் உதித்தது.’’
“அச்சமா?’’ என்று கேட்டாள்.
“ஆமாம்! இளவரசரின் தந்தையாருடன் பிறந்த சொந்த அத்தையார் தாமே உங்கள் அன்னையார்! கொடும்பாளூர் இளவரசருக்குச் சக்கரவர்த்தியின் குமாரத்தியாக நீங்கள் அவரை மணந்துகொள்ளும் முறையில் இருக்கிறீர்கள், அக்கா! நீங்கள் என்னைத் தவறுதலாக நினைத்துக் கொள்ளக் கூடாது. எங்கே நீங்கள் அவரை மணந்து கொள்ளக்கூடுமோ என்றுகூட நான் முதலில் நினைத்தேன்.’’
“அப்படியா!’’ என்று தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு கேட்டாள் அருள்மொழி. கிணற்றுக்குள்ளே இருந்து ஒலிப்பதுபோல் அவள் குரல் ஒலித்தது.
“மெய்யாக நான் நினைத்ததை இப்போது உங்களிடம் சொல்லி விடுகிறேன் அக்கா! யார் மீது நான் சிறிதளவும் பொறாமை கொள்ளக் கூடாதோ அவர்கள் மீதே பொறாமை கொண்டேன்! உங்களிடமே நான் பொறாமை கொண்டேன். நான் செய்த அந்தப் பாவத்துக்காக, நான் இழைத்த அந்தக் குற்றத்துக்காக, நீங்கள்தாம் என்னை மன்னிக்க வேண்டும். என்னைத் தனியே விட்டுவிட்டு நீங்கள் எல்லோரும் பழையாறைக்குப் புறப்பட்டபோது நான் எவ்வளவு துன்பமடைந்தேன், தெரியுமா? அப்போது அந்தத் துன்பத்துக்கு நீங்கள்கூட ஒரு காரணம் என்று என் மனம் எண்ணிவிட்டது’’
என்று கூறினாள் ரோகிணி.
அருள்மொழியின் இரண்டு கைகளையும் பற்றித் தன் கண்களில் புதைத்துக்கொண்டு கண்ணீர் சொரிந்தாள் ரோகிணி. தன்னிடம் படிந்திருந்த பொறாமை உணர்ச்சி அவ்வளவையும் கண்ணீரால் வெளிப்படுத்திவிட்டு, தன்னையே அவள் தூய்மைப்படுத்திக் கொள்ள முனைந்தாள் போலும்!
“பழையாறைக்கு நீயும் வருவதற்கு விரும்புகிறாய் என்று தெரிந்திருந்தால் கட்டாயம் நானே உன்னை அழைத்திருப்பேன். எனக்குக்கூட உன்னை அழைத்துக் கொண்டு போக வேண்டுமென்று ஆவல்தான். ஆனால் உன் தந்தையார் எப்படி நினைப்பாரே என்ற தயக்கத்தில் பேசாதிருந்துவிட்டேன். இனிமேல் அப்படியெல்லாம் நடக்காது ரோகிணி!’’
தன் தந்தையாரைப் பற்றி அருள்மொழி குறிப்பிடவே ரோகிணிக்கு மகிந்தரின் நினைவு வந்துவிட்டது. “ஆமாம், அக்கா! என் அப்பா ஒருவர் இருக்கிறார், அவரையும் நான் அடிக்கடி மறந்து விடுகிறேன். அவர் எனக்கு என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை!’’
“முன்பே கூறினேனே! காலம் வரும்போது அதன்படி ஒரு முடிவுக்கு வந்துவிடு. முதலில் உன் தந்தையாரிடம் உன் விருப்பத்தை வலியுறுத்துவது உன் கடமை. அதை உன்னைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது.’’
“அப்படியானால் மறுபாதிப் பொறுப்பை எனக்காக நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா, அக்கா?’’
“நீ என்ன சொல்கிறாய் ரோகிணி?’’ என்று மெல்லிய குரலில் கேட்டாள் அருள்மொழி.
“முதன் முதலில் கொடும்பாளூர் இளவரசரின் கோபத்தைத் தணித்தாக வேண்டும். அவரிடம் என் தாபத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். என்னுடைய குற்றங்குறைகளை அடியோடு மன்னிக்காத வரையில் அவருடைய மனத்தில் எனக்கு நிரந்தரமான இடம் கிடைக்காது. அடுத்தாற்போல் அவருடைய பெற்றோர் இருக்கிறார்கள். அதையும் அடுத்து உற்றார் உறவினர்களான சக்கரவர்த்திகளின் குடும்பம் இருக்கிறது. சக்கரவர்த்திகளும் அந்தப்புரத்தில் இருப்பவர்களும் எங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ தெரியாது. சில சமயங்களில், இது எங்கே நிறைவேறாத ஆசையாகிவிடுமோ என்றுகூட நான் பதறித் தவிக்கிறேன்.’’
மறுமொழி கூறாது அருள்மொழி கனிவுடன் ரோகிணியின் கண்களை உற்று நோக்கினாள்.
“அக்கா! நாங்கள் இருவரும் உலகத்தின் இருவேறு மூலைகளில் எட்டாத தொலைவில், இரண்டு உச்சிகளில் தனித்தனியே நிற்கிறோம். எங்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியை நினைத்துப் பார்த்தாலே என் தலை சுற்றுகிறது. எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்காமலே நான் என் கனவுக்கோட்டைகளைத் துரிதமாக எழுப்பி விட்டேன். ஆனால் அந்தக்
கோட்டைகள் அழியுமெனத் தெரிந்தால், அதற்கு முன்னரே நானும் அழிந்து விடுவேன்.’’
சட்டென்று ரோகிணியின் வாயைப் பொத்தினாள் அருள்மொழி. “அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடாது; கலக்கமுறாதே!’’ என்று அவளைத் தேற்றினாள் அருள்மொழி.
“நீங்கள் செய்திருக்கும் உதவிகளையும் உங்களுடைய ஆறுதல் மொழிகளையும் நான் என்றென்றும் மறக்க மாட்டேன், அக்கா! ஆனால் இனி எனக்கு நீங்கள் ஆறுதல் எதுவும் கூறவேண்டாம். உங்களுடைய உதவிகள் எனக்கு வேண்டும். நீங்கள் நினைத்தால் நினைத்ததைச் சாதிக்கக் கூடியவர்கள் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. அதனால் நீங்கள்தாம் எங்களை ஒன்று சேர்த்து வைப்பதற்கு இனிக் கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும். என் தந்தையாரிடம் போராட வேண்டிய விஷயங்களை நான் கவனித்துக் கொள்ளுகிறேன். இளவரசரைச் சேர்ந்தவர்களிடம் நீங்கள்தாம் மனமாறுதல் ஏற்படுத்த வேண்டும். நான் பகை நாட்டு மன்னரின் மகள்தான்; ஆனால் ஒரு போதும் உங்கள் நாட்டுக்குத் துரோகம் செய்யமாட்டேன். என்னிடம் ஏதாவது குறை இருக்குமானால் அது என் தந்தையாரையும் தம்பியையும் மறக்க முடியாத குறைதான்.’’
“அவசியம் நேர்ந்தால் உன்னால் அவர்களை மறக்க முடியுமா ரோகிணி?’’
ரோகிணி அதிர்ச்சியுற்றாள். “அக்கா! உங்களால் உங்கள் தந்தையாரையோ, உடன் பிறந்தாரையோ மறக்க முடியுமா?’’ என்று கேட்டாள்.
“உன்னுடைய நிலையில் நான் இப்போது இல்லை. இருந்திருந்தால், மறக்க வேண்டுமென்றால், கட்டாயம் மறந்துவிடுவேன். தமிழ்நாட்டுப் பெண்களில் பலர் கடவுளைவிடக் கணவனையே பெரிதென்று மதிப்பவர்கள்.
‘கடவுள் வேண்டுமா, கணவன் வேண்டுமா? எனக் கேட்டால், ‘கணவனே எங்கள் முதற் கடவுள்’ என்று தயங்காது கூறுவார்கள். நமக்கு எல்லோரும் வேண்டும் என்பது முக்கியமானதுதான். ஆனால் அந்த எல்லோரையும்விட ஒருவரே மிகமிக முக்கியமானவர் என்று கருதவும் வேண்டும். அன்பு எங்களைப் பொறுத்தவரையில் பக்திக்கு உரிய பொருள்.’’
“வியப்பாக இருக்கிறது, அக்கா!’’ என்றாள் ரோகிணி.
“இல்லை, ரோகிணி! பிறந்த இடத்தை மறந்துவிட்டுப் பெருமை பெறுகிறவர்களே பெண்கள்!’’
இதற்குப் பிறகு இருவரும் சில விநாடிகள் பேசிக் கொள்ளவில்லை. விடிவெள்ளிக்கும் கீழே கீழ்ப்புறத்து வானம் வெள்ளித் தகடாக மாறிக்கொண்டு வந்தது.
தொடரும்
Comments
Post a Comment