Skip to main content

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 13- பாசத்தின் மாற்றம்.
ஒரு வாரம் சென்றது. சோழபுரத்திலிருந்து கொடும்பாளூர்ப் பெரிய வோளார் தஞ்சைத் தலைநகருக்கு வந்து சேர்ந்தார். அரண்மனைக்குள் நுழையும் வரையில் அவர் மனம், முதன் முதலில் இளங்கோவைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருந்தது; நுழைந்தவுடன் அந்த மனம் மாறிவிட்டது. அவனைப் போய் முகம் கொடுத்துப் பார்க்கக்கூடிய மெய்த்துணிவு அவருக்கு ஏற்படவில்லை.

இரண்டு மூன்று முறைகள் நிலவறைச் சுரங்களின் வாயில் வரையில் சென்றுவிட்டு, சட்டென்று திரும்பி விட்டார். மாங்குடி மாறனிடம் அவர் விசாரித்தபோது அவன் அளித்த தகவல்களும் அவருக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியவையாக இல்லை. “சக்கரவர்த்திகளும் இப்போதைக்குத் தலைநகரத்துக்குத் திரும்பி வரமாட்டார்கள் போலிருக்கிறது’’ என்று மாங்குடிமாறனிடம் எதையோ சொல்லி வைத்தார்.

‘சக்கரவர்த்திகளும் திரும்பவில்லை. இளங்கோவும் பிடிவாதம் பிடிக்கிறான். என்மீது ஒன்றும் குற்றமில்லை’ என்று அவர் தமக்குத் தாமே சொல்லிக் கொள்வதுபோல் தோன்றியது மாங்குடி மாறனுக்கு. அருள்மொழி வந்து தம்மிடம் முன்போல் கலகலப்பாகப் பேசிப் பழகாததைக் கண்டுகொண்டார் பெரிய வேளார். சோழபுரத்தைப் பற்றிய செய்திகளை அவள் அவரிடம் கேட்கவில்லை. “வாருங்கள், மாமா!’’ என்று ஒரே ஒரு முறை மட்டிலும் அழைத்துவிட்டுப் பிறகு அவர் கண்களில்

படாதவாறு எங்கோ மறைந்து கொண்டாள்.

அவளுடைய புறக்கணிப்பின் காரணத்தை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வயதிலும், அநுபவத்திலும் வேறு பல விஷயங்களிலும் அவர்களுக்குள் எவ்வளவோ வேற்றுமைகள் இருந்தாலும், பெரிய வேளார் அருள்மொழியிடம் தனிப்பட்ட அன்பு கொண்டிருந்தார். சிற்சில வேளைகளில் அரசியல் தொடர்புள்ள செய்திகளைக்கூட அவர் அருள்மொழியிடம் பரிமாறிக் கொள்வது உண்டு. அவளுடைய புறக்கணிப்பைத் தாங்கிக்கொள்ள அவரால் முடியவில்லை.

இளங்கோவைப்பற்றி அருள்மொழியிடம் பேசவிரும்பினார். அவள் தம்மிடம் ஏதாவது கோபமாகப் பேசுவாள் என்று எதிர்பார்த்தார். அவளைச் சாந்தப்படுத்தும் முகாந்திரமாக அவளுக்காகச் செய்வதுபோல் அவள் விருப்பத்தின்படி இளங்கோவைச் சிறை மீட்க எண்ணினார்.

அவளோ அவரை பொருட்படுத்தியதாகவே காட்டிக் கொள்ளவில்லை. நியாயம் கேட்டபோது வழங்காமல், நியாயத்துக்குப் புறம்பானதைச் செய்துவிட்டு, இப்போது எதற்கு அநுதாபம் காட்ட முயல வேண்டும்? பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் பெரிய வேளார். பொறுமையின் எல்லை கடந்துவிட்டது. தாமே ஒரு முறை அருள்மொழியிடம் வலியச் சென்று

“நங்கையாரே, முன்பே எனக்குக் காஞ்சியிலிருந்து செய்தி வந்திருக்கிறது.

சக்கரவர்த்திகள் திரும்பி வந்து சேருவதற்கு ஓர் ஆண்டு காலத்துக்கு மேல் ஆகுமாம்’’ என்றார்.

“என்ன?’’ என்று அருள்மொழி திடுக்கிட்டாள்.

“ஆமாம், வந்தியத்தேவர் மாத்திரமே காஞ்சியிலிருந்து புறப்பட்டிருக்கிறார்கள். நாளை அவர்கள் வந்து சேரக்கூடும். ஆனால் சக்கரவர்த்திகள் இப்போதைக்கு வரமாட்டார்கள்.’’

“அதுவரையில்-’’ எதையோ சொல்ல நினைத்த அருள்மொழி பாதியில் பேச்சை நிறுத்திவிட்டாள்.

“அதுவரையில் இளங்கோவை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றுதான் எனக்கும் விளங்கவில்லை’’ என்றார் பெரிய வேளார்.

அவனுடைய பெயரைக் கேட்டவுடன் அவள் அங்கே நிற்கவில்லை. சரேலென்று திரும்பிச் சென்று அந்தப்புரத்துக்குள் மறைந்தாள். அவளை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார் பெரிய வேளார். தஞ்சைக்கு வந்ததிலிருந்து அவருக்குச் சரியான உறக்கமில்லை எப்படியாவது இளங்கோவைப் பார்க்க வேண்டுமென்ற ஆத்திரம் விநாடிக்கு விநாடி அதிகரித்தது. எப்படிப் பார்ப்பது? அவனிடம் என்ன பேசுவது? தாமே விடுதலை அளித்தாலும் அவன் சிறையை விட்டு வெளியில் வருவானா?ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது அவருக்கு. நேரடியாகச் சென்று பார்க்கும் ஆசையை அவர் கைவிட்டு விட்டார். ஆனால் புத்திர பாசத்தால் எழுந்த ஆசையோ அவரை எப்படியும் கைவிடுவதாக இல்லை.

மெல்ல ஒருநாள் மாலைப்பொழுதில் கள்வரைப்போல் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே பல அறைகளைக் கடந்து தனிமையில் சென்றார். குறுகலான ஓர் அறைக்குள் நுழைந்தவுடன் கதவுகள் தாழிடப்பட்டன. சத்தமின்றி மண்டியிட்டவாறே தரையில் தவழ்ந்து, ஒரு மூலைக்கு வந்தார். தரையின் மேற்பகுதிபோல் தோன்றிய ஓரிடத்தில் மூடும் பலகை இணைக்கப்பட்டிருந்தது.

மூச்சை நன்றாக இழுத்து நெஞ்சில் நிரப்பிக்கொண்டு சந்தடியின்றி அந்தப் பலகையை அகற்றினார். அதற்கு நேர் கீழே நிலவறைச் சிறை தெரிந்தது. அங்கே தாடியும் மீசையுமாக எலும்புக்கூடுபோல் இளங்கோ உட்கார்ந்து கொண்டிருந்தான். பெரிய வேளாரின் விழிகள் கண்களிலிருந்து நழுவி உள்ளே விழத் துடிப்பவைப்போல் சுழன்றன. கண்களுக்குப் பதிலாகக் கண்ணீர்த் துளிகள் கொப்பளிக்கவே சட்டென்று பலகையை மூடிவிட்டு எழுந்தார் பெரிய வேளார். என்றாலும் கண்ணீர் அவர் ஆணைக்குக் கட்டுப்படவில்லை.

கீழே தன்மீது உதிர்ந்த நீர்த்துளிகளை உணர்ந்த இளங்கோ மேலே தலையைத் தூக்கிப் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. சிறையின் மேல் முகட்டில் நகர்ந்தோடிய பல்லியைப் பார்த்தான். பல்லி எச்சமிட்டது போலும் என்ற எண்ணம் அவனுக்கு.

மேலே பல்லி போல் ஊர்ந்து கொண்டிருந்த தன் தந்தையாரைப் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது. கதவைத் திறந்துகொண்டு தம்முடைய கூடத்துக்கு வந்து சேர்வதற்குள் பெரிய வேளாரின் மனம் படாத பாடு பட்டு விட்டது. தம்மை நன்றாக ஒரு முறை உற்றுப் பார்த்துக் கொண்டார். பாசம் என்னும் பலவீனத்தை உதறுவது போல் தம்முடைய கரங்களை உதறிவிட்டுக் கொண்டார். கம்பீர நடைபோட்டுத் தம்முடைய கூடத்துக்கு வந்து சேர்ந்தார்.

அங்கே அருள்மொழியும் வல்லவரையரும் பேசிக் கொண்டிருந்த காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. அவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது அவருக்கு விளங்கவில்லை.

“வாருங்களைய்யா! இப்போதுதான் வருகிறீர்களா?’’ என்று கேட்டார் பெரிய வேளார். வல்லவரையர் வந்தியத்தேவர் முகம் இரும்பாக இருந்தது. பெரிய வேளாரின் சொற்களை அவர் செவிகள் ஏற்றுக் கொள்ளவே இல்லை.

“இளங்கோ இப்போது எங்கே இருக்கிறான்?’’ என்று கேட்டார்.

“நங்கையார் கூறியிருப்பார்களே?’’

“யாரிடமும் கூறக்கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறீர்களாம்.’’

“அவன் நம்முடைய நிலவறைச் சிறையில் இருக்கிறான். பகைவரின் பெண்ணுக்குப் பரிந்து, தன்னுடைய கடமையில் தவறியதற்காக நான் அவனுக்குத் தண்டனையளித்திருக்கிறேன்.’’ நடந்தவற்றை ஒருவிதமாகக் கூறி முடித்தார் பெரிய வேளார்.

இவ்வளவையும் கேட்டுக்கொண்டிருந்த வல்லவரையர் அருள்மொழியை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டார். அவள்கூடக் கேட்க விரும்பாத ஒரு செய்தியை அவர் வெளியிடப் போகிறார் என்பதை அவர் முகம் காட்டியது.

“வேளார் அவர்களே! சக்கரவர்த்திகளின் எண்ணத்துக்கு மாறாக

எதையுமே இளங்கோ செய்து விடவில்லை. மகிந்தரின் பெண்ணோடு உங்கள்குமாரன் பழகுவதற்குக் காரணமே நமது சக்கரவர்த்திகள்தான்! அவர்கள் இருவருமே குழந்தைகள். அவர்களுக்கு இதில் ஒன்றுமே தெரியாது. அப்படிப் பழகுவதற்கு அவர்களை மறைமுகமாகத் தூண்டிவிட்டவர்கள் நாங்கள். எனக்கும் சக்கரவர்த்திகளுக்குமே அதில் பங்கு உண்டு. இளங்கோவின் செயலை நாங்கள் ஆதரிக்கிறோம். இப்போது சொல்லுங்கள். எனக்கும் சக்கரவர்த்திகளுக்கும் என்ன தண்டனை தரப்போகிறீர்கள்? குற்றவாளியென்றால் குற்றம் செய்வதற்கு அவனைத் தூண்டியவர்களுக்கும் தண்டனை உண்டல்லவா?’’

அருள்மொழியின் தேகம் நடுங்கியது. அவளை இறுகப் பற்றிக்

கொண்டார் வல்லவரையர். பெரிய வேளாரோ ஒரு கணம் பாயும் புலிபோல் வல்லவரையரைப் பார்த்துவிட்டு, பிறகு செயலிழந்தவர்போல் அருகில் கிடந்த ஆசனத்தில் சாய்ந்தார்.

தொடரும்


Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 31. காதல் வெறி; கடமை வெறி!

மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது. கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம். கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான். நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.
“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.
“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போகப்போகிறோம்.’’
ஆதித்த பிராட்டிய…

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறியர்.

ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான் அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள் எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்கொட்டிவிடுகின்றன.
“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப் புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.
“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.
“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக் காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார். தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும் தான் இருக்கும்.’’
இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல் தழுதழுத்ததை ரோகிண…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-கட்டுரை.

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம் :
புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் கா…