எண்ணற்ற காட்டுமரங்களால் கட்டப்பெற்று, குவியல் குவியலான மரகதக் கற்களால் இழைக்கப்பட்ட பிரம்மாண்டமான மரக்கலம்போல், ஆழ்கடலுக்கு மேலே தலைதூக்கி நின்றது தென்னிலங்கைச் சிறு தீவு. ஆங்காங்கே சூழ்ந்திருந்த சின்னஞ்சிறு தீவுகள் மரக்கலத்தைச் சுற்றி மிதக்கும் வண்ணப் படகுகள் போல் காட்சியளித்தன.
அது முழுநிலாக் காலம். கடலோரத்தினின்றும் அலைகள் எழும்பி ஆயிரமாயிரம் கருநாகப் பாம்புகளெனப் படம் விரித்தாடிக் கொண்டிருந்தன. அலைகளின் உறுமலுக்குக் குறைவே இல்லை. நிலவு கடற்கரைப் பகுதிகளில்தான் தடையின்றி வழிந்து கொண்டிருந்தது. தீவின் உட்பகுதிக் காடுகளில் வெறும் இருள்தான். காட்டுக்குள் அந்த இருளுக்கு மத்தியில் இரண்டு தீவர்த்திகள் தெரிந்தன. முன்னும் பின்னுமாக இரண்டு காவலர்கள் தீப்பந்தங்களுடன் விரைந்து செல்ல, அவர்களுக்கு மத்தியில் மூன்று பேர்கள் ஓட்டமும் நடையுமாக வந்தார்கள். ஒருவரும் வாய் திறந்து பேசிக்கொள்ளவில்லை.
தீவர்த்திச் சுடர்கள் இருளை விலக்குவதற்கு மாறாக அதன் பயங்கரத்தை மிகுதியாக மிகைப்படுத்திக் கொண்டு சென்றன. பாதையின் ஓரங்களில் தென்பட்டவை மரங்களைத் தழுவிய கொடிகளாகவும் இருக்கலாம்;அல்லது மலைப்பாம்புகளாகவும் இருக்கலாம்.
பாம்புகள் விழுதுகளாகத் தோன்றின; விழுதுகள் பாம்புகளாகத் தோன்றின; பாம்புகளும் விழுதுகளுமே பின்னிப் பிணைந்து கொண்டிருந்தன. முதல் தீவர்த்திக்காரனை அடுத்து வரிசையாகக் காசிபன், வீரமல்லன், அமைச்சர் கீர்த்தி ஆகியவர்கள் நடந்தார்கள். கடைசியாக வந்தவன் ஒளிப்பந்தத்தை முன்னால் நீட்டிக் கொண்டு சற்றே விலகி நடந்தான். வீரமல்லனுக்கு இது புதிய அனுபவம். ஏற்கனவே அவன் சேரநாட்டு மலைகளையும், காடுகளையும், அருவிகளையும் கண்டிருக்கிறானென்றாலும், ஈழநாட்டின் இயற்கை வளம் முதற் பார்வையிலேயே அவனைத் திகைக்க வைத்துவிட்டது.
மரங்களின் இடைவெளிகளில் தூரத்தில் மங்கலாகத் தெரிந்த குன்றுகள் அவனுக்கு யானைக் கூட்டம்போல் தோற்றம் அளித்தன. காற்றில் தலைவிரித்தாடிய மரக்கூட்டம் அவனுக்குப் பேய்களை நினைவூட்டியது. இப்படியே பார்க்கும் காட்சிகளிலெல்லாம் அவன் தன் பயத்தை உணர்ந்தான்.
காட்டைக் கடந்து அவர்கள் தென்னஞ்சோலை நிறைந்த கடற்கரைப்பகுதிக்கு வந்தார்கள். பிறகு மணலில் நடந்து சென்று நீரும் நிலமும் தவழும் விளிம்பை அடைந்தார்கள். நிலவு நன்றாகப் பளிச்சிட்டதால், தீப்பந்தங்களை நீரில் ஆழ்த்தி அணைத்து விட்டார்கள் காவலர்கள். பிறகு
எல்லோரும் கடலுக்குள் இறங்கி, நீந்தத் தொடங்கினார்கள். கூப்பிடு தூரத்தில் கன்னங்கரிய பாறை ஒன்று தெரிந்தது. சந்தடியின்றி அதன்மீது தொத்தி ஏறினார்கள். அந்தப் பாறையின் உச்சியிலிருந்து பார்த்தபோது அதற்கப்பாலும் சிலபாறைகள் தெரிந்தன. அவைகளினூடே சிறியதொரு மரக்கலம் நின்று கொண்டிருந்தது. அதையடுத்து ஒரு தோணியும் மிதந்தது. மனிதர்கள் சிலர் பாறைகளின் மேல் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
“நீங்கள் இருவரும் இங்கேயே தங்கியிருங்கள். விரைவில் வந்துஅழைத்துப் போகிறேன்’’ என்று வீரமல்லனிடமும் காசிபனிடமும் கூறிவிட்டு, மீண்டும் கடலில் குதித்து விட்டார் கீர்த்தி. காவலர்களும் அமைச்சரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
அலைகளை எதிர்த்துச் செல்லும் தேங்காய் நெற்றுக்களைப் போன்று அவர்கள் மூவருடைய தலைகளும் சிறிது நேரம் நீருக்கடியில் தெரிந்து மறைந்தன. கண்ணுக்கு அவர்கள் மறையும் வரையில் கடலைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கல்லின்மீது அமர்ந்திருந்த காசிபனைப் பார்த்தான் வீரமல்லன்.
ஈழத்துக்கு வந்ததிலிருந்து வீரமல்லனின் மனம் அடிக்கடி ரோகிணியைச் சுற்றி வட்டமிடத் தொடங்கிவிட்டது. ‘அற்புதமான அழகுத் தீவில் பிறந்து வளர்ந்த அற்புதமான அழகி!’ என்று தனக்குள் எத்தனையோ முறை
சொல்லிக் கொண்டான். அதிலும் காசிபனின் தோற்றமும் ரோகிணியின் சாயலும் ஒன்றாக இருக்கவே, அவனால் அவளை மறக்கவே முடியவில்லை.
“காசிபன் இப்போது இருக்கும் இடத்தில், இந்த இரவில்-இந்தத் தனிமையில் கடலினின்று பிறந்த நன் முத்துப் போல் அவள் இருந்தால் எப்படியிருக்கும்?’’ காசிபனைப் பார்த்துக்கொண்டே பெருமூச்சுவிட்டான் வீரமல்லன்.
“விழுங்கி விடுவது போல் பார்க்கிறீர்களே, நண்பரே!’’ என்று வேடிக்கையாகக் கேட்டான் காசிபன்.
“விழுங்கிவிட வேண்டுமென்று ஆசைதான். ஆனால் நீங்கள் ரோகணத்து இளவரசியாக இல்லாமல், இளவரசராக இருக்கிறீர்கள். இந்தக் கணத்தில் ரோகிணியும் இங்கே இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன், இளவரசே!’’
“நண்பரே! வேறு எதையோ நினைத்துக் கொண்டு இங்கு உளறாதீர்கள். இது ஆபத்தான வேளை. அழகைப் பற்றி இப்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க வேண்டாம்.’’
“அந்த அழகை மட்டும் நான் அடைய முடிந்தால் அதற்காக ஆயிரமாயிரம் ஆபத்துக்களைத் தேடிச் செல்வேன். ஏன், இப்போதே இந்தக் கடலில் குதித்துக் கடாரம் வரையில் நீந்திச் செல்ல வேண்டுமென்றாலும்
தயங்கமாட்டேன். ரோகிணி மாத்திரம் போதும் எனக்கு! இந்த உலகத்தில் எனக்கு வேறெதுவுமே வேண்டாம்.’’
“எத்தனையோ லட்சியங்களும் ஆசைகளும் இருப்பதாகச் சொன்னீர்களே? இப்போது திடீரென்று என்ன வந்துவிட்டது உங்களுக்கு?’’
“லட்சியங்களும் ஆசைகளும் இருந்ததெல்லாம் உண்மைதான். ஒரு நாட்டுக்கு அரசனாகி ஆட்சி செலுத்த விரும்பினேன். ஏன் உண்மையைச் சொல்லப்போனால் சோழ சாம்ராஜ்யத்தையே கட்டி ஆள முடியுமென்று கனவு கண்டேன். போர்க்களங்களில் புகழும், மற்றவர்களிடம் பயபக்தியும் பெற்று உயர நினைத்தேன். ஆனால் இப்போது அந்த எல்லா ஆசைகளையும்விட ஒரே ஒரு ஆசைதான் மிஞ்சி நிற்கும் போலிருக்கிறது. ரோகிணியாரின் கரத்தைப் பற்றிக் கொண்டு இந்தக் காடுகளில் உலவவேண்டுமென்கிற துடிப்பைத் தவிர எனக்கு வேறெந்த ஆசையுமே கிடையாது, நண்பா!’’
இப்படிச் சொல்லிக்கொண்டே சட்டென்று காசிபனின் கரங்களைப் பற்றினான் வீரமல்லன். காசிபனின் முகத்தில் வெறுப்புப் படர்ந்தது. பற்றிய கரங்களை உதறிக்கொண்டு விலகி உட்கார்ந்தான்.
“வீரமல்லரே! உங்களிடம் வீரமில்லை; நீங்கள் கோழையாகிக் கொண்டு வருகிறீர்கள். ஒருபோதும் நாங்கள் எங்கள் பெண்களைக் கோழைகளுக்குக் கொடுக்கமாட்டோம்!’’ என்றான்.
“ரோகிணிக்காக எதையுமே செய்யக் கூடியவன் நான். என்னையா கோழை என்கிறீர்கள்?’’
“அவளுக்காக நீங்கள் வீரராகிப் பயனில்லை. கேவலம் ஒரு சாதாரணப் போர் வீரருக்கு என் தமக்கை மனைவியாக மாட்டாள். உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு முதலில் நீங்கள் நாடாளவும் வேண்டும். அத்துடன் இலங்கையிலுள்ள சோழ நாட்டார் அனைவரையுமே விரட்டுவதற்கு நீங்கள் எங்களுக்குத் துணை செய்யவும் வேண்டும். பிறகுதான் அமைச்சர் தங்களுடைய விருப்பத்தைப் பற்றி யோசனை செய்வார்.’’
“அப்படியானால் நானும் சோழ நாட்டான்தான். என்னையுமே விரட்டிவிடுவீர்கள் போலிருக்கிறதே!’’ என்று வினை தொனிக்கச் சிரித்தான் வீரமல்லன்.
“ஏன், எல்லாத் தமிழர்களையுமே விரட்டிவிடுவோம்!’’ என்று ஆத்திரத்துடன் குதித்தான் காசிபன்.
“விரட்டுவீர்கள், விரட்டுவீர்கள்! உங்களுக்கு இந்த மண் எவ்வளவு சொந்தமோ அவ்வளவு சொந்தம் இந்த மண்ணில் பிறந்த எல்லோருக்கும்.’’
“என்ன? என்ன?’’ காசிபன் குமுறினான்.
வீரமல்லனின் மேல் அவன் பாயப்போன சமயத்தில், “என்ன காசிபா! உங்களுக்குள் சண்டை!’’ என்று கேட்டுக்கொண்டே கரையேறி வந்தார் அமைச்சர் கீர்த்தி. அவரைக் கண்டவுடன் காசிபன் அடங்கிவிட்டான். வீரமல்லனும் அவனை அன்போடு தழுவிக்கொண்டான்.
“சரி வாருங்கள்!’’ என்று அவர்களைத் துரிதப்படுத்தி தாம் கொண்டுவந்திருந்த தோணியில் ஏற்றிக்கொண்டு, அடுத்த பாசறைக்குச் சென்றார் கீர்த்தி. அங்கிருந்து ஒரு சிறிய மரக்கலம் புறப்படுவதற்குச் சித்தமாக நின்றுகொண்டிருந்தது. அதன் உச்சியில் புலிக்கொடி பறப்பதைக் கண்டதும் திடுக்கிட்டான் வீரமல்லன்.
“இதென்ன இது!’’ என்று அதைச் சுட்டிக்காட்டிக் கேட்டான். கீர்த்தி நகைத்தார்.
“இவர்கள் எல்லோரும் சோழநாட்டு வணிகர்களைப் போல் கடாரத்துக்குப் புறப்படுகிறார்கள். தமிழ் நாட்டிலுள்ள புத்த சமயத்தைச் சேர்ந்த வணிகர்கள்! அங்கே இராஜேந்திரரின் ஆட்சியில் புத்தர்களுக்கு நடக்கும் கொடுமைகளை எடுத்துச் சொல்வார்கள்! நாகைப்பட்டினம் சூடாமணி விகாரம் தரை மட்டமாக்கப்பட்டது என்ற விவரத்தை வெளியிடுவார்கள்; கடாரத்தரசர் இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு, அதற்குப் பிறகும் சோழர்களுக்கு நண்பராக இருப்பாரா? அவரை நம்பச் செய்துவிட்டால், பிறகு அவருடைய சிற்றரசர்களும் நம்ப வேண்டியதுதானே?’’
“பிறகு என்ன நடக்கும்?’’ என்று கேட்டான் காசிபன்.
“இப்போது அங்கு நடக்கும் விஷயங்களெல்லாம் தலைகீழாக மாறி நடக்கும். அவ்வளவுதான்.’’
திகைப்போடு அமைச்சர் கீர்த்தியை ஏறிட்டுப் பார்த்தான் வீரமல்லன்.அவர் மேலே கூறினார்:
“இப்போது சீனத்துக்குச் செல்லும் தமிழ்நாட்டு வணிகக் கலங்களுக்குக் கடாரத்து அரசர் பாதுகாப்பளித்து வருகிறார்.கடற்கொள்ளைக் காரர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். அவர்களுக்கு விருந்துகளும், வரவேற்புகளும், உபசாரங்களும், வெகுமதிகளும் தந்து கொண்டிருக்கிறார். இனி, நாம் அனுப்பும் செய்திகளுக்குப் பிறகு அவர்களுடைய வீரர்களே கடற்கொள்ளைக்காரர்களாக மாறுவார்கள்! விருந்து மருந்தாக மாறும்; வெகுமதி வேறு விதமான முறைகளில் கிடைக்கும்.’’
“வணிகர்கள் தொல்லைப்படுவதால் சாம்ராஜ்யத்துக்கு என்ன நஷ்டம்?’’ என்று கேட்டான் காசிபன்.
“இராஜேந்திரர் இதைக் கேட்டுக்கொண்டு அமைதியோடு இருப்பாரா! தன்மானம் என்று பறைசாற்றிக் கொள்கிறார்களே, அந்த உணர்ச்சி அவர்களைச் சும்மா இருக்கவிடுமா? தம்முடைய நாட்டுப் போர்க்கலங்கள் அவ்வளவையும் கடாரத்தின் திசையில் திருப்பிவிட்டு அவர்களைக் கடலுக்குள்ளே ஆழ்த்தாத வரையில் சக்கரவர்த்திக்கு உறக்கம் வராது!’’ - கீர்த்தி பயங்கரமாகச் சிரித்தார். வீரமல்லன்கூட வெலவெலத்துப் போய்விட்டான்.
“சரி, அந்த மரக்கலம் கடாரத்துக்குச் செல்லட்டும். நாம் இந்தத் தோணியில் தமிழ்நாட்டுக்குக் கிளம்புவோம். இனி நமக்கு வேலையில்லை. நம்முடைய மிகப் பெரிய போராட்டத்தை நாம் சோழ நாட்டுக்குள்ளே இருந்து கொண்டுதான் தொடங்கவேண்டும்’’ என்றார் அமைச்சர் கீர்த்தி.
மரக்கலம் கிழக்கே திரும்பிப் பாய்மரம் விரித்தது. சிறிய தோணி வடதிசையில் நீரைக் கிழித்தது.
தொடரும்
Comments
Post a Comment