வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3-15- மலர்ச் சிறை.




இராஜேந்திர சோழச் சக்கரவர்த்தியின் மறைமுகமான ஆதரவின் பேரிலா இளங்கோவும் ரோகிணியும் ஒன்றிப் பழகினார்கள்! இந்தத் திடுக்கிடும் செய்தியைக் கொடும்பாளூர் பெரிய வேளாராலும் தாங்க முடியவில்லை. ஒரே ஒரு அம்பால் இரண்டு பறவைகளை வீழ்த்தும் கொடிய வேடுவனைப் போன்று, இந்த ஒரு செய்தியைக் கொண்டு இருவரையுமே பதறித் துடிக்கச் செய்துவிட்டார் வல்லவரையர்.

செய்தியைக் கேட்ட மறுகணமே அருள்மொழி நங்கை, வேல் பட்ட மானைப்போல் தட்டுத் தடுமாறிக்கொண்டு அந்தப்புரத்துக்குப் போய்ச் சேர்ந்தாள். இந்தச் செய்தி எதற்காக அவளை அவ்வளவு தூரம் வாட்டவேண்டுமென்று அவளுக்கே தெரியவில்லை. தன்னுடைய அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டு கட்டிலில் சாய்ந்து விம்மிவிம்மி அழுதாள். ‘சக்கரவர்த்திகளே! உங்களைப்போல் கொடியவர் இந்த உலகத்தில் வேறு யாருமே இல்லை. உங்களுக்கு நான் வந்து பெண்ணாய்ப் பிறந்தது நான் செய்த பாவம். உங்களுடைய சாம்ராஜ்யத்தை மட்டும் நீங்கள் ஆட்டிவைக்கவில்லை. அதில் உள்ள ஒவ்வொரு மனிதரின் உயிரையும் உங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்கப் பார்க்கிறீர்கள். கொடும்பாளூர் இளவரசர் உங்களுக்கு என்ன தீமை செய்தார்? எதற்காக அவருடைய மனத்தை இப்படியெல்லாம் மாற்றி வைத்திருக்கிறீர்கள்?

அவராக விரும்பினார் என்று நினைத்தேன். இல்லவே இல்லை! எனக்கு இளவரசரை நன்றாகத் தெரியும், அவர் ஒரு குழந்தை. அவரை நீங்கள் உங்கள் எண்ணப்படி வளைத்துவிட்டீர்கள்!’

அருள்மொழி இப்படி இங்கே புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில், அங்கே பெரிய வேளார் ஆத்திரத்துடன் வல்லவரையருடன் வாதிட்டுக் கொண்டிருந்தார். அவரால் வல்லவரையர் வந்தியத்தேவரின் கூற்றை நம்ப முடியவில்லை; ஏற்றுக்கொள்ள முடியவில்லை, பொறுக்க முடியவில்லை.

கொடும்பாளூர்க் குலத்துதித்த வேங்கை மரத்தின் மேல் வேற்று நாட்டுக் கொடியை படரவிடுவதா? காலங்காலமாகச் சோழ சாம்ராஜ்யத்துடன் கொண்டுள்ள திருமண உறவு இனி என்ன ஆவது? பகை நாட்டவரின் பெண் வயிற்றில் தோன்றும் குழந்தைக்கா எதிர்காலத்தில் இளவரசுப் பட்டம்?

“ஐயா! சக்கரவர்த்திகள் இப்படியெல்லாம் செய்திருப்பார் என்று நான் நம்பவே மாட்டேன்’’ என்று குமுறினார் பெரிய வேளார். “அப்படியே அவர்களோடு உடன்பாடு இருந்திருந்தாலும் நான் ஒருபோதும் உடன்படமாட்டேன். தென்னவன் இளங்கோ என்னுடைய மைந்தன்! என் இரத்தத்துக்குப் பிறந்தவன்! சிறிய வேளாரைப் பழி வாங்கிய அந்த ரோகணத்தில் பிறந்தவளையா நான் எனது மருமகளாக ஏற்றுக் கொள்வேன் என்று நம்புகிறீர்கள்? முடியாது; முடியவே முடியாது!’’

“சக்கரவர்த்திகளின் ஆணைப்படிதான் இந்தச் சாம்ராஜ்யமே நடக்கிறது!’’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார் வல்லவரையர்.

“அவர்களுடைய ஆணை என் சொந்த விஷயத்தில் குறுக்கிடக்கூடாது. அவர்களுடைய கட்டளைக்கு நான் அமைச்சன் என்ற முறையிலும், சிற்றரசன் என்ற முறையிலும் பணிகிறேன். அவ்வளவுதான் என்னால் முடியும்.’’

எவ்வளவோ நயமாகவும், காரண காரியங்களோடும் பெரிய வேளாருக்கு எடுத்துச் சொல்ல முயன்றார் வல்லவரையர். ஆனால் அவரிடம் எதுவுமே பலிக்கவில்லை. எதற்கும் சித்தமாக இருப்பதுபோல் பேசினார் பெரிய வேளார்.

“சக்கரவர்த்திகள் இனி கொடும்பாளூருடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டாமென்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்கள் சித்தம் அதுவானால் யாரும் அவர்களைத் தடுக்க முடியாது நங்கையாரை வேண்டுமானால் அவர்கள் இளங்கோவுக்குக் கொடுப்பதற்கு மறுக்கலாம். ஆனால் அதற்காக வேறு பெண்ணைச் சுட்டிக்காட்டுவது அவர்களுடைய அதிகாரத்துக்குப் புறம்பானது.’’

பெரியவேளார் பேசுவதெல்லாம் பேசித் தீர்த்துவிடட்டும் என்று கருதியவர்போல், ஏதோ வேறு சிந்தனையில் ஈடுபட்டிருந்தார் வல்லவரையர். எந்தவிதமாக வேளாரை அணுகினால் அவரை வளைக்க முடியும் என்ற யோசனை வல்லவரையருக்கு.

அதற்குள் வேளார், “நான் சக்கரவர்த்திகள் திரும்பி வரும் வரையில் இளங்கோவை விடுவிக்கப் போவதில்லை. விடுவித்தால்தானே மீண்டும் அவன் ரோகிணியைச் சந்திக்க முடியும்?’’ என்றார்.

“அவனுடைய குற்றம் அதில் ஒன்றுமே இல்லை’’ என்றார் வல்லவரையர்.

“யார் செய்த குற்றமாக இருந்தாலும் சரி, நான் செய்த குற்றமாகவோ சக்கரவர்த்திகள் செய்த தவறாகவோ வேண்டுமானாலும் இருக்கட்டும்!’’

“என்ன சொல்லுகிறீர்கள்! சக்கரவர்த்திகள் தவறு செய்கிறார்களா?’’ வல்லவரையர் கண்களை உருட்டி விழித்துக் கொண்டு நெடிய தென்னைபோல் ஆடி அசைந்து பெரிய வேளாரிடம் நெருங்கி வந்தார்.

வல்லவரையர் வயதில் மூத்தவர். சோழ சாம்ராஜ்யம் அனைத்துக்குமே சாமந்த நாயகர். சக்கரவர்த்திகளின் மதிப்புக்கும் பேரன்புக்கும் பாத்திரமானவர். ஆனால் அவருக்கே சக்கரவர்த்திகள் தவறு செய்யக்கூடுமென்ற எண்ணமில்லை.

கடவுள் எப்படிக் களங்கமற்றவரோ, அவ்வாறே சக்கரவர்த்திகளும் என்று நம்பியவர் அவர். பெரிய வேளாரும் அதே கருத்தில் ஊறியவர்தாம். என்றாலும் ஆத்திரத்தில் தம்மை இழந்து பேசிவிட்டார்.

கோபத்துடன் பெரிய வேளாரை நெருங்கிய வல்லவரையர் அவருக்கு அருகில் சென்றதும் அப்படியே அவரை

அணைத்துத் தழுவிக் கொண்டார். பெரிய வேளாரின் நிலையில் தாமே இருந்தாலும் அப்படித்தான் நடந்து கொள்ளமுடியும் என்பது அவருக்கு விளங்கிற்று. அவருடைய சிந்தனை அதற்குள் கூர்மை பெற்றுவிட்டது.

“வாருங்கள், உங்களுக்கு மட்டிலுமே தெரிந்திருக்க வேண்டிய சில விஷயங்களைக் கூறுகிறேன்’’ என்று அவரை ஓர் ஆசனத்துக்கு அழைத்துச் சென்று அமர்த்தினார். தாமும் அருகிலிருந்து மெல்லிய குரலில் பேசினார்.

சிறிது சிறிதாகப் பெரிய வேளாரின் சினம் அகன்றது. அவர்கள் கண்கள் ஒளிபெற்றன. முகம் மலர்ந்தது. வல்லவரையரின் சொற்களில் ஒன்றைக்கூட விடாமல் உற்றுக் கேட்டார்.

“இதுதான் நோக்கமென்றால் இதை முன்பே கூறியிருக்கலாமே?’’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார் பெரிய வேளார். “இதற்கெல்லாம் தடை செய்கிறவனல்லவே நான்! ஆத்திரத்தில் சக்கரவர்த்திகளை நான் குறைகூறும் அளவுக்கு என்னைச் செய்துவிட்டீர்களே!’’

“சக்கரவர்த்திகளின் கருத்து இப்படி இருக்கலாமென்று நான்
யூகிக்கிறேன்.’’

“நிச்சயமாக இப்படித்தான் இருக்கும். என் மேல் ஒரு பெரிய சுமையை ஏற்றி உடனே இறக்கிவிட்டீர்கள்!’’

இளங்கோவுக்கு மெய்யாகவே ரோகிணியின் மீது அன்பு உண்டு என்பதை வல்லவரையர் மறந்துகூட வெளியிடவில்லை. அப்படி வெளியிட்டால் அவனுக்கு ஆயுட் சிறை என்பதையும் கண்டுகொண்டார். ஆகவே தாமாகச் சிந்தித்த ஒரு செய்தியைச் சக்கரவர்த்திகளின் மீது சுமத்திக் கூறினார். இதைக் கேள்வியுற்ற பின்னர் பெரிய வேளாருக்கு இருப்புக் கொள்ளவில்லை. உடனடியாக நிலவறைக்குச் சென்று இளங்கோவை விடுவிக்கத் துடித்தார்.

“எனக்குத் தெரிந்ததாகவே காண்பித்துக் கொள்ள வேண்டாம். தங்கள் கட்டளையுடன் அவன் மதுரைக்குச் சென்றிருப்பதாகவே நானும் நம்புகிறேன். முதலில் அவனை விடுதலை செய்யுங்கள். என்னுடைய கண்களால் அவனைச் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நான் பார்க்க வேண்டாம்.’’

வல்லவரையர் விடைபெற்றுக் கொண்டார். பெரிய வேளாரால் தம்மை உறுதிப் படுத்திக்கொள்ள முடியவில்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமது குமாரனை ஏறிட்டுப் பார்ப்பது? அவனிடம் என்ன காரணம் சொல்வது? எப்படி அவனைச் சிறைமீட்பது? குனிந்த தலை நிமிராமல் தாமே தனித்து நிலவறைப் படிகளில் இறங்கினார். தாமே தாழைத் திறந்தார்; தாமே சிறைக்குள் நுழைந்தார். அருகிலே சென்ற பிறகும் அவனை ஏறிட்டுப் பார்க்காமல், அவன் கரங்களைப் பற்றிக்கொண்டு “என்னை மன்னித்துவிடு, இளங்கோ’’ என்று நாத் தழுதழுக்க, உதடுகள் துடிக்கக் கூறினார்.

அவன் ஒன்றுமே பேசவில்லை. அவனை அணைத்தவாறே வெளியில் அழைத்துக்கொண்டும் வந்தார் பெரியவேளார். தந்தையும் மைந்தனும் ஒன்றாகப் படியேறி வந்தனர். அவனுக்கு அருள்மொழியின் அறையைச் சுட்டிக்காட்டிவிட்டு மெதுவாக விலகிக் கொண்டார்.

அருள்மொழி ஆனந்தமிகுதியால் ஏதேதோ பேசினாள். பணியாட்களுக்கு ஏதேதோ கட்டளையிட்டாள். அவனுடைய ஆடை அணிகள் யாவும் அங்கு வந்து சேர்ந்தன. ஒரு சில நாழிகைக்குள் அவன் புதிய மனிதனாக மாறினான். தேகத்தின் இளைப்பைத் தவிர வேறு எந்த மாற்றமும் அவனிடம் தென்படவில்லை.

“நீங்கள் உங்கள் தந்தையாரின் ஆணைப்படி பாண்டிய நாட்டில் இவ்வளவு நாட்கள் சுற்றிவிட்டு வருகிறீர்கள். தெரிந்ததா?’’

“தெரிந்தது!’’ இளங்கோ நகைத்தான்.

“இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்றாள் அருள்மொழி.

“பாண்டிய நாட்டில் பகைவர்கள் என்னைச் சிறைக்குள் தள்ளி விட்டார்கள்! சிறைக்கு வெளியில் உலகம் எப்படி இருக்கிறதென்று பார்த்து வரவேண்டும். என்னுடைய குதிரையைக் கட்டவிழ்த்துக்கொண்டு அதன் கால் போன போக்கில் பறக்கச் செய்ய வேண்டும்.’’

“விரைவில் திரும்பி விடுங்கள்.’’

வெண்புரவியின் மீது தாவி அமர்ந்தான் இளங்கோ. வெகு நாட்களாகவே இளங்கோவைப் போல் கட்டுண்டு கிடந்த அவனுடைய குதிரையும் அவனது மனோவேகத்தை உணர்ந்து கொண்டதுபோல் கிளம்பியது.

வேறு எந்தத் திசையிலாவது அது விரைந்திருக்கக் கூடாதா? மகிந்தரின் மாளிகைத் தோட்டத்தின் பின்புறம், சரக்கொன்றை மலர்களை அடுத்துத் துரிதநடைபோடத் தொடங்கியது. கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தபொன் மலர்களைக் கண்டவுடன் அவனையறியாது அவன் கரம்கடிவாளத்தைப் பற்றியது. மலர்க்கொத்துகள் நடுங்கின. செடிகொடிகள் அசைந்தன.

“இளவரசே!’’ என்று எங்கிருந்தோ ஒரு பூங்குயில் கூவியது. எப்படித்தான் ரோகிணியின் பாதங்கள் வலிமை பெற்றனவோ தெரியவில்லை. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடோடியும் வந்து அவன் இடது கால்மீது சாய்ந்தாள். அவளுடைய வலது கரம் ஒரு தாமரை மலரைப் பற்றியிருந்தது.

குதிரையும் சிலையாக மாறி நின்றுவிட்டது. அவன் காலிலிருந்து தன் தலையை எடுக்க விரும்பாதவள்போல் அப்படியே நின்றாள். இளங்கோவுக்கும் அவளிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

“இளவரசே! புத்தர் பிரானுக்கு நாங்கள் தாமரையைக் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். இந்தாருங்கள்! இந்த மலரை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.’’

மலரையும் மலர்க்கரத்தையும் ஒன்றாகப் பற்றிக் கொண்டேதான் குதிரையிலிருந்து கீழே இறங்கினான் இளங்கோ.

தொடரும்





















Comments