சரஞ்சரமாக விழுது இறங்கிய சரக்கொன்றைக் கொத்துக்கள் சித்திரத்து மலர்களைப் போன்று சிறிதுகூடச் சலனமின்றித் தொங்கின. அவற்றைக் குலுங்க வைத்துப் பொன்னுதிர்ப்பதற்கு அங்கே தென்றல் தவழவில்லை. தோட்டத்தைச் சுற்றிலும் பசுமை மண்டிக்கிடந்தது. எனினும் அதன் உயிரைச் சுமந்து குளிர் பரப்புவதற்கு அங்கே காற்றைக் காணோம்.
அழகான இளம்நெஞ்சுகள் இனம்புரியாத புழுக்கத்தில் அகப்பட்டுத் தவிப்பதற்கொப்ப, அந்தப் பூங்கா அப்போது வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது. ‘தென்றல் வீசாதா? தாபம் தீராதா’ என்று கேட்பனபோல், வண்ணமலர்கள் செடிகொடிகளிலிருந்து எட்டிப் பார்த்தன. மரக்கிளையின்மீது சாய்ந்துகொண்டே, தலைக்கு மேலிருந்த இலைக் கூட்டத்தை ஊடுருவிக்கொண்டே நின்றான் இளங்கோ. ரோகிணி சற்று முன்பு கொடுத்த தாமரை மொட்டு அவனுடைய கரத்தில் துவண்டு தொங்கியது. கண்கள் கலங்கியிருந்தன.
தன் பக்கம் திரும்பச் சொல்லிக் கெஞ்சுகிறவள்போல் ரோகிணி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரது உள்ளங்களினின்றெழுந்த புழுக்கம்தான் அந்தப் பூங்காவையே சூழ்ந்து கொண்டது போலும்! நேரம் ஊர்ந்து செல்வது தெரியாமல் அவர்கள் அப்படியே நிலைத்துப் போய்விட்டார்கள்.
“பேச மாட்டீர்களா, இளவரசே! எனக்கு மன்னிப்பே கிடையாதா?’’ என்றாள் ரோகிணி. அவளைத் திரும்பிப் பார்த்து அவள் முகத்தில் எதையோ தேடிக் கண்டுபிடிக்க முயன்றான் இளங்கோ. அவன் தேடிய ஒன்று அவனுக்குப் பளிச்சென்று புலனாகவில்லை. நீரின் ஆழத்திலோ, புகை மூட்டத்துக்கு மத்தியிலோ தோன்றும் முகம்போல் மங்கலாகத் தெரிந்தது அவள் முகம்.
“ரோகிணி! நான் எங்கே போய்க்கொண்டிருக்கிறேனென்று எனக்கே தெரியவில்லை. என்னைச் சுற்றிலும் இப்போது ஒரு வலை பின்னிக் கொண்டிருக்கிறது. அதைக் கிழித்தெறியவும் எனக்கு வலிமையில்லை; அதற்குள் அகப்பட்டுத் தவிப்பது எனக்கு வேதனையாக இருக்கிறது.’’
“எல்லாவற்றுக்குமே நான்தான் காரணம்’’ என்றாள் ரோகிணி.
“இல்லை. இனி நான் உன்னைக் குற்றங்குறை சொல்லப் போவதில்லை. நடப்பவை எல்லாவற்றிலும் எனக்கும் பெரும்பங்கு இருக்கிறது. தண்டனை காலத்தில் நான் தனியாக யோசனை செய்து பார்த்தேன். எனக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைதான் அது.’’
“நடந்ததை இனிப் பேசவே வேண்டாம் இளவரசே!’’ என்று குமுறினாள்
ரோகிணி. “நான் செய்த குற்றத்துக்காக நானும் தண்டனையடைந்தேன்; தங்களுக்கும் அதைத் தேடித்தந்தேன். இனி இந்தப் பிறவியில் இப்படியெல்லாம் நடக்கவே நடக்காது.’’
அவள் பேச்சை நம்பாதவன்போல் வருத்தம் தோய்ந்த புன்னகை உதிர்த்தான் இளங்கோ. “நீ செய்திருக்கும் கொடுமையின் அளவு உனக்குச் சரியாகத் தெரியாது. எந்த மனிதனை உன் சொல் கேட்டுப் பகைவனாக்கிக் கொண்டேனோ, அவனுக்கே நீ புகலிடம் அளித்திருக்கிறாய். அவனிடமே நீ பரிவு காட்டியிருக்கிறாய், அன்றொரு நாள் என் கை ஓயும் வரையில் இதே தோட்டத்தில் வீரமல்லனை அறைந்து அனுப்பினேனே, உனக்கு நினைவு இருக்கிறதா? ஒரு காலத்தில் என் உயிர் காத்தவன் அவன்; அதனால் நண்பனாகியவன்; அவனையே நான் பகைத்துக் கொண்டேன். யாரால் தெரியுமா?’’
கரகரவென்று கண்ணீர் உகுத்தவாறு அவன் கால்களைக் கட்டிக்கொண்டாளே தவிர, ரோகிணி வாய் திறந்து பேசவில்லை.
“ரோகிணி! உன்னுடைய ஒரு சொட்டுக் கண்ணீரின் முன் உயிரையே துச்சமென நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்தக் கண்ணீர் பரிசுத்தமானதல்ல, அதில் களங்கம்தான் கலந்திருக்கிறது!’’ என்றான் ஆத்திரமாக.
“புத்தரின் மேல் ஆணையாகச் சொல்கிறேன். எனக்கு அவன் மேல் அன்போ, இரக்கமோ கிடையாது!’’ என்று கதறினாள் ரோகிணி. “புத்தரின் மேல் ஆணையிடாதே! அவரை நினைக்கும் மனத்தில் தாமரை மட்டும் மலரும்; விஷப்பூண்டுகள் முளையா. ஆனைமங்கலம் மாளிகையின் மேல் மாடத்தில் உன்னைத் தனிமையில் சந்திப்பதற்காக வந்தவனுக்கு நீ என்ன வெகுமதி கொடுத்தாய் தெரியுமா? என்னைக் கொல்ல வந்தவனின் தோற்றத்தைக் கண்டு நான் ஐயமுற்றபொழுதிலும், மாண்டவன் மீண்டிருக்கமாட்டான் என்று அலட்சியமாக இருந்து விட்டேன்.’’
“இளவரசே! இளவரசே! இளவரசே!’’ என்று அவன் காலடியில் முட்டிமோதிக் கொண்டாள் ரோகிணி.
திடீரெனக் கொடும்பாளூர் குலத்தின் முரட்டுத்தனம் இளங்கோவைப் பற்றிக் கொண்டது. அடிபட்டுத் துடிக்கும் மானை வனவேடன் பற்றித் தூக்குவதுபோல் மேலே தூக்கி “சொல்! மறைக்காமல் சொல்லிவிடு!! இதெல்லாம் எதற்காக நடந்தது? ஏன் நடந்தது?’’ என்று உலுக்கினான். “சொல்லுகிறாயா, இல்லையா?’’ என்று கத்தினான்.
எதேச்சையாக வேறு புறம் உலவிக் கொண்டிருந்த பெரிய வேளார், மரத்தில் கட்டப்பட்டிருந்த குதிரையைக் கண்டுவிட்டு, அந்தப் பக்கம் திரும்பி நடந்தார். சந்தடியின்றி வந்து கொண்டிருந்தவரின் செவிகளில் தமது குமாரனின் கோபக்குரல் ஒலித்தது. மறைவில் நின்றவாறே கவனித்தார்.
“என்னை உங்கள் கரத்தாலேயே கொன்றுவிடுங்கள் இளவரசே! அதுதான் எனக்குச் சரியான தண்டனை’’ என்று விம்மினாள் ரோகிணி..
“ஓ! உன் உயிரைவிட மேலான ரகசியமா அது? ‘கொன்று விடு; ஆனால் உண்மையைச் சொல்லமாட்டேன்’ என்கிறாயா? ரோகிணி! உன்னைத்தொடுவதற்குக்கூட என்னுடைய கை கூசுகிறது. தொட்ட கையை வெட்டி எறியவேண்டும்!’’
சரேலெனக் கீழே தள்ளிவிட்டு, தன் கால்களை அவள் சுற்றி வளைக்காமல் விலகிக்கொண்டான். திரும்பிச் செல்ல முயன்றான். அவள் விடவில்லை. மறைவில் நின்ற பெரிய வேளார் வந்த சுவடு தெரியாமல் மரங்களுக்குப் பின்னால் நடந்தார். மைந்தனிடம் தம்முடைய சுபாவத்தின் சாயல் படிந்திருப்பதைக் கண்டுவிட்டதில் அவருக்குத் தாங்கொணாத பெருமை.
‘பகைவரின் பெண்ணைப் பதைபதைக்க வைக்கிறானே அவன்? அவளைக் கொன்று விடுவதாக அச்சுறுத்தி, அவளிடமிருந்து இரகசியங்களைப் பெறுவதற்கு முயல்கிறானே? இவ்வளவு வித்தைகளை இவன் எங்கிருந்து கற்றுக்கொண்டான்? யாரிடமிருந்து கற்றுக்கொண்டான்?’
காதல் உணர்ச்சியின் கொடுமைகளை உணராதவர் பெரிய வேளார். இந்த நிலையில் இல்லாது, அவர்களை இன்பக் கதைகள் பேசும் வேறு நிலையில் கண்டிருந்தாரானால் அவருடைய இரத்தம் கொதித்திருக்கும். அப்போது அவர்களை அவர் என்ன செய்திருப்பாரோ, தெரியாது. இப்போதோ அவர் குளிர்ந்த மனதுடன் ஏறுநடை போடலானார்.
இங்கே இளங்கோவை இழுத்து வைத்துக்கொண்டு மளமளவென்று தன் மனத்திலிருந்தவற்றை அவனிடம் கொட்டத் தொடங்கினாள் ரோகிணி. அவளுடைய தம்பியைக் காப்பாற்றுவதற்குச் செய்த முயற்சிகள் விபரீதமான விளைவுகளைத் தரக்கூடும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை. ஒன்றுவிடாமல் கூறலானாள்:
“நீங்கள் ரோகணத்திலிருந்து திரும்பி நாகைத் துறைமுகத்துக்கு வந்த தினத்தில்தான் வீரமல்லனும் முதன் முதலாக ஆனைமங்கலத்துக்கு வந்தான். வந்தவன் வீரமல்லன் என்று தெரிந்தவுடனேயே நான் கொதிப் படைந்தேன். ஆனால், அவனோ என் தம்பி காசிபனை அழைத்துக்கொண்டு அவனுக்குத் துணையாக வந்திருந்தான். காசிபனை மறுநாள் அழைத்துக் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு அப்போதே எங்களிடம் விடைபெற்றுக் கொண்டான். நாம் சந்தித்த அந்த இரவில் அவன் எப்படி அங்கே வந்து சேர்ந்தானென்று எனக்கே தெரியாது.
“அன்றைக்கு அவனை நீங்கள் கொன்று போட்டிருக்க முடியும். அவனிடமிருந்து எப்படி உங்களைக் காப்பாற்ற முயன்றேனோ, அதேபோல் அவனையும் உங்களிடமிருந்து காப்பாற்றினேன். அவன்மீது எனக்கு அன்போ, இரக்கமோ, பரிவோ இல்லை. ஆனால் காசிபன் என் தம்பி, என்னுடைய இரத்தத்தின் மறுபாதி அவன். காசிபனை நான் சந்திப்பதற்குத் துணை செய்ய வந்தவன் வீரமல்லன். அவனுக்கு ஏதும் நேர்ந்தால் அது காசிபனைப் பாதிக்கும்.
“உங்களைப்போல் ஒரு நாட்டுக்கு இளவரசனாக இருக்க வேண்டியவன் அவன். அவனுக்கு இப்போது நாடில்லை, வீடில்லை, தாயில்லை, தந்தையில்லை, நானுமில்லை. அவனுடைய நிலையில் இருந்து உங்களுக்கொரு தமக்கையும் இருந்தால், அவர் என்ன செய்வார்?- இளவரசே, நீங்கள் ஆணோடும் பெண்ணோடும் பிறக்காதவர். அதனால்தான் உங்களால் என்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை.’’
அவள் கூறியவற்றையெல்லாம் கேட்டுவிட்டு நீண்ட பெருமூச்சு விட்டான் இளங்கோ. ஏதாவது மறுமொழி கூறுவான் என்று ரோகிணி எதிர்பார்த்தாள். அவன் அவளுடைய கண்களின் வாயிலாக அவளுடைய நெஞ்சின் ஆழத்தை அளந்து கொண்டிருந்தானே தவிர, ஒன்றும் பேசவில்லை. அவளுடைய நெஞ்சமோ ஆழம் தெரியும் அளவுக்குத் தெளிவாக இல்லை. அது குழம்பிக் கிடந்தது. அங்கே ஒரு தெளிவு காணமுடியுமோஎன்று சிந்தனை செய்தான் இளங்கோ.
தொடரும்
Comments
Post a Comment