வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 17- இருவரில் ஒருவர்.





கண்ணிமைக்காது தன்னையே விழித்து நோக்கிய இளங்கோவைப் பார்த்து, “என்ன யோசனை செய்து கொண்டிருக்கிறீர்கள்?’’ என்று கேட்டாள் ரோகிணி.

இளங்கோவின் சிந்தனை கலைந்தது. “உன்னைப் பற்றிய யோசனைதான்; உன்னைப் புரிந்துகொள்ளப் பார்க்கிறேன் ரோகிணி!’’

“அப்படியென்றால்?’’

“நாம் ஒருவரையொருவர் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டிய காலம் வந்திருக்கிறது. நீ என்னை அறிந்துகொள்ள வேண்டும்.’’ அவனுடைய சொற்களின் ஆழத்தில் முழுகாமலே ரோகிணி, “எதற்காக அறிந்துகொள்ள வேண்டும்? அன்பு செலுத்தினால் மட்டும் போதாதா?’’ என்று கேட்டாள்.

“போதாது!’’

திடுக்கிட்டாள் ரோகிணி. “நாம் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். அது பொய்யா?’’

“இருக்கலாம்; ஆனால் அறிந்து கொள்ளாமல் செலுத்துகிற அன்பு ஆபத்திலே முடியுமோ என்று நான் அஞ்சுகிறேன்.’’

“இளவரசே? என்ன இது? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே.’’

“எனக்கும் முதலில் புரியவில்லைதான். ஆனால் நிலவறைக்குள்ளே நான் தள்ளப்பட்ட பிறகு, யோசித்துப் பார்ப்பதற்கு நேரம் கிடைத்தது. நாம் பழகத் தொடங்கிய நாளிலிருந்து நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியாக நினைத்துப் பார்த்தேன். அந்த நிகழ்ச்சிகளில் மிகுந்திருந்தது இன்பமா துன்பமா என்று இன்னும் நான் முடிவுக்கு வரவில்லை.’’

தனக்கு வேதனை தரும் விஷயங்களை இளங்கோ சொல்லப் போகிறான் என்றே ரோகிணி எதிர்பார்த்தாள். என்றாலும் அவனைத் தடுக்கவில்லை.

“ரோகிணி! நாம் முதன் முதலில் ஒருவரையொருவர் சந்தித்ததே போராட்டத்துக்கிடையில்தான். நான் காசிபனைக் கைப்பற்றப் போன வேளையில் நீ என் கரத்தைப் பற்றித் தடுத்தாய். என் கடமையிலிருந்து என்னை நழுவச் செய்துவிட்டாய். அந்த முதற் சந்திப்பில் இருந்து...’’

“இல்லை!’’ என்று குறுக்கிட்டுக் கத்தினாள் ரோகிணி. “நம்முடைய முதற் சந்திப்பு அதுவல்ல. நீங்கள் தூதுவராக வந்தபோது, என் தம்பியை வாளெறியாமல் தடுக்க முயன்றேன் நான். நான் ஏற்படுத்திய சலசலப்பை உங்களுடன் வந்த வல்லவரையர் கண்ட பிறகுதான், உங்களைப் பிடித்துத் தள்ளிவிட்டார். அதுவே நம் முதற் சந்திப்பு. அதையும் மறந்துவிடாதீர்கள்!’’

“பார்த்தாயா ! நமக்குள் எது முதற் சந்திப்பு என்பதிலேயே போராட்டம் தொடங்கிவிட்டதல்லவா? இப்படித்தான் ஒவ்வொரு வேளையிலும் நாம் மோதிக்கொண்டு வந்திருக்கிறோம். நீ உன் தந்தையிடம் தப்பிச் செல்ல

விரும்பினாய்; நான் தடுத்தேன். இதே போல் நமக்குள்ளாகவே பல முறை போராடியிருக்கிறோம். நாம் நமது போராட்டத்தை மறந்து இன்பமாக இருக்க நினைத்த போதும் அது முடியவில்லை.’’

“இளவரசே! தயவு செய்து பயங்கரமான விஷயங்களை இப்போது பேசாதீர்கள்’’ என்று கெஞ்சினாள் ரோகிணி.

“நம்முடைய துன்பங்களின் காரணங்களைத் தெரிந்து கொண்டால்தான் இனிமேலாவது அவற்றை விலக்கிக் கொண்டு நம் ஆசைகளை நிறைவேற்ற முடியும் ரோகிணி; அதனாலேயே சொல்கிறேன்’’ என்றான் இளங்கோ.

“எங்களுடைய நாட்டுக்கு நீ வரப்போகிறாய் என்ற ஆனந்தத்துடன் நான் உன்னை நெருங்கியபோது நீ என்னை வெறுப்பதாகக் கூறினாய். பிறகு திருமயில் குன்றத்தில் நாம் தனித்திருந்தபோது யாரோ ஒரு காளமுகன் செல்வதைப் பார்த்துவிட்டு நடுங்கினாய். அடுத்தாற்போல், ஆனைமங்கலம் மாளிகை மேன்மாடத்தில் அன்றிரவு நடந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்!’’ வெடவெடவென்று நடுங்கியது ரோகிணியின் மென்னுடல்.

“இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்துப் பார்க்கும்போது ஏதோ ஒரு சக்தி மறைவாக நமக்குக் குறுக்கே நிற்பதுபோல் தோன்றுகிறது. ஒன்று நமக்குள் நாமே போராடிக் கொள்கிறோம். அல்லது நமது இன்பத்திற்குக் குறுக்கே வேறு யாராவது வந்து போராடுகிறார்கள். இதன் காரணங்களைக்

களைந்தெறியா விட்டால் நம்முடைய அன்பு அழிந்துவிடும் ரோகிணி; அல்லது அழிக்கப்பட்டு விடும்.’’

“எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை; நீங்கள் விரும்புகிறபடி செய்கிறேன்.’’

“உன் தம்பி காசிபனைக் கருதி நீ வீரமல்லனிடம் அநுதாபம் கொண்டாய். அவன்மீது கொண்ட அநுதாபம், எனக்கே எமனாக மாறியதையும் உன் கண்களால் கண்டு கொண்டாய். அன்றைக்கு அவன் செய்த முயற்சி தோற்றுப் போகாமல், அவன் நன்றாக மறைந்து கொண்டு, என்மேல் வேல் எறிந்து வீழ்த்தியிருந்தால் என்ன நடந்திருக்கும்? மரணத்துக்கு நான் அஞ்சியவனல்ல; ஆனால் அந்த மரணம் நான் இன்பக் கனவுகளின் சிகரத்தில் மிதந்து கொண்டிருந்த வேளையில்தானா வரவேண்டும்? அது என் உயிருக்குயிரானவளின் அறியாமையினால்தானா வரவேண்டும்? நினைத்துப் பார், ரோகிணி?’’

அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்; விம்மினாள்; விக்கினாள்.

“வீரமல்லன் எங்கள் படையிலிருந்துவிட்டுப் பிறகு எங்களுக்கு எதிராகத் திரும்பியிருப்பவன்; என்னுடைய நண்பனாக இருந்து பகைவனாக மாறிவிட்டவன். என்னைப் பகைப்பவன் மீது நீ இரக்கம் கொண்டால்...’’

“என் தம்பிக்காகச் செய்தேன். இனி ஒரு போதும் அப்படி நடக்காது, இளவரசே!’’

“உன் தம்பியை நான் இதுவரையில் வெறுக்கவில்லை. அவனைக் கொண்டு வந்து உங்கள் குடும்பத்துடன் சேர்த்து விடவேண்டுமென்பதே எங்கள் எண்ணம். அப்படிச் சேர்க்க முடிந்தால் அமைச்சர் தனியாக இருந்து பகைமையை வளர்க்க முடியாது. அவனை ஒரு கருவியாக வைத்துக் கொண்டுதான் அவர் தமக்கு ஆதரவு தேடிவருகிறார். அவன் மட்டும் இங்கே வந்துவிட்டால், பிறகு ரோகணத்தின் ஆட்சி உன் தந்தையாருக்கே கிடைத்துவிடும். உன் தம்பியே இளவரசன்!’’

“நானும் எவ்வளவோ கூறினேன். சோழ நாட்டின் மேலும் உங்கள் மீதும் கொண்ட பகைமை குறையவே இல்லை. அமைச்சர் ஊட்டிவிட்ட வெறியால் அவன் குமுறிக் கொண்டிருக்கிறான்.’’

இளங்கோவின் புருவங்கள் நெறிந்தன. “நீ உன் தம்பியை நன்றாகத் தெரிந்து கொண்டாயல்லவா? இப்போது சொல்; உனக்கு நான் வேண்டுமா? உன் தம்பி வேண்டுமா?’’

“இளவரசே! என்னைச் சோதனைக்குள்ளாக்காதீர்கள். எனக்கு இருவருமே வேண்டும். என்னால் இருவரையுமே மறக்க முடியாது.’’

“இருவரில் ஒருவரை மறந்துதான் தீரவேண்டும்.’’

“என்னால் முடியவில்லையே!’’

அவளுடைய இயலாமையை அறிந்து கொண்ட இளங்கோ அதற்குப் பிறகு அவளிடம் சினம் கொள்ளவில்லை. ஓரளவு பொறுமையை வரவழைத்துக்கொண்டு, உறுதியான குரலில், “ரோகிணி!’’ என்று அழைத்தான்.

ஏறிட்டுப் பார்த்தாள்.

“இந்தக் கணம் வரையிலும் எனக்கு உன் தம்பியின் மேல் வெறுப்பிருந்ததில்லை. மாறாக, அவன் உன்னோடு பிறந்தவன் என்பதால் நீ அவன்மீது கொண்டிருந்த அன்பின் காரணத்தால் நானும் அவனிடம் அன்பு கொண்டிருந்தேன். இனிமேலும் என்னால் அப்படியிருக்க முடியாது. நான் இந்தக் கணத்திலிருந்து உன் தம்பியை வெறுக்கிறேன்! காசிபனை அடியோடு வெறுக்கிறேன்!’’

அவன் குரலில் உறுதி அவளை உலுக்கியது. அஞ்சி விலகினாள் ரோகிணி.

“ஆமாம். இதுவரையில் அறியாத சிறுவன் என்பதால் அவனால் நாட்டுக்கு ஏற்பட்டு வந்த தொல்லைகளைக் கூடப் பொறுத்து வந்தேன். நாட்டால் விளைந்த பகைமையையும் மீறி அவனிடம் பாசங்கொள்ள முனைந்தேன். இப்போதுதான் எனக்கு உண்மை புலப்பட்டிருக்கிறது. அவனுடைய உடல்தான் அமைச்சர் கீர்த்தியோடு உலவுகிறதே தவிர, அவன் உன்னுடைய மூச்சிலும் பேச்சிலும் குருதித் துடிப்பிலும் கலந்து உன்னையே எனக்கு எதிராகத் திருப்பி விட்டுக் கொண்டிருக்கிறான். ரோகிணி! அவன் வேறெங்குமில்லை; உன் நெஞ்சில்தான் இருக்கிறான்!’’ “இளவரசே! இனியும் என்னைச் சுடு சொற்களால் சித்திரவதை செய்யவேண்டாம். நான்தான் முன்பே தங்கள் ஆணை எதுவோ அதன்படி நடப்பதாகச் சொல்லிவிட்டேன். நான் என்ன செய்யவேண்டுமென்று ஆணையிடுங்கள். அதன்படி நடக்கச் சித்தமாயிருக்கிறேன்’’ என்றாள் ரோகிணி. “இருவரில் ஒருவரை மறந்துவிடு!’’

அச்சத்தால் நினைவிழந்த ரோகிணி, ‘என்னால் முடியவில்லையே!’ என்று சில விநாடிகளுக்கு முன்பு கூறிய அதே வாயால், “ஆகட்டும் இளவரசே! காசிபனைக் கட்டாயம் மறந்துவிடுகிறேன்’’ என்றாள்.

“முடியுமா உன்னால்?’’ என்று திரும்பவும் கேட்டான் இளங்கோ.

“உங்களை இழந்துவிட என்னால் முடியாது. உங்களுக்காக அவனை மறக்கத்தான் வேண்டும். மறந்துவிடுகிறேன்.’’

இதைக் கேட்ட பின்னரே இளங்கோவுக்கு அமைதி ஏற்பட்டது. ஏதோ மிகப் பெரிய போர்க்களத்தில் வெற்றி பெற்று வாகைசூடியதைப் போல் நினைத்துக் கொண்டான். அதன் பிறகு அவனுடைய பேச்சில் ரோகிணிக்காகக் கனிவு ததும்பியது. அன்பு பொங்க அவளுடன் உரையாடினான். நோய்வாய்ப்பட்டு மெலிந்து போயிருந்த அவள் தேகத்துக்காக வருந்தினான். அவளுடைய நெற்றிக் காயத்தின் தழும்பைக் கண்ணீர் கசிய நோக்கினான்.

ரோகிணியோ காசிபனை மறந்துவிடுவதாக வாய் விட்டுக் கூறியபடியே மறந்துவிட வேண்டுமென்று உறுதி பூண்டாள். ஆனால், மனிதர்களை மறந்துவிடுவதும் நினைத்துக் கொள்வதும் யாருடைய ஆணைக்கும் அடங்கிய விஷயங்கள் அல்லவென்பது இருவருக்குமே அப்போது தெரியவில்லை. கட்டளைக்குக் கட்டுப்பட்டு யாருமே யாரையும் மறந்து விட்டதுமில்லை; நினைத்துக் கொண்டதுமில்லையல்லவா?

தொடரும்








Comments