வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 18- தந்தையும் தனயனும்.




சரக்கொன்றை மரத்தடியை விட்டு இளங்கோவும் ரோகிணியும் பிரிந்து செல்லும்போது, வானத்தில் கண்ணிமைத்த மீன்களைப்போல் அவர்கள் உள்ளத்தில் பற்பல இன்பக் கற்பனைகள் பூத்துச் சொரிந்தன. ரோகிணியை அவளுடைய மாளிகைக்கு அனுப்பிய இளங்கோ தன் குதிரையைத் தேடிக்கொண்டு வந்தான். பொழுது நன்றாக இருட்டிவிட்டது. இருளில் யாரோ பேசும் குரல் கேட்டதால், சற்றே தயங்கி நின்று உற்றுக் கவனித்தான் இளங்கோ. குதிரையுடன் மாங்குடிமாறன் ஏதோ அந்தரங்கமாகப் பேசுவது தெரிந்தது.

அதன் பிடரியைத் தடவிக்கொண்டே, “இதோ பார்! இளவரசரைச் சுமந்து கொண்டு நீ முதன்முதலில் இங்குதானா வரவேண்டும்? உனக்கு வேறு வழியே தெரியவில்லையா?’’ என்று கேட்டான் மாறன். “எந்தக் குற்றத்திற்காக அவர் சிறைக்குச் சென்றாரோ, அதே குற்றத்தைச் சிறையிலிருந்து மீண்டவுடன் தொடங்கிவிட்டாரே! அவருக்குத்தான் ஆத்திரமென்றால் உனக்குக் கூடவா தெரியவில்லை? இனிமேல் நாம் இருவரும்தான் அவரைப் பாதுகாக்க வேண்டும். என்ன நான் சொல்வது விளங்குகிறதா?’’

பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டே தலையை ஆட்டி வைத்தது குதிரை. மாறனோ அதை முகத்தோடு முகம் தோய அணைத்துக் கொண்டான்.

இருளைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது இளங்கோவின் சிரிப்பொலி.

“குதிரையோடு என்ன சல்லாபம்? நீ எங்கே வந்தாய்?’’

“தாங்கள் அரண்மனையிலிருந்து புறப்பட்டபோதே வந்தேன். எனக்கு முன்னால் ரோகணத்து இளவரசியார் தங்களை வளைத்துக் கொண்டு விட்டார்கள். சிறையிலிருந்து மீண்ட தங்களை அவர்கள் மீண்டும் சிறைப்படுத்திக் கொண்டு போகவே எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.’’

“அப்போதிருந்தே இங்கே என்ன செய்து கொண்டிருந்தாய்?’’

“என்ன செய்து கொண்டிருந்தேன்? ராமபிரானும் சீதாப்பிராட்டியும் தனித்திருந்த போது இளையபெருமான் என்ன செய்து கொண்டிருந்தாரோ, அதைத்தான் செய்து கொண்டிருந்தேன்-காவல் காத்திருந்தேன்; யாரும் இந்தப் பக்கம் வராதபடி திருப்பிவிடப் பார்த்தேன்.’’

சிறிது அச்சத்தோடு, “யாரேனும் இங்கு வந்தார்களா?’’ என்று கேட்டான் இளங்கோ.

“தங்களது தந்தையார் பெரிய வேளாரைத் தவிர வேறு யாரும் இந்தப் பக்கம் வரவில்லை. அவர்களைக் கண்டவுடன்...’’

“என்ன?’’

“ஆமாம், அவர்களைக் கண்டவுடன் இளையபெருமாளாக நின்றவன்

மாரீசனாகி மறைந்தே போனேன். பிறகு என்ன நடந்ததோ தெரியாது. அப்போது நின்று போன மூச்சு இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறது.’’

மாறனிடமிருந்து வேறு செய்திகள் கிடைக்காமல் போகவே, “இதுதான் நீ காவல் காத்த இலட்சணம்? குதிரையை அழைத்துக் கொண்டு போய்க் கட்டிவிடு’’ என்று கூறினான் இளங்கோ. மனக் குழப்பத்தைத் தணித்துக் கொள்வதற்காகப் புல்வெளியில் அமர்ந்தான். ‘தந்தையாரின் முகத்தில் எப்படி விழிப்பது?’

பின்னர் ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு, தந்தையாரின் கண்களில் படாமல் அரண்மனைக்குள் அவன் நுழைந்தபோது அவன் தந்தையின் குரல் அவனை அழைத்தது.

“எங்கே போயிருந்தாய் இளங்கோ?’’ என்று கேட்டுக் கொண்டே அவனை நெருங்கி வந்தார் பெரிய வேளார். “மாலையிலிருந்து உன்னைக் காணவில்லையே? வா! உன்னிடம் சில முக்கியமான விஷயங்களைப் பேசவேண்டும்.’’

தோள்மீது கரம் போட்டு அவனைத் தமது கூடத்துக்குக் கூட்டிச்

சென்றார் பெரிய வேளார். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரையில் வியர்த்துக் கொட்டியது இளங்கோவுக்கு. அவனைத் தமது அருகிலேயே ஆசனத்தில் அமரச் செய்து அவனோடு பேசலானார்.

அவருடைய குரலில் கனிவையும் பேச்சின் இனிமையையும் இளங்கோவினால் நம்ப முடியவில்லை. பெரியவேளார்தாமா அவர்!

“நடந்ததையெல்லாம் அடியோடு மறந்துவிடு. சக்கரவர்த்திகளும் சாமந்த நாயகரும் உனக்கு என்ன கட்டளையிட்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. என்னிடம் அவர்கள் முன்பே கூறியிருக்கலாம். கூறியிருந்தால் நான் உன்னைத் துன்புறுத்தியிருக்க மாட்டேன்’’ என்றார்.

குனிந்த தலை நிமிராமல், “தங்களுடைய கடமையைத் தாங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள். எனக்கு அதனால் சிறிதும் வருத்தமில்லை’’ என்றான் இளங்கோ.

“ஆமாம், நீ உன் கடமையைச் செய்திருக்கிறாய்; நான் என் கடமையைச் செய்திருக்கிறேன். இடையில் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது; அவ்வளவுதான்.’’

அத்துடன் அங்கிருந்து எழுந்து, அவரிடமிருந்து தப்பிவிடப் பார்த்தான் இளங்கோ. அவர் அவனை விடுவதாக இல்லை. ஏதேதோ சுற்றி வளைத்துப்

பேசிவிட்டு, பிறகு “ஆனைமங்கலம் மாளிகைக்கு அன்று வேற்றுருவில் வந்துபோன இருவர் யாரென்று உன்னால் ஊகிக்க முடியுமா?’’ என்று கேட்டார். “அமைச்சர் கீர்த்தியும் இளவரசன் காசிபனுமாக இருக்கக்கூடுமென்பது என் எண்ணம்’’ என்றும் கூறினார். ரோகிணியைப்பற்றி எங்கே கேட்டுவிடப் போகிறாரோ என்று தவித்துக் கொண்டிருந்த இளங்கோ, இதனால் அச்சம் தவிர்த்தான்.

“அமைச்சர் கீர்த்தி எங்கும் நேரடியாகச் செல்வதோ எதிலும் நேரடியாகக் கலந்து கொள்வதோ இல்லை என்று தெரிகிறது. யாரையுமே பின்னால் நின்று இயக்கும் சூத்திரதாரி அவர். அன்றைக்கு ஆனைமங்கலம் மாளிகைக்கு காசிபன் வந்திருந்தது உண்மை. ஆனால் அவனுடன் அமைச்சர் வரவில்லை.’’

“ஒற்றன் கூறினானே!’’ என்றார் பெரிய வேளார். “ஒற்றர்களும் தவறு செய்யக்கூடும். சிற்சில இடங்களில் மறைந்திருந்து பார்த்து, சிற்சில இடங்களுக்குச் சென்று மற்றவைகளை அவர்களாகவே தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு சொல்வதும் உண்டல்லவா?’’

“ஆமாம், உன் விஷயத்தில் அப்படித்தான் நடந்துவிட்டது’’ என்று ஒப்புக்கொண்டார் வேளார்.

“அப்படியென்றால் உடன் வந்தவன் யார்?’’*

“வீரமல்லன்!’’

திடுக்கிட்டார் பெரிய வேளார்.

“ஆமாம். எவன் இறந்து விட்டானென்று தாங்கள் நம்பிக்கொண்டிருந்தீர்களோ, அவனேதான் வந்திருக்கிறான். அவனுடைய இறந்துபோன உடலில் தலை இருந்ததா? அந்த உடலையாவது தாங்கள் நன்றாகப் பரிசீலனை செய்து பார்த்தீர்களா? வீரமல்லன் உயிரோடிருக்கிறான்.

பாண்டியர் பக்கம் சேர்ந்துகொண்டு மகிந்தரையும் கலைக்க முயற்சி செய்திருக்கிறான். அதற்குள் நாம் தலையிட்டுவிட்டோம். அந்தப் பெண் தனது தம்பியை நான் கொல்ல வருவதாக நினைத்து என்னைத் தடுத்திருக்காவிட்டால். கட்டாயம் இருவரும் அகப்பட்டிருப்பார்கள்; நானும் தவறு செய்திருக்கிறேன். தப்பியோட விட்டது தவறுதானே?’’

“இல்லவே, இல்லை! உன்னைவிட நான்தான் பெருந்தவறு செய்திருக்கிறேன். அற்பத்திலும் அற்பமான ஒரு படைவீரன் என் கண்ணெதிரிலேயே என்னை ஏமாற்றி விட்டுப் போயிருக்கிறான்; அவனுடைய தந்திரம் என்னிடம் பலித்து விட்டது! இதுவே பெருந்தவறு!’’ என்று பெரிய வேளார் குமுறினார்.

தங்கள் தங்கள் கடமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்த தந்தையும் தனயனும் இப்போது தங்கள் தங்கள் தவறுகளைப் பரிமாறிக் கொண்டார்கள். பெரிய வேளார், எதிரில் இருந்த இளங்கோ தமது குமாரன் என்பதையும் மறந்து அவனிடம் தமது குறைகளை ஒப்புக்கொண்டார்.

“இளங்கோ! அவன் உயிருடன் இருப்பதை நீதான் கண்டுபிடித்து என்னிடம் சொல்லியிருக்கிறாய். இனி எப்படியாவது நாம் இருவருமே அவனைத் தேடிக்கொண்டு வருவதற்கு முயலவேண்டும். அதுவரை இந்த விஷயம் வேறு யாருக்குமே தெரியாமலிருப்பது நல்லது.’’

அத்துடன் அவர் நிறுத்தாமல், “இந்தச் செய்திகளைல்லாம் உனக்கு அந்தப் பெண்ணிடமிருந்து கிடைத்தன போலும்; அப்படித்தானே!’’

நாணத்துடன் இளங்கோ சிரிக்க முயன்றான்.

“இனி உன் விவேகத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது இளங்கோ! அவளுடன் நீ பழகுவதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் பெண்களிடம் எப்போதும் சற்று விழிப்புடன் இருப்பது அவசியம்.’’

முன்னொரு நாள் நாகைக் கடற்கரையில் மாங்குடிமாறன் இளங்கோவைத் தோளில் சுமந்துகொண்டு கூத்தாடினானல்லவா? அதேபோல் இப்போது இளங்கோவுக்குத் தன் தந்தையைச் சுமந்துகொண்டு கூத்தாட வேண்டும் என்று

தோன்றியது. ‘அவரைப்போய் முரட்டு வேளார்’ என்று கூறுகிறார்களே, இவரா முரடர்?’

தந்தையாருக்கு என்ன பதில் அளிப்பது என்று விளங்காமல் திக்குமுக்காடிப் போனான் இளங்கோ. அவர் அவன் அருகில் இன்னும் சற்று நெருங்கி வந்து கூறலானார்:

“பெண்களுக்கு விவேகமிருப்பதாகச் சொல்கிறார்களே இதில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. அதனால் நீ எந்தப் பெண்ணையும் விவேகி என்று நினைத்துப் பிரமிப்படைந்துவிட வேண்டாம். பெண்கள் என்றால் பெண்கள்! அவ்வளவுதான்! அவர்கள் நமக்காகப் பிறந்தவர்கள். எதற்காக இவ்வளவும் கூறுகிறேனென்றால், நீ உன் விவேகத்தினால் அந்த ரோகணத்துப் பெண்ணை உன் பக்கம் வளைக்க வேண்டும். ஆனால் அவள் பக்கம் வளைந்து கொடுத்து விடாதே.’’

இளங்கோவுக்கு அங்கு மேலும் இருக்கப்பிடிக்கவில்லை. மெதுவாக எழுந்து வெளியே வந்தான். வெளியுலகத்துக்கு வீரராகவும் அந்தப் புரத்தில் தன் அன்னையாருக்கு அடங்கியவராகவும் இருந்த அவர் கூற்று அவனுக்கு விந்தையாகத் தோன்றியது. ஆனால், பெரிய வேளார் அவனிடம் ரோகிணியைப் பற்றிப் பேசுவதாக

எண்ணிக்கொண்டே அருள்மொழியைப் பற்றிய எண்ணங்களை அவனுள்ளே கிளறிவிட்டுவிட்டார்.

‘விவேகத்தைப்பற்றி நங்கையார் பலமுறை பேசியிருக்கிறாரே! ஆனால் அவர் பேசிய பேச்சுக்களுக்கும் சிறைப்பட்டபோது மயங்கி விழுந்ததற்கும் தொடர்பே இல்லையே! என்மீது கொண்ட அன்பால், பாசத்தால் பற்றுதலால் அவருக்கு விவேகம் பிறந்திருக்குமா? அப்படியானால் நங்கையாருக்கும் ரோகிணிக்கும் வேற்றுமையே கிடையாது.’

மகிழ்ச்சியும் குழப்பமும் கலந்த உணர்வோடு இளங்கோ தாழ்வாரத்தில் நடந்தான். மேற்கு மூலையில் இருந்த நரேந்திரனின் அறையைத் தாண்டும் வேளையில் அதற்குள் அவன் கண்ட காட்சி அவனைத் திகைக்க வைத்தது. தன்னை மறந்து நின்று விட்டான்.

தொடரும்





Comments